பின்பற்றுபவர்கள்

சனி, 4 நவம்பர், 2023

கடல் பயணம்!!

ரயிலேறி.....

நண்பர்களே,

பயணங்கள் என்று சொல்லும்போது, அதற்காக நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பலவகைப்படும். 

வாகனமே இல்லாமலும்  பயணப்படலாம்  கால் நடையாக.

வாகனங்களில் , இருசக்கர வாகனம்,மாட்டு வண்டி, குதிரைவண்டி, மகிழுந்து, பேருந்து, டிராக்டர், தொடரி  எனப்படும் ரயில் வண்டி, வான ஊர்தி , தோணி, படகு, கப்பல் போன்ற வாகனங்கள் நம் நினைவிற்கு வரும்.

இவற்றிற்கான பயணப் பாதைகளும் அந்தந்த வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப, நிலம் நீர் ஆகாயம் எனும் வரையறைகளுக்குள்  ஏதேனும் ஒன்றில்தான் அமையும் என்பதும் நாம் அறிந்ததே.

அவ்வகையில் , தரையில் ஓடும் வாகனங்கள் மூலம் தரையிலும்  ஆகாயத்தில் ஓடும் வாகனங்கள் மூலம் ஆகாயத்திலும் , நீரில் ஓடும் வாகனங்கள் மூலம் நீரில் மட்டுமே பயணிக்க முடியும் என்பதும்  நடைமுறை சாத்தியங்கள்.

அப்படி சாலை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் விமானம் மார்க்கமாகவும் பல பயணங்கள் மேற்கொண்டிருந்திருந்தாலும் இந்த  பதிவில் குறிப்பிடப்போகும் கடற்  பயணம்  முற்றிலும் மாறுபட்ட ஒரு பயணமாக அமைந்திருந்தது.

எமது முந்தைய பதிவுகளான,காதல் தேசத்தில் மற்றும் பொக்கிஷ பேரழகே போன்ற பதிவுகளில் குறிப்பிட்டிருந்ததுபோல் அந்த பிரஞ்சு பயணம் எனக்கு பலவகைகளில் சிறப்பான பயணமாக அமைந்திருந்தது, அதில் இரண்டு உங்களுக்கு தெரியும் இது அடுத்தது.

எனக்கு நினைவு தெரிந்து முதன்முதலாக பத்தாம் வகுப்பு படிக்கும் போது  மேற் கொண்ட  முதல் படகு பயணம்  கன்னியா குமரி  கரையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை சென்று வந்தது.

பின்னர் கேரளாவில் எர்ணாகுளதிலிருந்து கொச்சி வரை என நினைக்கின்றேன்.

அதை தொடர்ந்து, ஒக்கேனக்கல் பரிசல் பயணம்,கொடைக்கானல், கோவா,பாண்டிச்சேரி ,   போன்ற  உள்  நாட்டிலும் , இங்கிலாந்து, ஸ்காட்லாந்த்து, ஸ்விட்சர்லாந்து, அமேரிக்கா, எகிப்த்து, சிங்கப்பூர் , துருக்கி, ஜார்ஜியா போன்ற வெளி நாடுகளிலும் ஏரிகள் , கடல்கள் போன்றவற்றின் மீது பயணித்திருந்தாலும் இந்த பதிவில் வரும் கடற் பயணம்  இவை எல்லாவற்றிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்ததற்கு காரணம்.....

மேற்சொன்ன அனைத்து பயணங்களும் அந்ததந்த ஊர்களின் நீர் பரப்பிற்குள்ளாகவே நடைபெற்றவை. ஆனால் இந்த பயணம் ஒரு நாடு விட்டு வேறு  நாட்டிற்கு செல்லும்படியான கடற்பயணம் என்பது மட்டுமல்ல.... அதையும் தாண்டி....

இந்த பயணம் கடல் பயணமானாலும் அதற்கான வாகனம், படகோ , ferri யோ , கப்பலோ அல்ல.

மாறாக ரயில்.. ஆம்.  இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேசங்களை இணைக்கும் கடல் மார்க்கமான- அதாவது கடலுக்கடியிலுள்ள மார்க்கமாக   Euro Star  எனும் தனியார் நிறுவனம் மற்றும் UK அரசு இணைந்து நடத்தும் ஆழ்கடல் சுரங்கப்பாதை ரயில் சேவை  அது.




உலகின் நீளமான ஆழ்கடல் சுரங்கப்பாதை  ரயில் பயணம் இது. 

சுமார் 31.5 மைல்களுக்கு ஆங்கில கால்வாய் என அழைக்கப்படும் கடல் மட்டத்திலிருந்து சுமார்  246 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பாதையில் இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் சென்றடைய சுமார்இரண்டு மணி 16 நிமிடங்கள் ஆகின்றது.

இந்த ஆழ்கடல் சுரங்கபாதையின் நீளத்தை அறிந்துகொள்ள 169 ஈபிள் கோபுரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக நீள வடிவில்  படுக்க வைத்தாற்போல்  அடுக்கினால் எவ்வளவு நீளம் வருமோ அத்தனை நீளம் என்றறியப்படுகிறது.

இதில் ஆட்கள் மட்டுமின்றி சிறிய ரக வாகனங்களும் ஏற்றி செல்லப்படுகின்றன.



இப்படியாக வருடம் முழுவதும் சுமார் 350 ரயில்கள் இயங்குவதாக அறிந்தபோது  தைரியமாகவும் வியப்பாக இருந்தது. அதேசமயத்தில்  சில நேரங்களில் ஆழ்கடல் ரயில் பயணத்தின்போது ரயில்  பழுதாவதும்(பிரேக்டௌன்) உண்டென்று அறிந்தபோது கொஞ்சம் அச்ச மாகவும்  திகிலாகவும் இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ? அதே ரயிலில் மீண்டும் திரும்பி வரும்போதும் கலகலப்பான அதே சமயத்தில் கலவையான உணர்வுடன் பயணித்த அனுபவம் மறக்க இயலாது.

இப்படி வாழ்வில் முதன்முறையாக கடலடியில் ஒரு ரயில் பயணத்தை செய்தது இந்த முறை  எமது பிரான்ஸ் பயணத்தின் மற்றுமொரு கூடுதல் சிறப்பு.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.


6 கருத்துகள்:

  1. சுவாரஸியமான பயணம்தான் கோ.. கிட்டத்தட்ட Tunnel க்குள் இல்லையா? வெளியில் ஒன்றும் பார்க்க இருக்காது.

    என்றாலும் ஆச்சரியம்தான். ஜப்பானிலும் ஒரு திவீலிருந்து மற்றொரு தீவிற்கு இப்படிக் கடலுக்கடியில் போட்டிருக்கிறார்கள் ஆனால் சாலை. என்று வாசித்த நினைவு.

    எனக்கு ஒரு பயம் தோன்றுகிறது. நிலநடுக்கம் கடலில் தோன்றியதென்றால் இப்பகுதியில் இந்த டனல் என்ன ஆகும்?! ஒரு வேளை மீன் காட்சியகம் போன்று கடலடியில் பார்த்துக் கொண்டே செல்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் கடல் அழுத்தத்தைத் தாங்கும் அளவு /பைபர்/கண்ணாடி அகமாக இருக்க வேண்டும் இல்லையா...கோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பெருமதிப்பிற்குரிய அம்மையீர்,

    வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

    தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள். ஆமாம் , சுவாரசியமான பயணமாகத்தான் அமைந்தது.

    துருக்கியில் பயணித்தபோது சிறிது தூரத்திற்கு கடலுக்கடியில் போடப்பட்டிருந்த சுரங்க சாலை வழியில் பயணித்தபோதும் இப்படியான மன நிலை இருந்தது , ஆனால் அது ஒரு சிறிய தூரம் மட்டுமே.

    கடல் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் போக்கு வாரத்திற்கான எந்த மார்க்கமும் , கடல் சீற்றங்கள் போன்ற பேரிடர்களை ஓரளவிற்கு forecast செய்து அவற்றால் பெரும்பாதிப்பு ஏற்படாதவண்ணமே அமைக்கப்படுகின்றன. எனினும் Euro Tunnel பாதையில் எந்தவிதமான பயணிகள் பாதுகாப்பு முறைமைகள் பின்பற்றபடுகின்றன என்பது முற்றிலும் "ரகசியமாக " வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

    எது எப்படி இருந்தாலும் " அவன்" ஞானத்தை அளவிட, யூகிக்க யாரால் கூடும்?

    வருகைக்கும் தங்கள் தொடர் ஆதரவிற்கும் மீண்டும் நன்றிகள், மறந்துவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அரசே

    கடல் அடியில் ஒரு ரயில் பயணம் அழகு அழகு சொற்றொடர் மிக அழகு அதனினும் அழகு அதை விவரித்து செல்லும் தங்கள் வருணனை அருமை அருமை
    இது போன்ற பதிவுகளின் மூலம் நாங்களும் பயணிக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமது சிற்றறிவிற்கெட்டிய வார்த்தைகள் , சொற்றொடர்கள் கொண்டு வடிக்கும் பதிவுகளை அழகு என்றும் வர்ணனைகள் அருமை என்றும் பாராட்டும் தங்களின் உள்ளார்ந்த பாராட்டிற்கும் நன்றிகள். பதிவை வாசிக்கும்போதே அதனோடு பயணிக்கும் அனுபவம் கிட்டுவதாக பகிர்ந்தமை மகிழ்வளிக்கின்றது. நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
  4. Euro Tunnel பாதையில் எந்தவிதமான பயணிகள் பாதுகாப்பு முறைமைகள் பின்பற்றபடுகின்றன என்பது முற்றிலும் "ரகசியமாக " வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.//

    ஓ! நிறைய தகவல்கள் அறிகிறேன் கோ.

    எது எப்படி இருந்தாலும் " அவன்" ஞானத்தை அளவிட, யூகிக்க யாரால் கூடும்?//

    முற்றிலும் உண்மை, கோ.

    ஹாஹாஹா எப்படி கோ மறக்க முடியும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மனிதர்களின் அறிவின் ஆழமும் நீட்சியும் "அவனின்" அளவுகோளுக்கு உட்பட்டது என்பதுதானே நிதர்சனம். வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மையீர்.

    பதிலளிநீக்கு