பின்பற்றுபவர்கள்

திங்கள், 16 அக்டோபர், 2023

காதல் தேசத்தில் ...


கல்யாணத்திருவிழா!!

நண்பர்களே,

கடந்த மே மாதம், மீண்டும் ஒருமுறை பிரான்ஸ் தேசம் செல்லவேண்டி இருந்தது.

கடந்த 23 ஆண்டுகளில் பலமுறை இந்த காதல் தேசத்திற்கு சென்றிருந்தாலும் இந்த முறை சென்ற பயணம் பல  விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தது. 

அவற்றுள் முதன்மையானது... என் இனிய நண்பரின் மகளின் திருமணம். 

அப்படி ஒரு திருமண நிகழ்வை அதற்கு முன்வரை நான் கண்டதில்லை. நாவல்களிலும், திரைப்படங்களிலும் படித்தும் பார்த்தும் இருக்கலாம் ஆனால் நேரில் பார்த்த அனுபவம் இப்போதுதான்.

காலையில்  10 மணிக்கு தேசிய சட்ட விதிகளுக்குட்பட்டு அரசு சார்பதிவு அலுவலகத்தில் சட்டப்படியும் அதை தொடர்ந்து அதே வளாகத்தில் சுமார் 30அடி  தூரத்திலேயே அமைந்திருந்த பழமை வாய்ந்த அதே சமயத்தில் தொடர் உபயோகத்தில் உள்ள  வழிபாட்டு திருத்தலமான தேவாலயத்தில் அவர்களது மத நம்பிக்கையின் அடிப்படையிலான முறைமைகளோடு கூடிய திருமண பிரார்த்தனைகள் நடைபெற்றன.

மணமக்கள் இருவரும் அதே நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் சொல்லவேண்டிய திருமண வாக்குறுதிகளை அந்த திருமணத்தை நடத்திவைத்த குருவானவர் தமிழில் சொல்ல சொல்ல இந்த மணமக்கள் தங்களுக்கு எப்படி வந்ததோ அந்த உச்சரிப்பில் வாக்குறுதிகளை  இறைவனின் சந்நிதியில் கூடி இருந்த மக்களின் முன் கூறிய விதம் சபையோரின்  மத்தியில் சலசலப்பில்லாத கலகலப்பை ஏற்படுத்தியது.

சில வாக்கியங்களை நிறுத்தி நிதானமாக இடைவெளிவிட்டு குருவானவர் சொல்ல அதை கிரகித்துக்கொண்டு அப்படியே அவர்கள் சொன்ன விதம் மகிழ்ச்சிகரமாக இருந்தது. 

பின்னர் அவர்களின்   வாக்குறுதிகளின்  ஆங்கிலம்  மற்றும் பிரஞ்சு மொழிபெயர்ப்பினை அதே குருவானவர் சொல்லி இருவரின் வாக்குறுதிகளை சபை முன்னிலையிலும் இறைவனின் முன்னிலையிலும் உறுதி செய்து நம் தமிழ் முறைப்படி,  தேங்காயில் சுற்றிவைக்கப்பட்டிருந்த மஞ்சள் பூசிய திருமாங்கல்ய நாணை மணமகனிடம் கொடுக்க அவர் அதை மணமகள் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டு ஊரறிய உலகறிய இறைவனின் சந்நிதியில் திருமண  பந்தத்தில் இணைத்துக்கொண்டார்.

இன்றுமுதல் இருவரும், வாழ்விலும்  தாழ்விலும் , சுகத்திலும் துக்கத்திலும், மரணம் நம்மை பிரிக்கும்வரை ஒருவரை ஒருவர் மதிக்கவும் அன்புசெலுத்தவும் ஒருவருக்கொருவர் ஒத்தாசைபுரியாவும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கவும்  உடன்பட்ட  இருவரும்  கணவன் மனைவி என அறிவிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து ஆலயத்திற்கு உள்ளே இருந்தவர்களும் இடம் இல்லாத காரணத்தால் ஆலய பிரகாரங்களின்  வெளியிலே கூடி இருந்தவர்களும் எழுப்பிய  மகிழ்சி ஆரவாரமும்  விண்ணைப்  பிளந்த கைத்தட்டல் ஓசையும் மங்கள வாத்திய முழக்கங்களும்  ஓரளவிற்கு அடங்கி   அடுத்த சம்பிரதாயங்களும், ஆலய பதிவேட்டில்  இருவரின் கையொப்பங்களும்  சாட்சி கையொப்பங்களும் இடுவதற்கு கொஞ்சம் நேரமானது.

பின்னர், முகத்திரை(veil) விலக்கப்பட்ட தன்  மனைவியின் கரம் பற்றி   மாப்பிள்ளை ஆலயம் விட்டு வெளியில் வந்ததும் கூடி இருந்தவர்களின் மகிழ்சி  ஆரவாரங்கள் , புகைப்பட கலைஞர்களின் சாகசங்கள்(!!), மணமக்களின்  நண்பர்களின் கிண்டல்கள் ஆலய வளாகம் தாண்டி சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளையும் குதூகலிக்க செய்தது.

அதை  தொடர்ந்து சுமார் 10 மைல்கள்  தொலைவில் அமைந்திருந்த விழா மண்டபம் , அது மண்டபம் அல்ல அது ஒரு மாளிகை - அரண்மனை.

பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகப்படுத்தி இருந்த ஒரு பெரிய வளாகத்தின் நடுவில் அமைந்திருந்த அந்த  அரண்மனையின் ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட,  குறைந்த பட்சம் ஒரு 200 மேசைகளின் மீது வைக்கப்பட்டிருந்த நொறுக்கு தீனிகள்(snacks), குளிர்பானங்களும் , குளிருக்கு  இதமான பானங்களும் (அதையும் சேர்த்துதான்)வைக்கப்பட்டிருந்தன.

மாப்பிள்ளையும் பெண்ணும் அந்த விழா மண்டபம்  வந்து சேர்வதற்குள் விருந்தினருக்கான சிற்றுண்டிபோல அமைந்த அந்த உணவு பறிமாற்றலில், முக்கால் வாசி உணவுகள் ஐரோப்பிய வகை என்றாலும் நம்ம ஊரு  ஐட்டங்களும் இல்லாமல் இல்லை.

மண்டப முகப்பில் ஒரு அறிவிப்பு பலகை, அதில் வந்திருந்த விருந்தினர்  உள்ளே எங்கே அமரவேண்டும் -    அமர வேண்டிய மேசைகளின் எண்கள் போன்ற குறிப்புகள் அடங்கிய  பிரத்தியேகமான முறையில் அச்சடிக்கப்பட்ட விவரங்கள்.

விசாலமான விழா மண்டபத்தின் உட்புற அழகை என்னால் கண்டிப்பாக வர்ணிக்க முடியாது, பதிவின் முகப்பில் குறிப்பிட்டதுபோல நாவல்களிலும் திரைப்படங்களிலும் காட்டப்படுவதுபோன்று  அது ஒரு கனவு மாளிகை, கண்கவர் ஓவியங்கள், அலங்கார விளக்குகள் வண்ணம் தீட்டப்பட்ட  உயரமான உட்கூரைகள், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட மேசைகள் அதன் மீது வந்திருந்த விருந்தினர்களின் (பெயர்கள் யார்  எந்த மேசையில் அமரவேண்டுமென்பதற்காக)  நாற்காலிகள், மேசை விரிப்புகள் என அத்தனையும் கண்ணை கவர்ந்தாலும், அதில் முக்கியமாக என்னை கவர்ந்த ஒரு விடயம்:

அங்கே அமைக்கப்பட்டிருந்த தானியங்கி புகைப்பட கருவிதான்.

யார்வேண்டுமானாலும் தங்களை புகைபடமெடுத்துக்கொள்ளலாம் அதை அப்படியே அச்சடித்தும்  எடுத்துக்கொள்ளலாம்.

புகைப்பட கருவியில் start எனும் இடத்தில் தொட்டுவிட்டு சுமார் மூன்று அடி  தூரத்தில் நின்றுகொண்டு தங்களை படம் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஒருவராகவோ, இருவராகவோ, குழுவாகவோ நின்று  படம் எடுத்துக்கள்லலாம். எடுத்த  படத்தை    தமது திரையில் நமக்கு காட்டும். பின்னர் print என்ற இடத்தை தொட்டவுடன் அருகிலுள்ள printer கருவி print எடுத்து கொடுத்துவிடும்.

எடுத்த படம் நமக்கு திருப்தி இல்லை என்றால் print கட்டளை கொடுக்காமல் வேறொரு படமும் எடுத்துக்கொள்ளலாம், இப்படி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை விதங்களிலும் எடுத்துக்கொள்ளும் புகைப்பட வசதி அமைந்திருந்தது எனக்கு புதுமையாக தோன்றியது.

மணமக்கள் வந்தபிறகு, ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம், இடையிடையே, வெள்ளமென வழிந்தோடும் வண்ண விளக்கொளியில்  - வெளி தோட்டத்தில்  மணமகளின் சகோதரன் ஒழுங்கு செய்திருந்த 30 பேர்கள் கொண்ட அவரது நண்பர்கள்  குழுவினர்  பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ், ஹிந்தி பாடல்களுக்கு விதவிதமான ஆடை அலங்காரங்களுடன் சிறப்பாக நடனமாடி மணமக்களை மகிழ்ச்சிக்குளாக்கியதோடு விருந்தினரையும் இன்பவெள்ளத்தில் மூழ்கடித்தனர்.

மழை தூர ஆரம்பத்தித்திருந்தாலும் சுமார் அரைமணிநேரம் தொடர்ந்து விண்ணில் பாய்ந்து வெடித்து சிதறி எல்லோர் உள்ளங்களிலும் மகிழ்சி பூத்தூவிய  வாணவேடிக்கை ஒரு கூடுதல் சிறப்பு.

அதை தொடர்ந்து சிறப்பு விருந்து. எத்தனை வகை என எண்ண  மறந்துவிட்ட அந்த மெய்மறந்த சூழலில் நெய் மணக்கும் நம்மவூர் மட்டன் பிரியாணி , மற்றும் உள்ளூர் உணவுகள், கேக் வகைகள், இனிப்பு வகைகள், குளிர் மற்றும் சூடான பானங்கள், இன்னும் எத்தனை எத்தனையோ...

இதில் வந்திருந்த அனைத்து விருந்தினருக்கு தாம்பூல மஞ்சள் பைகள்.

காலை சுமார் 10 மணிக்கு ஆரம்பித்த இந்த திருமண விழா அடுத்த நாள் காலை சுமார் 3.00 மணிக்கு முடிந்ததாக அறிந்தேன். இடையில் சுமார் 1 மணியளவில் நானும் மணமகளின் பெற்றோரும்  வீடு திரும்பி இருந்தோம்.

இந்த என் பயண காரணத்தின் கூடுதல் சிறப்பு, மணமகளின் தந்தையின்  திருமணத்திற்கான அழைப்பிதழை தயாரித்ததில் இருந்து மங்கள நாண் , தாலி வாங்கியது, திருமணத்தின்போது அவருக்கு மாப்பிளை தோழனாக இருந்தது மட்டுமல்ல , மகள் பிறந்ததுமுதல் , மகளின்  எல்லா  நிலைகளில்  மட்டுமல்லாமல், பெரியவளான சடங்கு போன்றவற்றிலும்  நேரில் கலந்துகொண்டது மட்டுமின்றி    தேவதைப்போல விளங்கும் அந்த மண மகளுக்கு பெயர் தேர்ந்தெடுத்து கொடுத்தவன் என்பதுதான்.

திருமண வரவேற்பு நிகழ்வின்   ஒரு அங்கமாக மணமகள் பேசும்போது, எனக்கு பெயர் சூட்டியதிலிருந்து இன்றுவரை என் நலனிலும் என் குடும்ப விசேடங்களிலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்  நேரில் வந்து பங்குபெற்று என்னை ஆசிர்வதிக்கும் ..... எங்கள்    "தொன்தான்" (சித்தப்பா) அவர்களுக்கு ..... என்று ஆங்கிலத்திலும் , பிரஞ்சு மொழியிலும் கூறியபோது என் மேசையில் என்னோடு அமர்ந்திருந்த பெண்ணின் அப்பா- என் நண்பர் என்னை எல்லோர் முன்னிலையிலும்  எழுந்து நிற்கும்படி கூற , கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் சங்கோஜம் நிறைய பணிவுடன் எழுந்து நிற்க நண்பரின் வாரிசின்     அன்பான பேச்சினூடே  அரங்கம் நிறைந்த கைத்தட்டல் எந்தன் ஆனந்தத்தை பாரிஸின் ஈபிள் உச்சியையும் தாண்டி பறக்க செய்தது.

அடுத்த சிறப்புகள்  எவையென அடுத்த பதிவுகளில்... எழுத முயல்கிறேன். 

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.

பி.கு : பதிவு கொஞ்சம் நீளம்தான் , இடையில் நிறுத்தி தொடரும் போட விரும்பவில்லை  வாசகர்க நண்பர்களின் நலன் கருதி.


7 கருத்துகள்:

  1. உடனடி வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபால். நலம் தானே

    பதிலளிநீக்கு
  2. அருமை தங்கள் எழுத்து நடை இப்பவும் அப்படியே உள்ளது.தங்கள் நண்பரின் மகள் தங்களைப் மனம் மகிழ்ந்து நினைவுகளைப் பகிர்ந்ததை தாங்கள் பகிர்ந்ததது அருமை. எல்லாம் விளக்கமாக கூறீனீர்கள் மஞ்சள் பையில் என்ன இருந்தது.ஹாஹா

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் உங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி பேராசிரியரே.என் எழுத்து நடை "இப்பவும்" என்று நீங்கள் சொல்லிய சொல்லில் இழிவு சிறப்பு உம்மை இருப்பது எதை குறிக்கிறது? நான் எப்போதும் இப்படித்தான்.மஞ்சள் பையில்(சணல் பை  என்ன இருந்தது?  ஆரஞ்சு, ஆப்பிள், உளர் பழங்கள்,சிறிய கேக் பெட்டி, சாக்லேட் அடங்கிய சுருக்குப் பை  ,நன்றி கடிதம்(அட்டை) போன்றவை இருந்தன. 

    பதிலளிநீக்கு
  4. அரசே அது என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள் நான் எப்படி ,,,,,,
    நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,, இப்பவும் அந்த எதிர்பார்ப்பை உருவாக்கும் நடை என்று சொன்னேன் அய்யையோ இது என்ன.....

    பதிலளிநீக்கு
  5. விளக்கத்திற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு