பின்பற்றுபவர்கள்

புதன், 18 அக்டோபர், 2023

பொக்கிஷப்பேரழகே!

உன் புன்னகை என்ன விலை?

நண்பர்களே,

இந்த பதிவிற்கு முன் வெளியிட்ட காதல் தேசத்தில் ... சொன்னதுபோல், இந்தமுறை எனது பிரான்ஸ் பயணம் பலவகையில் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தது. அவற்றுள்  அடுத்த சிறப்பு:

பல ஆண்டுகளாக அறிந்திருந்தும், அதன் சிறப்புகளை புளங்காகிதத்துடன் படி த்தறிந்திருந்தாலும் ஒருமுறையேனும் அதை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்குமா என்று பள்ளி கல்லூரி  நாட்களில் மட்டுமின்றி சமீபத்திய நாட்களிலும்  நினைத்துக்கூட பார்த்ததில்லை.

பலமுறை இந்த தேசத்திற்கு வந்துபோய்  இருந்தாலும் நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்று சொல்வதைவிட, அதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரவில்லை என்பதைவிட கண்கூடி வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தமுறை நமக்கு வேறு முக்கிய வேலைகள் இல்லை என்பதாலும் இன்னும் ஓரிரு நாட்கள் இங்கேதானே  இருக்கப்போகிறோம் என்பதாலும் சரி இந்தத்தடவை கண்டிப்பாக பார்த்துவிடவேண்டும் என்றெண்ணி, தங்கி இருந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு  மணி நேரத்தில் அந்த குறிப்பிட்ட இடம் வந்துவிட்டேன்.

இதேபோல் தங்களின் வாழ்க்கை லட்சிய பட்டியலில் முதன்மை முன்னுரிமை பெற்றிருக்கும் சில விடயங்களில் இதுவும் ஒன்று என்றெண்ணி இருந்த உலகத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள்  பெரும் எண்ணிக்கையில் வரிசையில் நின்றிருந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள் , ஒரு நாளைக்கு சுமார் 45,000 பேர்கள் இங்கே  வருவதாக தகவல்கள் சொல்கின்றன.

அங்கே பணிபுரியும் நண்பரின் உறவினர்மூலம்  முன்பதிவு செய்யப்பட்ட  அனுமதி சீட்டுடன் சென்றிருந்த நமக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் நேரம் தவிர்க்கப்பட்டது.

சாரை  சாரையாக செல்லும் பெருங்கூட்டத்தோடு நகர்ந்து - ஊர்ந்து , பிரான்ஸ் நகரின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள உலகத்தின் மிகப்பெரிய அருங்காட்சியகமான "Louvre Museum"  உள்ளே சென்றேன்.

அளவை பொறுத்தமட்டில் உலகிலுள்ள அத்தனை அருகாட்ச்சியாகங்களுள் மிகப்பெரிய அருங்காட்சி அகமாக (the largest museum on Earth) கருதப்படுகிறது.

403 பிரமாண்ட அறைகள் கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் தாழ்வாரம் என்று சொல்லப்படும் CORRIDOR மட்டுமே சுமார் 8.5 மைல்கள்.

விலைமதிக்க முடியாத சுமார் 35,000 கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய 652300 சதுர அடி  பரப்பளவுள்ள நான்கடுக்கு கொண்ட மிக பிரமாண்ட கட்டிடம் அது.






எதை பார்ப்பது எதை விடுவது? ஒவ்வொன்றின் சிறப்புகளை வாசித்துக்கொண்டும் அங்கே கூடுதல் காசுகொடுத்து வாங்கப்பட்ட பல மொழிகளில் விளக்கம் சொல்லு கருவியின் துணையுடனும் அறிந்துகொண்டு அடுத்த பொக்கிஷத்தை  பார்க்க நகரவே குறைந்த பட்சம் 5 நிமிடங்களாவது ஆகும்.அப்படி பார்த்தால் அங்குள்ள அத்தனையையையும்  பார்த்து முடிக்க பல நாட்கள் ஆகும் என்பதால் , பல அறிய கலைப்பொருட்களை குறித்து அறிய முழுமையாக முடியாமலேயே அடுத்தடுத்து நகரவேண்டி இருந்தது.

ஒரு நாளில் எவராலும் இதை முழுமையாக ஒவ்வொன்றாக பார்த்து முடிப்பது அரிதிலும் அரிது ஏனென்றால் இது அளவிலும் வைக்கப்பட்டிருக்கும் பொருட் க் களின் எண்ணிக்கையிலும் பெரிதினும் பெரிது.

வரலாற்று காலங்களுக்கு முன்பிருந்து 19ஆம் நூறாண்டுவரையிலான பல அரி ய  படைப்புகள்   ஏகப்பட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும்   எமது இலக்கம்  இவை அல்ல வேறொன்று.

அது என்ன?

இன்றுவரை எவராலும் அறுதி இட்டு உறுதியாக -  துல்லியமாக சொல்ல இயலாதவண்ணம் ஒரு மந்திரப்புன்னகையும் எந்த பக்கம் திரும்பினாலும் நம்மையே ஊடுருவி பார்க்கும் காந்த விழிகளாலும் சோகமா, மகிழ்ச்சியா, கோபமா, கிண்டலா, ஏளனமா, ஏக்கமா, ஏமாற்றமா, அல்லது நிதானமா, தன்னடக்கமா, மன நிறைவின் பிரதிபலிப்பா என்று பலகாலம் பலராலும் வாக்குவாதம் செய்யும் அளவிற்கு பல்வேறு பாவனைகளை தன்னகத்தே கொண்டுள்ள அந்த ஓவியத்திலுள்ள  நபரின் உணர்ச்சியை எவராலும் சொல்ல முடியாத அந்த அழகிய முகத்தில், இறுதியாக, பிரதிபலிப்பது மகிழ்சியே என ஏக மனதாக ஓவிய  துறையில் பாண்டித்யமும் நுண் அறிவும் கொண்ட ஜாம்பவான்களால் ஏக மனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. காலப்போக்கில் இந்த கருத்து மாறுபட கூடும்.

இத்தனை சிறப்பு வாந்த அந்த ஓவியம் வெறும் 30க்கு 21 இன்ச் அளவுகொண்ட பாதி அளவிலான ஒரு பெண்ணின் ஓவியம்.

ஆம் அது கிபி 1503  முதல் 1519 வரை சுமார் 16 ஆண்டுகளாக உலகின் அன்றைய மட்டுமல்ல இன்றைக்கும் தலைசிறந்த ஓவியராக புகழின் உச்சாணி கொம்பில் சற்றும் சரிவோ சறுக்கலோ  இன்றி புகழோடு விளங்கும் லியோனார்டூ டாவின்ச்சியின் பல உன்னத படிப்புகளில் மாஸ்டர் பீஸ் என அழைக்க படுவதும் இன்றளவும் அதற்கொரு விலையை அதன் மதிப்பை எந்த நாட்டு கரன்சியிலும் கணக்கிட்டு தீர்க்கமுடியாத விலைபதிப்பற்ற கைவண்ணமாகிய, மோனாலிசா ஓவியம்தான்.



எத்தனையோ நுணுக்கங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அந்த ப துமையின் ஓவியத்யதின்  மற்றுமொரு சிறப்பு செல்வ செழிப்பான குடும்ப பின்னணியில் வாழ்ந்தவராயினும் ஒரு குன்றுமணி  அளவில் கூட எந்த பொ ன்னகையையும், மாணிக்க, மரகத, வைர, வைடூரிய , கோமேதக... அணிகலன்கள் ஏதும் அணியாமல் எத்தனை கோடி பொன்னாபரணமும் கொடுக்கக்கூடாத  அளவான புன்னகையும் மோனாலிசாவின் தலையில் அணிந் திருக்கும் கண்ணுக்கு சட்டென புலப்படாத மெல்லிய முக்காடும்தான்.

இதோ இங்கே, அதோ அங்கே என பரபரத்தும் பரவச நிலையிலும் அலைந்து கொண்டிருக்கும் பெருங்கூட்டத்தினரிடையே, அந்த அழகு ஓவியம் வைக்கப்பட்டிருக்கும் அந்த அருங்காட்சி அகத்திலே மிக பெரிய அறைக்குள்ளாக சென்றதும்  அதோ அதுதான் என தூரத்தில் ஒரு ஓவியத்ததை அடையாளம் கண்டுகொண்டேன், உடனே நெருங்கிச்சென்று பார்க்க முடியாதளவிற்கு மக்களின் பெருவெள்ளம்.

இருந்தாலும் இதற்காகத்தானே இத்தனை நாட்கள் ஏங்கி இருந்தோம் ,கொஞ்சம் நிதானமாக செல்வோம் என்றெண்ணி மெதுவாக மெதுவாக முன்னேறி இப்போது எனக்கும் அந்த அழகிற்கும் இடையில் அந்த தடுப்பு கைப்பிடியைத்தவிர, ஓரிரு அதிகாரிகளைத்தவிர   யாரும் இல்லாத அருகில் சென்று பல கோணங்களை அதன் அழகை  - சிறப்பை,  சிரிப்பை, கண்களை முகத்தை பல பத்து நிமிடங்கள் அங்கேயே நின்று ரசித்தபோது என் உள்ளம் கொண்ட உவகையும் ஆனந்தமும் எனக்குக்கூட சரியாக தெரியமா என்று எனக்கு தெரியாது  ஆனால் அங்கே என்னையே பார்த்துக்கொண்டிருந்த மோனாலீசானாவை தவிர வேறு யாராலும் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. (வாய்ப்பில்லை ராஜா- கோ )

அப்படியே பல கோணங்களில் அந்த ஓவியத்தை படம் பிடித்துக்கொண்டும் செல்ஃபி எடுத்துக்கொண்டும் பரவச நிலையில் இருந்தவர்கள் பல நூறுபேர்கள்.  






நூறாண்டுகளுக்கு(1911) முன் அதே அருங்காட்சிசியகத்தில் பணி  புரிந்த ஒரு  தொழிலாளியால் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட பிறகே அதன் மகத்துவத்தையும்  மகிமையையும் அறிந்துகொண்டது இந்த உலகம். 

1962 களிலேயே அதன் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்த இந்த ஓவியத்தின் இன்றைய மதிப்பை சொல்லவும் வேண்டுமோ? 

15 ஏப்ரல் 1452 ஆம் இத்தாலியில் பிறந்து மாபெரும் ஓவியனாக பல அரசர்களின் - தனவந்தர்கள் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பல்வேறு சிறப்பு கட்டிடங்களில்  தமது கைவண்ணத்தை படைத்து மே மாதம் 2 ஆம்  நாள் 1519 ல் தாம் மரணித்தவரையில் அவர் வரைந்த ஓவியங்கள் மொத்தமாக 20 மட்டுமே என்பது வியப்புகுரியதாக இருந்தாலும் , ஓவ்வொரு ஓவியத்திற்கு அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை , துல்லியமான அணுகுமுறை , ஆராய்ச்சி,பொறுப்புணர்ச்சி , அர்ப்பணிப்பு நன்குணரப்படுகிறது.

இவரின் படைப்புகளில் அதி உன்னதமானதாக போற்றப்படும்  மற்றுமொரு படைப்பு, உலக புகழ்வாய்ந்த " கடைசி ராப்போஜனம்" என்றழைக்கப்படும் "THE LAST SUPPER". இத்தாலி நாட்டின் புகழ்மிக்க நகரங்களுள் தனித்துவம் வாய்ந்த பெருநகரமான மிலானில் , SANTA MARIA என்றழைக்கப்படும் தேவாலயமும்  அதனூடே மைந்திருக்கும் கான்வென்ட் கட்டிடத்தின் ஒரு பக்க சுவற்றில் வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியமும்தான்.

நேரில் சென்று பார்க்கும் பாக்கியம் கிடைக்கப்பட்ட  இந்த THE LAST SUPPER ஓவியம் குறித்தும்  மற்றும் லியோனார்டூ டாவின்ச்சி தமது ஓவிய பயிற்சி பெற்ற பிளாரன்ஸ்  நகரின் அழகியலை - அனுபவத்தையும் குறித்தும்   மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுத்துரைக்க முயல்கிறேன்.

இப்படி ஓவிய உலகின் ஜாம்பவானாக இன்றளவும் போற்றப்படும் மா  மனிதரின் படைப்புகளை நேரில் சென்று பார்த்த அனுபவத்தின்  நிறைவான மகிழ்ச்சியுடன் சுமார் 5 மணி நேரம் கழித்து அருங்காட்சியகத்திவிட்டு வெளியில் வந்தாலும் கண்ட  காட்சிகளும் அதன் மன நிறைவும் என் அகத்தைவிட்டு ஒருபோதும்  வெளியேறிவிடாவண்ணம் நினைவு பதிவேட்டில் வண்ணம் கொண்டு தீட்டி  வைத்திருக்கின்றேன். 

தனி மனித படைப்புகளில் விலைமதிக்க முடியாத படைப்புகளின் பட்டியலில் முன் வரிசையில்  வைத்து பார்க்க வேண்டிய படிப்புகளில் இது ஒரு உன்னத படைப்பாகத்தான் இந்த பதுமையின் ஓவியத்தை இந்த உலகின் பல கண்கள் பார்க்கின்றன..

இந்த கலைக்கூட கருவூலத்தில் பிரமிப்புடன் சுற்றிக்கொண்டிருந்த  அதே சமயத்தில் தனிமனித கலை ஆர்வம் -  விருப்பத்திற்கிணங்கள், பலருடைய உழைப்பால், உருவாக்கப்பட்ட நம்ம ஊர் தாஜ் மகாலும் தஞ்சை பெருவுடையார் கோவிலும், வியக்கவைக்கும் கோவில் சிற்பங்களும், 1906 வரை நம்மிடையே வாழ்ந்துவந்த ராஜா ரவிவர்மாவின்  சகுந்தலா, ஹம்சா தமயந்தி, தமயந்தி,  விஷ்வாமித்ரர், திலோத்தமை,கிருஷ்ணா லீலை போன்றவை   எந்த விதத்திலும் எவருக்கும் எவற்றிற்கும் நிகரில்லை என்னும் கர்வமும் எனக்குள் அவ்வப்போது தலை தூக்கியதும் உண்மையே.


விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் மோனாலிசா ஓவியத்தின்   சிறப்பை அதன் வரலாற்றை தேடிப்பிடித்து வாசித்து மகிழவும். 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி திரு. கரந்தையாரே.
      நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  2. ஆஹா வர்ணனை அப்பப்பா கவிஞன் ஆகி எழுதிவிட்டு எதுவும் தெரியாது என்பது போல்,,,, தஞ்சைப் பெரிய கோவில் பார்த்தீருக்கிறீர்களா? எங்களின் அதிசயம்.ஒவியனின் மனநிலையை மீறி அனுபவித்து விட்டிர்கள். அருமை தங்கள் மற்றைய பதிவுகளையும் இனி தான் பார்க்க வேண்டும். நன்றி

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி பேராசிரியரே.நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள்.நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.தஞ்சை கோயிலை பார்த்ததில்லை நேரில் பார்க்க வேண்டும் என்ற வாஞ்சை மிகுந்தவன்.

    பதிலளிநீக்கு