பின்பற்றுபவர்கள்

திங்கள், 4 செப்டம்பர், 2023

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

எல்லோருக்கும்!

நண்பர்களே,

கற்று தருபவர்கள் எல்லோரும் ஆசிரியர்கள்தான் எனும் பொதுவான கருத்திங்கே புழக்கத்தில் உள்ளதை நாம் அறிவோம்.

மேலோட்டமாக பார்க்கும்போது பிழை ஒன்றும் அதில் இருப்பதாக தெரியவில்லை.

அதே சமயத்தில் எதை கற்று கொடுக்கின்றனர் அதனால இச்சமூகத்தில் என்ன மாற்றங்கள் விளையும் என்பதை பொறுத்தே, கற்பிப்பவரை ஆசிரியராக அங்கீகரித்து ஆராதனை செய்ய ஆலோசிக்கலாம்.

அவ்வகையில்,

பள்ளிக்கூடத்து    வகுப்பறையின் ஓரத்தில் பரப்பப்பட்டிருந்த மணல் பரப்பில் நமது பிஞ்சு விரல்களை  பிடித்து " அ " எனும் அமுத சிகரத்தை எழுத பழக்கி அம்மா, ஆடு, இலை ,ஈகை , உரல், ஊஞ்சல் .. என உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்  எழுத்து ஆயுத எழுத்து என்று ஒவ்வொன்றக கற்றுத்தந்து, பின்னர், கூட்டல்,கழித்தல், பெருக்கல் வகுத்தல் தொடர்ந்து, அறிவியல், வணிகம், விளையாட்டு, சங்கீதம், நாடகம்  என நம் முதல் வகுப்பு  ஆசிரியர் துவங்கி, விண்வெளி தாண்டி சீறி பறந்து விந்தைகள் புரியும் ராக்கெட்டுகளின்  சூட்சும சூத்திரங்களை கற்றுக்கொடுத்த/ கொடுக்கின்ற  போற்றுதலுக்குரிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்   நமது  இதயம் கனிந்த நல்  வாழ்த்துக்களை பெரும் மகிழ்ச்சியோடும் அன்போடும் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்.

அதேபோல  நமக்கு பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் ஆரம்பமாகுமுன்னே நமக்கு நலம் கற்பித்து முறைப்படுத்தி முன்னிறுத்திய நமது பெற்றோர்களே நமது முதல் ஆசிரியர்கள் என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் அவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பெருமிதத்துடன் பங்களிப்பது முறையாக இருக்குமென கருதுகிறேன்.

இந்த நவீன யுகத்தில்  கல்வி கூடங்கள் , பாடப்புத்தகங்களை கடந்து பல்வேறு வழிகளிலும் வகைகளிலும் நாம்  அன்றடம் பல புதிய விடயங்களை கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

அவற்றை கற்பிக்கும் ஒவ்வொரு வாசலும், சாளரமும்(portal)   ஆசிரியரே. அவ்வகையில் சில வேளைகளில் நமக்கு தெரியாத  பலவற்றை மிக எளிதாக விளக்கி கற்றுத்தரும் மாணவரும் நம் பிள்ளைகளும் ஆசிரியரே என்பது என் கருத்து.

இந்த நல்ல நாளிலே உலகமெங்கிலும்  உள்ள அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு எமது பணிவுகலந்த வாழ்த்துதல்களை நன்றியோடு சமர்ப்பிக்கின்றேன்.

நமது பதிவர்களுள்  ஆசிரியர்களாக பள்ளி கல்லூரிகளில்  பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர்ந்திந்த அறப்பணியில் தங்களை அர்ப்பணித்து அயராதுழைக்கும் எனதருமை ஆளுமைகளுக்கும்  இந்த நேரத்தில் நமது இதயம் கனிந்த நல்  வாழ்த்துக்கள்.

"குருவென இவ்வுலகில் உருவெடுத்து- அறியாமை 

இருள் விலக்கும்  ஒளிவிளக்கின்  சுடர்கொடுத்து  - ஞான 

அருமருந்தாம் கல்விக் கண் தினம் திறக்கும் 

பெருமாந்தர் மா மனித புனிதர்   நீவீர்  

 பெரும்பேறும் சுக  பெலனும் சுபீட்சமுடன்

நறுமலராய்  நற்றேனாய் நல்லமுது அட்சயமாய் 

மறுமலர்ச்சி மானுடத்தின்  மனம்  முகிழ 

தரவேண்டும்  உம தொளியை   நம் இனம்  மகிழ.

வாழ்க நீர் பல்லாண்டு !

வானும் மண்ணும் வாழும் வரை!!.

நண்பர்களே,

இந்த பதிவை என் பள்ளியில் , தக்கிலியில் நூல் நூற்று பின்னர்  அந்த நூல்கொண்டு   ஆடை நெய்ய கைத்தறியில் அமரவைத்து நேர்த்தியாய்  பயிறுவித்த கைவேலை ஆசிரியர்,  திரு.ஊரப்பன் அவர்களுக்கு நன்றியுடன் அர்ப்பணிக்கிறேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

 

4 கருத்துகள்:

  1. அனைத்து சான்றோர்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனபால்.

      நீக்கு
  2. மகிழ்சி ஆசிரியர் இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது. ஆசிரியர்களை மதிக்காத சமுகம் எதை நோக்கி செல்கிறது என்பது கேள்வியே?. தாங்கள் ஆசிரியர்களை வாழ்த்தியது மகிழ்ச்சி.நாங்கள் இன்னும் ஓய்வு பெறல.ஹாஹாஹா,,,,,,,, தங்கள் குருவிற்கு சமர்ப்பணம் அருமை அருமை

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பேராசிரியர்..

    நீங்கள் ஓய்வு பெற்றிருப்பீர்கள் என நான் நினைக்கவில்லை, பணியில் இருக்கும் நம் பதிவர் ஆசிரியர்களுக்கும் தான் என் வாழ்த்துக்கள்

    தங்கள் பணியை சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

    வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு