உள்ளமும் சிவக்கட்டும் !!
காலம் காலமாக நம் நாட்டில் பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒருசில இயற்கை மூலிகை தாவரங்களில் அளப்பரிய பங்கு வகிப்பது. மருதாணி.
நம் நாட்டில் மட்டுமின்றி, பல ஆஃப்ரிக்க நாடுகளிலும் இதுபோன்று வண்ணப்பூச்சுகளை மக்கள் பயன்படுத்துவதை நாம் கேள்வி பட்டிருப்போம்.
ஆதிமனிதன் தோன்றியகாலம்தொட்டு தனது உடம்பில் பலதரப்பட்ட வண்ண பூச்சுகளை பூசி தனது உடலை சீதோஷணம், விஷப்பூச்சி கடிகள் போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தி இருக்கிறான்.
இதில் ஆண் பெண் பேதைமை இன்றி இருபாலாரும் பயன்படுத்தி இருக்கின்றனர், இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர் ஆப்பிரிக்க ஆசிய அமெரிக்க பழங்குடிகள்.
உலகெங்கிலும் இந்தவகையான வர்ணப்பூச்சுகளை மக்கள் பயன்படுத்தினாலும் எவருக்கும் இல்லாத சிறப்பு நம் நாட்டில் உண்டென்றால் அது: இந்த வண்ண பூச்சுகளை பெண்கள் மட்டுமே செய்துகொள்கின்றனர் என்பதே.
பழங்குடியினர் தட்பவெட்பம் , விஷப்பூச்சிக்கடிபோன்றவற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்த ஆரம்பித்து நாளடைவில் ஆண் பெண் இன கவர்ச்சிக்காகவும் பயன்படுத்தினர் என்றறிகிறோம்.
என்னதான் பெண்கள் இயற்கையிலேயே மிகவும் அழகாக இருந்தாலும் அழகிற்கு அழகு சேர்க்கவும் தன்னை பார்ப்பவர் கண்களுக்கு கூடுதல் அழகாகவும் வசீகரமாகவும் காட்டவேண்டும் என்பதற்காக பலதரப்பட்ட ராசயான - வேதியல் பொருட்கள் கலந்த விலை கூடிய அழகு(??) சாதனங்களை பயன்படுத்தினாலும் இவை எல்லாவற்றையும் விஞ்சும் இயற்கை அழகூட்டும் மருதாணி பூசிக்கொள்ள மறுப்பவர் எவரும் இருக்க முடியாது.
இப்போதெல்லாம், திருமணங்களின்போது இந்த மருதாணி பூசி மணமகளின் முழங்கை, உள்ளங்கைகள், வெளிபுற கைகள், விரல்கள் பாதங்கள், கணுக்கால் , முழங்கால் போன்றவற்றின் அழகை மேலும் மெருகேற்றவென்றே பிரத்தியேகமாக ஒரு நாள் கொண்டாடப்படுகிறதாம். அந்த நாளுக்கென்று பிரத்தியேக ஆடை அலங்காரங்கள், விருந்து கேளிக்கைகள் தடபுடலாக.
இந்த மருதாணிகள் வயது வித்தியாசமின்றி, குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பூசிக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பதும் கண்கூடு.
இவற்றை பூசிக்கொள்பவர்களின் தோலின் நிறம் என்னவாக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு கூடுதல் அழகை, பொலிவை, வசீகரத்தை, கவர்ச்சியை இந்த மருதாணி பூச்சு, பாரபட்சமின்றி வாரி வழங்குவது இதன் கூடுதல் சிறப்பு.
எனது சிறு வயது ஞாபகம்: பெண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட எங்கள் கூட்டுக்குடும்பத்தில் விடுமுறை நாட்களில் வெளியூரிலிருந்து வரும் எங்கள் உறவினர்வீட்டு பெண்களும் சேர்ந்து வீட்டுக்கு அருகிலிருந்த மருதாணி குற்று மரத்திலிருந்து பறித்து கொண்டுவரப்பட்ட இலைகளை காம்புகளின்றி களைந்து அதை அம்மியில் வைத்து நன்றாக அரைப்பார்கள் கூடவே கொஞ்சம் எலுமிச்சை பழ ரசத்தை பிழிந்து விடுவார்கள் , பின்னர் முக்கியமான ஒன்றை சேர்க்க வேண்டும்என்பார்கள்.
அந்த முக்கியமான பொருளை கொண்டுவரும் பணியை என்னிடம் ஒப்படைப்பார்கள்.
நானும் கஷ்டப்பட்டு அந்த பொருளை கண்டுபிடித்து, சாகசங்கள் புரிந்து சேகரித்து கண்ணாடி பாட் டலில் அடைத்து கொண்டுவருவேன்.
அப்படி நான் கொண்டுவந்த பொருளை பக்குவமாக அம்மியில் இருக்கும் விழுதுடன் சேர்த்து அரைப்பார்கள். அந்த கூடுதல் பொருளால்தான் கூடுதல் வண்ணம் கிடைக்குமாம்- கிரெடிட் வென்ட் டு மீ! மீ!!மீ!!
இப்படி அரைத்த கலவையை இரவு சாப்பாட்டிற்கு பிறகு வழக்கமாக படுக்கும் மெத்தைகளுக்கு பதிலாக வரிசையாக பாய்களை விரித்துவிட்டு அதன்மீது அமர்ந்து எல்லோரும் மாறி மாறி எல்லா விரல்களுக்கும் , தவில் வாசிப்பவர் விரல்களில் அணியும் THIMBLE போன்று மொத்தை மொத்தையாக வைத்துகொள்வாரகள் கூடுதலா உள்ளங்கைகளிலும் வைத்துக்கொள்வார்கள்.
ஏக்கத்துடன் பார்க்கும் என்னுடைய பங்களிப்பிற்கு கூலியாக எனக்கும் வைத்துவிடுவார்கள்.
அடுத்த நாள் காலையில் எவரது கைகள் அதிகள் சிவந்து இருக்கின்றன என ஒருவருக்கொருவர் பார்த்து மகிழ்வார்கள். அதே சமயத்தில் படுத்திருந்த பாய்களில் சிந்தி இருக்கும் காய்ந்த உதிரிகளை சுத்தம் செய்வதிலும் என்னை இணைத்துக்கொள்வார்கள்.
இப்படி இயற்கை பொருட்களை கொண்டு செய்யப்படும் எளிய மருதாணிகளை இப்போது பல ரசாயான பொருட்களை கொண்டு செய்யும் வண்ணப்பூச்சுக்கள் ஆளுகை செய்வதை என்னவென்பது?
அதிலும் இதுபோன்ற மருதாணிஎன்றபெயரில் பல வண்ண குழைவுகளை பூசி அலங்கரிக்க பிரத்தியேகமான கலைஞர்களும் இருக்கின்றனராம்.
சமீபத்தில் பார்த்த ஒரு மருதாணி செய்முறை காணொளியில் தேவையான பொருட்களின் பட்டியலில் , வெல்லம் இருந்தது, சர்க்கரை இருந்தது, நாட்டு சர்க்கரை இருந்தது, சீராகம் இருந்தது ,குங்குமம் இருந்தது; கலவையும் தயாரானது ஆனால் மருதாணி இலைகள் மருந்துக்குக்கூட இல்லை ஆனாலும் அந்த காணொளி மருதாணி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து.
இப்படி இயற்கை முறையில் தயாரித்து பூசிக்கொள்ளும் பெண்களின் உள்ளங்கைகளை பார்க்கும்போது நம் உள்ளங்கள் அந்த உள்ளங்கைகளில் குடியேறி குழைந்துபோவதை தவிர்க்க முடிவதில்லை.
அதிலும் சின்ன குழந்தைகளின் அந்த பிஞ்சு கைகளில் பூசி இருக்கும் இத்தகு மருதாணிகளின் வர்ணஜாலம் மனதில் மகிழ்ச்சி வர்ணம் பூசாமல் - நம் உள்ளத்தில் மழலையில் ஓசையின்றி பேசாமல் நம் உள்ளங்களையும் புன்னகையால் சிவக்கவைக்காமல் போவது அரிது.
வீட்டில் அரைத்த மருதாணியுடன் சேர்த்து அரைக்க என்னிடம் கொண்டுவர சொன்னபொருள் என்னவாக இருக்கும்?
மருதாணி பூசிய மகளிர் வாசகர்களும் , மருதாணி அரைக்க உதவிய ஆடவ வாசகர்களும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அது என்னவாக இருக்குமென்று.
பி கு: மருதாணியின் பெயர்க்காரணம் இப்படியாக இருக்குமோ?: உன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு உன் உள்ளங்கைகள் சிவந்துபோகுமட்டும் முடிந்தவரை அவர்களின் உள்ளங்கள் உவகையினால் சிவந்துபோகுமட்டும் உதவிகளை ம(ரு)றுக்காமல் தா நீ.
நன்றி.
வணக்கம்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
பி.கு. சிறப்பு...
பதிலளிநீக்குவருகைக்கும் பி.கு. வை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி தனப்பால்.
நீக்குமருதாணியின் விளக்கம் சூப்பர், கோ!!! ko's unique explanation!
பதிலளிநீக்குநானும் சிறு வயதில் மருத்தாணி அரைத்ததுண்டு. வைத்துக் கொண்டதும் உண்டு. அப்படியே நீங்கள் விவரித்திருப்பது போல்தான். நிகழ்வுகள் நம் வீட்டிலும் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் மருதாணி மரங்கள் உண்டு. இதில் இரா பத்து (பற்று), பகல் பத்து (பற்றி) என்றும் இரு வேளையும் எந்த வேளை வைத்தாலும் பற்றும் இப்படி மரங்கள் உண்டு.
உள்ளம் சிவந்தால் கோபம் என்றுபொருள்படுமோ!!!!
கன்னம் சிவந்தால் வெட்கம் என்பார்கள் நிஜமாகவே கன்னம் சிவக்குமா? இல்லைனா கொஞ்சம் மருதாணியை அங்கு வைத்துக் கொண்டால் போச்சு!!!!
கீதா
வருகைக்கும் தங்களது சிறுவயது ஞாபகத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அம்மையீர். இரா பத்து, பகல் பத்து எனக்கு புது செய்தி.
நீக்குஉள்ளம் சிவந்தால் கோபம் வருமா? இன்னும் அதிகமாக நம்மால் கொடுக்க முடியவில்லையே என்பதால் இருக்குமோ. பதிவில் குறிப்பிட்டதுபோல் "உவகையினால் உள்ளம் சிவந்துபோகுமட்டும்" என்று குறிப்பிட்டிருந்தேன். கன்னம் சிவக்க நீங்கள் சொல்லும் டிப்ஸ் அருமை. மருதாணியின் பெயர்காரணத்தை பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.
நானும் மருதாணி அரைத்துள்ளேன். புளி வைக்கச் சொல்வார்கள் சில சமயம்....இரும்புக் கரண்டி அல்லது வாணலியில் வழித்து வைப்பதுண்டு. சிவக்கும் என்பதற்காக. சிலர் சுண்ணாம்பு வைப்பதுண்டு...அதன் பெயரைச் சொல்லமாட்டார்களே! அதான் நீங்களும் சொல்லாம விட்டிட்டீங்களோ?! மூணாது என்று சொல்லுவாங்க!
பதிலளிநீக்குசரி சுண்ணாம்பு கிடைப்பது கஷ்டமா என்ன? அப்போதெல்லாம் தெரு முக்குக் க்டைகளில் வெற்றிலை சுண்ணாம்பு வைத்திருப்பாங்களே...அதுக்கு ஒரு குச்கி கூடத் தொங்க விட்டிருப்பாங்க. அதுக்கா தேடி அலைஞ்சு கஷ்டப்பட்டீங்க!!!! உங்க ஊர்ல வெற்றிலை தட்டும் பாட்டி, தாத்தாக்கள் இல்லையோ?!!
கீதா
அம்மையீர், புளி வைத்தார்களா என்று எனக்கு நினைவில்லை, சுன்னாம்பு வைத்திருப்பார்கள் நினைக்கின்றேன் , ஆனால் என்னை சேகரித்து கொண்டுவரச்சொன்ன பொருள் முற்றிலும் வேறு. எங்கள் ஊரில் வெற்றிலை போட்ட பாட்டி தாத்தாக்கள் இருந்தனர், நீங்கள் எங்கள் ஊரில் இருந்தீர்கள்தானே அந்த காலத்தில்?
நீக்குமருதாணி விளக்கம் அருமை
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி கவிஞரே.
நீக்கு