பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 நவம்பர், 2023

பாரத ரத்தினங்கள்!!!

மின்னும் வைரங்கள்!

 நண்பர்களே,

குழலும் இனிதுதான், யாழும் இனிதுதான் அதனினும் இனிது மழலைகளின் சொல்லோசை என்பதாக வள்ளுவன் வரையறுத்திருக்கிறான்.

குழந்தைகள்மீது அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த நம் சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்ததினமான நவம்பர் 14 ஆம் நாளை இந்தியாவில், நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றோம்  என்பது உலகறிந்த செய்தி.

ஒவ்வொரு குழந்தைக்கும் வருடத்தில் ஒவ்வொரு நாள் பிறந்த நாளாக அமையும்.

ஆனால் நாட்டில்  எத்தனை பேர் இந்த குழந்தைகள் தினவிழாவிற்கென்று , பிரத்தியேகமாக நம் வீட்டு குழந்தைகளுக்கென்று விழா எடுக்கின்றோம்?

அவர்களுக்கு புத்தாடை, சிறப்பு உணவு, அல்லது வெளியில் அழைத்து சென்று கண்களுக்கும் மனதிற்கும் இதம் தரும் , சுகமான நினைவுகளை கொடுக்கக்கூடிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து சென்று மகிழ்விக்கின்றோம் என்பது கேள்வி குறிதான்.

இது ஏதோ  அரசு கொண்டாடும் ஒரு விழா அல்லது பள்ளிகள்  கொண்டாடும் ஒருவிழா என்றில்லாமல், குழந்தைகள் இருக்கும் அனைத்து வீட்டிலும் இந்த இனிய நாளை குழந்தைகளை மையப்படுத்தி கொண்டாடி மகிழவேண்டிய ஒரு நாள் என்பதே என் தாழ்மையான கருத்து.

பிறந்த நாள் கொண்டாடப்படும் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு வருடம் ஒருமுறை கேக் வெட்டி விழா எடுக்கின்றோம். 

ஆனால் இதுபோன்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தை இன்றுவரை தங்கள் வாழ்நாளில் அனுபவித்திருக்காத குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் இன்று ஒருநாள் அவர்களை தேடி பிடித்து அவர்களை மகிழ்விக்க நாம் ஏதேனும் செய்யவேண்டாமா?

குழந்தைகள் இருப்பவர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டுமா?

குழந்தைகள் இல்லாதவர்கள், தமக்கு பெற்றோரே இல்லாமல் தனியார் மற்றும் அரசு காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளை மகிழ்வித்து அவர்களோடு இந்த நன் நாளை கொண்டாடலாம்.

மேலும் இன்றைய தினம் மட்டுமின்றி நம் வாழ்வின் எந்த நாளிலும் சாலைகளில்  வறுமையின் நிமித்தம் கையேந்தி யாசித்துக்கொண்டிருக்கும் உண்மையான வரிய நிலையில் இருக்கும் குழந்தைகளிடத்தில் அன்பாயும் கரிசனையுடனும் நடந்து கொள்வதோடு அவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வது மிகச்சிறந்தது.

அப்படி எல்லா நாளிலும் செய்வதற்கான சந்தர்ப்பம் அமையாதவர்கள் குறைந்த பட்சம் இந்த குழந்தைகள் தினத்தன்றேனும் , குழந்தை தொழிலாளர்களாக இருப்பவர்களிடத்திலேயும், தெருக்களில்  சாலைகளில் யாசித்துக்கொண்டிருப்பவர்களிடத்திலேயும், பெற்றோரோடு சேர்ந்து சாலை ஓரங்களிலும், பாலங்கள் அடியிலேயும், மரத்தின் அடியிலேயும் ,நடை பாதைகளிலும் தங்கி வசிக்கும்  சிறுவர் சிறுமியரிடத்தில் அன்பாகவும் ஆதரவாக பேசியும் நம்மால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை மகிழ்விக்க பழக வேண்டும். 

இந்த தினம் மக்களிடத்தில் -  சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு,வறுமை ஒழிப்பு குழந்தைகள்  கல்வி, சத்துணவு, மருத்துவம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அவர்களுக்கான சுகாதாரம், நோய் எதிர்ப்பு   போன்றவற்றை முக்கியப்படுத்தி, முன்நிறுத்தி  செயலாற்றவும்  , நிறைவேற்றவும்  அதன் அவசியத்தை  நினைவுபடுத்தவுமே கொண்டாடப்படுகிறது என்பது பெயரளவில், ஏட்டளவில், அரசு பதிவேட்டில் மட்டும் இல்லாமல், அனைத்து சக இந்திய  குடிமக்களின் உள்ளத்திலும் ஊடுறுவவேண்டும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உளமார உதவிட வேண்டும். 

இன்றைய  குழந்தைகள் மின்னும் வைரங்களாக உலகை வழி நட த்திச்செல்லும் நாளைய   ரத்தினங்களாக, துருவ நட்சத்திரங்களாக  மாற்றம் பெறவேண்டுமாயின் தனிப்பட்ட விதத்தில் நாமும் கூட்டாக  நம் சமூகமும் அரசு அதிகாரம் மிக்க ஆளுமைகளும்தான் அவர்களை   பட்டைதீட்டும் பொறுப்பு மிகுந்தவர்களாக, பாரபட்சம் இன்றி ஏழ்மை பிணியும் அறியாமை பிணியும் முற்றிலும் தீரும்வரை தொடர்ந்து பணியாற்றவேண்டும் என்பதும் என் தாழ்மையான கருத்து.

இந்த மின்னப்போகும் வைரங்களை பட்டைத்தீட்டும் பொறுப்பும் கடமையும் , ஓரளவிற்கு வளர்ந்து பக்குவப்பட்டதாக கருதும்  நம் ஒவ்வொருவரிடமும் தான் இருக்கிறது என்பது கூடுதல் சிந்தனை.

சரி, குழந்தைகள் என்பவர்கள் யார், எந்த வயதினர்?

வயதின் அடிப்படையில்  , பதின்  பருவம் அடையும் வரையிலுள்ளவர்கள் மட்டுமா?  

இல்லை எத்தனை வயதானாலும் , கள்ளம் கபடமின்றி, வெள்ளந்திரி மனதுடன் இருக்கும் , தன்னிச்சையாக சிந்தித்து தமது தேவைகளை தாமே பூர்த்திசெய்துகொள்ள முடியாமலும் தமது எண்ணங்களை தேவைகளை சரியாக எடுத்தியம்பும் மனநிலையம் பக்குவமும் இல்லாத எவருமே குழந்தை கள்தான்.

அதற்கும்  மேலாகா, இறை நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வதுபோல், இறைவன் படைப்பில் நாம் எல்லோரும் குழந்தைகளே.

எனவே அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தைவுள்ளம் கொண்ட  அனைவருக்கும் இந்த இனிய திருநாளின் வாழ்த்துக்களை தெரிவித்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி,

வணக்கம்,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. குழந்தைகள் தினம் அன்று சிறப்பான சிந்தனைகளை பதிவு செய்திருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் குழந்தையுள்ளம் கொண்ட அனைவருக்கும் அஹா .......... தங்கள் சிந்தனை அருமை

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி தனப்பால், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

   நீக்கு