பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 நவம்பர், 2023

யாருக்கெல்லாம்...

தலை தீபாவளி?

நண்பர்களே,

இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் வர இருக்கும் தீபாவளி ஒரு சிலருக்கு சிறப்பு தீபாவளியாக அமையும் எனபதில்  ஐயமில்லை.

கடந்த ஆண்டு தீபாவளி முடிந்ததற்கு  பிறகும்  இந்த ஆண்டு தீபாவளிக்கும்  இடையிலான கால கட்டத்தில் திருமணமான புதும தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை கொண்டாடுவதுபோல், திருமணத்தில் இணைக்கப்பட்ட  மணமக்களின் பெற்றோருக்கும்கூட இது தலை தீபாவளிதான்.

திருமண வயது வந்த பெண்ணைப்  பெற்றவர்களும் , படிப்பு முடித்து நல்ல வேலையில் அமர்ந்த மகனை பெற்றவர்களும்  பல ஆண்டுகளாக ஏறக் குறைய  அனைத்து பொருத்தங்களும் அமையப்பெற்ற நல்ல வரன்களையும் நல்ல பெண்களையும்  கண்தடுத்து இணைத்துவைப்பது  ஒரு சவாலான சாதனையே.

அப்படி  இருவீட்டாரின் எதிர்பார்ப்புகள், நடைமுறை சம்பிரதாயங்கள் போன்றவற்றில் உடன்பாடு ஏற்பட்டு சுப முகூர்த்த சுபதினத்தில், பெரியோர், உறவினர், நண்பர்கள் புடை சூழ  திருமணம் நடத்தி முடித்து,  சமையல் காரர்கள், பந்தல் காரர்கள், திருமண நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்த ஒப்பந்தக்காரர்கள் என எல்லோருக்கும் பணம் பட்டுவாடா செய்து பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்த மணமகள் வீட்டருக்கும்,  மகன் சம்சாரியாக  தன்  மனைவியுடன்    வீடு வந்த மகிழ்ச்சியில் மகனை பெற்றவர்களும் அடையும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது.

அவ்வகையில் மணமக்களுக்கு மட்டுமின்றி அவர்தம் பெற்றோருக்கும் இந்த தீபாவளி  ஒரு சில நெருடல்கள், கடன் சுமை போன்றவற்றை  தவிர்த்து பார்க்கையில் மனதிற்கு சுகம் சேர்க்கும் இனிய தலை தீபாவளிதான்.

அதேபோல, இந்த ஆண்டு புதிதாய் பட்டம் பெற்றவர்கள், மேற்படிப்பில் சேர்ந்தவர்கள், தொழில் தொடங்கியவர்கள், வேலையில்  சேர்ந்தவர்கள்  , புதியதாய்  வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள், புதிதாய் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், புதிதாய் வாகனம் வாங்கியவர்கள், புதிதாய் வீடு கட்டியவர்கள் , சொந்தமாய் வீடு வாங்கியவர்கள்  நீண்ட நாள் எதிர்நோக்கியிருந்த புண்ணிய ஸ்தலங்களை சுற்றிபார்த்தவர்கள், நீண்ட வருடங்களுக்குப்பின் மனதிற்கினிய நண்பர்கள் உறவினர்களை சந்தித்தவர்கள், இழுபறியில் இருந்த நீண்ட நாள் வழக்குகளில்  தமக்கு சாதகமான தீர்ப்பு பெற்றவர்கள், மனதிற்கு அமைதியையும் இன்பத்தையும் கொடுக்கக்கூடிய தர்ம காரியம் செய்தவர்கள் என  எத்தனையோ நேர்மறை நிகழ்வுகள் தம் வாழ்வில் இந்த ஆண்டு நடந்ததை எண்ணி மகிழ்பவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு ஒரு சிறந்த  தலைதீபாவளியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

மேலும் இந்தாண்டு தாயானவர்கள் , தாய்மை அடையும்  பேறுகாலம் நோக்கி காத்திருப்பவர்கள் , குழந்தைகளின் வரவினால் தாத்தா பாட்டி ஆனவர்கள் எல்லோரு க்கும் இந்த தீபாவளி தலை தீபாவளிதான்.

அதேபோல, பேராபத்திலிருந்து மீண்டவர்கள், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல்  இக்கட்டான சூழ்நிலை விலகி மனதிலும் உடலிலும் வாழ்விலும் தெளிவும் நிம்மதியும் அடைந்தவர்களுக்குக்கூட இந்த தீபாவளி தலை தீபாவளிதான் என்றாலும் அது ஏற்புடையதுதான்.

இப்படி நெஞ்சிக்கினிய நினைவுகளை பதித்துச்செல்ல காத்திருக்கும் இந்த தீபாவளி, சம்பந்தப்பட்ட எல்லோருக்கும், நம் இஸ்ரோ உட்பட, இனிய தலைதீபாவளி என்றால் அது மிகை அல்ல, 

அவ்வகையில் இந்த தீபாவளி எனக்கும்தான் தலை தீபாவளி என்றால் அதுவும்  மிகை அல்ல.

அது எப்படி எந்த வகையில் என்பதை குறித்த விளக்கமான பதிவை அடுத்த தீபாவளிக்குமுன் பதிவிடுகிறேன்.

அதுவரை நண்பர்களே, பாதுகாப்பான வகையிலும் சமூக அக்கறையுடனும், குடும்ப வரவுசெலவுகளை மனதில்  கொண்டும் , முடிந்தவரை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் கொடுக்கும் வகையில் , பட்டாசு, வான வேடிக்கை ,புத்தாடை , சிறப்பு உணவு , இனிப்பு, பலகாரங்களை   நம் உறவுகள் நண்பர்கள் சொந்தங்களோடு மட்டுமின்றி நமக்கு திருப்பி கொடுக்க திராணியற்ற எளியவர்களோடும்  பகிர்ந்தும் பகிர்ந்துண்டும்  இந்த இனிய தீபாவளியை இன்பமுடன் மகிழ்ச்சியாக கொண்டாட என் நெஞ்சம் நிறைந்த, "தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்".
நன்றி. 

வணக்கம், 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

 கோ 


10 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி குறித்த தங்கள் சிந்தனைகள் நன்று.

  பதிலளிநீக்கு
 2. குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். பதிவினூடான எமது சிந்தனையை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. உங்களுக்கும் வாழ்த்துக்கள் தனப்பால் , தீபாவளி சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன், வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. அவ்வகையில் இந்த தீபாவளி எனக்கும்தான் தலை தீபாவளி என்றால் அதுவும் மிகை அல்ல.

  அது எப்படி எந்த வகையில் என்பதை குறித்த விளக்கமான பதிவை அடுத்த தீபாவளிக்குமுன் பதிவிடுகிறேன்.//

  ஏதோ புரிவது போல் உள்ளது. ஆனால் சொல்ல முடியாது இந்த கோ நம்மள பல்பு வாங்க வைத்துவிடுவார்!!!

  சரி சரி எங்க ஊகம் எங்களுடனே இருக்கட்டும். உங்க பதிவை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் (ஒரு வேளை புதிய வரவுகள் குடும்பத்தில் சேர்க்கை இருந்தால்!!! அவர்களுக்கும்!!!!! பின்ன பதிவில் அதுபற்றித்தானே சொல்லியிருக்கீங்க அதனால்!!!!)

  எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மையீர்,

   உங்களுக்கு எமது தீபாவளி நல் வாழ்த்துக்கள் ,சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

   புதிய "வரவுகள்" ஏதுமில்லை எல்லாம் பழைய "செலவுகள்தான்".

   ஏன் இப்போது "தில்லையகத்திலிருந்து மறுமொழி வருவதில்லை? மாறாக " பெயரில்லாமல்" எனும் விலாசத்தில் இருந்து தங்களிடமிருந்து வருகிறதே.

   எல்லாம் சரியாக தானே போய்க்கொண்டிருக்கிறது? Take care.

   நீக்கு
 5. உங்களுக்கும் வாழ்த்துக்கள் திரு கரந்தையாரே.. வருகைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. தலை தீபாவளி தங்களுக்கு என்று நினைத்தேன். சரி எப்படியோ வாழ்த்துகள். அடுத்த தீவாவளிக்குள் சொல்லூங்கள்.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள், அடுத்த தீபாவளிக்குமுன் கண்டிப்பாக சொல்கிறேன் காத்திருங்கள்.

  பதிலளிநீக்கு