முழுமையின் தொடக்கம்.
நண்பர்களே,
நீண்டதொரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் இந்த வலை தளத்தின் ஊடாக உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.
எத்தனையோ செய்திகள் நிகழ்வுகள் படிப்பினைகள், எத்தனையோ அனுபவங்கள் மனிதர்களின் சந்திப்புகள் வெளிநாடு- வெளி ஊர் பயணங்கள் குறித்து இந்த இடைப்பட்ட காலத்தில் பதிவுகளாக தங்களோடு பகிர்ந்துகொள்ள ஆழ்மனதின் படிமானங்கள் படியமைத்துக்கொடுத்தபோதிலும், பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப்போடும் மனப்பான்மையை தள்ளிப்போட மனமின்றி இன்றுவரை பதிவுகளில் தடம்பதிக்க தாமதமானது.
எதுவானாலும் எப்போது வெளிப்படவேண்டுமோ அப்போதுதானே அவைகள் வெளிச்சத்திற்கு வரும்.
அவ்வகையில் இனியும் தள்ளிப்போடக்கூடாது என்றுணர்த்தி என்னை இந்தப்பக்கமாக தள்ளிவிட்ட ஒரு நிகழ்சியை குறித்தே இன்றைய இந்த பதிவு.
வேலைநிமித்தமாக இந்த வெளி நாடு வந்த சில தமிழ் குடும்பங்கள் தேவைக்கு அதிகமாகவே எல்லா சௌகரியங்களோடு வாழ்ந்துவந்தாலும் இந்த நாட்டின் சூழல், மொழி, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், நடைமுறை அனைத்தும் புதிதாகவும் , சில சமயங்களில் புதிராகவும், பலவேளைகளில் பரவசமுமாகவும் இருந்தாலும் , மனதின் ஓரத்தில் ஓர் இனம்புரியாத கலக்கமும் இழையோடி இருந்ததை உணர்ந்தனர்.
அந்த இனம்புரியாத கலக்கம் நம் அடுத்த தலைமுறைக்கு நம் இனம் எதுவென புரியாமலே போய்விடுமோ என்பதால் தான்.
எந்த இனமென்றாலும் அவர்களின் முழுமுதல் அடையாளம் அவர்களது தாய் மொழிதானே.
அப்படி உலகின் மூத்த மொழி - தொன்மையான செம்மொழியாம் நம் தமிழ்மொழி இந்த நாட்டில் வாழும் நம் தமிழரிடையே எந்தளவிற்கு ஊடுருவி வேர்பிடித்திருக்கிறது என்று என்னும்போது அத்திப்பூத்தாற்போல் ஆங்காங்கே ஓரிருவர் தமிழ்நாட்டிலிருந்தும் நம் தொப்புள் கொடிகளான புலம் பெயர்ந்த ஓரிரு குடும்பத்தினர் மட்டுமே இருந்தபோதிலும் அவர்களின் பிள்ளைகள் எந்த அளவிற்கு தமிழோடு உறவு பூண்டுள்ளனர் என கணக்கீடு செய்கையில் பேராதிர்ச்சியும் ஆற்றொன்னா கவலையும் ஆட்கொண்டது நம் மொழியின்பால் அதீத ஆர்வமும் அளப்பரிய பாசமும் நிகரற்ற நேசமும்கொண்ட தாய்மார்கள் சிலருக்கு.
இந்த நாட்டில் பிறந்து வளரும் நம் குழ்நதைகள் பிற்காலத்தில் நம் வேர்மண்ணின் வாசமும் நம் மொழியின் வாசலும் , கலாச்சாரம்,பண்பாடு நாகரீகம், இலக்கியம், இலக்கணம் , அதன் மேன்மை போன்றவற்றை மறந்துபோகும் சூழல் ஏற்பட அதிகபட்சம் வாய்ப்பிருக்கும் இந்த நாட்டு சூழலில், எப்படி நம் மொழியினை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைத்து அதனோடு எப்படி பிணைப்பையும் இணைப்பையும் ஏற்படுத்துவது என சிரத்தையோடு சிந்திக்க தொடங்கினர்.
மனத்திலுதித்த மகோன்னதமான சிந்தனைக்கீற்றை ஒத்த கருத்துடைய ஓரிரு தாய்மார்களோடு கலந்தாலோசித்து தம் வீட்டு பிள்ளைகளுக்கு " அகர முதல" எழுத்துக்களையும், எண்களையும் பயிற்றுவித்து,பேச்சுத்தமிழையும் கற்று கொடுத்து, வீட்டில் தமிழ் பேசியும் , பள்ளிக்கூட நாட்கள் தவிர்த்து வார விடுமுறை நாட்களில் பிரத்தியேகமாக தமிழ்ப்பாடம் நடத்த நேரம் ஒதுக்கி கற்றுத்தர ஆரம்பித்ததன் விளைவாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழ்ப் பிடித்து வளர்ந்துவந்த குழந்தைக்கு , நாக்கில் சர்க்கரை நீர் தொட்டு வைத்து, நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்து பெற்றோர்களும் பெரியோர்களும் நண்பர்களும் நலம் நாடுவோர்களும் கூடி குளவி பாடி குதூகலித்து அந்த ஒருவருட குழந்தைக்கு , " பிரிஸ்டல் தமிழ்ப்பள்ளி" என பெயர்சூட்டி மாணிக்கம் மின்னும் மரகத தமிழ்த்தொட்டிலில் இட்டு தாலாட்டி மகிழ்ந்தனர் பத்தாண்டுகளுக்கு முன்.
இது குறித்தான நிகழ்ச்சித்தொகுப்பை உங்களில் பலரும் கீழ்காணும் எமது பதிவுகள் வாயிலாக வாசித்து பாராட்டி அவர்களை வாழ்த்தினீர்கள்.
"தமிழ் பேச்சு தடை போச்சு" - 1 (koilpillaiyin.blogspot.com) "
"தமிழ் பேச்சு தடை போச்சு" - 2 (koilpillaiyin.blogspot.com)
"தமிழ் பேச்சு தடை போச்சு" - 3 (koilpillaiyin.blogspot.com)
"தமிழ் பேச்சு தடை போச்சு" - 4 (koilpillaiyin.blogspot.com)
இவ்வாறு ஒன்று இரண்டு மூன்று என ஆண்டுகள் பல இவர்களது அயராத உழைப்பின் பலனாக அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சிப் பாதையில் பயணித்து மரகத தொட்டிலிலிருந்து துள்ளி குதித்தெழுந்து, மாணிக்க ஊஞ்சலில் ஒய்யாரமாய் உய்யலாலா பாடி வளர்ந்து பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்கு பரிணாம வளர்ச்சியுற்று புஷ்பபல்லக்கில் அமர்த்தப்பட்டு பல தூரம் தோள் சுமக்கப்பட்டு கண்மணிபோல் கவனமாக வளர்க்கப்பட்ட இந்த "நட்சத்ரா தமிழ்ப்பள்ளி" எனும் தமிழ்க்குழந்தை கடந்த ஞாயிற்று கிழமை தமது பத்தாம் ஆண்டில் பாதம் பதித்து பல்லக்கிலிருந்து தேருக்கு மாறி இருக்கும் அந்த மகத்தான பத்தாம் ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சி என் மனதில் ஏற்படுத்திய நெகிழ்ச்சியை என்னவென்பேன்.
இந்த சிறப்பு ஆண்டு விழா எனும் இனிய கொண்டாட்டத்தின் பொங்கும் இன்பப் பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைக்கும் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர், ஆர்வம் குறையா ஆசிரிய பெருமக்கள், சோர்வறியா தன்னார்வலர்கள், தமிழ்த்தேனை அள்ளிப் பருகும் மாணவ கண்மணிகள், பெற்றோர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நமது அன்பான வாழ்த்துக்களை வழி மொழிவோம்.
ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியயான நதியாய் , தெளிந்த நீரோடையாய் தமிழ்ச் சேவை எனும் பயணத்தை வெற்றிகரமாக நடத்திச்செல்லும் பாங்கை எண்ணியும் இந்த அரும்பணி என்னும் பெரும்பணியாற்றும் பள்ளியை சார்ந்த அனைவருக்கும் மனதார பாராட்டை தெரிவிப்பதில் உள்ளபடியே உள்ளம் மகிழ்கின்றேன்.
இதுபோன்ற கொண்டாட்டங்கள் அவர்களின் கடின உழைப்பிற்கும் தன்னலமற்ற சேவைக்கும், தொய்வில்லா ஊக்கத்திற்கும் மென்மேலும் உற்சாகமூட்டும் அருமருந்தெனவும் , அவர்களின் இத்தனை ஆண்டு காயங்களுக்கு இடப்படும் களிம்புகளாக மட்டுமின்றி இத்தமிழ்ப்பணியை சிரமேற்கொண்டு சீரிய தொண்டாற்றும் அவர்களது சிரசுகளுக்கு சூட்டப்படும் கிரீடங்களாகவும் அமையும் என்பது நிச்சயம்.
பத்து என்பது பலவகைகளில் சிறப்புக்குரியது:
தமிழிலக்கியத்தில் - பத்துப்பாட்டு!
ஆன்மீக ஆதி ஆகமத்தில் -பத்துக்கட்டளை!
இதிகாச பாத்திரப் படைப்பில் - பத்துத்தலை!
இறையவதார பரிணாமத்தில் - பத்து அவதாரம்!
இப்படி பத்திற்கு ஒரு பரீட்ச்சயமான பாரம்பரிய வரலாற்று சுவடுகள் இருப்பதுபோல், முழுக்க முழுக்க பொருளாதார நோக்கம் எள்ளின் முனையளவும் இல்லாது தன்னார்வமாகவும் , முனை மழுங்கா முனைப்புடனும் சலிப்பற்ற உத்வேகத்துடனும் உற்சாகமும் சமரசம் இல்லா தமிழ்ப்பற்றும் இந்த பள்ளி செயல்படும் பிரிஸ்டல் மாநகர தமிழ் வரலாற்றில் நட்சத்ரா தமிழ்ப்பள்ளியின் பெயரும் பிரதானமான இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இவர்களின் வெற்றிகரமான இந்த பத்தாம் ஆண்டில் பாதம் பதித்திருப்பதே மாபெரும் சாதனைதான் அதில் எந்த சந்தேகமும் இல்லையென்றாலும் இந்த பள்ளி இன்னும் 25,50,100 ... என்று பல ஆண்டுகள் எனும் முழுமை நோக்கி பயணிக்க இந்த பத்தாம் ஆண்டு ஒரு துவக்கமாக அமையட்டும் என வாழ்த்துகின்றேன்.
தொட்டிலில் தவழ்ந்து , நடை வண்டியில் நடை பயின்று, ஊஞ்சலில் ஒய்யாரித்து பாரமானாலும் பாசத்துடன் இந்த நட்சத்ரா தமிழ்ப்பள்ளி எனும் பல்லக்கை தோள் சுமந்து இந்த பத்தாம் ஆண்டில் பாதம் பதித்திருக்கின்றார்கள்.
இந்த பத்தாண்டு அனுபவமெனும் சக்கரங்களை இவர்கள் தோளில் சுமந்துவந்த பல்லக்கில் பூட்டவேண்டும். இனி இது பல்லக்கு அல்ல; இதன் வளர்ச்சியும் வீரியமும் வீச்சும் அளப்பரியது என்பதாலும் இதன் பயணம் எல்லைகளை கடந்து செல்லும் ஆற்றல் பிரமாதமாய், பிரவாகம் எடுத்து பிரகாசிப்பதாலும் இது வடம் பிடித்து இழுத்துசெல்லப்படவேண்டிய ஒரு உன்னத பிரமாண்டமான தேர்.
இன்முகத்தோடும் தியாக உள்ளத்தோடும் இத்தனை தூரம் சுமந்தவர்கள் இனியும் புதிய உற்சாகத்துடனும் ,புது பலத்துடனும் இந்த பிரமாண்ட தேரை இன்னும் பல தூரம் முழுமை நோக்கி இழுத்து செல்வார்கள் என நம்புகின்றேன்.
அப்படி அவர்கள் இழுத்து செல்லும் பயண பாதையின் வழி நெடுக காட்டு மல்லியும் , நாட்டு மல்லியும், முல்லை மலர்களும் , ரோஜா இதழ்களும் பாரிஜாதமும் மெத்தை விரித்து தடைகளகற்றி அவர்களது பாதங்களுக்கு நல்ல பாதை சமைக்கும் என வாழ்த்துகிறேன்.
இவர்களின் பெரும்பணி எனும் இந்த அரும்பணி வாழையடி வாழையாக இந்த அந்நிய பூமியில் தொடரும் பொருட்டு, ஆலமரத்தின் விழுதுகள் அடி மரத்தை தாங்குவதுபோல் அடுத்த தலைமுறையினரும் இச்சேவையை தொடருவார்கள் என நம்புகிறேன்.
இவர்களது தொய்வில்லா ஆர்வம், பங்களிப்பு, கடின உழைப்பு பொன்னான நேரங்கள் போன்றவற்றை தமிழுக்காக அர்ப்பணிக்கும் இவர்களது பணியை சேவை என்பதா?, தியாகம் என்பதா?,தவம் என்பதா?,வேள்வி என்பதா?
இல்லை இல்லை, "அதையும் தாண்டி .... புனிதமானது" என்றே சொல்ல தோன்றுகின்றது.
இத்தகு சீரிய புனித பாதையில் அணிசேர்ந்து பொது நல தொண்டாற்றி வரும் இந்த நட்சத்ரா தமிழ்ப்பள்ளி, ஆல் போல் செழித்து அருகுபோல் வேரூன்றி மென்மேலும் ஓங்கி வளரவேண்டும் என்றும் இப்பள்ளியின் நற்பெயர் அவனி எங்கும் பவனி வரவேண்டும் என்றும் இதன் புகழொலி நாட்டின் எல்லைகளைக் கடந்து நிலாவரை சென்று உலாவரவேண்டும் என்றும் உளமார வாழ்த்துகின்றேன்.
கல் தோன்றியது
இன்னும் மண் தோன்றவில்லை
அதற்கும் முன் தோன்றியதாம்
உலகில் ஓர் மொழி
அதுவே,
நம் செம்மொழி எனும்
தமிழ் மொழி.
அந்த அமிழ்த மொழி இட்ட
அன்பு கட்டளையாம் ,
" திரைக் கடலோடியும்
திரவியம் தேடு"
அப்படி,
திரவியம் தேடிவந்த - இந்த
தீவு நாட்டில் நம் மொழி
தினையளவும் இல்லையே என்ற
தீராத பெருங்குறையை
தீர்க்க வந்ததிந்த அட்ச்சயத்
தேமதுர தமிழ்ப்பள்ளி !
தினையளவே விதைக்கப்பட்ட -இந்த
திறன் நிறைத் தமிழ்ப்பள்ளி -இன்று
பனையளவு வளர்ந்து பெரும்
சாதனையை நிகழ்த்திக்காட்டி - நம்
அனைவரது புருவங்களையும் -சுமார்
அரையடி உயர்த்தும் வண்ணம்
ஆனந்தப் பெருவெள்ளம் - நம் மனதின்
அடிவரை பாய்ச்சும் இந்த
நட்சத்ரா தமிழ்ப்பள்ளிக்கு - எந்தன்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பொதுநல நோக்கோடு செயல்படும் இவர்களின் எல்லா முயற்சிகளும் திருவினையாகும் பொருட்டு, எல்லாம் வல்ல இறைவனின் அருளும் தமிழன்னையின் ஆசியும் எப்போதும் இவர்களுக்கு துணை நிற்கும் என கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
வாழ்க பாரதம்! வெல்க தமிழ்!!
நன்றி !
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
பி.கு :
1.மாணவர் எண்ணிக்கையும் ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு உயர்ந்துகொண்டு இருப்பதாலும் இந்த பள்ளியின் சேவையின் தேவை அதிகரித்ததன் விளைவாகவும் விரைவில் இவர்கள் இருக்கும் பெருநகரில் இருந்து சுமார் 50 மைல் தூரத்திலிருக்கும் மற்றுமொரு பெரு நகரத்திலும் இந்த ஆலமரத்தின் கிளைகள் பரவி படர இருப்பதன் அதிகாரபூர்வமான ஆனந்த அறிவிப்பும் விழா நேரத்தில் செய்யப்பட்டது; அதற்கான அத்தாட்சி அடிக்கல் பலகையை திறந்துவைக்கும் பாக்கியத்தை அடியேனுக்கு வழங்கி கௌரவப்படுத்திய எந்தன் உள்ளம் சிலிர்த்த நிமிடங்களை என்னவென்பேன்?
2.இந்த தமிழ்ப்பள்ளியின் பத்தாம் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து பலவகையில் என்னை உபசரித்து வாழ்த்துரைக்க வாய்ப்பளித்த வகையில் உள்ளார்ந்த அன்புடனும் பேருவகையுடனும் விழாமேடையில் பகிர்ந்துகொண்ட எனது வாழ்த்து செய்தியின் சில பாகங்கள் இந்த பதிவில் உங்களுக்காகவும்.
3.நான்கு மணி நேரமாக தடையின்றி விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நடைபெற்ற இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் நிகழ்த்திக்காட்டிய கலை நிகழ்சிகள் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் இனிய விருந்தாக அமைந்ததையும் பின்னர் அனைவரின் வயிற்றுக்கும் அறுசுவை உணவளித்ததையும் சொல்லவும் வேண்டுமோ?
சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....
பதிலளிநீக்குஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.
நீக்குதங்களின் வருகை மகிழ்வளிக்கிறது.
இரண்டாண்டுகாலமாக தாங்கள் மேற்கொண்ட தவ நிகர் கடும்பணியின் வெளிப்பாடான இரு மொழி புத்தகங்கள் சிறப்புற எனது பணிவான வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.
நீக்குதங்களின் வருகை மகிழ்வளிக்கிறது, தங்களின் வாழ்த்துக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நல்லுள்ளங்களின் மனங்களில் இதம் சேர்க்கும் என நம்புகின்றேன்.
இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு - சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
வெங்கட்,
நீக்குநலமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
இடைவெளி நீண்டபோதிலும் உடனடியாக எந்தன் பதிவு கண்டு வாழ்த்துரைத்த தங்களின் அன்புள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.
தங்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியவர்களின் உற்சாகத்தை மெருகேற்றும் என நம்புகின்றேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
பத்தாண்டுகளில் பனையளவு வளர்ந்திருக்கும் பிரிஸ்டல் மாநகர வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் பிரிஸ்டல் தமிழ் பள்ளி நட்சத்திர பள்ளி காலத்தைக் கடந்தும் நின்று வரும் தலைமுறையினர்க்கு தமிழ் ஆர்வத்தையும் தமிழ் உள்ளத்தையும் கொடுத்த அப்பள்ளிக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
அன்புடையீர்,
நீக்குஇந்த தமிழ்ப்பள்ளியை பனையளவாய் வளர்த்துவரும் தமிழுள்ளங்களில் பனங்கற்கற்கண்டாய் இனிக்கும் உங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
வருகைக்கும், பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வாங்க கோயில் பிள்ளை!!! ஹைபர்னேஷன் முடிந்து வந்து எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் ஹைபர்னேஷனுக்குப் போய்டுவீங்க!
பதிலளிநீக்குநட்சத்திரப் பள்ளி இப்படியான தமிழ்பள்ளிகள் வெளிநாட்டிலும் தொடங்கப்பட்டு வளர்ந்து வருவது ஆச்சரியமான விஷயம் தான். நம் மக்களில் சிலரும் இதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள்!
குழந்தைகளுக்கும் ஆர்வம் ஆச்சரியம். மிக மிக நல்ல விஷயம். பள்ளி வளர்ந்து கிளைகள் படர்வதும் பெரிய விஷயம்.
அதற்குக் கோ வை அழைத்து திறந்து வைக்கச் சொன்னது இனிமையான மகிழ்வான செய்தி. செவிக்கு உணவு இல்லாதப்ப என்று வள்ளுவர் சொன்னாலும். செவிக்கும் மனதிற்கும் உணவு அளித்ததோடு வயிற்றுக்கும் சிறிது இல்லை நிறையவே ஈயப்பட்டு சிறப்பாக நடந்திருப்பதும் தெரிகிறது.
பள்ளி மேன்மேலும் வளர்ந்து செழிக்கவும், உங்களுக்கும் வாழ்த்துகள் கோ!
கீதா
அன்புடையீர்,
நீக்குஇடைக்கால ஓய்வை - உறக்கத்தை இடித்துக்காட்டி தங்களின் எதிர்பார்ப்பை பகிரங்க படுத்தி என்னை உற்சாகமூட்டும் பன்னீர் துளிகளான தங்களின் பாசமிகு செய்திக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறேன்.
நலமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
பள்ளியின் வளர்ச்சியை வெகுவாக பாராட்டி மென்மேலும் வளர ஆசிகூறும் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
தொடர்ந்து இந்த பக்கம் வர முயற்சி செய்கிறேன்.
வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் நன்றியுடன் தலை வணங்குகின்றேன்.
அருமை தோழர். நம் கண்முன்னே தமிழ் படிக்காமல் ஒரு தலைமுறை வளர்ந்துவிட கூடாது என்கிற நம் அக்கறைக்கு, உங்கள் பாராட்டு மொழிசார்ந்து இனம் சார்ந்து இயங்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஊக்கமளிக்கும் உற்சாகமூட்டும் வரிகள்.
பதிலளிநீக்குதோழரே,
பதிலளிநீக்குபதிவிற்கான பின்னூட்டத்தின் வாயிலாக தங்களின் பாராட்டையும் வாழ்த்துகளையும் தோழமையுடன் தெரிவிக்கும் தங்களுக்கு என் நன்றிகள்.
இதுபோன்ற தட்டிக்கொடுக்கும் வார்த்தைகள் இன்னும் உயரங்களை எட்டிப்பிடிக்க ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வருகைக்கு மீண்டும் நன்றிகள்.
தமிழ் மொழியின் பெருமையினைக் கடல் கடந்தும் காக்கும் போற்றும், தங்களது அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்க்கும் தமிழன்பர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுகள் இப்பள்ளியோடு தொடர்புடைய அனைவருக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என நம்புகின்றேன்.