பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 ஜூலை, 2024

இந்தியன் - 4

எப்பொருள் யார் யார் வாய் கேட் ப்பினும் ....

நண்பர்களே,

உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய, உயிர்போராட்டம், எல்லை பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, கருப்புபண  மீட்பு, வேலை வாய்ப்பு,உழவர் பாதுகாப்பு,வேளாண்மை அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, சுகாதாரம்  மற்றும் மருத்துவ முன்னேற்றம், சாலை பராமரிப்பு,  கொலை கொள்ளை, ஆள் கடத்தல் தடுப்பு, கட்டப்பஞ்சாயத்து ,கந்துவட்டி ஒழிப்பு, கள்ளச்சாராய ஒழிப்பு, மது விலக்கு  , வரியேய்ப்பு தடுப்பு , விலைவாசி கட்டுப்பாடு, பெருமுதலாளிகளின் கடன்பாக்கி வசூல்,  போன்று    உலகில் கவனம் செலுத்தப்படவேண்டிய  ஆயிரத்தெட்டு விஷயங்கள்...
இன்னும் நிலுவையிலும் , தொடங்கப்படாமலும், தொடங்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டும் இருக்கும் கவனம்  ஈர்க்கப்படவேண்டிய  அவசர அத்தியாவசியங்கள்  கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சூழலில் , அவை  இல்லை என்றால் குடியே மூழ்கிவிடும் என்று மக்களில்  கணிசமான ஜனத்தொகை  நினைக்கும் ஆக்சிஜன்  அத்தியாவசியங்களுள் "குடியும்" "திரைப்படமும்" பிரதானமாக கருதப்படுகிறது  என்றால் அது மிகை அல்ல.

கட்  அவுட் , பாலாபிஷேகம், முதல் நாள் முதல் காட்சி , ரசிகர் மன்றங்களுக்கான பிரத்தியேக காட்சிகள், பல மடங்கு உயர்த்தப்பட்ட விலையில் டிக்கட் விற்பனை; இரு சக்கர , நான்கு சக்கர வாகன  அணிவகுப்பு, பிரத்தியேகமாக பேருந்து, டிராக்டர் , லாரிகளில் கூட்டமாக  திரைஅரங்கம்  செல்லுதல் போன்று மதி மயங்கி , அந்த குறிப்பிட்ட திரைப்படம் வெளி வருவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன, எந்தெந்த திரை அரங்குகளில் திரை இடப்படுகின்றன, பாடல் வெளியீடு , முன்னோட்ட காட்சி(ட்ரைலர்) என்றைக்கு, அதில் வரும் கதாநாயகளின் உடை மற்றும் தோற்றம், தலைமுடி அலங்காரம் எப்படி இருக்கும்  போன்ற செய்திகளை விரல் நுனியில் வைத்துக்கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்  இளைஞர் கூட்டம் ஒருபுறம்.

தங்கள் படம் ஊரெங்கும் வசூலில் பெரும் சாதனை புரியாவிட்டாலும் போட்ட காசை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் , படம் அப்படி, படம் இப்படி  என்று விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக விளம்பரங்கள் செய்யும் பட தயாரிப்பு நிறுவனங்கள்... படம் வெளி வருவதற்கு முன் சில வாரங்களாக பத்திரிகை, சமூக வலைதள ஊடகங்கள்  மற்றும் தொலைக்காட்சிகளில் அந்த படம் சம்பந்தமான இயக்குனர், ஒளிப்பதிவு நிபுணர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவரின் பேட்டிகள்   ஒரு மாய உலகத்திற்கு  மக்களை இட்டுச்சென்று ஒரு மந்திர கட்டுக்குள்  மகுடிக்கு மயங்கும்  சர்பத்திற்கிணையான மன நிலைமையில் மக்களை பெரும் எதிர்பார்ப்புடன் காக்க வைக்கிறது சிலரது திரை படங்கள்.

இதில் முதல் பாகம் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என திரைப்படங்களின் தொடர்  கதைகளும் தொடர்வதுண்டு.

மூக்கின் இரண்டு துவாரங்களில் ஒன்று காற்றை சுவாசிக்க மற்றொன்று  சினிமாவை சுவாசிக்க என்று நினைக்கும் அளவிற்கு திரைப்பட மோகம் மக்களிடையே புரையோடி இருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இந்த ஆடம்பரமான  விளம்பரங்கள் மூலம் அப்படி என்னதான் இருக்கின்றது இந்த படத்தில் என பார்க்கும் ஆவலை தூண்டி மக்களை  திரை அரங்குகளுக்கு  வரவிழைகின்றனர். 

ஒரு சிலர், கலர் சட்டை காரர் என்ன சொல்கிறார் என தெரிந்து கொண்டு, போவதா வேண்டாமா என முடிவெடுத்து செயல் படுவோர் குறித்தும் கேள்வி பட்டிருப்போம்.

ஆனால்  என்னை போன்றோர், நாம் வசிக்கும் பிராந்தியத்தில் அத்திப்பூத்தாற்போல்  எப்போதோ ஒருமுறைதான் தமிழ் படங்கள் திரை ஈடுபடுவதால், யார் பேச்சையும் கேட்காமல், எந்த விளம்பரங்களிலும் ஈர்க்கப்படாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு எட்டு போய்ட்டுவருவோம் என முடிவெடுத்து சில படங்களை பார்ப்பதுண்டு.

அவ்வகையில், நேற்று , சமீபத்தில் இங்கு வெளியிடப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு சென்றிருந்தேன்.

அது ஏற்கெனவே 1996 ஆம் ஆண்டு  -  சமூக அவலங்களைக்கண்டு வெகுண்டெழுந்த முன்னாள் இந்திய தேசிய படையின் போராளியான சுமார் 70 வயது மதிக்க தகுந்த முதியவர், லஞ்சம் வாங்குவது தன்  மகனேயானாலும் அவனையும்  கொன்று சமூக தூய்மைப்பணி ஆற்றுவதாக கதை அமைக்கப்பட்டு, அதில் தமிழ் சினிமாவின் அடிப்படை சூத்திரங்களான, பாட்டு, நடனம் , நகைச்சுவை, சண்டை , குடும்ப பாசம் போன்ற காட்சிகளோடு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.

அப்படித்தான் நினைத்து முன்பதிவு செய்து திரை அரங்கம் சென்றேன்.
இந்தியன் 2 என்று நினைத்து சென்றால் அங்கு நான் பார்த்தது இந்தியன் 4.

இப்பதான் இரண்டு வெளிவந்தது இன்னும் மூன்றுகூட வரவில்லை அதற்குள் எப்படி இந்தியன் 4 பார்க்கமுடிந்தது?

ஒரே கூரையின் கீழ் சுமார் 13 திரையரங்குகள் கொண்ட பிரமாண்ட  கட்டிடம்; அதில் மொத்தமாக 2150 பேர்கள் அமர்ந்து பார்க்கும்படியான இருக்கைகள்  நிறைந்த திரை அரங்கம்.

நான் சென்றது அதிலொன்று.

வெளிச்சம் குறைவாக இருந்த அரங்கிற்குள் நுழைந்து  என்னுடைய இருக்கையின் எண்ணை  சரிபார்த்து அமர்ந்து இன்னும் ஓரிரு நிமிடங்களில்  திரை இடப்படும் திரைப்படத்தை பார்க்கும் ஆவலில் என் அருகில் எனக்கு வலது இடது முன்னால் பின்னால் யார் இருக்கின்றார்கள் என பார்க்காமல், திரையில் தோன்றிய விளம்பர படங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அரங்கம் நிறைந்த -  கட்டுக்கடங்காத  ஒரே நிசப்தம்.

இப்போது திரைப்படம் திரையிடப்படப்போகிறது, ஆம் இதோ போட்டும் விட்டார்கள். பொதுவாக நான் பார்த்தவகையில் நம் தமிழ்ப்படம் திரையில் தோன்றிய முதல் சில வினாடிகள் நம் மக்கள் எழுப்பும் ஆரவார குரல்களோடும் விசில் சத்தத்தோடும் கரஒலியோடும்தான் நிறைந்திருக்கும். 

ஆனால் வழக்கத்திற்கு மாறாக எந்த சத்தமும் எவராலும் எழுப்பப்படவில்லை.

என்ன ஆச்சரியம்?. . .

திரை அரங்கில் வந்தமர்ந்து சிறிது நேரமானதால் அந்த சூழ்நிலைக்கேற்ப கண்களின்  தகவமைப்பு பக்குவப்பட்டதால் திரையில் இந்தியன் 2 என்ற எதிர்பார்ப்புட ன் காத்திருக்க......... நான் பார்த்தது இந்தியன் 4.

ஆமாங்க, "நான் சொல்வதெல்லாம் உண்மை".

அரங்கின் முன் வரிசையில் இருந்து பின் வரிசை வரை   அமர்ந்திருந்த மொத்த இந்தியர்கள் வெறும் நான்கு பேர்கள் மட்டுமே என்னையும் சேர்த்து.

அப்படியானால் மற்றவர்கள் வெள்ளையர்களா? அல்லது  வேறு நாட்டினரா?

இல்லை அந்த அரங்கின் உள்ளே திரை ஒளி பீச்சி அடிக்கப்படும் ஆப்பரேட்டர் அறையில் இருந்தார் ஒருவர் அவரும் வெள்ளையரே. 

அது என்னவோ எனக்கும் மற்ற மூவருக்கும் மட்டுமே பிரத்தியேகமாக திரை இட்டு காட்டப்பட்ட பிரீமியர் காட்சியாகவே அது அமைந்திருந்தது.

அதாவது ஒரே டிக்கட்டில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 4 ஐ பார்க்கும் அபூர்வ வாய்ப்பை என்னவென்பேன்.

மற்றபடி அந்த திரைப்படம் எப்படி இருந்தது, எவருடை நடிப்பு எப்படி இருந்தது, பாடல், ஆடல், இசை, இயக்கம், காட்சி அமைப்பு, ஒப்பனை, பிரமாதமா  இல்லைசுமார்மூஞ்சிகுமாரா, அல்லது மர்மக்கலையின் பிரயோகத்தின் பலனாக குதிரைப்போல் ஓடுமா, நடக்குமா, படுக்குமா?...

அல்லது சில காட்சிகள் மிகை படுத்தப்பட்டுள்ளனவா, பிரமாண்டம்  என்ற பெயரில் பணம் வீணடிக்கப்பட்டதா, பல காட்சிகள் குழந்தைத்  தனமாக இருந்தனவா , கதைக்கு தேவை இல்லாத காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தனவா, தேவை அற்ற அதீத கற்பனை, கதையோடு ஒட்டியதா இல்லையா, எதையோ பிடிக்க முயன்று  எதிலோ முடிந்ததோ என்பதைப்பற்றியெல்லாம் விவரிக்கும் நோக்கமோ அதற்கான தெளிவான அனுபவமும் நமக்கு இல்லை என்பதாலும் 

சூப்பர், வேற லெவல், மாஸ் , சான்ஸே இல்ல, ஒர்த்து என்றோ அல்லது , ஊத்திக்கிச்சி, மொக்கை, பொக்கை , வேஸ்ட்  என்றோ சொல்வதற்கு நமக்கு தெரியாததாலும் நான் ஒருபோதும்  எந்த திரை விமர்சனமும்  செய்வதில்லை என்பது நீங்கள் அறிந்ததே.

அதைவிட ஆயிரத்தெட்டு  அத்தியாவசிய கடமைகளை செய்து முடிக்கவே  நேரமில்லாதபோது  இதெல்லாம்   நமக்கு எதுக்கு?

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.  

5 கருத்துகள்:

  1. ஆகா, திரை விமர்சனம் செய்வதில்லை என்று கூறி, விமர்சனம் செய்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையார் அவர்களே.

    உண்மையிலேயே திரைப்படங்கள் குறித்து விமர்சனம் செய்ய விரும்பாதவன் என்பதைவிட அப்படி செய்ய தேவையான நுணுக்கமான பக்குவம் எனக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும், நம்புங்கள்.

    பதிலளிநீக்கு
  3. //மூக்கின் இரண்டு துவாரங்களில் ஒன்று காற்றை சுவாசிக்க மற்றொன்று சினிமாவை சுவாசிக்க// - இப்படித்தான் பலரும் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள்.

    இந்தியன் 2 பார்த்த இந்தியன் 4! :) நல்லது. ஒரு முறை, தில்லியில் நானும் நண்பரும் ஒரு படம் பார்க்கச் சென்று மொத்த தியேட்டரில் நானும் நண்பரும் மட்டுமே இருந்தோம். எங்களுக்கான ஸ்பெஷல் ஷோவாக இருந்தது அது! ஒரு பய வரல - எங்களைத் தவிர்த்து! ஹாஹா...

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு மிக்க நன்றி வெங்கட். கோடி கோடியாய் பணம் செலவு செய்த தயாரிப்பாளர்கள் கூட இப்படி வெறும் இரண்டுபேராக - நான்குபேராக படம் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வகையில் நாம் கோடி புண்ணியம்(!!??) செய்தவர்கள்.

    பதிலளிநீக்கு