யாகாவாராயினும் ...
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைதள காணொளி என் கண்களில் பட்டது.
அது அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும், அதில் மின்னலென வந்துபோன விவாதக் கீற்றில் நமக்கு பரீச்சயமான சொல்லக்கேட்டு முழுமையாக பார்க்க முனைந்தேன்.
ஒரு அரசியல் பிரமுகர் தமது ஆதரவாளர்கள் புடைசூழ, பத்திரிகை அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தருவாயில், ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க தடுமாறியவர், நீங்கள் எந்த ஊடகம் என கேட்கிறார் அரசியல் பிரமுகர்.
அதற்கு அச்சு ஊடகம் என பதிலளிக்கிறார் பத்ரிகையாளர்.
எந்த பத்திரிகை என கட்சி பிரமுகர் கேட்கிறார் அவரும் பதிலுரைக்கிறார்.
பலர் முன்னிலையில் தமக்கு பதிலுக்குப் பதிலளிக்கும் பத்ரிகையாளரின்மேல் கோபப்பட்ட அந்த பிரமுகர், பத்திரிக்கையாளர் கேட்ட மொழி சார்ந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், " அப்படியானால் திருக்குறளில் ஒரு பத்து குறள்களை சொல்ல முடியுமா" என கேட்கின்றார்.
அதற்கு அந்த பத்திரிகையாளர், "தாய் மொழி பற்றி பேசும் உங்களால் சொல்ல முடியுமா" என திருப்பி கேட்கிறார்.
அதற்கு அந்த பிரமுகர், "நான் சொல்லிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்க அந்த பத்திரிகையாளரும், "நான் சொல்லிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்" என திருப்பிக்கேட்கிறார்.
அந்த இருவரில் எவரேனும் பத்து திருக்குறள்களை தடையின்றி தடுமாற்றமின்றி சொன்னார்களா இல்லையா என முழுமையான விவரம் அறிந்துகொள்வதற்குமுன் விவாத காணொளி அத்துடன் தமது இருப்பை துண்டித்துக்கொண்டது.
இந்த விவாதம் இருவருக்கும் பிரயோஜனமற்ற விவாதமாக இருந்தாலும் , எனது மனதில் ஒரு சிந்தனை.
ஆமாம், உடனடியாக நினைத்த நேரத்தில் நமக்கு எத்தனை குறள்கள் மனப்பாடமாக சொல்ல முடியும் ?
பள்ளிப்பருவத்தில் தமிழ் பாடத்தில் மனப்பாட பகுதியாக கற்ற திருக் குறள்கள் இன்னும் எத்தனை நம் நினைவில் இருக்கின்றன? அவற்றை வார்த்தைமாறாமல், ஓசை நயம் மாறாமல், வல்லின மெல்லின ஏற்ற இறக்கங்களுடன் , பொருளுணர்ந்து எத்தனை நம்மால் ஏழு சீருகளையும் ஞாபகமாக சொல்லமுடியும் என எனக்குள் ஒரு கேள்வியும் பிறந்தது.
மாபெரும் சபையில் ஒரு சவாலாக யாரும் நம்மிடம் கேட்கவில்லை என்றாலும் , ஒரு சுய பரிசோதனையாக நமது ஆழ் மனதிலும் ஞாபக படிமத்திலும் இன்றளவும் தேங்கி நிற்கும் குறள்கள் எத்தனை அவை எவை என கண்டறியும் ஆவலில் மனதுக்குள் சொல்லிப்பார்த்தேன்.
முதலில் அகர வரிசையில் ஆரம்பிக்கலாம் என நினைத்து சில சொல்லிப்பார்த்தேன் பிறகு வரிசை மாறி வேறு குறள்களும் ஞாபக படுத்திப்பார்த்தேன் ... அவற்றுள் சில...
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு.
2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
3.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
4.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
5.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
6.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
7. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
8.அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
9.அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
10. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந் தற்று.
11. குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.
12. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
13. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
14. கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
15.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை.
16. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
17. எப்பொருள் யார்யார்வாய் கேப்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
18.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இல்லானும் கெடும்
19.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
20. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய் .
இப்படியாக பல குறல்கள் எனது ஆழ் மனத்தின் அடித்தட்டு பெட்டக புதையலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக நாவில் நடம் புரிந்ததை எண்ணி உள்ளபடியே உள்ளம் சிலிர்த்தேன் அய்யன் வள்ளுவனுக்கு என் சாஷ்டாங்க வணக்கத்தை சமர்ப் பித்தேன்.
இது போன்ற நினைவில் வந்த குறள்களில் , பிரமுகருக்கும் பத்திரிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட விவாதத்தில் சம்பந்தப்பட்டவரின் புகழ் பிம்பம் பெருந்திரளாக கூடி இருந்த மக்கள் முன் சற்றே சறுக்களுக்கு ஆட்பட்டதை எண்ணி என் மனதில் தோன்றி என் காதில் ஒலித்த குறள்:
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு".
நண்பர்களே,
பள்ளியில் படித்து மனப்பாடம் செய்திருந்த ஒரு சில திருகுறள்களை மீண்டும் ஒருமுறை என் நினைவில் நிழலாட தூண்டிவிட்ட அந்த காணொளி பதிவிற்கு நன்றிசொல்லும் இந்த தருணத்தில், எனக்கு திருக்குறள்களை சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதில் உள்ளபடியே உவகை கொள்கிறேன்.
இந்தத்தருணத்தில், இதுபோன்று நீங்களும் உங்களின் நினைவு பெட்டகத்தில் என்னென்ன குறள்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்பதை உச்சரித்து வெளி கொணர்ந்து மகிழுங்கள், அதன் ஆழ்ந்த கருத்துக்களை எண்ணி கர்வத்துடன் அய்யன் வள்ளுவனுக்கு மானசீகமாக புகழ்மாலை சூட்டுங்கள்.
நன்றி,
மீண்டும் ச( சி)ந்திப்போம்.
கோ.
நல்ல விஷயம். நானும் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும் - படித்த எத்தனை குறள்கள் என் நினைவில் இருக்கின்றன என.
பதிலளிநீக்கு