பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

" தமிழன் அன்றும் இன்றும்".

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எழுதப்பட்ட வரிகளில் சில இங்கே.


அந்த கவிதை நிகழ்ச்சியின் தலைப்பு :

 " தமிழன் அன்றும் இன்றும்".

கற்பனைக்கு கடிவாளமிட்டதுபோல்
கவிதைக்கு  தலைப்பு தந்தீர்.
சிற்பியின் உளிதனை - கடும்
சிறையினில் அடைத்துவிட்டீர்

சொற்களை சொடுக்கி ஒரு
சொடுக்காட்டம் ஆட இன்றி -நற்
சிறகுகளை கட்டிப்போட்டு -நல்ல
நர்த்தனங்கள் கேட்டுவிட்டீர்.

தலையில் தோன்றிய விஷயங்களை 
எழுத்தில் பதித்து கொண்டு வந்தேன்.
கொண்டுவந்த செய்திகளை
மொண்டுபருக வாருங்கள்.

தலையில் தோன்றிய எழுத்து- என் 
தலையில் தோன்றிய எழுத்து
அதை கேட்டு  ரசிப்பது உங்கள் 
தலை எழுத்து...என்ன செய்ய?

அன்று,

இமயத்தில் மீன்கொடி ஏற்றினான் பாண்டிய மன்னன்.
                                                              -  வீரம் பேசியது.
இரதமதில் முல்லை பூங்கொடி ஏற்றினான் பாரி வள்ளல்
                                                             - பரிவு பேசியது.
தனையனை தேரேற்றி கொன்றான் மனுநீதி சோழ மன்னன்
                                                              - நீதி பேசியது.
Image result for picture of manu neethi solan
இன்று,

தன் வறுமை நீக்க மனுகொடுக்க சென்றால்
காரேற்றி கொல்கிறான் நம் உடன் தமிழன்
இதை என்னவென்பது?

அன்று,

வீர திலகமிட்டு , வென்று  வா எனசொல்லி
போர்க்களம் அனுப்பிவைத்தாள்
வீர மங்கை தன் ஒரே மகனை.


நேரமாகியும் திரும்பாததால்
நிமிடமும் தாமதிக்காமல் - போர்
களம் சென்றாள் நேரில் கண்டுவர.

வீர உரமிட்டு வளர்த்தவள்- தன்மகன்
உரை வாளை உருவி வீசி
பல ஆனைக்கொன்றானா? 
 பகை ஆணைக்கொன்றானா?

மறத்தமிழ் தாய் அவள்- தன்
மனசுக்குள் கணக்கு போட்டாள்.
மரித்தனன்  அருஞ்செல்வன் களத்தில்
 எனும் கருஞ்செய்தி மொழிகேட்டாள்.


 இடர்களை நீக்கி  நம்மை-செல்வன் 
இனிய வாழ்வுக்கு இட்டுச்செல்வான்-எனும்
தொடர் சொப்பனத்தின் தொப்புள்கொடியில்-கொள்ளி
சுடர் பட்ட வேதனையில் துடித்துபோனாள் ஒருகணம்.

போரில் மரித்த தன் மகனின்
உயிரறுத்த கயவனின் வேல்
 பாய்ந்தது மார்பிலா? முதுகிலா??
பார்க்கவேண்டி பரபரத்து ஓடுகின்றாள்.

மார்பில் காயம்பட்டு
மரித்திருந்தான் மரிக்கொழுந்து.

மார்போடு  அனைத்து மகனை
மனம்மகிழ்ந்து உச்சி முகர்ந்தாள்
உயர்ந்தவனுக்கே பாலூட்டினேன்-என 
கர்வத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.

புற நானூற்று வரலாறு
 புலப்படுத்தும்  பண்டையர் வீரம்
படித்தாலும் கேட்டாலும்
பரவசம் மனதில் சேரும்.
  
இன்று,

பாரத தமிழ் வீட்டில்
தனையனை ராணுவம் சேர
ஆரத்தி எடுத்து அன்புடன் வழியனுப்பும்
அன்னையர்கள் எத்தனைபேர்?


 விதி விலக்குகள் இல்லாமல் இல்லை.

என் சி சி யில் சேர்வதற்கே
எத்தனை முறை கெஞ்சி இருப்போம்?


வாய்சொல்லில் வீரரன்றோ நம் மக்கள்?
வாய்ப்புண் இருந்தாலும் 
வாய்ப்பொன்று  கிடைத்தால்
வாய் கிழிய பேசுவான் மேடையில்.

சிறு உதவிகேட்டு நெருங்கிபோனால்
உள்ளபடியே  ஊமையாவான்.

மற்றமொழி பேசுவோரை கொஞ்சம்
உற்றுநோக்கி பார்ப்போமென்றால் -தான்
பெற்ற வாய்ப்பை பயன்படுத்தி -பெரும்
பட்டாளத்துக்கே ஒளி தருவான்.

கற்றுக்கொள்ளவேண்டிய 
கட்டாய பாடமிது. 

தமிழா,
நாம் பேசுவது தமிழா?

அன்றிருந்தது மூன்று தமிழ்.
இன்றிருப்பது எத்தனை தமிழ்?

சுட்டும் விழிச்சுடரே
 சுற்றி விழுமளவிற்கு
தமிழ் நாட்டுக்குள்ளேயே
தனித்தனி தமிழ் மொழி!

கன்னியா குமரியில் ஒரு தமிழ்
காரைக்குடியில் ஒரு தமிழ்.
மதுரையில் ஒருதமிழ்
மன்னார்குடியில் ஒருதமிழ்

வேலூரில் ஒரு தமிழ் 
வேரூரில் ஒருதமிழ்
சொல்லவே தேவையில்லை
சென்னைக்கென தனித்தமிழ்.

சத்தத்தின் தன்மை 
எப்படி இருந்தாலும் - நம்
ரத்தத்தின் உணர்வு
 தமிழல்லவா?

தமிழரென்ற உணர்வோடு
தாரணி ஆளுவோம்
தமிழனின் மேன்மை எண்ணி
பரணி பாடுவோம்.



நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

  1. தனபால்,

    வருகைக்கும், மின்னலென தாங்கள் அனுப்பிய பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
    பரவசபடுத்தியதா இந்த பதிவு?

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள்! அன்றும் இன்றும் என்று எப்படி இப்படி இவ்வளவு அழகாக கவிதை புனைகின்றீகள் நண்பரே! அழகான வரிகள்! தமிழ் மொழி பற்றிய வரிகளும் அருமை! வேறு என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை!

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்கினிய நண்பர்களே,

    பதிவை படித்து சுவைத்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

    கவிதையில் ஆர்வம் வந்ததன் காரணத்தை மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு பதிவினூடாய் சொல்கின்றேனே.

    வருகைக்கும் தொடர் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.

    "அல்வா" பார்டிக்கும் "அவ்வை" பாட்டிக்கும் (கவி ஞானம் உள்ளதால்) எனது வணக்கங்கள்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு