பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

வெஸ்ட்டும் ஈஸ்ட்டும்.

கைகோர்த்தது.
நண்பர்களே,

பொதுவாக உலகத்திலுள்ள திசைகளை சூரிய உதயத்தையும் அதன் அஸ்த்தமனத்தையும் வைத்து எட்டு திசைகளாக வகுத்திருந்தாலும் குறிப்பாக நான்கு திசைகளையே பிரதானமாக குறிப்பிட்டு பேசுவதுண்டு.


எனவேதான், உலகத்தின் வடக்கு ,கிழக்கு,மேற்கு,தெற்கு எனும்  நாளா திசைகளிலும் நடக்கும் - நடந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதை, தமிழில் " செய்தி" என்றும் ஆங்கிலத்தில் இந்த நான்கு திசைகளின் பெயர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து "நியூஸ் " என்றும் சொல்கின்றனர் என்பது தெரிந்ததே.
Image result for PICTURE OF FOUR DIRECTIONS

இந்த நான்கு திசைகளுள் பிரத்தியேக மான இரண்டு திசைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏன் இந்த இரண்டு திசைகள் மட்டும் என்றால் இவை  இரண்டு  மட்டுமே சூரியனை தனக்கு மிகவும் நெருக்கமாக  சொந்தம் கொண்டாடுபவை.

காலையில் உதிக்கவைப்பதும் மாலையில் பதுக்கிவைப்பதுமான வேலையை செய்கின்றனவே.

அதே சமயத்தில் நாடுகளை குறிப்பிடவும் மக்கள் பெரிதும் பயன்படுத்தும் பதங்கள் "வெஸ்ட் - ஈஸ்ட்."

வெஸ்ட் என்றால் மேலைநாடுகலான ஐரோப்பிய நாடுகையும் ஈஸ்ட் என்றால் கிழக்கு நாடுகளையும் குறிப்பிடுவது வழக்கம்.

இப்படி மேற்கத்தைய நாடுகளுக்கும் கீழ் நாடுகளுக்கும்  இடையில் பல ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன.

வேற்றுமைகளை பட்டியலிட்டால் நேரம் போதாது. எனவே ஒற்றுமைகளில்  சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

உலகின் எந்த நாடாக இருந்தாலும் மனிதன் கஷ்ட்டப்பட்டு,  "வியர்வை" சிந்தி  பாடுபட்டு உழைப்பது,ஒரு ஜான் வயிற்றுக்காக  என்று எல்லோரும் ஏக மனதுடன் ஒப்புக்கொள்வர்.

பிறகு தனது சம்பாத்தியத்தில் தனக்கும் தன்னை சார்ந்தும் இருக்கின்ற குடும்பத்து மக்களின் உணவுக்கான செலவுபோக மீதமுள்ள வருமானத்தில்,வீடு, துணி, நகை, கார், சேமிப்பு,கேளிக்கை,திருவிழா, பண்டிகை, கொண்டாட்டங்கள் என செலவு செய்து மகிழ்கின்றான். 

இது உலகின் எந்த திசையிலும் உள்ளவர் செய்யக்கூடிய அடிப்படையான ஞாயமான செயல் தான்.

இப்படி உணவிற்கு பிரதானமாக இடம் கொடுக்கும் மனிதன் அவனுக்கு தேவையான உணவு பொருட்களால் தயாரிக்கப்படும் உணவு  பண்டங்களையே  சுவைத்து மகிழ விரும்புவான்.

அவ்வகையில் மேற்கத்தைய உணவு பழக்கத்திற்கும் கீழை நாடுகளின் உணவு பழக்கத்திற்கும் இடையில் பல ஆயிரம் மையில் இடைவெளி இருக்கின்றன.

மேலை நாட்டினர் சாப்பிடும் உணவு பண்டங்களை வரிசை படுத்தி பட்டியல் இட நமக்கு சுமார் 300 பதிவுகள் தேவைப்படும், எனவே அவற்றை தவிர்த்து, கீழை நாடுகளில் அதுவும் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளின் உணவு பண்டங்களை பட்டியல் இட்டால், அவற்றுள், அரிசி, கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு,பருப்பு,பால்,பழங்கள்,வெல்லம், சர்க்கரை, "மரக்கறி" என்று அழைக்கப்படும் காய் கறிகள், முட்டை, மாமிசம் போன்றவற்றோடு  சம்பந்தப்பட்ட பண்டங்களே முன் வரிசையில் நிற்கும்.

இன்னும் சொல்லபோனால், நம் தமிழகத்தில் எழுதபடாத  விதிகள் அல்லது நியதிகளாக  என்றென்றும் நிலைத்து நிற்கும் உணவு பண்டங்கள் இட்லி, தோசை,சாதம்,சாம்பார், ரசம், பொரியல், அவியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய்கள் என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தில் காலை  உணவு என்றால், நம் பெரும்பான்மையான  வீடுகளில் இட்லி, சாம்பார், சட்னி என்பது தவிர்க்கமுடியாத உணவாக அமைந்திருக்கும்.

காலை பரபரப்பில் இட்லி என்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிமாற கூடிய எளிய உணவு.

கொஞ்சம் அதிகம் நேரம் உள்ளவர்கள் தோசை செய்வார்கள், இதை ஒவ்வொன்றாகத்தான் செய்யமுடியும் எனவே கொஞ்சம் அதிகம் நேரம் மற்றும் பொறுமை தேவைப்படும்.

இன்னும் சிலர் ஓய்வு நேரங்களில் , மாலை நேரங்களில், பூரி,சப்பாத்தி, ஊத்தாப்பம் போன்றவற்றை செய்து சாப்பிடுவது வழக்கம்.

இட்லியும் தோசையும் ஓரளவிற்கு எளிமையான உணவு என்றாலும் அதற்கான ஆயத்த பணிகளை முந்தின நாள் சாயந்திரமே செய்து முடித்திருக்கவேண்டும்.

அதாவது, அரிசியையும் உளுந்தையும் கூடவே கொஞ்சம் வெந்தையத்தையும் அதன் அதன் விகிதத்தில் எடுத்து கழுவி  ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவைத்து, பின்னர் அதை பக்குவமாக அரைத்து எல்லாவற்றையும் கலந்து அதில் கொஞ்சம் "பேக்கிங்" சோடாவை கலந்து இரவு முழுதும்  புளிக்கவைத்து பின்னர் நல்ல பதமாக  பொங்கி வந்திருக்கும் மாவை இட்லிகளாகவும் தோசைகளாகவும் வார்த்து சாப்பிடுவார்கள்.

இதுபோன்று பக்குவபடுத்தி பதபடுத்தி இட்லி தோசை செய்து சாப்பிடும் பழக்கம் மேற்க்கத்திய நாட்டு மக்களுக்கு இல்லை என்றாலும் மேற்க்கத்தைய நாடுகளில் வாழும் "நம்மவர்கள்" இதுபோன்று இட்லி தோசைகளை செய்து சாப்பிட ஆசைபடுவதுண்டு.

பொதுவாக மேற்சொன்ன எல்லா ஆயத்த வேலைகளையும் அதற்க்குண்டான எல்லா தேவையான பொருட்களையும் இட்டு பதமாக அரைத்து வைத்திருந்தாலும் பல வேளைகளில் நினைத்தபடி இட்லியையோ தோசையையோ செய்து சாப்பிட முடியாதபடி பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாவதும் உண்டு.

அது எப்படி எல்லா மூலபொருட்களையும் அதற்குண்டான செய்முறைகளையும் செவ்வனே செய்தும் எப்படி எதனால் ஏமாற்றம் அடைகின்றனர்?

யாரேனும் "செய்வினை" ஏதனும் செய்துவிட்டார்களா அல்லது நாம் "செய்த வினையில்" தவறுகள் நடந்துவிட்டதா?

இந்தியாவின் தட்ப்பவெட்ப்ப சூழ்நிலையில் இரவு அரைத்து வைத்த மாவு காலைக்குள் நன்றாக புளித்து சமைப்பதற்கான பதத்திற்கு வந்துவிடும்,.

ஆனால் ஐரோப்பா போன்ற வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் நிலவும் குளிரின் காரணமாக அரைத்து வைத்த மாவு புளிக்காமல் தேவையான பதம் கிடைக்காமல் ஒரு இரண்டு நாட்களோ சில சமயங்களில் மூன்று நாட்களோ கூட மூடியை அவ்வப்போது திறந்து மாவு பொங்கியிருக்கின்றதா என பார்க்கும் பரிதாப சூழ்நிலை ஏற்படுவதும் ஏற்பட்டதும் உண்டு, சில சமயங்களில் இட்லி தோசைமீது இருக்கும் அளவுகடந்த ஆசை எரிச்சலாக மாறுவதும் உண்டு.

நாம என்ன மல்லிப்பூ மாதிரியான இட்லியையா எதிர்பார்க்கின்றோம் ஒரு பேருக்கு தானே... ஒரு கள்ளிப்பூ அளவுக்கு வந்தாலும் மகிழ்ச்சி அடைவோமே.

மனிதன் கஷ்ட்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பது அவன் விரும்பும் உணவினை  உண்ணுவதற்குதானே, அதுவும் தினமுமா இதுபோன்று எதிர்பார்க்கின்றோம் அப்படி எதிபார்த்தால் மட்டும் நடந்து விடுமா என்ன?

ஏதோ ஆசைபட்டு என்றாவது செய்து சாப்பிடலாமென்றால்  இப்படி சொதப்பிவிடுவது என்பது அவ்வப்போது நிகழும் ஒன்றுதான்.


ஆனால் எல்லாவற்றிற்க்கும் ஒரு   தீர்வு என்று ஒன்று உண்டல்லவா?வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டல்லவா?

அதுதான் இயற்கை கொடுத்த வரபிரசாதம்மாகிய "புளிச்சொண்டி"(இப்படித்தான் தமிழில் சொல்கின்றனர்) .பூச்சாண்டி இல்லைங்க  புளிச்சொண்டி. 

ஆங்கிலத்தில் ஈஸ்ட் (YEAST) நல்ல நுண்ணுயிரி, நன்றாக உலர்ந்த நிலையில் ரவையை காட்டிலும் சிறிய அளவில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

Image result for PICTURE OF YEAST

அதை கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் கரைத்து அரைத்து வைத்த மாவில் கலந்து வைத்துவிட்டால் காலை எழுந்ததும் மூடிவைத்தபாத்திரத்தின் மூடியை மேலாக தன் தலையில் தூக்கி சுமந்தவண்ணம் மாவு நன்றாக பொங்கி வந்துவிடும். அதை காணும்போது மாவைவிட அதிகமாக சந்தோசம் மனதில் பொங்கி வழியும்.

Image result for PICTURES OF STEAMING IDLIS

பிறகு ரெண்டு மூன்று நாட்களுக்கு இட்லியும் தோசையும் தான்.

Image result for PICTURES OF MAKING DOSA


இந்த அறிய கண்டுபிடிப்பை அருளிய அறிவியலுக்கு ஒவ்வொரு முறை இட்லி தோசை சாப்பிடும்போதும் மறக்காமல் நன்றி சொல்வது இப்போது  வெஸ்ட்ல்  வாழ்பவர்களுக்கு (என்னையும் சேர்த்து) ஒரு இன்றியமையாத கடமையாக உள்ளது என்பது உண்மையே - "பொய் சொன்ன வாய்க்கு இட்லி,தோசை கிடைக்காது".

இப்போது புரிந்திருக்கும் ஏன் இந்த தலைப்பு என்று.

இதற்க்கு முன் வேறு யாரேனும் அரைத்த மாவையே நானும் அரைத்திருந்தால் இந்த மாவிலும் கொஞ்சம் சுட்டுக்கொள்ளுங்கள் ஊத்தாப்பத்தை. (பின்னே பழைய மாவில் வேறு என்னத்தை சுடுவது?)  

."(Y)EAST   OR   WEST  INDIA   IS  THE  BEST  - FOR  FOOD TOO"

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி,

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. ஒரு இட்லி தோசைக்கு இவ்வளவு பெரிய பில்ட் அப்பா ? கூடவே தோசைக்கு தொட்டுக்க செய்யப்படும் பாயாவை பற்றோயும் சொல்லி இருக்கலாமே ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      இட்லி தோசை என்பது சாதாரணம் இல்லை எங்களுக்கு.

      முதலில் தோசைக்கு தொட்டுக்கொள்ளும் பாயாவை கேட்பீர்கள் பின்னர் மரத்தடியில் வடைசுட்ட ஆயாவைப்றி கேட்பீர்கள் போல் தெரிகிறது.ஒருவேளை அடுத்தபதிவின் தலைப்பு "பாயா துபாயா" வாக இருக்குமோ பார்க்கலாம் பொறுத்திருந்து.

      வருகைக்கும் வளமான பின்னூட்டத்திற்கும் நன்றி விசு.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  3. வெஸ்ம், ஈஸ்டும் அப்படினும் தலைப்பு பார்த்து விட்டு ஜெர்மனியில் மனிதர்கள் சுட்டுக்கொண்டு கொன்ற கதைதான் சொல்ல வருகிறீர்கள் என் நினைத்து வந்தால் இட்லி தோசை சுடுகிறீர்களே பரவாயில்லை கால்வாயி இட்லிக்குதானே இந்தப்பொழப்பு நல்லாத்தான் இருக்கு
    அடுத்து சட்னி பதிவு போடுங்க நண்பா.....

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,

    சட்டினி பற்றி சட்டுன்னு எழுத சொன்னால் எப்படி? ஆயத்தம் செய்ய வேணாமா?

    வைதேகி - பாகம் 3 பார்த்தீர்களா? பார்த்துவிட்டு வாருங்கள் காத்திருக்கிறேன்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  5. ஈஸ்டுக்கு இப்படி ஒரு 6 பாக்கா....வெஸ்டும் ஈஸ்டும் அப்படினு....ம்ம்ம் ஆனால் தலைப்பை மிகவும் ரசித்தோம் நண்பரே! ஓவனில் வார்ம் செய்துவிட்டும் மாவு பாத்திரத்திற்கும் ஸ்வெட்டர் எல்லாம் போட்டு வைத்துவிட்டால் நன்றாகப் பொங்கிவிடுமே இல்லையோ?!!! பொங்கினாலும் பொங்கலாகிவிடுமா மாவு? ! (ஐயோ மொக்கை....கடி....)

    அருமையான பதிவு! அனுபவ விவரணம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      மாவு அதிகம் புளித்துபோவதற்க்குமுன் பதிவை படித்து பின்னூட்டம் "புளித்தமைக்கு", மன்னிக்கவும் "அளித்ததமைக்கு" மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  6. மல்லிகைப் பூ இட்லி சரி....குஷ்பு இட்லி செய்ததில்லையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஷ்பூ இட்லி செய்தார்களா இல்லையா என எனக்கு எப்படி தெரியும்?(எப்படி....)

      நீக்கு
  7. வணக்கம் அரசே,
    என்னமோ போங்க, எங்கேயோ போய்டீங்க,
    அரிசியையும் உளுந்தையும் கூடவே கொஞ்சம் வெந்தையத்தையும் அதன் அதன் விகிதத்தில் எடுத்து கழுவி ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவைத்து, பின்னர் அதை பக்குவமாக அரைத்து எல்லாவற்றையும் கலந்து அதில் கொஞ்சம் "பேக்கிங்" சோடாவை கலந்து இரவு முழுதும் புளிக்கவைத்து பின்னர் நல்ல பதமாக பொங்கி வந்திருக்கும் மாவை இட்லிகளாகவும் தோசைகளாகவும் வார்த்து சாப்பிடுவார்கள்.
    மாவு எப்படி அரைப்பது, என்னென்ன சேர்ப்பது, கால அளவு எல்லாம் தங்கள் பதவு வழி தெரிந்துக்கொண்டேன்.
    அது சரி அளவு சொல்லவில்லையே,
    அசத்திட்டீங்க போங்க கோ,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி .

      ஆமாங்க எங்கேயோதான் போயிட்டேன், அதனாலதான் நினைத்ததை நினைத்த நேரத்தில் .... செய்து .... சாப்பிடமுடியல.

      தேவையான பொருட்கள்:
      இட்லி அரிசி: 4 கப்புகள்
      உளுந்து :1 காப்பு
      வெந்தயம் :6-10 கிராம்
      தோசை சோடா மாவு :5 கிராம்

      செய்முறை: பதிவை பார்க்கவும்.

      பி.கு: செய்து சாப்பிட்டு விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

      கோ

      நீக்கு