பின்பற்றுபவர்கள்

சனி, 13 மார்ச், 2021

திருமண அழைப்புடன்...2

வந்ததென்ன?

 தொடர்கிறது...

முன்பதிவை வாசிக்க...திருமண அழைப்புடன்...

என் திருமணதிற்கு ஒருவாரம் முன்னதாக வந்திருந்து எங்களோடிருந்து எங்களை மகிழ்சி  படுத்தியது போல் நடைபெறப்போகும் என் மகனின் திருமணத்திற்கும் நீ எங்களோடிருந்தால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைவோம், நீ எங்கள் குடும்பத்தில் ஒருவன் உனக்கென்று எங்கள் எல்லோர் மனதிலும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்தவன்.

எனினும் இந்தியாவரும் இங்கிலாந்து விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் நீ நேரில் வருவது நடைமுறை சாத்தியம் அல்ல என்பதை அறிந்து வருந்துகின்றோம்.

இருந்தாலும் உன்னுடைய வாழ்த்து மணமக்களுக்கு அவசியம்; எனவே எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்துவாய் என நம்புகிறேன்  , இப்படிக்கு அக்கா என தாங்கி  வந்த அந்த செய்தியோடு திருமண அழைப்பிதழும் அவர்களது குடும்ப புகைப்படமும் அனுப்பி இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு  புகைப்படமும் அனுப்பி இருந்தனர்.

அது என்ன புகைப்படம்?

உண்மையிலேயே அது காண கிடைக்காத ஒரு புகைப்படம், அதே சமயத்தில் நம்ப முடியாததும் கூட.

அது வேறொன்றுமில்லை, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் அந்த அக்காவின் திருமண பரிசாக என் பெயர் பதிக்கப்பட்ட ஒரு சாதாரண எவர் சில்வர் பாத்திரத்தின் படம்தான் அது. அதை நானே மறந்துவிட்ட நிலையில் மீண்டும் காண கிடைத்ததில் ........

நெகிழ்ந்துபோனேன்.

நம்மில் எத்தனைபேர்கள் இதுபோன்ற நினைவுகளை பத்திரப்படுத்தி இருப்போம்.

பரம்பரை பரம்பரையாக  , தலைமுறை தலைமுறையாக , அல்லது மகான்கள், தேச தலைவர்கள் புகழ்பெற்ற செல்வந்தர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வேண்டுமானால் பத்திர படுத்தி வைப்போர் மத்தியில், இந்த எளியவனின் எளிய பரிசை இத்தனை காலமும் பத்திரப்படுத்தி அதை இன்னமும் என் நினைவாக வைத்திருக்கின்றனர் என்றறிந்தபோது  உண்மையிலேயே உள்ளம் உவகையால் பொங்கி வழிந்தது;   ஆனந்த முற்றுகையால் கண்கள் கலங்கி முத்துக்களை  பொழிந்தது. 

பரிசுப்பொருட்களின்  முக மதிப்பு(face value ) முக்கியமல்ல , கொடுத்தவரின் Face Value வும் அவரின் அன்பிற்கான  அங்கீகாரமும் நட்பிற்கான நன்மதிப்பும் முக்கியம் என கருதும் பாங்கு மெய்  சிலிர்க்க செய்கிறது

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ. 


10 கருத்துகள்:

  1. முதல் பகுதியையும் படித்தேன். இது நெகிழ்ச்சியைத் தருகிறது. 1980களின் நடுவில் எங்கள் அத்தை வைத்திருந்த மணியால் பின்னப்பட்ட பொம்மைகள், நவராத்தி கொலுவில் அப்போது வைத்திருந்த அவர் மைசூரிலிருந்து வாங்கிவந்த பொம்மைகள் எனப் பலவற்றை என் கண்களில் படும்படியாக இன்று வைத்து இன்னும் பார்த்துவருகிறேன். கோவையில் 1980இல் பணியில் சேர்ந்தபோது அப்போது கோவையில் அறிமுகமான என் நண்பர் வாங்கித்தந்த Atlas இன்னும் எங்கள் இல்ல நூலகத்தினை அலங்கரிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      தங்கள் அத்தையின் மணி பொம்மைகளும் கோவை நண்பரின் Atlasம் தங்களோடிருந்து தங்களின் மகிழ்வை புதிப்பித்துவருவது குறித்தும் இப்பதிவு அந்த நினைவுகளை இங்கே வெளிக்கொணர செய்தது குறித்தும் மிக்க மகிழ்ச்சியும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகளு.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பொக்கிஷ நினைவுகள் இன்னமும் தொக்கி நிற்பதும் அதன் வெளிப்பாடும் மகிழ்ச்சி அளிக்கின்றது. வருகைக்கு மிக்க நன்றி தனபால்.

      நீக்கு
  3. நாம் மதிக்கும் ஒருவர், நம் நினைவில் இருக்கும் ஒருவர், அவர் நினைவிலும் நாம் இருக்கிறோம் என்று அறிவது மகிழ்ச்சியான விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் திரு ஸ்ரீராம், ஆண்டுகள் பலவானாலும் இன்னும் நம்மை குறித்த நினைவு நமக்கு பிடித்தவர்கள் மனதினில் நிழலாடுவது இன்னும் கூடுதல் மகிழ்வளிக்கின்றது, தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  4. முகமதிப்பு குறித்த எண்ணங்கள் சிறப்பு.

    எத்தனை நினைவாக வைத்திருக்கிறார்கள் உங்கள் பரிசுப் பொருளை. அவர்களுக்கு பாராட்டுகள்.

    நல்லதொரு பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும் சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்தியமை மகிழ்வளிக்கின்றது, வெங்கட், வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. அன்பின் அடையாளம் மகிழ்வைத் தருகின்றது

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருதிடலுக்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.

    பதிலளிநீக்கு