பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 மே, 2020

தொட்டில் பிள்ளை!?

பாத பூஜை!!

நண்பர்களே,

மருத்துவர்  செவிலியர்  மருத்துவ பணியாளர்கள் , காவல் துறையினர் மற்றும் சுகாதார தொழிலாளர்கள்  அத்தனை போரையும் கௌரவிக்கும் பொருட்டு உணவு பொருட்கள் வழங்குதல் மலர் மாலைகள் சூட்டுதல்  , பாத பூஜைகள் செய்தல் இன்னும் பல படிகள் உயரே சென்று ராணுவ  விமானத்தில் இருந்து பூச்சொரிதல் போன்று பலவகைகளில் ஆராதனை செய்யப்படும் போற்றுதலுக்குரிய நற்செயல்கள்  பாராட்டுக்குரியவை.



மேற்கூறிய அனைவரும் தங்களின் உயிரை பணயம் வைத்து  தொடர்ந்து மக்களை காக்கும்  சேவையில்  தன்னலம் கருதாமல் , தங்கள் குடும்பங்களை  உறவுகளை தாய் தந்தையரை  மனைவி பிள்ளைகளை பிரிந்து உணவு உறக்கமின்றி தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் இந்த போற்றுதலுக்குரியவர்களின் சேவை இன்னும் எத்தனை நாட்களுக்கு  இதே ரீதியில் நீட்டிக்கப்படப்போகின்றது?


இந்த சிறப்பு ஊழியர்கள்  அதிகாரிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு மன உளைச்சலுடனும் பதற்றத்துடனும்  சேவை செய்யவேண்டும் என்று நாம்  எதிர்பார்ப்பது?

சாலைகளும் தெருக்களும் கடைவீதிகளும் வெறிச்சோடி இருந்த பூரண தடை காலங்களிலேயே இவர்களின் சேவையும் பணிச்சுமைகளும் பலமடங்காயிருந்தது.

இப்போது அத்தியாவசிய தேவைகள் என கருதப்பட்ட காய்கறி மளிகை சாமான் கடைகள்  மருந்தகங்கள் மற்றும் சில சேவைகளுக்கான கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கபட்டவுடன் மக்களின் நடமாட்டம் கணிசமான அளவிற்கு கூடி விட்ட இந்த நேரத்தில் இந்த அதிகாரிகளின் பணிச்சுமை, மன உளைச்சலின் கண பரிமாணங்களை சொல்லத்தான் கூடுமோ ?

கட்டுப்பாடான சுதந்திரமே உண்மையான முழுமையான சுதந்தரமாகும்.

கட்டுப்பாடு தளர்ந்து விட்டது என்பதற்காக கூட்டம் கூட்டமாக போவதும் இடைவெளி இல்லாமல் இடித்துக்கொண்டு கூடுவதும் நாம் இவர்களுக்கு செய்த - செய்கின்ற மரியாதையை சந்தேகிக்க வைப்பதுடன் கேலிக்குரியதாகவும் ஆக்கிவிடுகிறது .

அரசு கொடுத்துவரும்  மானிய தொகையும் அரிசியும் போதவில்லை அவை எத்தனை நாட்களுக்கு வரும் என அபல கூக்குரல் ஒருபுறமிருக்க , எத்தனை விலையானாலும் முடிந்தவரை எவ்வளவு பாட்டிகள் வாங்க முடியுமோ அத்தனையையும்  வாங்கிவிடவேண்டும் என்று பல மணிநேரம் கால்கடுக்க நிதானமாக(!!) நின்று வாங்கிச்செல்லும் மனிதர்கள் ஒருபுறம்.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பட்டுவிட்டது;  இனி இவை அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக வழங்கப்படும் , அனைவரும் கட்டாயம் வாங்கி பயன்படுத்தவேண்டும் என அரசு ஆணை இட்டால்கூட இப்படி போட்டிபோட்டுக்கொண்டு வந்து கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று வாங்கி செல்வார்களா என சந்தேகிக்கும் அளவிற்கு    மதுக்கடைகளுக்கு முன் நள்ளிரவில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்ற செய்தி பெரும் கவலை சுவடை மனதில் பதித்துவிட்டு செல்கிறது.

அதனால் சமூக விலகல் காற்றில் பறக்க விடப்படுவதும் கொரோனா கிறுமியென்று ஒரு உயிர்கொல்லி  ஊரில் பரவி - விரவி  வியாபித்துகொண்டிருப்பதை குறித்த ஞாபகம் துளியும் இன்றி தான் வாங்கி ருசிக்கப்போகும் மதுவின் துளிகளை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் என் இனிய(??!!) குடி மக்களே இனி நாம்  செய்யும் புஷ்பாபிஷேகமும் பாலாபிஷேகமும் பாதபூஜையும் சல்யூட்டுகளும் கைதட்டல்களும்  வேறு  எந்த வகை மரியாதையும்  அர்த்தமற்றதாகவே இருக்கும், வெறும் ஒப்பனை அலங்காரங்களாகவே  கருதப்படும்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல்தான் ஞாபகம் வருகிறது.

யார் பிள்ளையை யார் கிள்ளுகிறார்கள்  யார் தொட்டிலை யார் ஆட்டுகிறார்கள்   எல்லாம் கொரோனாவிற்கே வெளிச்சம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.
 

4 கருத்துகள்:

  1. hi sir,
    ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சா?
    மதியம் சாப்பிட்டு முடிச்சாச்சு.
    இங்கு வெயில் பயங்கரமா கொளுத்துது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,விசாரிப்புகளுக்கும், வானிலை அறிக்கைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      வெளியிலே , வெய்யிலிலே போகாமல், பாதுகாப்புடன் இருப்பீர்களென நம்புகிறேன்.


      நீக்கு
  2. வேதனை. என்ன சொல்ல? ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்க வேண்டிய விஷயம். ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள் போல.

    நல்லது நடக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய ஆசை.

    பதிலளிநீக்கு
  3. வெங்கட்,

    "குடி" மகன்கள் சிந்திப்"BAR" களா?

    நல்லது நடக்கும் என நம்புவோம்.

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு