பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 மே, 2020

பூவாகி... காயாகி - 1


பூவெல்லாம் காயானால்...
நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க பூவாகி... காயாகி

எந்த ஒரு செய்தியையும் நேரடியாக சொல்லாமல்  , சில உவமைகள் (parables) மூலம் சொல்லி புரியவைப்பது என்பது ஒருவகை.

அவ்வகையில் கடந்த பதிவின் கடைசியில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.

நடந்தது என்ன என்பதை இந்த பதிவின் செய்திமூலம் அறிந்துகொள்ளலாம்.

Gala  என்ற வகையை சார்ந்த மிகுந்த சுவை தரக்கூடிய  ஒரு ஆப்பிள் கன்று ஒன்றை பக்கத்து தோட்டக்கலை நிறுவனத்திலிருந்து வாங்கி வந்து அதற்குண்டான அனைத்து செயல் விளக்க நெறிப்படி , வீட்டு பின்புற தோட்டத்தில் நட்டு வைத்தேன்.

மழை , காற்று ,வெயில் , பனி போன்ற எல்லா காலங்களிலும் ஆப்பிள் கன்றுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" போல பாதுகாப்புடன் வளர்த்து  வந்தேன்.

ஓராண்டுக்குள்  நன்றாக வளர்ந்த செடி அடுத்த இரண்டாண்டுகளில்  அடி மரம் எந்த காற்றுக்கும் தாக்கு பிடிக்கும் அளவிற்கு வேரூன்றி நின்றதோடல்லாமல் பல கிளைகளையும் நீட்டி பரவி அடர்த்தியான இலைகளுடன் தோட்டத்து மத்தியில் நேர்த்தியாக காட்சி  தந்தது.

ஒவ்வொரு நாளும் அதை பார்க்க பார்க்க ஆனந்தம் எனக்கு,  குதூகுல கொண்டாட்டம் அதில் வந்து அமரும்  பறவைகளுக்கு.

சரியாக மூன்றாவது ஆண்டின் பருவ வேளையில் இளஞ்சிவப்பு நிறத்தில் மரம் நிறைய மொட்டுக்கள் ,  என் மனம்  நிறைய ஆனந்த மெட்டுக்கள்.

மொட்டு விரிந்த பூக்கள் புன்னகையுடனும் வெளி உலகை முதன் முதலில் பார்ப்பதால் ஏற்பட்ட வெட்கத்துடனும் முகம் சிவக்க அதைக்கண்டு  புன்னகை என் அகம் சிலிர்த்தது .

பறவைகளின் வருகைக்கு நிகராக தேனீக்களும், வண்ணத்து பூச்சிகளும் வந்து போவதும் ரீங்கார சிந்துபாடுவதும் அன்றாட நிகழ்வானது மகிழ்ச்சி என் மனதிற்குள் அகழ்வானது.

இரண்டு வாரங்களில் பூக்கள் எல்லாம் மறைந்து போனது வண்டுகளின் ரீங்காரம் கரைந்துபோனது பூக்களில்லா கிளைகளை பார்க்க என் மனம் உவகை இன்றி உறைந்து போனது.

பூக்கள்தானே மறைந்தன? இப்போது ஆங்காங்கே கரும்பச்சை நிறத்தில் சின்ன சின்ன காய்கள்.  ஆஹா .. ஒன்றை கடந்து தானே மற்றது?

நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக இப்போது மலர்களின்  எண்ணிகைபோலல்லாமல் , காய்களின் எண்ணிக்கைக்கும்  நிகரில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காய்கள் கண்ணுக்கு தெரிந்தன.

மரம் முழுவதும் இடம்  சுட்டி எண்ணிய வகையில் சுமார் இருபது காய்கள் பொருள் விளக்கம் தந்தன.

விதைப்பதெல்லாம் முளைத்துவிட்டால்….. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

சரி இவையேனும்  பழமானால் சரி ... பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று. 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் .

கோ.

 

4 கருத்துகள்:

  1. விதைப்பதெல்லாம் முளைத்துவிட்டால்….. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…///

    நல்லாதான் இருக்கும்.
    ஆனால் ஒருபோதும் அது நடப்பதில்லையே சார்:((((





    ஆப்பிள் காய்கள் எல்லாம் பழமானால் பார்சல் அனுப்பி வைக்கவும்
    சுவைத்துவிட்டு ருசி சொல்கிரோம்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,



      உனக்கு பார்சல் அனுப்புவதற்கேனும் காய்கள் எம்மாம் கனிகளாகட்டும்.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. அட! ஆப்பிள் பழங்களாகட்டும் விரைவில். எங்களுக்கும் அனுப்பி வைக்காமலா போவீர்கள்!!!!!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தெரியாததா என்ன?

      "நினைப்புதான்……."

      நீக்கு