பின்பற்றுபவர்கள்

திங்கள், 4 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.

யமுனா  ஆற்றிலே...

நண்பர்களே,

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் எங்கேயோ எப்போதோ தான்  நடந்து வந்த பாதையை , கடந்து  வந்த பயணத்தை நினைத்து
அசைபோடும் தருணங்களில் அவனது மனதிற்கு இதமாகவும் இனிதாகவும் தனது மன  பூங்காவில் என்றும் பசுமையுடனும், நறுமண  வாசத்துடனும் தென்றலாய்  வீசி இதயத்தை இதமாக வருடும்  சில நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றி மறைவதுண்டு.

அவ்வகையில் சமீபத்தில் என் நினைவிற்கு வந்து நிழலாடிவிட்டுபோன ஒரு நிகழ்வுதான் இன்றைய பதிவு.

உயர் நிலை பள்ளி பருவத்திற்கு முந்தய பருவமது.

வீட்டருகில் இருந்த என் வயதொத்த நண்பர்களுள் சந்திர  சேகரனுடன்தான்(வாட் டு யூ மீன் பதிவிலிருக்கும் அதே சந்திர சேகர்தான்) எனது நெருக்கம்.

முந்தின மாலையே  திட்டம் தீட்டிவிட்டோம் அடுத்த  நாள் காலை ஆற்றுக்கு போய் மீன் பிடிக்க.

இரவெல்லாம் அடுத்த நாள் குறித்த நினைப்பில் தூக்கம் வராததால் சேவல் கூவும் அதே நேரத்தில்  எழுந்து சிறிது நேரத்திற்கெல்லாம் நண்பன் வீட்டுக்கு சென்று அங்கிருந்து அடுத்த நான்காவது நிமிடம்  பாலத்தின் கீழ் இறங்கி ஆற்றுக்கு சென்றுவிட்டோம். 

சமீபத்தில் ஓடி தீர்த்த பெரு வெள்ளத்தின் மிச்சத்தின் எச்சங்களின் வடுக்களாக இன்னும் ஆங்காங்கே சிறு வெள்ள நீரோடைகள்  வளைந்து நெளிந்து போய்க்கொண்டிருந்தாலும், ஆற்றின் பல பகுதிகளில் மணல் லாரிகளின் புண்ணியத்தால் பெரிய அகன்ற குழிகள் உருவாகியிருந்த இடங்களில் வெள்ள நீர் சிறு சிறு ஏரிகள் போல நிரம்பி இருந்தன.

அந்த நீரில்  சிறுவர் முதல் பெரியவர் வரை நீந்தி குளிப்பதையும்   அதனருகில் துணிகளை சலவை செய்யும் சிலரையும் பார்க்க முடிந்தது.

அந்த நீர் நிரம்பிய பள்ளங்கள் மிகவும் ஆபத்தானவை , அதில் குளிப்பவர்கள் கவன குறைவாகவோ  அலட்சிய போக்கிலும் அந்த பள்ளத்தில் இறங்கினால் ஆளை இழுத்துக்கொள்ளும் புதை குழிகளுக்கு ஒப்பானவை என்று சொல்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

ஒவ்வொருமுறை வெள்ளம் வரும்போதெல்லாம் குறைந்தது இரண்டு உயிர்பலிகளேனும் நிகழ்வதுண்டு இந்த குழிகளால்.

மீன் பிடிக்க சென்ற எங்கள் இருவரின் கவனமும் இப்போது நீர் நிரம்பிய தடாகத்தின் மீது தடாலென குதித்தது.

இதனிடையில் காலைமுதல் மகனை காணவில்லையே, விடுமுறை என்பதால் ஒரு வேளை சந்திர சேகரன் வீட்டிற்கு சென்று இருப்பான் என எங்கள் வீட்டிலும் கோவின் வீட்டிற்கு சென்றிருப்பான் என சந்திரசேகரனின் வீட்டிலும் நினைத்திருந்தார்களாம்.

எனினும் மத்திய உணவிற்குக்கூட வீட்டிற்கு வரவில்லை இப்போது மணி மாலை  மூன்று.

இரண்டு வீட்டார்களும் ஒருவரை ஒருவர் விசாரித்ததில் நாங்கள் இருவருமே காணவில்லை என்ற முடிவிற்கு வந்தவர்கள் முதலில் தேட ஆரம்பித்த இடம் பழைய பாலம் அருகிலான ஆற்று பகுதிதான்.

அந்த  நேரத்தில் துணிகளை துவைத்து முடித்து திரும்பிய எங்கள் வீட்டு அருகில் குடியிருக்கும் சலவை தொழிலாளியான யமுனா அக்காவிடம் பிள்ளைகளை பார்த்தாயா என கேட்க , " ஆம் தம்பியும் இன்னும் சில சிறுவர்களும் அந்த நீர் நிரம்பிய தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்தனர், இரண்டு முறை பார்த்தேன், கைகளை தூக்கி காண்பித்தபடி மூழ்கி மூழ்கி நீராடி கொண்டிருந்தான் தம்பி, பிறகு பார்க்கவில்லை" என கூறியது பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்க வேண்டும்.

அந்த வயதில் சரியாக நீச்சல்பழகாத - புதைகுழிகள் விவரமும்,வீரியமும், அதன் விபரீதமும் அறிந்திராத இந்த இருவருக்கும் என்ன நடந்தது என்பதை நாளை சொல்கிறேன். இல்லையேல் பதிவின் நீரோட்டம்  புதைக்குழியின் ஆழம்போல் நீண்டுகொண்டே போகுமே. 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


10 கருத்துகள்:

 1. நினைவுகள்.... நீங்கா நினைவுகள்....

  அடுத்த பாகத்திற்கான காத்திருப்பில் நானும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்.

   நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

   பதிவை வாசித்ததற்கும் காத்திருப்பிற்கும் மிக்க நன்றிகள்.

   பழைய கால நினைவுகள் இந்த புதிய காலங்களின் வாழ்வியல் பார சுமைகளுக்கு அடியிலிருந்து அவ்வப்போது கிளர்ந்தெழுந்து வரும்போது அவற்றை அசைபோட நம் உள்ளங்கள் ஏங்குவதும் அவை விட்டுச்செல்லும் இனிய அதிர்வலைகளால் நம் சோகங்களும் ஏக்கங்களும் நீங்குவதும் இயற்கையின் வினோத விளையாட்டு.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மீண்டும் நன்றிகள்.

   கோ.

   நீக்கு
 2. ஆற்றில் குளிப்பது என்பது எத்தனை இன்பமயம் !! எனக்கு என் சிறுவயது ஆற்றில் விளையாடிக் குளித்த நினைவுகள்.....மிகவும் பிடித்த விஷ்யம்...

  வெள்ளம் வந்து வடிந்து அப்புறம் ஆங்காங்கே சிறு சிறு ஓடைகளாய் ஓடும் ஆறு செமையா இருக்கும்...அழகாவும் இருக்கும்..

  எத்தனை களித்திருக்கீங்க கோ!!!

  //அந்த வயதில் சரியாக நீச்சல்பழகாத - புதைகுழிகள் விவரமும்,வீரியமும், அதன் விபரீதமும் அறிந்திராத இந்த இருவருக்கும் என்ன நடந்தது என்பதை நாளை சொல்கிறேன். //

  அது சரி அவங்க நாளை வரை காத்திருந்தாங்களா?!!!! ரெண்டு வீட்டு அம்மா அப்பாக்களும்??!!! ஹா ஹா ஹ ஹா

  இல்லை அந்த ரெண்டு பேரும் நாங்கதானே??!!! ஹிஹிஹிஹிஹி....இன்னா எதிர்பார்ப்பு!!! தொடர்கிறோம்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   எத்தனை காலங்கள் ஆகிவிட்டன உங்களோடு பரிபாஷித்து.

   வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க மிக்க நன்றிகள்.

   எனக்காக நீங்கள் காத்திருப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் என் எழுத்து பயணம் தொடர்கிறது.

   பெரியவர்களின் பேராதரவு எனக்கு எப்போதும் உண்டென்பது எனக்கு தெரியும்.

   தொடர்வோம் பயணத்தை.

   நன்றியுடன்

   கோ.

   நீக்கு
 3. கோ எங்கள் கமென்ட் வருவதில்லையா? ஏன்இங்கு வெளியாகவில்லை?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   தங்களின் பின்னூட்டம் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கும் நான் " வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்ண நினைப்பேன்" தங்களின் கமெண்ட் வந்தவுடன் சுட சுட பதிவேற்றம் செய்துவிடுவேனே.

   தங்களின் பின்னூட்டம் எனக்கு உத்வேகம் தரும் உன்னத "ஒளடதம்" ஆகுமே.

   தங்களின் உற்சாக வழி நடத்துதலுக்கு என்றும் கடமை பட்டவன்.

   நன்றியுடன்,

   கோ.

   நீக்கு
 4. அசம்பாவிதம் எதுவும் நடந்திருக்காது என்று நம்புகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனப்பால்,

   நம்பிக்கைதான் வாழ்க்கை.

   தங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ந்தது என் மனம்.

   அசம்பாவிதம் அரங்கேறியதா அல்லது கரையேறியதா.... கரை கடந்து காணாமல் போனதா என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்.

   தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் உற்சாக ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் தனபால்.

   "ஞான தங்கமே" பதிவில் உங்களை குறிப்பிட்டிருந்தேன், பார்த்தீர்களா?

   மீண்டும் ச(சி)ந்திப்போம்

   கோ

   நீக்கு
 5. பதில்கள்
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   நீண்ட இடைவெளிக்கு பின் எனது பதிவுகள் வரும்வரை காத்திருந்து வாசித்து என்னை தட்டிக்கொடுத்து தாங்கள் எழுதும் பின்னூட்டம் குறித்து என் நெஞ்சம் களிப்படைகிறது.

   தங்களின் வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   கோ

   நீக்கு