பின்பற்றுபவர்கள்

புதன், 6 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம். -2

பாதையெல்லாம் மாறிவிடும்....

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்" 

என்னுடைய அம்மா அப்பா ,அத்தை, பெரியப்பாக்கள். பெரிய அம்மாக்கள், அண்ணன்கள், அக்காக்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்து ஆட்கள் எல்லோரும் பறந்து விரிந்த அந்த ஆற்றின் எந்த பிரதேசத்திலும் தென்படாத எங்களின் துணிமணி(!!)கள் ஏதேனும் தென்படுகிறதா என  பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில இளைஞர்கள் தைரியமாக துணிந்து தண்ணீரில் குதித்து தேட ஆரம்பித்து இருக்கின்றனர்.

அந்த ஆற்றில் , ஏற்கனவே சொன்னதுபோல் பல நீர் நிறைந்த புதைகுழி பள்ளங்கள் இருந்ததினால், தேட சென்றவர்கள் பல பிரிவுகளாக பிரிந்து, பாதுகாப்பு கயிறுகள் கொண்டு வரப்பட்டு அதை கரையில் இருப்பவர்கள் பத்திரமாக பிடித்துக்கொள்ள ஏறக்குறைய எல்லா பள்ளங்களிலும் மூழ்கி தேட ஆரம்பித்திருக்கின்றனர்.

அப்படி பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ஏகமனதாக முடிவுசெய்துவிட்டனர், பிள்ளைகள் மணலில் புதைந்துவிட்டிருக்கக்கூடும்.

இனி தேடுவதிலும் எந்த பிரயோஜனமும் இல்லை இனி ஆக வேண்டியது என்ன என்பதை குறித்து யோசிக்கவேண்டும், காவல் துறைக்கும், தீ அணைப்பு துறைக்கும்  தகவல் சொல்லிவிட்டு வெளி ஊர்களில் இருக்கும் உறவினர்கள் நண்பர்களுக்கு தகவல் சொல்லி அனுப்புங்கள்.  என ஊர்  பெரியவர்கள்  அம்மா அப்பாவிடம்  சொல்ல அம்மா அங்கேயே மயங்கி விழ அவர்களுக்கு முதலுதவி செய்து வீட்டிற்கு  அழைத்து செல்ல முயன்றிருக்கின்றனர்.

ஆற்றை விட்டு வர மறுத்து அங்கிருந்தவர்களிடம் , "இன்னும் கொஞ்சம் தேடுங்கள் அவன் வேறு எங்கேனும் குளித்துக்கொண்டிருப்பான்" என கண்ணீர் மல்க புலம்பிக்கொண்டிருந்திருக்கின்றார்.

ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் ஊர் மக்களும் சோகத்துடன் திரும்பும் சூழலில், அரக்கோணத்தில் இருந்து எங்கள் அப்பாவின் நண்பரும் எங்கள் குடும்ப நலம் விரும்பியுமான ஒருவர் வீடு திரும்பும் ஊர் மக்களுக்கு எதிர் திசையில் வருவதை பார்த்த அம்மாவிற்கு மகன் இறந்துபோய்விட்டான் என்று சொல்கிறார்களே அது உண்மைதானோ, அதனால்தான் இவருக்கு தகவல் கிடைத்து  அரக்கோணத்தில் இருக்கும் இவர் உடனடியாக வந்திருக்கின்றார் என நினைத்து மேலும் கலக்கமடைந்திருக்கின்றார்.

(பக்கத்து ஊர் திருமணத்திற்கு குடும்பத்துடன் வந்தவர் அப்படியே எங்களையும் பார்க்க  வந்தவர்) 

அவரை பார்த்த அம்மா அவரிடம், " அண்ணா... தம்பி  இறந்துவிட்டான் என சொல்கின்றனர், உங்களுக்கு எப்படி தகவல் வந்தது , நான் என்ன செய்வேன், என் அன்பு மகன், தவமிருந்து பெற்ற மகன்..... என அம்மா சொல்லுவதை இடை மறித்து, "அம்மா, அழாதீர்கள்..  அவன் வீட்டில்தான் இருக்கின்றான்,  இப்போதுதான் நான் வீட்டில் அவனை பார்த்துவிட்டு வந்தேன், நீங்கள் இங்கிருப்பதாக அக்கம்பக்கத்தவர் சொன்ன செய்தி  அறிந்து உங்களிடம் தகவல் சொல்லி அழைத்துபோகவே இங்கே வந்திருக்கின்றேன் என சொல்லியும், அதை ஏற்க எவரும் தயாராக இல்லை.

முக்கியமாக அம்மாவின் நிலைமை , இவர் சொல்வதை ஏற்பதா..அல்லது நம்மை சமாதான படுத்த அவர் உண்மையை மறைத்து சொல்கிறாரோ என நினைத்திருக்கிறார்.

ஆற்றில் பார்த்ததாக சொன்னார்களே, நீரில் இறங்கி குளித்துக்கொண்டிருந்ததாக சொன்னார்களே, நாம் வீட்டிலிருந்தவரை  அவன் வீட்டுக்கு வரவில்லையே, ஆற்றிலிருந்து வீட்டிற்கு வரும்  அதே வழியில்தானே நாமும் வந்தோம் , அதெப்படி இப்போது வீட்டில் இருப்பான்?

இன்னும் பல கேள்விகளோடு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர் எனது உறவுகள், ஓட்டமும் நடையுமாக.

(இதில் ஆற்று பாலத்தின் அடியில் இருந்த கல் தரையில் படிந்திருந்த பாசியில் கால் வழுக்கி எங்கள் அத்தை விழுந்ததும் அவர்களை கைத்தாங்கலாக அழைத்துவந்ததும் தனிக்கதை).

அப்படியானால் என்னதான் நடந்திருக்கும் என கேட்கும் உங்கள் கேவிக்கு அடுத்த பதிவில் காத்திருக்கின்றது பதில்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


2 கருத்துகள்:

 1. இப்படியா அம்மாவை பயமுறுத்துவது?!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  ஏன் இப்படி ஆனது என்று அறிய தொடர்கிறோம் கோ...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   அறியா பருவத்தில் தெரியாமல் செய்த பிழை அது.

   அடுத்து , அம்மா வந்தவுடன் ஆற்று மணலில் அரை ட்ரவுசருடன் முட்டிபோடவேண்டியிருக்கும் என்ற பயத்தில் நான்.,

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு