பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.-4

விண்ணைத்தாண்டி.....

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்-3"

எங்கள் வீட்டாரும் ஊராரும் எங்களை ஆற்றில் தேடிக்கொண்டிருக்க, சந்திர சேகரனின் அப்பா, அருகிலுள்ள, பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள், ரயில்
நிலையங்கள்,விளையாட்டு மைதானங்கள்,"கிளிமாஞ்சோறோ" பதிவில் காணும் கிணறுகள் போன்ற இடங்களில் தேடிவிட்டு சோகத்துடனும் , களைப்புடனும், தனது  மிதி வண்டியை தள்ளிக்கொண்டு , திறக்க இருக்கும் புதுப்பாலத்தின் முகப்பில் கூடி இருந்த மக்கள் கூட்டத்தில் எங்கேனும் நாங்கள் இருக்கின்றோமா என பார்த்தபடி வருகிறார்.

சிறுவர்கள் என்பதால் போடப்பட்டிருக்கும் சவுக்கு மர தடுப்புகள் மீது காலூன்றி மேலே ஏறி நின்றிருக்கும் எங்களை அவர் பார்த்து விட்டார்.

உடனே தமது சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு நேராக எங்களிடம் வந்தவர்,முதலில் ஒன்று கொடுத்தார் சந்திரசேகரனின் கன்னத்தில்.

மகனை பிரிந்து, காலைமுதல் தேடி இப்போது கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கன்னத்தில் கொடுத்தது முத்தமென நினைக்க வேண்டாம்,  தனது மொத்த கோபத்தின் வெளிப்பாடான, அடுத்து எனக்கும் அதே இடத்தில் கொடுத்த, "பளார்" அறைகள்தான்.

எதிர்பாராத இந்த "துன்ப" அதிர்ச்சியுடன், ஏன் என்ன ஆச்சி , எதற்காக அறைகிறார் போன்ற விவரங்கள் புரிவதற்குள் எங்கள் இரண்டு பேர்களின் காதுகளையும் கைக்கொன்றாக பிடித்து திருகியவாறு அவரது சைக்கிள் இருந்த இடத்திற்கு அழைத்து   வந்து , நண்பனிடம் சைக்கிளை தள்ளுமாறு சொல்லிவிட்டு காதுகளை இன்னும் அதிக அழுத்தத்துடன் பிடித்துக்கொண்டு, வீடு நோக்கி கூட்டி சென்றார்.

அந்த நேரத்தில்,"கலைஞர் வாழ்க ! கலைஞர் வாழ்க!! எனும் கோஷம் திருகப்பட்டிருக்கும் எங்கள்  காதுகளில் விழ  தவறவில்லை, எனினும் எங்கள் தலைகள் திரும்ப விழையவில்லை, இனியும் தினத்தந்தியில்தான் பார்த்துக்கணுமோ?

உங்களை எங்கெல்லாம் தேடுவது, காலையில் இருந்து... இப்போது மணி நான்கை தாண்டியும் வீட்டிற்கு வராமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்.

உங்களுக்கு ஏதேனும் ஆகி விட்டதோ என எல்லோரும் பதை பதைத்து கொண்டிருக்கின்றோம் , நீங்கள் இங்கு வந்து நின்று கொண்டிருக்கின்றீர்கள் என கோபமாக பேசியபடியேவந்து முதலில் என்னை என் வீட்டில்  விட்டுவிட்டு , எனக்கு டாடா காட்டிய நண்பனின் காதை இன்னும் அழுத்தி பிடித்து நடந்து சென்றார்.

பரிதாபமாக திரும்பி பார்த்த சந்திர சேகரனின் முகத்தில் கோடி சந்திரன்கள் அமாவாசை முகமூடிகளுடன் மொத்தமாக கூடி  முகாமிட்டிருந்தது எனக்கு மட்டும் பிரகாசமாக தெரிந்தது.

வீட்டில் அழுதுகொண்டிருந்த எனது அக்கா ஓடிவர , அடிக்கத்தான் வருகிறார்கள் என நினைத்து நான் அவர்களிடமிருந்து விலகி ஓட, என்னை துரத்தி பிடித்த அவர்களும் என் கன்னத்தில் ஒன்று கொடுத்தார், இந்த முறை நான் வாங்கியது " பளார் " அல்ல பாச முத்தம்.

எனக்கு என்ன நடக்கின்றது என்பது பிடிபடவில்லை, ஏன் அக்கா அழுகிறார்கள், வீட்டில் யாருமே இல்லையே, இவர்கள் எப்படி இங்கே...?  அக்காவின் அழுகையினூடாய் ஒலித்த ஓரிரு வார்த்தைகளை கொண்டு.... வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் என்னை தேடிப்போய் இருப்பதாக உணர்ந்த அடுத்த நிமிடமே என்னை பயமும் திகிலும் ஒருசேர ஆட்கொண்டது.

இப்போது சூரிய கிரகணமாய் என் முகம், பெருவெள்ள சுனாமியாய் என் அகம்.

இனி அப்பாவும் அம்மாவும் வந்ததும் ஆற்று மணல் பரப்பப்பட்ட தரையில் முட்டிபோட வைப்பார்கள் என்பது  ஏறக்குறைய தீர்மானமாகிவிட்டது.

அப்போதுதான் எங்கள் குடும்ப நண்பர் அரக்கோணத்தில் இருந்து வந்தவர் முழுவிவரமும்  அறிந்து என்னை அரவணைத்து என் பயத்தை போக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு ஆற்றங்கரையிலிருந்து திரும்பும் அப்பா, அம்மாவிடம் சொல்ல சென்றிருக்கின்றார், நான் வீட்டில் இருப்பதை.

அதற்குப்பின்னால் அம்மா, அப்பா, உறவுகள், ஊரார், வீட்டிற்கு வந்து, ஏறக்குறைய, ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறந்து போனதாக கருதப்பட்ட  - இப்போது உயிரோடு   இருக்கும்   என்னை பார்த்தபிறகு  என்னென்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன்.

(சுடுதண்ணி, சீக்காய், தலை குளியல், மாற்று  ஆடை,  ஊர் கண்ணு உறவு கண்ணு ... மிளகாய், உப்பு, நெருப்பு,  சுற்றிப்போடுதல், ஆரத்தி...இனிப்பு, அரவணைப்பு,சோறூட்டல் , ஊர்கூடி விசாரித்தல்..அடுத்த சில வாரங்களுக்கு கண்காணிப்பு பலப்படுத்தல்... நண்பனும் நானும் தனிமையில் சந்திக்காமல் பார்த்துக்கொள்வது...போன்று நல்லதா கற்பனை பண்ணுங்கோ.....) 

பிள்ளைகள் உயிருடன் திரும்பி வந்த மகிழ்சி ஒருபுறம் மனதை நிறைத்திருந்தாலும் , தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்ததாக யமுனா அக்கா சொன்னது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது அனைவருக்கும்.

உண்மையிலேயே யமுனா அக்கா என்னை  பார்க்கவே இல்லை நானும்  யமுனா அக்காவை பார்க்கவில்லை, வேறு யாரையோ தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு அது நான்தான் என்று நினைத்து அப்படி கூறியதாக பிறகு அறிந்துகொண்டோம்.

எங்கள் மூத்த  சகோதரிகளின் வயதொத்த யமுனா அக்காவை என் சகோதரிகள் சிறு வயதுமுதல் அன்புடனும் நட்புடனும் "யமன்" என்று அழைப்பதற்கும் இந்த நிகழ்வில் அவரது பங்களிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என எனக்கு இன்றுவரை தெரியவில்லை.

இப்படியாக சிறு வயதில் நேரம் காலம் தெரியாமல் கால் ஒரு இடத்தில் 'நில்லாமல்' விடுமுறை நாட்களின்போது நண்பன் சந்திர சேகரனுடன் சுற்றி திரிந்த அந்த சூரிய நாட்கள் எனது வாழ்வின் ஒரு நிலா காலம் என்றால் அந்த நிலாகூட  ஆமோதித்து வழிமொழியும் ஆமாம்  அது மிகை அல்ல என்று.

இன்று அந்த நி(ல்)லா கால நண்பன் சந்திர சேகரன் , இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்த சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் வீர மரணமடைந்து எங்கள் எல்லோர் நினைவுகளில் சோகமென்னும்  கருமேக போர்வை விரித்து, மேகம் தாண்டி... அந்த நிலாவை  தாண்டி .... விண்ணையும் தாண்டி...  பொன்னுலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றான் - தேய்பிறையில்லா சுந்தர சந்திரனாய். 

அந்த இனிய நண்பனுக்கு இந்த பதிவு ஆற்றனைய பெருவெள்ள கண்ணீருடன் அர்ப்பணம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

8 கருத்துகள்:

  1. நண்பரின் பிரிவு கொடியது
    ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கு என் வணக்கங்கள். தங்களின் வருகையும் பதிவின் பாரத்தை அஞ்சலி மூலம் தாங்கி பிடிக்கும் உங்களுக்கு மிக்க நன்றிகள், ஆம், நண்பர்களின் பிரிவு பெரும் துயரமே.

      கோ.

      நீக்கு
  2. ச்சே எங்கள் துப்பறியும் திறன் குறைஞ்சு போச்சேனு இருக்கு...ஹா ஹா ஹா ஹா

    எங்கள் மூத்த சகோதரிகளின் வயதொத்த யமுனா அக்காவை என் சகோதரிகள் சிறு வயதுமுதல் அன்புடனும் நட்புடனும் "யமன்" என்று அழைப்பதற்கும் இந்த நிகழ்வில் அவரது பங்களிப்பிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என எனக்கு இன்றுவரை தெரியவில்லை.//

    ஹா ஹா ஹா ஹா

    வழக்கம் போல் நல்ல நகைச்சுவையுடன் வந்தது இறுதியில் அந்த சந்திரசேகரன் அவர்கள் வீர மரணம் அடைந்தது மனம் வருந்திவிட்டது..கோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்களின் பின்னூட்டம், பதிவின் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாக கவனித்து(யமன்) விமர்சிக்கும் உங்களின் ௦௦7 திறன் எள்ளளவேனும் குறையவில்லை - குறைய வாய்ப்பில்லை என நிரூபித்துவிட்டது.

      ஆம் நண்பனின் இழப்பு பெரும் துயரமே. ஒவ்வொருமுறை அவன் விடுப்பில் வரும்போதெல்லாம் , அந்த ராணுவ சீருடையுடன் ரயிலில் இருந்து இறங்கி , ஆட்டோவில் வந்து , முதலில் என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் பார்த்துவிட்டுத்தான் அவனது வீட்டிற்கு செல்வான்.

      அவனது ஆன்மா இனிதே இளைப்பாறட்டும்.

      வருகைக்கும் உங்கள் பரிவிற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. விடுபட்ட பகுதிகள் மூன்றையும் ஒன்றாக படித்து முடித்தேன்.

    உங்கள் நிலா கால நண்பருக்கு எனது அஞ்சலி.

    பல சமயங்களில் நமக்குத் தெரியாமலேயே இப்படி தவறு நடந்து விடுகிறது. நம்மால் எத்தனை பேருக்கு கஷ்டம் என நினைத்தால் வேதனை.

    உங்கள் நினைவுகளிலிருந்து பகிர்ந்து கொண்ட விஷயம் சிறப்பு. தொடரட்டும் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட், பதிவுகள் அத்தனையையும் ஒருசேர வாசித்து நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்.

      சிறுவயதில் , பின் விளைவுகளை பற்றி சிந்திக்கமால் கால்போன இடங்களில் , நேரம் காலம் தெரியாமல் சுற்றி திரிந்ததன் விளைவு இத்தனை களேபரங்களை ஏற்படுத்திவிட்டதை இன்னமும் நினைத்து வருந்துவதுண்டு, எனினும் அந்த நிகழ்சசி ஒரு இனிய நினைவுதானே.

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் வெங்கட்.

      கோ.

      நீக்கு
  4. மனதைத் தொட்ட பதிவு. நண்பரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய விதம் அருமை.
    இதைப்போலவே எங்கள் வீட்டிலேயே, எங்கள் வீட்டிலுள்ளோருக்குத் தெரியாமல், அடுத்த வீட்டுத் தோட்டம் வழியாகக் குதித்து விளையாடும்போது என் தலையில் தென்னை மட்டை விழுந்து (விழுந்த மட்டையில் தலைமுடியுடன் இரத்தமாக இருந்ததாகக் கூறுவர்) மயக்கமுற்று, செய்வதறியாது தவித்து, ஒருவழியாக உயிர் பிழைத்தேன். இன்னும் உச்சித்தலையில் அந்த தழும்பு உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      பதிவுகள் தங்களின் மனதை தொட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.
      மனதில் தோன்றியதை மறுபரிசீலனை செய்யாமல் உடனே செய்யும் அந்த சின்ன பிராயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்போல் தங்களுக்கும் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் அந்த பக்கத்துவீட்டு தோட்டத்து தென்னம் மட்டையால் ஏற்பட்ட வடு இன்னும் தங்கள் தலையில் இருப்பதுபோல் அந்த நிகழ்வும் உங்கள் ஆழ்மனதில் இருப்பது சிறப்பு.

      உயிர் பிழைத்தது மகிழ்ச்சியே.

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      கோ

      நீக்கு