பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 12 மார்ச், 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!-1

"பத்து கட்டளைகள்".

நண்பர்களே,

தலைப்பில் உள்ள வார்த்தைகள் சமீப காலங்களாக மிகவும் பிரபலமானதாகவும் பேசப்படுவதாகவும் உள்ளன என்பது நாம் அறிந்ததே.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னமே இந்த பதங்கள் வேறு ரூபத்தில்  - வேறு வார்த்தைகளால் , வேறு அர்த்தங்களோடு அழைக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்க கூடும்.  

சிந்தனையையும் நினைவுகளையும் சற்று(??) பின்னோக்கி நகர்த்தியதில் பல நிகழ்வுகள் என் நெஞ்சில் நிழலாட அதில் ஒரு நிகழ்வு இப்போது உங்கள் பார்வைக்கு பதிவாகிறது.

"ஆகாயத்தின் கீழுள்ள அனைத்திற்கும் அதிபனென்ற
சாகாத மகிழ்ச்சிகொண்ட ஏகாந்த காலமது - இனி
 என்ன தவம் செய்திட்டாலும்   திரும்ப அது வருவதேது?" 

என எண்ணி எண்ணி புளகாங்கிதம் அடையும் அந்த வேடந்தாங்கல் வளாகத்தில்தான்  இந்த வார்ததைகள் உருவம் பெற்று - உருவகமாய் எங்களுக்கு  அறிமுகமாயின. 

எத்தனை தவமிருந்தாலும் மீண்டும் கிடைக்க பெறாத சில பொக்கிஷ புதையல்களுள் அம்மா அப்பாவின்  அன்பிற்கு அடுத்து நம் பள்ளி-கல்லூரி கால இளமை பருவம் என்றால் அது மறு பரிசீலனைக்கு  அப்பாற்பட்ட அப்பட்டமான  உண்மை.

கல்லூரிநாட்களின் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் திறன்காண் போட்டிகளான, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி போன்றவற்றோடு கூடுதலான ஒரு போட்டியை என்னுடைய முதலாமாண்டு பட்டபடிப்பின்போது புதிதாக அறிமுகம் செய்திருந்தனர் கல்லூரியின் கலை இலக்கிய பண்பாட்டு குழுவினர்.

மேற்சொன்ன அனைத்து போட்டிகளும் அதனதன் சிறப்புடன் நடந்து கொண்டிருந்தன.

பாட்டுபோட்டியில், "மயக்கமா கலக்கமா" பாடல் ,கேட்டவர்களுக்கும்,  கேட்பவர்களுக்கும் மயக்கமும் கலக்கமும்  வருமளவிற்கு பாடி "வெற்றிகரமான" தோல்வியை தழுவி இருந்தாலும் கவிதை போட்டியில் வெற்றிபெற்றது ஒரு தனி கதை.(பாரதியார் இன்றிருந்தால்...)

மறுநாள் நடந்த ஒரு போட்டிதான் இன்றைய  தலைப்பின் மொழி மாற்று  பிம்பம் - நடு நாயகம்.

எல்லா போட்டிகளும் தனி அறையில் குறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் இறுதி தேர்வு நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன இந்த ஒன்றைத்தவிற.

நேற்றைய தினம் தனி அறையில் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான இறுதி சுற்று இன்று எல்லோர் முன் நிலையில்.  இறுதி சுற்றுக்கு தகுதியான 3பேர் இன்று கல்லூரி பொது மண்டபத்தில்.

இந்தவிதமான போட்டி , "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...." என்பதுபோல் கல்லூரி வரலாற்றில் முதன் முறை என்பதால்,மண்டபத்தில் குழுமி இருந்த பார்வையாளர்களின் புரிதலுக்காக , போட்டியின் விதி முறைகள் வாசிக்கப்பட்டன.

1. அழைக்கப்படும் போட்டியாளர் மேடைக்கு வந்து வணக்கம் சொல்லும் நிமிடத்தில் இருந்து அவருக்கான நேரம் ஆரம்பித்துவிடும்.

2. அதிகபட்ச நேரம் 6 நிமிடங்கள்.

3. ஐந்து நிமிடத்தில் எச்சரிக்கை மணியும் ஆறாவது  நிமிடத்தில் இறுதி(??!!) மணியும் அடிக்கப்படும். 

4. பாடல், உரையாடல், துணுக்குகள்,ஜோக்குகள்,கதைகள், கவிதைகள்.. எதுவானாலும் சொல்லலாம்.

5. நாடு, அரசியல், சாதி, மதம், பாலின பேதைமை  போன்றவை இடம்பெறக்கூடாது.

6.  அவை நாகரீகத்திற்கு ஏற்புடையதாக இல்லாத  வார்த்தை பிரயோகங்கள்  கூடாது.

7. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே  சம்பாஷணைகள் இருக்கவேண்டும் . 

8. இறுதி மணி அடித்தபின்னும் தொடருபவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார். 

9. இந்த போட்டிக்கு ஒரே ஒரு பரிசுதான், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் கிடையாது.

10.  நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

ஆகா... வித்தியாசமாக இருக்கின்றதே. போட்டியாளர்களுக்கு இடையே போட்டி கடுமையாக இருக்குமோ?

பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பார்வையாளர்களின் பெரும் கர ஒலிக்கிடையில் முதல் போட்டியாளரின் பெயர் அழைக்கப்பட, மேடை ஏறினார் என் வகுப்பு தோழ(ர்)ன் பார்த்த சாரதி.

இவரின் துணுக்குகள் ஏற்கனவே , குமுதம், கல்கி,ஆனந்த விகடன் போன்ற வார பத்திரிக்கைகளில் வந்திருந்ததை அறிந்திருந்த நாங்கள் அனைவரும் அவருக்கு பெரும் உற்சாக வரவேற்பளித்து கரஒலியை நிறுத்தியதும், தனது திறமையை காட்டும் விதமாக:

வணக்கம்,  "தி கேர் பிரீ பேர்ட்ஸ் " என்று   ஆங்கிலத்தில் அழைக்கப்படும் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் உங்களுக்காக........என்று சொல்லி  பாடலின் முதல் வரியை பாட ஆரம்பித்தவர் சில வினாடிகள் அப்படியே ஸ்தம்பித்து நிறுத்திவிட்டார்.

ஏன் என்ன ஆனது?, பாடல் வரிகளை மறந்துவிட்டாரா?.. அல்லது மேடையேறியதும் பயந்துவிட்டாரா?

யாருக்கும் எதுவும் புரியவில்லை.

நிலைதடுமாற்றத்தின் நிலை மாறியதா? நண்பனுக்கு பரிசு கிடைத்ததா?

நாளை சொல்கிறேன்.

அதுவரை......

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

4 கருத்துகள்:

 1. ஆ ஸ்வாரஸ்யமாக வாசித்து வந்தால் ஸ்தம்பித்து அவர் மட்டுமல்ல இப்ப நாங்களும் நின்றுவிட்டோம்...நாளை வரை காத்திருக்கனுமே என்று

  இப்படியான போட்டிகள் எங்கள் கல்லூரியிலும் நடத்தியதுண்டு..

  உங்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி அறிய ஆவலுடன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   சுவாரசியமாக பதிவு இருந்ததாக நீங்கள் சொல்லுவது மகிழ்வளிக்கின்றது.

   இந்த பதிவு தங்களின் கல்லூரி காலங்களை நினைவு படுத்தியதை அறிய தந்தமைக்கு நன்றிகள்.

   தங்களின் வருகை மிக்க மகிழ்சி,ஆவலோடு காத்திருப்பதற்கு மிக்க நன்றிகள்.

   கோ.

   நீக்கு
 2. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் - துல்லியத் தாக்குதல்?!!!!!! அப்படித்தான் சொல்லப்படுகிறது ஸோ உங்கள் நண்பர் என்ன செய்தார் என்று அறிய ஆவல்..

  பார்த்தசாரதி துணுக்குகள் பார்த்திருக்கிறேன். இதோ இப்போது என் வீட்டில் இருக்கும் மாமனாரின் தொகுப்பான பழைய இதழ்களின் தொடர்கள் என்று இருப்பவற்றில் இப்பெயரைப் பார்த்திருக்கிறேன்...ஆனால் இவர் அவர்தானா என்று தெரியவில்லை ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,
   துல்லிய தாக்குதலாக பார்த்த சாரதி என்ன செய்தார் என அறிந்துகொள்ள ஆவலோடு இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
   நீங்கள் பழைய பதிப்புகளில் பார்த்ததாக சொல்லும் பார்த்த சாரதி என் நண்பராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்.

   கோ.

   நீக்கு