பின்பற்றுபவர்கள்

வியாழன், 7 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.-3

ஆறிலிருந்து அரக்கோணம் வரை...

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்-2"

ஆற்றில் துவங்கி அக்கம் பக்கத்து வீடுகள் முதல் அரக்கோணம்(!!!) வரை  வியாபித்துவிட்ட இந்த பரபரப்பான, அதே சமயத்தில் பரிதாபமான  சூழலில், அப்பாவின் நண்பர் கூறுவது உண்மையா?

அல்லது பொய்மையும் வாய்மையிடத்து எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஆறுதல் வார்த்தைகளா?

அல்லது, நமது நெருங்கிய ரத்த சொந்தங்கள் "தவறி" விட்டால் சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளான,  "அவர் இறக்கவில்லை நம்மோடுதான் இருக்கின்றார், நம் வீட்டில்தான் இருக்கின்றார்" என்பது போன்ற  சம்பிரதாய  சொற்களா?

குழப்ப  வெள்ளத்தில் மூழ்கி மூச்சுமுட்டும்  குடும்ப உறவுகள் வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் நடந்தது என்ன என்பதை உங்களுக்கு மட்டும் சொல்லிவிடுகிறேன்.

நடந்தது இதுதான்...

மீன் பிடிக்கும் திறமையோ, அதற்கான உபகாரணமோ இல்லாமல் காலை ஆறு மணிக்கெல்லாம் ஆற்றுக்கு சென்ற நாங்கள் ஆற்றில் இறங்கவோ குறைந்தபட்சம் ஆற்று தண்ணீரில் கால்களை நனைக்கவோகூட இல்லை. 

கரையில் அமர்ந்தவண்ணமே எங்களுக்கு முன் அங்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களையும் அவர்கள் பிடித்த மீன்களையும், அவர்களின் தூண்டில்களுக்கு சிக்காமல் போன மீன்களால் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும் பார்த்து கொண்டும் அங்கே தண்ணீரில் குதித்து நீச்சலடித்து குளிப்பவர்களை பார்த்துக்கொண்டும் இருந்ததால் பொழுது போனதே தெரியவில்லை.

இந்நிலையில், தண்ணீரில் இறங்கி குளிக்கலாமா அல்லது நமது இடுப்புவரையிலான தண்ணீரில் இறங்கி நடக்கலாமா அல்லது இப்படியே மேற்கு நோக்கி நடந்து ரயில் போகும் மேம்பாலம் வரை போகலாமா அல்லது வீட்டிற்கு போய்விடலாமா ?

கரையில் இருந்த எங்களின் எண்ணங்கள் செயல் வடிவம் கொள்ளும்முன்னே அங்கே மக்களின் கூட்டம் நாங்கள் இருந்த இடத்திலிருந்து புதிதாக கட்டபட்டிருந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராத பாலத்தை நோக்கி பரபரப்புடன் செல்வதை கண்டு விசாரித்ததில், புதிய பாலத்தை திறந்து வைக்க அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் வருவதாக அறிந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக புதிய பாலம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அப்போது,  நேரில் பார்த்திராவிட்டாலும் எங்களுக்கு தெரிந்திருந்த மூன்று பெரிய பிரபலங்கள் திருவாளர்கள். எம்ஜிஆர், சிவாஜி, கருணாநிதி மட்டுமே. அவர்களுள் ஒருவர் இப்போது நம்ம ஊருக்கு வருவதாக அறிந்ததும் அவரை காணும் ஆவல் மிகுதியானது.

தினத்தந்தியிலும், அவ்வப்போது ஒட்டப்படும் சுவரொட்டிகள் வாயிலாகவும் பார்த்திருந்த கலைஞரை நேரடியாக பார்க்கப்போகிறோம் என்ற பேராவலில்  ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்று கூடி இருந்த மக்கள் வெள்ளத்தின் கூட்டத்தோடு சேர்ந்து ஐக்கியமாகி நெரிசலான வரிசையில் நின்றுகொண்டோம்.

பசியோ , களைப்போ , வீட்டிலிருந்து வந்து வெகுநேரமானதோ  , நம்மை வீட்டில் தேடுவார்களே என்ற எண்ணமோ சிறிதும் இன்றி, சவுக்கு கட்டைகள் கொண்டு கட்டப்பட்ட தடுப்பு வேலிக்கு பின்னால் நின்று கலைஞரின் வருகைக்காக காத்திருந்தோம். 

அதோ  வருகிறார் இதோ வருகிறார். என சொல்லிக்கொண்டிருந்தார்களே தவிர அவர் இன்னும் வரவில்லை.

ஆனால்  எங்களை நோக்கி வேறொருவர் வருவதை நாங்கள் கவனிக்க வில்லை. 

யாரவர்?

நாளை பார்க்கலாம் அவரை நேரில்.
.
நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

 1. மிகவும் விறுவிறுப்பாக செல்கிறதே பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   கோ

   நீக்கு
 2. ஹா ஹா ஹா நல்லா ஊரைச் சுத்திட்டு பாவம் அம்மாவை இப்படித் தவிக்க விட்டுட்டீங்களே..

  ஆனால் எங்களை நோக்கி வேறொருவர் வருவதை நாங்கள் கவனிக்க வில்லை. //

  அவர் யாரென்று தெரிந்துவிட்டதே. அவர்தானே அந்த அரக்கோணத்திலிருந்து ஒரு திருமண நிகழ்வுக்கு வந்தவர்....

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   பதிவுகள் எழுத ஆரம்பித்து இத்தனை நாட்களில் இந்த பதிவில்தான் எனக்கு ஒரு சின்ன வெற்றி.

   இதுவரை எழுதிய பதிவுகளில் அடுத்து என்ன என்பதை எனக்கு முன் ஊருக்கு சொல்லும் அளவிற்கு யூகிக்கும் நீங்கள் இப்பதிவில்தான் கொஞ்சம் தடுமாறிவிட்டீர்கள் அது எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

   அதாவது எங்களை நோக்கி வருபவர் யார் என்பதில் உங்களின் யூகம் கொஞ்சம் வழுக்கிவிட்டது.

   பரவாயில்லையே, தில்லையாகத்தாருக்கே(007) டிமிக்கி கொடுத்துட்டோமே என்ற பெருமிதம்.

   வாங்க அடுத்த பதிவிற்கு போவோம்.

   நன்றி.

   கோ.

   நீக்கு