இடம் தேடி ...
நண்பர்களே,
முன் பதிவை வாசிக்க.. ஞான தங்கமே 2.
இப்படி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் என் நினைவுக்கு வந்தது.. நான் இந்த கார் பார்க்கிங்கில் நுழைய காத்திருந்த சமயம் என் காருக்கு பின்னால் சில வாலிபர்கள் என் காரை உற்று பார்த்ததோடல்லாமல் என் கார் நன்றாக இருக்கின்றது என்பதை தங்கள் கையசைவின் சமிக்ஞய் மூலம் சொன்னது.
ஒருவேளை இது அவர்களின் வேலையாக இருக்குமோ?..
அப்போது என் எதிரில் வந்த கார் பார்க்கின் ஊழியரிடம் என் கிணற்றை ..சாரி....காரை காணவில்லை என்று சொன்னேன்.
அவரும் என் காரின் விவரங்களை கேட்டறிந்து பின்னர் நீங்கள் எந்த தளத்தில் நிறுத்தினீர்கள் என கேட்டார்.
பார்க்கிங் இடம் கிடைக்க நான் பல சுற்றுகள் சுற்றி கடைசியாக ஒரு தளத்தில் நிறுத்திவிட்டு லிப்ட் மூலம் இரண்டு அல்லது மூன்று மாடிகள் மேல் நோக்கி பயணித்து வணிக வளாகம் சென்றதை சொன்னேன்.
அவர்கள் என்னுடைய கார் பார்க்கிங் அட்டையை சோதித்துவிட்டு, நீங்கள் மேற்கு வாசல் வழி வந்திருக்கின்றீர்கள், பின்னர் நீங்கள் சொல்வதுபோல் மேல் நோக்கி சில தளங்கள் சென்று அங்கே நிறுத்தி இருக்கின்றீர்கள்.
அப்படியானால் நீங்கள் மூன்றாம் தளத்தில் தான் நிறுத்தி இருப்பீர்கள் என்றார். நானும் ஆமாம் மூன்றாம் தளத்தில்தான் நிறுத்தினேன் என்றும் மூன்றாம் தளம் முழுவதும் தேடிவிட்டேன் எங்கும் என் வண்டி இல்லை என்றேன்.
சரி நான் போய் பார்க்கிறேன் என்று அவரும் ஒரு சுற்று சுற்றிவிட்டு அங்கே இல்லையே என கூறினார்.
எதற்கும் நீங்கள் நான்காம் தளத்திற்கும் சென்று பாருங்கள் என கூற நான் நான்கு, ஐந்து , ஆறு என எல்லா தளங்களையும் ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வேறொரு அலுவலரிடம் நடந்தவற்றை கூறினேன்.
அவரும் தன்னிடமிருந்த வாக்கி டாக்கி மூலம் மூன்று முதல் ஆறாம் தளம் வரை உள்ள தமது சக அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு என் வண்டியின் அங்க அடையாளங்களை சொல்லி தேட சொல்லிவிட்டு , நீங்கள் மூன்றாம் தளத்திலுள்ள பார்க்கிங் அலுவலகம் சென்று அங்கே சி சி டிவி கண்காணிப்பாளரிடம் சொல்லுங்கள், உங்கள் வண்டி வெளியில் செல்லும்போது எடுத்த பதிவுகள் இருக்கும் அதை வைத்து யார், எப்போது கொண்டு சென்றார்கள் என விவரம் கிடைக்கக்கூடும் என்றார்.
பெரும்பாலும் வண்டி காணாமல் போனால் அதை கண்டுபிடித்து மீட்பது அத்தனை சுலபம் அல்ல.
எனினும் போலீஸ், இன்சூரன்ஸ் புகார்களுக்கு தேவையான சாட்சி ஆவணங்கள் வேண்டுமே என்பதற்காக , மூன்றாம் தளத்திலுள்ள சி சி டிவி கண்காணிப்பு அலுவலகம் வந்து விவரம் சொன்னேன்.
அவர்கள் என்னை வெளியில் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டு என் காரின் விவரங்கள் அடங்கிய அட்டையில் இருந்த நேரம் மற்றும் பதிவு எண்களின் அடிப்படையில் கேமரா பதிவுகளை ரீ வைண்ட் செய்து பார்த்துவிட்டு , உங்கள் வண்டி வெளியில் போனதற்கான பதிவு ஏதும் தெளிவாக இல்லையே என்றனர்.
சி சி டிவியின் கண்களுக்கு மிளகாய் தூள் தூவி கார்களை அத்தனை நூதனமாகக்கூட திருட முடியுமா.... கலி காலத்தில் எதுவும் சாத்தியம்தான் போலிருக்கிறது. (இது சைலென்சர் பொருத்தபட்ட என் மைண்ட் வாய்ஸ்)
சார் தயவு செய்து இன்னும் கொஞ்சம் சரியாக பாருங்களேன்.
நீங்கள் சொன்னபடி மூன்றாம் தளம் தொடங்கி ஆறாம் தளம் வரை ஒவ்வொரு காராக பார்த்து முடிக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் கொஞ்சம் காத்திருங்கள் என கூற மிகுந்த வேதனையுடன் காத்திருந்தேன்.
அந்த நேரம் பார்த்து இரண்டாம் தளத்திலுள்ள மாற்று திறனாளிகளின் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்த தனது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்திருப்பதாகவும் அதை உடைத்தது யார் / எந்த கார் போன்ற விவரம் பார்த்து தரும்படி ஒரு நடுத்தர வயது பெண் தனது காரின் விவரம் அடங்கிய அட்டையை அந்த சி சி டிவி கண்காணிப்பாளரிடம் கொடுத்தார்.
சரி என கூறிய அவர் உடனே தமது பார்வையை இரண்டாம்தளம் இருந்த கேமரா பதிவுகள் பக்கம் திருப்ப அவர் கண்ணில் பட்டது வேறொரு வண்டி, உடனே அவரது கண்ணில் வண்டி வண்டியாக பிரகாச விளக்கொளி வீச என்னை அழைத்தார்.
உள்ளே எட்டி பார்த்த என்னிடம் அந்த கேமரா பதிவை காண்பித்து இது உங்கள் வண்டிதானே என கேட்டார்.
என்ன ஆச்சரியம்... அது என்னுடைய வண்டியேதான்.... அதெப்படி மூன்றாம் தளத்திலிருந்து இரண்டாம் தளத்திற்கு சென்றது?...
பார்க்கின் கட்டிடத்தின் உள்ளே நுழைந்து பின்னர் ஒன்று இரண்டு அதன்பின் மூன்றாம் தளத்தில்தானே வண்டியை நிறுத்தினேன் .. இபோது எப்படி அது இரண்டாம் தளம் சென்றது... திருடர்களின் கை வரியையாக இருக்குமோ?
அந்த காணிப்பாளர் சொன்னது... நீங்கள் உள்ளே நுழைந்தது முதல் தளம்.. பின்னர் நீங்கள் கீழே செல்லும் தரை தளத்திற்கு சென்று அங்கு இடம் இல்லாததால் மீண்டும் முதல் தளம் வந்து அங்கேயும் இடமில்லாததால் இரண்டாம் தளம் வந்து உங்கள் வண்டியை மாற்று திறனாளிகள் நிறுத்தத்திற்கு எதிர் வரிசையில் இருபத்தாறாவது வாகன நிறுத்தத்தில் நிறுத்தி இருக்கின்றீர்கள்.
ஓ....
அதாவது உள்ளே நுழைந்து பேஸ்மெண்ட் தளம் சென்றதை முதல் தளம் என்று கருதி வண்டி நிறுத்திய இடத்தை மூன்றாம் தளம் என தவறாக நினைவில் வைத்துக்கொண்டதின் விளைவுதான் இத்தனைக்கும் காரணம் என்று அந்த அலுவலர் சொல்லியதோடு... ஒரு அறிவுரையையும் கூறி அனுப்பினார்.
அது என்ன அறிவுரை ... நாளை சொல்கிறேன் என் சொல்லி நாளை கடத்தாமல்.. இன்றே சொல்லி விடுகிறேன்.
அதாவது "எந்த இடத்தில் வண்டியை நிறுத்துகிறோம் என்ற விவரத்தை உங்களின் பார்க்கிங் அட்டையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்க, அது உங்களின் பார்க்கிங் இடத்தை அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்."
ஆம் நண்பர்களே, மால் போன்ற பெரிய வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் பல மாடி கட்டிட கார் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த நேரும்போது அந்த அலுவலர் கூறிய அறிவுரைப்படி, பார்க்கிங் விவரங்களை அட்டையில் எழுதிக்கொள்வதும் அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்வதும் நமது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு வீணானான அலைச்சல் மற்றும் மன உளைச்சலை தவிர்க்க வகை செய்யும்.
சரி, இதற்கு ஏன் இந்த தலைப்பு?
இந்த நிகழ்வின் சுப தருணத்தில் என் நினைவுக்கு வந்த ஒரு பாடலின் வரிதான் கரணம்.
அதாங்க... நம்ம நடிகர்திலம் நடிப்பில் வெளிவந்த திருவருட் செல்வன் திரைப்படத்தில் வருமே ஒரு பாட்டு... இருக்கும் இடத்தைவிட்டு .. இல்லாத இடம் தேடி எங்கெங்கோ.. அலைகிறார் "ஞானத்தங்கமே..."
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
super
பதிலளிநீக்குஉங்க எழுத்தில் வாசிக்கும் எங்கலையும் கார் ஏங்க போச்சுனு பதற்ற பட
வெச்சுட்டீங்க சார்.
எந்த floor ல நிருத்தியதை தெரியாமல் தேடியது.
செம.
எப்படியோ நிங்க ஒரு நல்ல பாடம் கத்துகிட்டு
ரொம்ப நால் கலிச்சு இந்த பக்கம் எட்டி பார்த்தது சந்தோஷம் சார்.
தொடருங்கள்..
ஆமாம் மகேஷ்,
நீக்குநல்ல பாடம் கத்துக்கிட்டேன்.
பதட்ட பட வச்சதுக்கு கோபித்துக்கொள்ள வேண்டாம்.
வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.
கோ
ஹா ஹா ஹா ஹா நிறுத்திய தளம் விட்டு பிற தளம் தேடி ஹா ஹா...இப்படி பல தள பார்க்கிங்கில் நேர்வதுண்டு.
பதிலளிநீக்குநாங்க சென்னைலயே தம்மா துண்டு பார்க்கிங்க் ஏரியாவுலயே கூட "ஓட்டை வண்டி காயலான் கடைக்குப் போட வேண்டிய என்று கேலி செய்யப்படும் ஆனால் மிக மிக அருமையான உழைப்பாளியான எனது எக்ஸெல் டூவீலரை எங்கு நிறுத்தியிருக்கேன் என்று பல கோண ஃபோட்டோ, தூண் எண் ஃபோட்டோ, எந்த ஃபேஸ்னு ஃபோட்டோன்னு எடுத்துக் கொண்டு போவது உண்டு...ஹிஹிஹிஹி...
இனியாவது நிறுத்தும் இடத்தை ஃபோட்டோ எடுத்துக் கொண்டு போங்க கோ!!!
கீதா
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குஎன் நிலைமை உங்களுக்கு சிரிப்பா இருக்குதா? சரி நம்மளால ஒரு ரெண்டு பேரு சிரிக்கரங்கனா அது எனக்கு சந்தோஷம்தான்.
சிரிங்க நல்லா சிரிங்க.
அதுக்காக உங்க வண்டிய காய்லாங்கடை வண்டி அது இதுனு சொல்லாதீங்க. அதுக்கும் காது இருக்கும்.
இன்னா இருந்தாலும் உழைப்பாளின்னு ஒத்துக்கிட்டீங்களே அதுபோதும், உங்களை ராஜா ராணிபோல பவனி அழைத்து செல்லும் உங்க "செல்ல"- வண்டிக்கு என் விசாரிப்புகளை சொல்லவும்.
நட்புடன்
கோ.