பின்பற்றுபவர்கள்

சனி, 1 ஜூலை, 2017

ஊக்க"மது" கைவிடேல்.

தட்டுங்கள் மூடப்படும்!!

நண்பர்களே,

மனித நாகரீகத்தின் படிமானங்களின் ஏதோ ஒரு படிவத்தில் படிந்துகிடக்கும் ஒரு வரலாற்று உண்மை:

மனிதன் தனது மகிழ்ச்சியை தற்காலிகமாக மேம்படுத்தவும் தமது சிற்றின்ப ஊற்றுக்கண்ணின் மடையை திறந்து சிறிதுநேரம் உல்லாசம் காணவும் பலவித மூலிகைச்சாறுகளையும் பழங்களையும் கொண்டு பாதுகாப்பான, உடல் உபாதைகளை உண்டுபண்ணாத, இன்னும் சொல்லப்போனால் ஆரோக்கியக்கேடு விளைவிக்காத பானங்களை தயாரித்து பருகி மகிழ்ந்தான் என்பது. 

அதுவே காலப்போக்கில் நாகரீக வளர்ச்சி எனும் பேரில் - பரிணாம வளர்ச்சி என்ற போர்வையில் பலவிதமான போதை பொருட்களும் பானங்களும் சுகாதாரமற்ற நிலையில்மட்டுமல்லாது ஆரோக்கிய கேடு விளைவிக்கும் மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு பருகப்பட்டு வருகின்றன.

முதல் பத்தியில் சொல்லப்பட்ட பானங்களில் சில சோமபானம்  மற்றும் சுரா பானம், என்று பெயரிடப்பட்டகாக வரலாற்று பக்கங்களில் சான்றுகள் ஊன்றப்படுகின்றன.

பானம் - பானகம் என்பது மொண்டு பருகக்கூடியது. மொண்டு பருகினாலும் அது கொண்டுவரும் தீய-எதிர்மறை விளைவுகளின் வீரியம் கவலைப்படும்படியாக    அல்லது முற்றிலும்   இல்லாதிருந்திருக்கும். 

இரண்டாம் பத்தியில் சொல்லப்படும் பானங்கள் எத்தனை விதம் எத்தனை ரகம் என்னென்ன பெயர்கள் என்பது கணக்கில் அடங்காது, இவற்றை மொண்டு பருக முடியாது , ஏனென்றால் அதன் நெடியும் , அதிலிருக்கும் விஷ தன்மையும் அதில் கலந்திருக்கும் பக்கவிளைவுகளை பரிசளிக்கும்  அதன்   வேதியியல்  நச்சுப்பொருட்களும்தான்.

உழைத்து களைத்து உடல் சோர்வுடன் வரும் உழைப்பாளிகள் தங்கள் உடல் சோர்வையும்  தசை வலியையும் போக்கிக்கொள்ள மது அருந்துவதாக ஞாயம் பேசுகின்றார்கள்.

ஆனால்  அந்த உடல் கூட்டிற்குள்ளே இருக்கும் உன்னத , மென்மையான உள் உறுப்புகளான இதயம் நுரைஈரல்,கல்லீரல்,கணையம், குடல், சிறுநீரகம் போன்றவை  இந்த மதுவினால் பாழ்பட்டு போவதை  உணராமலேயே உருவிழந்து- உறவிழந்து போவதை மறந்துவிடுகின்றனர்.

அந்த காலத்தில் பருகப்பட்ட பானங்களை வீட்டிலேயே  தயாரித்து , விருந்து சமயத்தில் உறவினர்கள் நண்பர்கள் கூடுகையின்போதும் திருவிழாக்கள் பண்டிகைகள் அனுசரிக்கும்  தருவாயில் அனைத்து குடும்ப மக்களும் கூடி பருகும் வண்ணம் கேடு விளைவிக்காததாக  ஆரோக்கிய பானமாக அமைந்திருக்கக்கூடும்.

உடற்கேடு விளைவிக்காத இந்த பானத்தை  அந்த காலத்து ஆட்சியாளர்கள் ஒரு வணிக ரீதியாக கஜானாவை நிரப்பும் - வருமானம் கொழிக்கும் வியாபாரமாக்க சிறிதும் தரம் தாழ்ந்து  சிந்தித்திருக்கமாட்டார்கள்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் , ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் இறையாண்மைக்கும்கூட கேடு விளைவிக்கும் கொடிய சாத்தானாக கொடிகட்டி பவனிவரும் இந்த மதுபானங்களை அரசே உற்பத்தி செய்து , அதை குடித்து தன்குடி அழிந்துபோக  மக்களை ஊக்குவிக்கும் அரசுகளையும் அதனை எதிர்த்து போராடும் அப்பாவி பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள், மாணவர்கள் போன்றோரை காவல்துறை  கொண்டு அடித்து, அடக்கி  சிறை தள்ளும் அரசாட்சியாளர்களை நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது.

முன்பெல்லாம், குடிப்பவர்கள் அல்லது குடித்தவர்கள் போலீசைக்கண்டு தலைமறைவாக சென்றுவிடுவார்கள் பயந்துகொண்டு, இப்போது அரசாணைகளின்படி/ ஆட்சியாளர்களின் ஆணைப்படி  போலீஸே குடிகாரர்களுக்கு  பாதுகாப்பாக - அரணாக செயல்படுவது , குடிகாரர்கள் வெளியரங்கமாய் தைரியமாக மது அருந்த வகை செய்வது  பெரும் வேதனை.

எல்லாவற்றிலும் மேலை நாட்டினை உதாரணமாக்கிக்கொண்டு வாழ நினைக்கும் நாம், மேலை நாட்டினரின் வாழ்க்கை சூழல், வருமானம், சீதோஷணம், சுகாதாரம், உற்பத்தி முறைமை, தர கட்டுப்பாடு, ஒழுங்குமுறைகளையும், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம் போன்றவற்றையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். .

நம் நாட்டில் பொதுமக்கள் மட்டுமே இந்த மது விற்பனைக்கு எதிர்த்து போராட்டம் செய்யாமல், அரசின் பிற துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும்கூட போராடவேண்டும்  தன்னலம் தவிர்த்துவிட்டு .

நிதித்துறை அமைச்சகம் தங்கள் கஜானாவை நிரப்ப மதுக்கடைகளை ஆதரித்தால் , மக்களின் சுகாதாரத்தை  - வாழ்க்கை தரவுயர்வை நிர்வகிக்கும் , மனிதவள மேம்பாட்டு துறையும் மக்கள் நல்வாழ்வு  மற்றும் சுகாதார துறை அமைச்சர்களும் அதனதன் துறை மேல்அதிகாரிகளும் இந்த மதுவிற்பனை கொள்கையினை  முன்மொழிவு கட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்திருக்கவேண்டும்.

இவர்களுள் யாருக்கேனும் உண்மையிலேயே மனித நலனில் அக்கறை இருக்குமேயானால் தமது பதவிகளையும் அதிகாரங்களையும் சரியாக பயன்படுத்தி இந்த மதுவினை நாட்டைவிட்டே ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும்.

எது எப்படியோ, அவன் வருவான் இவன் வருவான் என்று எவனையும் நம்பி காத்திராமல் பொதுமக்களும் , குறிப்பாக பெண்களும் மாணவர்களும் தொடர்ந்து ஒன்று சேர்ந்து ஆட்சியாளர்களின் மனக்கதவுகளை தட்டிக்கொண்டே இருங்கள் கண்டிப்பாக மதுக்கடைளின் கதவுகள் மீண்டும் திறக்கமுடியாதவண்ணம் இழுத்து பூட்டப்படும்.

காலம் கடந்துகொண்டே போகுமானால் பரவாயில்லை, அடுத்த பொதுத்தேர்தல் வரைதான், மயிலிடம் இறகுபோட கெஞ்சவேண்டி இருக்கும்.  தேர்தல் சமயத்தில் இதே போராட்ட வலிமையுடனும், தெளிவுடனும் , எந்த ஆசை விளம்பரங்களுக்கோ, பணத்திற்கோ பலியாகிவிடாமல், உறுதியுடனும்   இருந்து  செயல்படுவோம்; கொள்கை தளராமல் விழித்திருப்போம்.

அதுவரை முன்னோர் சொன்ன முதுமொழிக்கேற்ப  "ஊக்கமது கைவிடேல்" எனும் தாரக மந்திரத்தின்  மகத்துவத்தை மனதில்கொண்டு   ஊக்கமுடன் போராடுவோம்.

மது போராட்டம் கொண்டாட்டமாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நம்புகள் தனப்பால், சந்தோஷப்படும் நாள் வராமலேயா போய்விடும்?.

   கோ

   நீக்கு
 2. ஊக்கமது கைவிடேல் என்று ஊக்கம் 'மது' கைவிடப்பட்டால் நாடு முன்னேறும்...பார்ப்போம் நல்லது நடக்கிறதா என்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   பொறுத்திருந்து பாப்போம் தள்ளாட்டம் இல்லாத தமிழகத்தை.

   கோ

   நீக்கு
 3. நல்லதையே நினைப்போம். நடக்கும் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

   வருகைக்கு மிக்க நன்றிகள், நம்புவோம் நல்லதே நடக்குமென்று.

   கோ

   நீக்கு
 4. அருமையான கோட்பாடுடன் நல்ல சிந்தனையை முன்நிறுத்தி உள்ளீர் ஐயா.
  இந்தியாவின் முதுகெலும்பு தற்சமயத்தில் மாணவர்கள் தான் என்பது மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது ஐயா.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள், முதல் வருகை என நினைக்கின்றேன்.

   தொடருங்கள். வாழ்த்துக்களுடன்.

   கோ

   நீக்கு