பின்பற்றுபவர்கள்

புதன், 26 ஜூலை, 2017

ஆரிரரோ - ஆரிவரோ?- 1

நிழலின் அருமை!!
நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க.. ஆராரோ ஆரிவரோ?

உலகில் , என்னைப்பொறுத்தவரை ஒருவரும் சொல்லமாட்டார்கள் , அல்லது சொல்லக்கூடாது......
என்று நான் என் மன நிலைப்பாட்டில் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த வார்த்தைகள்தான்  அந்த தாய் பெற்ற ஒரே மகனான அவரது பதிலில் உதிர்ந்தன.

வயதில் பெரியவர், கல்வியில் உயர்ந்தவர்,கல்லூரி பேராசிரியராக இருந்து, மாபெரும் கல்லூரியில் முதல்வராக தொடர்ந்து,ஓய்வு பெற்றவர்.

ஓய்விற்குப்பின்னும்,  அவரது கல்வி திறன் அனுபவம் அறிவு முதிர்ச்சியின் நிமித்தம் நாட்டின் தலைநகரை மையமாகக்கொண்டு இயங்கும் கல்வி சார்ந்த நிறுவனத்தில் உயர்மட்ட ஆலோசகராக பணி அமர்த்தப்பட்டு இன்றளவும் துடிப்புடன் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டிருப்பவர் அவர்.

அத்தகு சிறந்த கல்வியாளர்அவரது அம்மாவின் நலன் குறித்து கேட்டபோது ,சொன்ன மறுமொழி:

"இன்னும் சாகாமல் இருந்துகொண்டு எனக்கு பாரமாக இருக்கின்றார், எப்போது சாவாரோ என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் சீக்கிரம் இறந்துபோனால் நிம்மதியாக இருப்பேன், என்னை பொறுத்தவரை நான் அவர்களுக்கு செய்யவேண்டியதைவிட கூடுதலாகவே செய்து முடித்துவிட்டேன்".

அதிர்ச்சி அடைந்த நான் அவர் தமது அம்மாவைக்குறித்து, விளையாட்டாக சும்மா சொல்கிறார் என எண்ணி நகைக்க முற்பட்ட என்னை பார்த்து, "நான் உள்ளத்தில் இருந்து உண்மையாகத்தான் சொல்கிறேன்" என்றதும் என் அதிர்ச்சி மேலிட்டது.

பெற்ற அன்னையருக்கு செய்வதில் அளவு உண்டா, அவர்கள் நமக்கு செய்தவற்றை அளக்கமுடியுமா என்றெல்லாம் எண்ணிய நான் அதற்குமேல் வேறு எந்த செய்தியையும் பகிர்ந்துகொள்ளும் மன நிலையில் இருந்து விலகிநின்றேன்.

பணியின் நிமித்தமாக வெளி நாடு சென்றிருந்தவர் நானும்  தாயகம் வந்திருப்பதை அறிந்து என்னை பார்க்க வந்திருந்த அந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரது அன்னையை சந்தித்து உரையாடிவிட்டு நலம் விசாரித்துவிட்டு வந்திருந்ததாலும் என் மன பாரம் இரட்டிப்பானது.

 கடந்த ஆண்டு என்னை விட்டு இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்ற என் அன்னையரின் முதலாமாண்டு  நினைவுநாளை அனுசரிக்க இந்தியா சென்றிருந்த சூழலில் இந்த பேச்சு அமைந்தது இன்றுவரை நெஞ்சில் வடுவாக பதிந்து சுடுகிறது.

அவரது அனுபவம்  சிந்தனை மன போராட்டம், நெருக்கடிகள், நிர்பந்தங்கள் என்னவென்று அறியாதவனாக இருந்தாலும், எனக்கு தெரிந்த வரையில் அம்மாவின் மீது அன்பும் மரியாதையையும் பாசத்தையும் கொண்டிருப்பவர் அவர்.

தனது துணைவியார் , மகள் , மகன்  மற்றும் மருமகள் என்று நான்கு மருத்துவர்கள் அதே வீட்டில் வசித்துவருவதோடு தனது அம்மாவை பிரத்தியேகமாக  பார்த்துக்கொள்ள  - உதவிகள் செய்ய இருபத்து நான்கு மணி நேரமும் மூன்று பணிப்பெண்களையம் ஒரு பிசியோதெரபி நிபுணரையும் அமர்த்தி இந்நாள் வரை  நல்ல மகனாக தனது கடமைகளை செய்துவரும்  அவரது சொல் என்னைப்பொறுத்தவரை எள்ளளவும் ஏற்புடையதல்ல.

நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதுபோல் , யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல், நேரத்திற்கு கொடுக்கப்படும் உணவு மற்றும் மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு ஒரே அறையில் போதுமான  வசதிகளுடன் வாழ்ந்துவரும் தனது தாயாரின் அருமை அவருக்கு இப்போதே புரியாமலா இருக்கும்?

"ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா?"

சம்பந்தப்பட்டவருக்கு:  தங்களின் பதில் என் மனதினை பெரிதும் பாதித்ததை யாரிடம் சொல்வது?  வீட்டாரிடத்தில் சொல்லமுடியாது அதே சமயத்தில் உள்ளத்தில் பெரும்  வருத்த பாரமாய் அமர்ந்திருக்கும் இந்த சொல்லை யாரோடும் சொல்லாமலும் இருக்க முடியாது.

எனவே என் மன பாரத்தை  என் பதிவுலக நண்பர்களிடத்தில் சொல்லி இறக்கிவைக்கவே இதை இங்கே பதிவாக்கினேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

1 கருத்து: