பின்பற்றுபவர்கள்

திங்கள், 24 ஜூலை, 2017

தலை வணங்குகின்றேன்!.

தாய் மண்ணின் மைந்தரே  வணக்கம்!!

நண்பர்களே,

எமது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் அவ்வப்போது எமது தளத்தின் பக்கம் தலை வைத்து ப(டி)டுப்பவர்களுக்கும் நன்கு தெரிந்த வண்ண ம் நான் தொடர்ந்து எழுதுபவனல்ல.

எனினும் எப்போதெல்லாம் எமது பதிவுகள் தளத்தில் தலை காட்டுகின்றனவோ அப்போதெல்லாம்,எமது  பதிவுகளை படித்து மகிழும் எண்ணற்ற வாசகர்களை எண்ணி உள்ளம் மகிழ்கிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மூலைகளிலும் உள்ள தமிழ் வாசகர்கள் எமது மூளையில் உதிக்கும் கருத்துக்களை சுமந்து வரும் பதிவுகளை பாசத்துடன் படித்து மகிழ்வதுமட்டுமன்றி தமது பாராட்டுகளையும் கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவிப்பது உண்மையிலேயே மேலும் எழுத தூண்டுகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இப்படி இந்திய வாசகர்கள் மட்டுமன்றி உலகத்தின் எத்தனையோ நாடுகளில் இருந்தும் இன்னும் சொல்லப்போனால், இன்றுவரை பெயர்கூட  அறிந்திராத நாடுகளில் இருந்தெல்லாம் எமது பதிவுகளை வாசிக்கின்றனர் என்று அறிந்தபோதும் உள்ளம் உவகை கொள்கின்றது.

அப்படி உவகை கொண்டிருந்த என் மனதில் இன்று ஒரு இனம் புரியாத - சொல்லொண்ணா உணர்வு என் நெஞ்சை ஆக்கரமித்து அரித்து கண்களை கசிய  வைத்து பாரமுற செய்தது.

நாட்டில் பல நடைமுறை சிக்கல்களுக்கும் அவ்வப்போது வந்துபோகும் சில சாதாரண மற்றும் கனரக சவால்களுக்கிடையில் நம் மக்கள் வாழ்ந்து வந்தாலும், அவை எல்லாம் மின் மினி பூச்சிகள் போலவும் கடந்து செல்லும் மேகங்கள் போலவும் சில நொடி  நேரமே நம் கண்களில் தெரிவதும், சில மணித்துளிகள் மட்டுமே நம் வாழ்வின் ஒரு பகுதியை  சூழ்ந்துகொள்வதும் அல்லது சில நாட்கள் வரை தொடர்ந்து பின்னர் கலைந்து செல்லும் மேகங்கள் போலவும் கலைந்து நகர்ந்து செல்வதை  நாம் அறிவோம்.

அப்படி பட்ட சூழலிலும் சிறிது நேரம் அவகாசம் எடுத்துக்கொண்டு ஓய்வு நேரத்தில் பதிவுகளை வாசிக்கும் பெரும்பான்மையான வாசகர்களின் வாசகம் போற்றுதற்குரியது.

அதே சமயத்தில் எந்த நேரத்தில் என்ன நிகழுமோ, என்ற அச்சம் எப்போதும் குடிகொண்டிருக்கும் பதட்டமான சூழ்நிலையிலேயும்  தமது உயிருக்கும் உடமைக்கும் எந்நேரத்திலும் ஊறு விளையக்கூடும் என்ற ஊர்ஜிதப்படுத்தப்பட்ட "உத்தரவாதமிக்க" நிலப்பரப்பில் தினம் தினம் பயந்து நடுங்கும் மக்களுள் தமிழறிந்தவர்கள் எமது படைப்புகளை வாசிக்க நேரம் ஒதுக்கின்றனர் , அவர்களுக்கு நமது படைப்புகள் ஆறுதலளிக்கின்றன என்று எண்ணும்போது உள்ளம் உண்மையிலேயே சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது.

ஆம் நண்பர்களே,

கந்தக புகை மணத்தையும் நித்தம் குண்டுகள் முழங்கும் ஒலியையும், எப்போது அண்டை  நாட்டு ராணுவம் எல்லை மீறி தமது குடியிருப்பு பகுதிகளை ஊடுருவி தமது உயிரினை வேரறுப்பார்களோ, என்ற திகில் நிறைந்தது அந்த பனிமலை பிரதேசம்.

தங்களது கடமைகளை நிறைவேற்றவும், குடும்பத்தை காக்க , வேலை நிமித்தமாகவும் , தமது நாட்டை காக்கும் எல்லை பாதுகாவலர்களாகவும் தங்கி வாழ்ந்துகொண்டிருக்கும், இல்லை இல்லை வாழ போராடும்  நமது இந்திய துணைக்கண்டத்தின் வட கோடியில் இருக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியாகிய காஷ்மீர் நிலப்பரப்பில் தமிழறிந்த சகோதர சகோதரிகளும் எமது பதிவுகளை படிக்கின்றனர் என்று எண்ணும்போது என் உள்ளத்தின் உவகை கலந்த உணர்வினை எப்படி வார்த்தெடுப்பேன்  வார்த்தைகளால்?

 வார்த்தைகள் தட்டுப்படாததால்  தலை  வணங்குகிறேன்!!

குறிப்பாக இன்று காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள வாசகர்கள் பதிவுகளை வாசித்ததாக கணக்கீடு கணித்துறைத்த செய்தி அறிந்து  உள்ளம் சிலிர்த்தேன்.

இமயம் முதல் குமரிவரை எங்கும் வியாபித்திருக்கும் பாசத்திற்குரிய  எமது தமிழ்  சகோதர சகோதரிகளுக்கு இதைவிட வேறு பொருத்தமான நாள் வேறு அமையாது எனது நெஞ்சார்ந்த  நன்றியையும் வணக்கத்தையும் நல்வாழ்வு உங்களை இறுக பற்றிக்கொள்ளட்டும் எனும் வாழ்த்தையும் வார்த்தைகளால்மட்டுமின்றி உணர்வுபூர்வமாகவும் தெரிவித்துக்கொள்ள.

உங்களுக்கு எங்கள் படைப்புகள் ஆறுதலாகவும் சோக மாறுதலாகவும் அமையுமெனில் அதற்கேற்ற கூடுதல் பொறுப்புடன் எமது படைப்புகளின் கூன்கள் நிமிர்த்தப்படும் எனும் உத்தரவாதத்தை , எமது சக பதிவுலக நண்பர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலக வரைபடத்தில் சிறிய கோடுகளாகக்கூட வரையப்படாத நாடுகளில் எல்லாம் நமது மொழிபேசும் - படிக்கும் மக்கள் வாழ்வது குறித்து பெருமையுடனும் கர்வத்துடனும் இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.

நன்றி.

வாழ்க பாரதம்!

வெல்க தமிழ்!!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

7 கருத்துகள்:

  1. நல்லதொரு உணர்வு. மேலும் பதிவுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி வெங்கட், முயல்கிறேன்.

      கோ

      நீக்கு

  2. தரமான பதிவுகளை தொடர்ந்து எழுதி வரும் உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்...விசுவாசத்தின் அறிமுகத்தால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள்.

      விசுவாசத்தின் வாயிலாக கிடைத்த உங்களின் சகவாசமும் எந்தன் பதிவுகளின்மீது அவ்வப்போது நீங்கள் தொடுக்கும் நல் வாசகமும் என் மனதில் சுகவாசம் வீசுகின்றது.

      தலைவணங்குவதாக சொல்வதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் , மற்றபடி பதிவுலகில் முன்னோடியாக திகழ்ந்து பட்டொளி வீசிக்கொண்டிருக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் முன்னாள் நன் ஒரு (மின்) மினியே.

      நன்றியுடன்,

      கோ

      நீக்கு
    2. பிழை திருத்தம்:

      முன்னால் - நான்

      நீக்கு
  3. நல்ல கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள் கோ! எல்லோர் சார்பாகவும்!! மிக்க நன்றி!! எழுதுங்கள் எழுதிக் கொண்டே இருங்கள் கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்களை போன்றோரின் ஊக்கமும் தட்டிக்கொடுத்தலுமே இந்நாள் வரை என்னை உற்சாகத்ததுடன் பயணிக்க செய்கிறது.

      உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்.

      எப்போதும்போல் என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் உயர்ந்த உள்ளங்களுக்கும் நான் நன்றியுடன் "இப்பதிவின் தலைப்பு"..

      கோ

      நீக்கு