பின்பற்றுபவர்கள்

வியாழன், 20 ஜூலை, 2017

குழந்தை பாட்டி.....

அடக்க(ம்)முடியா  ஆனந்தம்.

நண்பர்களே,

என்னதான், விரோதியாகவே இருந்தாலும் , கொடுங்கோலனாகவே கூட இருந்தாலும் , அவர்கள் மறித்து அடக்கம் செய்யப்படும்போது சிறிது நேரமேனும் வருத்தத்துடன் அமைதி காப்பதும்  துக்கப்படுவதும் உலகில் மனித இயல்பு.

ஆனந்த திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டத்தின் மைய கருத்தாக சொல்லப்படும் செய்தி நாம் அறிந்ததே.

நரகாசூரன் கொல்லப்பட்டது, அவனால் பாதிப்படைந்தவர்களுக்கு பெரும் மகிழ்சசிக்குரியதாக இருந்தாலும் அவனது குடும்பத்து மக்களுக்கு கண்டிப்பாக பெரும் வருத்தத்தையும் துக்கத்தையுமல்லவா கொடுத்திருக்கும்.

விலங்குகள்கூட தங்கள் துணையோ, குழந்தையோ, தமது கூட்டத்தில் ஒருவர் இருந்தாலும்கூட இறந்த உடலை  சுற்றி அமைதியாக சோக உருவாக அமர்ந்திருப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் , ஆறறிவு படைத்த ,அதிலும் வயதும் அனுபவமும் மிகுந்த ஒரு பெண் தன்னை பெற்று வளர்த்த  தமது அப்பாவும் அம்மாவும் உயிரற்ற உடல்களாக கிடத்தப்பட்ட காட்சியை  கண்டு :

தமது உள்ளம் அமைதியும் மன நிறைவும் கொள்வதாக மிகவும்   மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கும் செய்தி கேட்பதற்கு கொஞ்சம்  திகைப்பாகத்தான் இருக்கின்றது.

அப்படி என்ன அவர்கள் அத்தனை கொடூரமான பெற்றோர்களா என ஆவலுடன் செய்தியை ஆழ்ந்து அறிந்தபோதே அந்த பெண்ணின் மன அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் அர்த்தம் புரிந்தது. 

செய்தி என்னவென்றால்:

வழக்கம்போல்  தொழுவம் சென்றவர்கள்  வழக்கத்திற்கு மாறாக  நீண்ட நேரமாகியும் பால் கறந்து கொண்டு  வரவில்லை  பெற்றோர்கள் .

 விளக்கு வைத்தும் வீடுதிரும்பாதது ஏன் என்று விளக்கம் சொல்ல யாராலும் முடியாமல் போனதால்,தமது சகோதரர்கள் சகோதரிகள்  அக்கம் பக்கத்து வீட்டார் உறவினர் யாவருமாக சேர்ந்து மாட்டு தொழுவம் இருந்த மலை அருகே சென்று பார்த்தனர்.

எத்தனை நேரம் தேடிப்பார்த்தும் , எத்தனை சத்தமாக குரலெழுப்பி அழைத்தும் பதிலில்லை.

சோகமாக வீடு திரும்பியவர்கள் , எப்படியும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உறங்க சென்றும் உறக்கம் வராததால் விடியுமுன்னே எழுந்து மீண்டும் அந்த இடத்தில் சென்று தேடினார்கள்.

ஒரு பலனும் இல்லை. 

தினம் தினம் எதிர்பார்த்தும் எந்த பலனும் இல்லை, எனினும், பனி படர்ந்த அந்த மலை பிரதேசம் முழுவதிலும்   தமது தேடுதல் பணியை தொடராமல் இல்லை.

இப்படி ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல , மாதங்களாக  வருடங்களாக தேடிபார்த்தவபர்களுக்கு , ஒரு செய்தி கிடைத்தது.

மலையடிவாரத்தில் பனி பாறைகளுக்கிடையில் ஒரு இளம் கணவன் மனைவியின்  உடல்கள் இருப்பதாகவும் அது சந்தேகமின்றி , காணாமல் போன இந்த பெண்ணின் பெற்றோர்கள்தான் என்ற தகவலும்தான்.

அந்த இடம் நோக்கி ஓடோடி செல்லாமல் அந்த பெண் நிதானமாக நடந்து சென்று இருக்கின்றார்.

ஆரம்ப காலத்தில் தேட போகும்போது இந்த பெண் செல்லவில்லை ஆனால் இப்போது இவள் செல்லும்போது மற்ற சகோதரர்கள்  சகோதரிகளுள் பெரும்பாலோர் அவளுடன் போக வில்லை.

அப்படி என்ன வருத்தம் அந்த பிள்ளைகளுக்கு.

வருத்தம் ஒன்றுமில்லை. தமது பெற்றோர் பெற்ற  ஏழு  பிள்ளைகளுள் கடைக்குட்டியான இந்த பெண் அவர்கள் பெற்றோர் காணாமல் போனபோது இருந்த வயதை விட இப்போது 75 வயதுகள் கூடி இருந்ததால் ஏற்பட்ட முதுமையின் தள்ளாட்டமும், தனக்கு முன்னாள் பிறந்த சகோதர சகோதரிகளுள் பலர் உயிரோடு இல்லை என்பதுமே காரணம்.

தனது நான்காவது வயதில்  கடைசியாக பார்த்த பெற்றோரின் முகத்தை எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்க்கப்போகிறோம் என்ற பேராவல் நெஞ்சு நிறைந்திருந்தாலும் முதுமையின் தள்ளாட்டம் நிதானமாக போகவைத்தது.

பெற்றோரின் மரணம் குறித்து மிகவும் கவலைப்பட்டு துக்கித்து அழுவாளோ என்று எதிர்பார்த்த சுற்றத்தார் மத்தியில் அவள், தாம் இன்று மன நிறைவுடனிருப்பதாகவும் ,சந்தோஷத்தின் உச்சியில் நிற்பதாகவும்  என் தாய் தந்தையரை காணாமலே இறந்துபோகமாட்டேன் என்ற என் ஆழ் மனதின் நம்பிக்கை வீண் போகவில்லை.

ஆல்ப்ஸ் மலை பகுதியில் பனி பாறைகள் சரிந்து விழுந்து  பனிக்கட்டி படலங்களாக பல அடுக்குகளுக்கு மத்தியில் சிக்கிகொண்டு உயிரிழந்த பெற்றோரின்  உடலை சமீபத்தில் மலை பிரதேச பராமரிப்பு செய்யும் பணியாளர்கள்  அந்த பிரதேசத்து பனி கட்டிகளை அப்புறப்படுத்தும்போது கண்டெடுத்த உடல்களை கண்ட அந்த பெண்மணியின் உள்ளத்திலிருந்து வந்த மகிழ்ச்சி பனி மலையினும் தூய்மையானதும் உயர்ந்ததுமாயும் இருக்கின்றது..

இதோ இவர்களை நான் பார்த்துவிட்டேன்.

இவர்களுக்கு உரிய மரியாதையுடனும் கவுரவத்துடனும் நல் அடக்க ஆராதனையை ஒழுங்கு செய்து அவர்களை அடக்கம் செய்ய போகிறேன்.

மற்றவர்களைப்போல் அடக்க  நாளை துக்க நாளாக கருதி கருப்பு ஆடை அணியாமல் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் வெள்ளை நிற ஆடையையே அணிந்துகொள்ளப்போவதாக சொல்லும், சுவிட்சர்லாந்தில் வாழும்   அந்தகடைக்குட்டி (குழந்தை ) - பாட்டிக்கு வயது 79.

கொடுத்துவைத்த பாட்டிதான்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ
6 கருத்துகள்:

 1. பாட்டிக்கு வயது முதிர்ந்து பல மரணங்களைக் கண்டதால் மனம் பக்குவம் அடைந்திருக்கும் இல்லையா....அதனால் அழுகை வந்திருக்காதுதானே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி என் அன்பிற்கினிய நண்பர்களே.

   காணாமலே போய்விடுவோமா என்றிருந்த அந்த பாட்டியான குழந்தைக்கு அவரது இளமையான பெற்றோரின் முகத்தை பார்க்க கொடுத்துவைத்ததினாலும் அனாதையாக - கண்டறிய முடியாததாக போய்விட இருந்த உடல்களை மீட்டு நல் அடக்கம் செய்ய கிடைத்த அறிய வாய்ப்பிற்காககும் அவர்கள் பெற்ற இன்பத்தை வேறு எப்படி கொண்டாடி இருக்க முடியும்?

   கோ.

   நீக்கு
 2. இந்த செய்தியைப் படித்தேன். இதனை புகைப்படத்துடன் எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். தங்கள் மூலமாக விரிவான பதிவைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

   அறிந்த செய்திதான் என தெரிந்தும் என் பதிவினை படித்து பாராட்டும் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

   புகைப்படம் நான் பார்க்கவில்லை, வாசித்த செய்தியினை என் எழுத்தில் பகிர்ந்துகொண்டேன்.

   மீண்டும் நன்றியுடன்,

   கோ

   நீக்கு
 3. பதிவோடு நீங்கள் அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

   புகைப்படம் நான் பார்க்கவில்லை.

   இந்த ஒரே செய்தி நம் இருவரின் கவனத்தையும் ஈர்த்ததோடல்லாமல், அதை பகிரவும் சிந்தை மேலிட்ட எண்ண அலைகள் நம் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஏற்பட்டிருப்பதை எண்ணி வியக்கிறேன்.
   "Wise minds think alike" என்ற கூற்றோடு , சிகரமான உங்களோடு சிறியவனாக என் சிந்தையை சேர்த்து பொருத்திப்பார்க்கும் தகுதி எனக்கில்லை என்றாலும் மனம் ஏனோ மறுபரிசீலனை செய்ய தயங்குகிறது.

   நன்றி... நன்றி.... நன்றி ஐயா

   கோ

   நீக்கு