பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

தூங்கா இதயத்தில் நீங்கா நினைவுகள்!!

  வாழ்க   எல்லா வளத்துடன் !!

நண்பர்களே,

சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றை காண நேர்ந்தது.

அதில் கவிஞர் கண்ணதாசனின் நினைவை போற்றும்வண்ணம் பல பிரபலங்கள் தங்கள் நினைவு பதிவுகளையும் தங்களது புகழாரத்தையும் பகிர்ந்துகொண்டது கேட்க மன நிறைவாக இருந்தது.

ஒவ்வொருவராக தங்களுக்கு மிகவும் பிடித்த, கவிஞரின் திரை இசை பாடல்களை குறிப்பிட்டு சொல்லுகின்ற வரிசையில்:

நம் எதிர்கால கனவுகள் குறித்து  நாம் பேசிய பேச்சுக்கள், காதலர்களாக இருந்த நாம் கணவன் மனைவியாக மாறப்போகும் அந்த உன்னத பரிணாமத்தின் பரிசுத்தமான துவக்க நாள் குறித்தும்,  தொடர்ந்து இல்லற வாழ்வில் இணைந்து சுகிக்கும் இனிய காலங்கள் குறித்த இன்ப கனவுகளோடும்,  இந்த உலகத்தில் நம்மை எந்த சக்தியாலும் பிரிக்க கூடாது பிரிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் நம் இதயங்கள் பிறழாமல் இருக்கும் என்ற நம்பிக்கையிலும்  உனக்காக நான் பல காலங்கள் காத்திருந்தேன்.

என் இளமையின் ஒவ்வொரு துகள்களும் உனக்கெனவே - உனக்கு மட்டுமே என  சேர்த்து வைத்திருந்தேன் , உன்னோடு இணைந்து என்னென்னவெல்லாம் எப்படி எல்லாம் என் வாழ் நாளை கழிக்கப்போகிறேன் என்ற எண்ண குவியல்களை இதயத்தில் ரகசியமாக கோர்த்து வைத்திருந்தேன்.

இதோ வருவாய், இதோ வருவாய், என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாழிகையுமாக உன் வருகைக்காக காத்திருந்தேன்.

என்னுடைய காத்திருப்பு வீண்போகவில்லை , இதோ நீயும் வந்துவிட்டாய்.

நீண்ட நாட்கள் பிரிந்திருந்த உன்னை மீண்டும் பார்த்தபோது என் மனதில் தோன்றி பிரவாகம் எடுத்த  இன்ப ஊற்றின் வெள்ளப்பெருக்கு என் உள்ளமெல்லாம் நிறைந்ததை என்னவென்று நானுரைப்பேன்.

தூரத்தில் நீ வருவது தெரிந்து ஓடோடி வந்து உன்னை அணைத்து கொள்ள இருகரம் நீட்டி உன்னை நோக்கி வர, உன்னுடனான என் உறவின் முழுமையை வாழ்நாளெல்லாம் பருகி மகிழும் தணியாத தாகத்துடன் தனியாக இருந்த எனது கண்ணில் பட்டது உன் கழுத்திலிருந்த திருமாங்கல்யமும்  துணையாக உன்  உடனிருந்த ஆடவனின் திரு உருவமும் .
சம்மட்டி கொண்டு அடித்திருந்தாலும் என் இதயம் அதை ஒரு பொருட்டாக கருதி இருக்காது, ஈட்டி கொண்டு குத்தி இருந்தாலும் அதை இலகுவாக பாவித்திருக்கும்.காய்ச்சிய இரும்பெடுத்து என் இதய அறைகளில் வார்த்திருந்தாலும் இன்முகத்துடன் பார்த்திருந்திருக்கும் , ஆனால் ............

என் கனவே, என் மூச்சே, என் வாழ்வின் வெளிச்சமே,என் நிகழ் கால தென்றலே, என் எதிர்கால இனிமையே .... என் இதய செல்களின் எல்லா திசைகளிலும் இரவுபகல் பாராமல் இன்முகம் காட்டிவந்த குளிர் நிலவே.... என்ன ஆனது , உன்னுடனிருக்கும் இந்த ஆணது உறவென்ன ?  , இது எப்படி நடந்தது? , இதில் என்னுடைய பங்கு என்ன? 

என இடிந்த மனதுடனும் நொடிந்த சிந்தையுடனும் நிலைகுலைந்த நாயகனிடம், தான் காதலித்த பெண் சந்தர்ப்ப சூழ் நிலையால் வேறொருவருக்கு மனைவியானது மட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவனை பீடித்திருக்கும் வியாதியை குணப்படுத்தும் பொறுப்பையும் மருத்துவரான தனக்கு கொடுத்து , சொல்லொண்ணா (இக்கட்டான) சூழ்நிலை உருவான  நிலையில் காதலன் பாடுவதாக அமைந்த அந்த பாடலையும் வரிசை படுத்தியது கேட்க சுகமாக இருந்தது.

தான் காதலித்தவள் தனக்கு கிடைக்கவில்லை கிடைக்கபோவதுமில்லை என்ற சூழ் நிலையிலும் அவள் மீது கோபமோ ஆத்திரமோ காழ்ப்புணர்வோ கொள்ளாமல், அவளை எப்படியேனும் பழி வாங்க துடிக்காமல்  அவளை இன்னமும் தூயவளே என்றைப்பதும் அவள் யாருடன் இருந்தாலும் இதய அமைதியடன் சந்தோஷமாக வாழவேண்டும், மஞ்சள் வளத்துடனும் மங்கள குங்குமத்துடனும்  குறையின்றி தன் கணவருடன் சுகமுடன் வாழ வேண்டும் நீங்கள் இருவரும் சேர்ந்து ஏற்றிய குடும்ப தீபம் மங்கிடாமல் நிலைத்துநின்று ஒளி தரவேண்டும்  எனும் வாழ்த்துடன்  அமைந்திருக்கும் அந்த பாடலை நீங்களும்தான் கேளுங்களேன்:



வாழ்க! கவிஞரின் வான் தவழும் புகழ்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 கருத்துகள்: