பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கனவு (கலையாத) நகரம்.

எட்டா(த) வது அதிசயம்!!

நண்பர்களே,

உருட்டிய விழிகளோடு சில பகுதிகளும்,  வசீகரிக்கும் பார்வைகளோடு வேறு சில பிராந்தியங்களும் , கண்ணீரோடு வேதகனைகளோடு வேறு பல பிரதேசங்களும், கந்தக புகைகளையும் அமில நெடிகளையும் மடியில் சுமந்தவண்ணம் வேறு சில நிலப்பரப்புகளுமாக....

ஒரு கதம்ப கலவையாக, திகழும் இந்த பூமிப்பந்தில் ஒரு சிறிய எண்ணிக்கையில் அடங்கி இருக்கும் ஒரு சில பிராந்தியங்கள்  மட்டுமே நம்மை வசீகரித்து  இனிய நினைவுகளை சுவீகரிக்க செய்கின்றன.

பல நேரங்களில், நம் தமிழ் திரைப்படங்களில்   வரும் கனவு  - பாடல் காட்சிகளை வெளி நாடுகளில் சென்று படம் பிடித்து காட்டப்படுவதை பார்த்திருப்போம்.

தமிழ் நாட்டில் ஏதோ ஒரு குக் கிராமத்தில்  வயிற்றுக்கும் வாயிற்குமே போதாதா வருமானத்தில் தந்தை, தாய், தமக்கை போன்றோரை காப்பாற்ற  வேண்டிய கடமை சுமந்த பரம ஏழையாக இருக்கும் கதாநாயகன்,   கால சூழ் நிலையாலும் பருவ மயக்கத்தால் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் ,  தான் விரும்பும்   அந்த பெண்ணுடன் ஒரு இனிய கனவுலகத்தில் சஞ்சரிப்பதாகவும் காட்டப்படும்.

அந்த கனவில் வரும் நாடு இயற்கை அழகு கொஞ்சும் ஒரு மேற்கத்தைய- ஐரோப்பிய, அமெரிக்க, அல்லது கிழக்காசிய, அல்லது வளைகுடா  நாடுகளாகவோ   இருக்கும். 

அது தேவை அற்ற வீண் செலவு என்றும் சம்பந்தமே இல்லாத காட்சியாகவும், படத்திற்கும் கதைக்கும் பொருத்தமோ லாஜிக்கோ இல்லையே   என நினைக்க தோன்றும்.

நானும்  பல படங்களின் கனவு -பாடல் காட்சிகளை பார்த்தபோது   அப்படி நினைத்ததுண்டு.  

பிறகுதான் சூட்சகுமாம் பிடிபட்டது; தன்னால் நிஜத்தில் முடியாதவற்றை கனவு மூலமேனும்  கண்டு அனுபவித்து மகிழும்படியாக அந்த கதா நாயகன் தனது காதலியுடன் அழகு மிளிரும் மேலை நாடுகளுக்கு சென்று வருகிறான் என்றும் அதை பார்க்கும் ரசிகர்களுக்கும் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதாலும் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன என்று.

அவ்வரிசையில், பொருளாதார, குடும்ப , கல்வி தகுதிகளின் அடிப்படியில் யாராயிருப்பினும், திரை படத்திலோ, புகைப்படத்திலோ பார்த்தவுடன் மனத்தில் பரவசம் கொள்ள செய்யும் இடங்களுள் முக்கிய இடம் வகிக்கும் ஓரிடம்  இத்தாலியின் "வெனிஸ்" என்றால் அது மிகை அல்ல.

தமிழ் சினிமாவில் வரும் கதாநாயகனுக்கு மட்டுமல்லாமல், நம்மில் பலருக்கும்கூட பல கனவு நகரங்கள் மனதில் நங்கூரமிட்டு நகராமல் இருக்கும்.

இப்படி கனவில் மட்டுமே பார்த்து பரவசப்படும் ஒருவனுக்கு நிஜத்தில் இது போன்ற இடங்களை சுற்றி பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்?

பலருக்கு எட்டும் தூரத்தில் கனவு நகரமாகவும் சிலருக்கு கனவிலும் எட்டாத தூரத்தில் இருப்பதாக தோன்றும்  இந்த அதிசய பூமியை நேரில் பார்த்தவர்கள் இது உலகின் "எட்டாவது அதிசயம்" என்றும் கூறுவதை கண்டிப்பாக ஏக மனதுடன்  ஆமோத்தித்தே ஆகவேண்டும்.

இதற்கு முன்னால் பல சந்தர்ப்பங்களில் இத்தாலி தேசத்தின் பல நகரங்களை சுற்றிபார்த்திருந்தாலும் இந்த மிதக்கும் - காதல் - கனவு நகரத்திற்கு செல்லும் பயணம்  , விமான , ஓட்டல் அறை  அதற்கான கட்டணங்களும் செலுத்தியிருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இருமுறை தவிர்க்கப்படவேண்டி இருந்தது.

ஆனால் இந்த முறை அந்த கனவு நகரத்தின் மண்ணில் கால் வைத்ததும் தண்ணீரில் பயணித்ததும் என் கனவை நிஜமாக்கிய அந்த நிஜமான பயணத்தின்   சுகமான சாரல்களின் சில துகள்கள்தான் ,வழி வாய்க்காலும்   இதற்கு முந்திய பதிவும்,  இனி வரவிருக்கும் ஓரிரு பதிவுகளும்.


Image result for venice italy

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

2 கருத்துகள்: