பின்பற்றுபவர்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

"எல்லாம் எனக்காக"

(அ )சட்டை  

உலகில் வாழும் மனிதர்களில்தான் எத்தனை வகைகள்?


இன்றளவில் நாம் சந்தித்த மனிதர்களின் தனித்தன்மைகள் குணநலன்களை சிந்தித்து பார்க்கும்போது , மனிதர்களுள் இத்தனை வகைகளா என பிரமிப்பை  ஏற்படுத்தும்.

இப்படி நாம் சந்தித்த மனிதர்களை பற்றி பதிவுகள் எழுத நினைத்தால் நம் வாழ் நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருக்கலாம் என்கின்ற அளவிற்கு பல மாறுபட்ட மனிதர்கள் நம் நினைவில் வந்து நங்கூரமிடுவார்கள்.

அப்படிப்பட்ட பல குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களுள், தமது  கவனத்திற்கு அல்லது பார்வைக்கு வரும் எதுவானாலும் அவை தமக்கென்றே நினைத்துக்கொண்டு, செயல்படும் ஒருவகை மனிதர்களை நினைக்கும்போது கொஞ்சம் வேதனையாக இருக்கின்றது.

சாலையில் நடந்துபோய்க்கொண்டு இருக்கும்போது தமக்கு பின்னால் இருந்து யாரேனும் கைதட்டினால் , நாம் எல்லோரும் திரும்பிபார்ப்பது வழக்கம், அது ஒரு சாதாரண நிகழ்வுதான்.

அதே சமயத்தில், நமக்கு பின்னால் அல்லது நமக்கு அருகில் கூடி இருக்கும் சிலர், தங்களுக்குள் ஏதேனும் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தால் அந்த பேச்சும் சிரிப்பும் தங்களை பற்றித்தான் என நினைத்து கோபப்படும் மனிதர்கள் தான் என் வேதனைக்கு காரணம்.

அதேபோல நமக்கு பிடித்த பாடல்களை நாம் கேட்க நேரும்போது அதை கேட்கும் வேறு சிலர், அந்த  பாடலை வெண்டுமென்றே அவர்கள்  கேட்கும்படி நாம் சத்தமாக வைத்திருப்பதாகவும் அதில் சொல்லப்படும் விஷயங்கள் கருத்துக்கள் வார்த்தைகள் தம்மை குத்திக்காட்டவே என்பது போலவும் நினைத்துக்கொண்டு பாட்டு கேட்கும் அப்பாவி மனிதர்கள் மீது கோபப்படும் ஆட்களையும் நாம் பார்த்திருப்போம்.

பள்ளியில் படிக்கும்போது, பேச்சுப்போட்டிக்கான தகுதி சுற்றில் "அழுக்குப்படியாத மேலாடை உடுத்திக்கொள்வது  பெரிதல்ல அழுக்காகாத உள்ளத்தை உடையவர்களாக இருப்பதுதான் சாலசிறந்தது" என பேசி முடித்த சில  நாட்கள் கழித்து என் வீட்டு முகவரிக்கு ஒரு கடிதம் வருகிறது.

அதில், நீ வேண்டுமென்றே என்னை குறை சொல்லி என்னை குத்திக்காட்டவே அப்படி பேசினாய் உன்னை என்ன செய்கிறேன் பார் என எழுதி, எழுதியவரின் பெயரான ஜி.குணசேகர்  என்றும் குறிப்பிட்டிருந்தது.

கடிதம் வாசித்த என் அம்மாவும் அப்பாவும் என்ன இது யார் இது ஏன் இந்த கடிதம் என என்னிடம் கேட்க, ஒன்றும் புரியாத நான் என்ன சொல்வதென்று திகைத்து போனேன்.

சில நிமிடங்களுக்குப்பின்  , கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பேச்சு போட்டியின் தகுதி சுற்றில் பங்குகொண்ட விஷயத்தை நினைவு கூர்ந்து , அதில் நாம் என்ன பேசினோம் என நிதானித்தேன்.

அப்படியும் நாம் யாரையும் குறைசொல்லி பேசவில்லையே என எனக்கு நானே சமாதானம் சொல்ல முயன்றும் மனம் சமாதானம் ஆகவில்லை.


அடுத்த நாள் பள்ளிக்கு சென்று யார் அந்த ஜி.குணசேகர் என ஆராய்ந்ததில் நண்பர்கள் சொன்னார்கள்  ஒன்பதாம் வகுப்பு "பி" பிரிவில் புதிதாக சேர்ந்திருந்த மாணவர் அவரென்று.

இடைவேளை நேரத்தில் அவரை சந்தித்து அந்த கடிதத்தை  அவரிடம்  காண்பித்து கேட்டேன், அதை அவர்தான் எழுதினாரா என்று.

அவரும் ஆம்   என சொல்ல , எதற்காக  அப்படி எழுதினாய் என் தவறு என்ன இருக்கின்றது? அப்படி  நான் என்ன பேசிவிட்டேன்  , என் வீட்டு விலாசம் உனக்கு எப்படித்தெரியும்? போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் என்னை முறைத்து பார்த்துக்கொண்டே, அந்த இடம் விட்டு நகர பார்த்தார்.

நானும் விடா பிடியாக அவரை பின் தொடர்ந்து சென்று, நீ எனக்கு பதில் சொல்ல வில்லை என்றால் இந்த கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் காட்டப்போவதாக சொன்னேன்.

அப்போதுதான் அவர் சொன்னார், நீ என்னுடைய மனசு சுத்தமில்லை என்று பேசினாய் அதனால்தான் இப்படி எழுதினேன்.

நான் எப்போது அப்படி பேசினேன், உன்னை பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே, இன்றுதான் உன்னை பார்க்கிறேன் இன்றுதான் உன்னுடைய பெயரே எனக்கு தெரியும் அப்படி இருக்க நான் எப்படி உன் மனசு சுத்தமில்லை என்று சொல்லமுடியும்?

அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அந்த இடம் விட்டு தன் வகுப்பிற்கு சென்றுவிட்டார்.

அதை தொடர்ந்து நானும் என் வகுப்பிற்கு சென்றேன், எனினும் பாடங்களில் மனது பதியவில்லை.

மத்திய உணவு இடைவேளையின்போது எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அதே பள்ளியில் குணசேகர் படிக்கும் வகுப்பை சார்ந்த இரண்டு மாணவர்கள் என்னிடம் வந்து இடைவேளை நேரத்தில் நடந்தது என்ன என கேட்டனர். நானும் நடந்த எல்லா அவற்றையும் சொல்லி இன்னமும் எனக்கு ஒன்றும் புரியவில்லை என சொன்னேன்.

அதற்கு அவர்கள், அந்த மாணவன் இந்த ஆண்டுதான் நம் பள்ளியில் சேர்ந்ததாகவும் எப்போதும் தன்னுடைய ஆடை , தனது புத்தக பை, தனது காலனி, தனது உணவு , தனது மிதிவண்டி போன்றவற்றை குறித்து பெருமையாக பேசுவார் என்றும் ஒருமுறை சக வகுப்பு மாணவனின் சட்டை கொஞ்சம் அழுக்காக இருந்தபோது அதனை இந்த மாணவன் கேலியாக பேசியபோது அவருக்கும் அழுக்கு சட்டை மாணவனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பிறகு வகுப்பாசிரியர் அதனை தீர்த்து வைக்கும்போது ஆடை எப்படி இருக்கின்றது என்பதைவிட நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் முக்கியம் என சொன்னதாகவும், அதை தொடர்ந்து யார் என்ன பேசினாலும் அது அவரை குறித்துதான் என நினைத்து அவ்வப்போது சண்டைக்கு வருவார் என்றும் சொன்னார்கள்.

சட்டைக்ககாக சண்டைபோட்ட மாணவின் கடிதத்தை  நான் அதன் பிறகு சட்டை செய்யவே இல்லை.

அட இப்படியும் இருப்பார்களா  என  7 ஆம் வகுப்பு மாணவனாக  அப்போது  நினைத்ததுபோல் , இப்போதும் நினைக்கும்படி பலர் இருப்பது வேதனை. 

என்னை விட அதிகம் படித்தவர், வயதில் மூத்தவர், இருந்தும் அவரது செயலும் மனப்பான்மையும், மன பக்குவமும்  ஏற்புடையதாக இல்லாமல் போனதுபோல் இப்போதும் நம்மில் எத்தனைபேர் இப்படி.

இனியேனும் யார் எதை சொன்னாலும்  அது பொதுவான ஒன்றாக கருதாமல் தமக்குத்தான் என நினைத்து வருந்துவதும் , சொன்னவர் மீது காழ்ப்புணர்வை வளர்த்துக்கொள்வதும் ஏற்புடையதாகாது.

அதே சமயத்தில் சொல்லப்படும் விஷயம் நல்ல விஷயங்களாக இருக்கும் பட்ச்சத்தில் அவை நமக்காகவும்தான் சொல்லப்பட்டவை  என்று நினைத்து நேர்மறையாக செயல்படுவதும் அவசியம்.

அவ்வாறல்லாமல்      யார் என்ன சொன்னாலும்  அவை நமக்குத்தான் என நினைத்து சொன்னவர்களை விரோதிகளாக பாவிக்கும் இதுபோன்ற மனிதர்களிடமிருந்து வரும் விமர்சனங்களை சட்டை செய்யாமல் - கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும்   அவசியம்.

எனினும்   உள் அர்த்தம் ஏதுமின்றி கபடற்ற பேச்சும்  செயலும் மேற்கொள்ளும் அப்பாவி மக்கள்   கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வதும் அவசியம். 

பின் குறிப்பு:
பேச்சுப்போட்டி தகுதி சுற்றில் தேர்வாகியும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகிக்கொண்டேன்.  பேச்சுப்போட்டியின் இறுதிநாள் அன்று நானும் குணசேகரும் அருகருகில் அமர்ந்து பேச்சுப்போட்டியை கண்டு ரசித்தோம் நண்பர்களாய்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:



  1. , நீங்கள் வேண்டுமென்றே என்னை குறை சொல்லி என்னை குத்திக்காட்டவே இப்படிபட்ட பதிவை எழுதி இருக்கிறீர்கள் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என் மனைவியிடம் சொல்லி பூரிக்கட்டை பூஜையை செய்ய சொல்லுகிறேன் ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உங்களின் பரந்த மனப்பான்மை புரிகிறது.

      பூரி வேண்டுமானால் ரெண்டு பார்சல் அனுப்புங்கள் , மற்றதெல்லாம் உங்களுக்கே.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. வித்தியாசமான நிகழ்வு
    சொல்லிப்போனவிதம் அருமை
    பின்னுரை மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  3. ஐயாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் .

    கோ

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்லுவது போன்ற நபர்கள் பலரும் இருக்கின்றார்கள்தான். இவர்களில் ஒரு சிலருக்கு இது ஒரு பெர்சனாலிட்டி டிஸார்டரில் கூட கொண்டு விடும் வாய்ப்பு உள்ளது..அதுவும் இந்த பருவ வயதில்தான் தொடங்கும். இதுவும் ஒரு மன நோய்தான் நமது எண்ணங்கள் எதிர்மறைகளாகி மனதில் ஆழமாகப் பதியும் போது அதன் விளைவு பலமடங்காக இருக்கும்....அதனால்தான் பருவ வயதில் பெற்றோர் குழந்தைகளுடன் நிறைய நல்ல எண்ணங்கள் வளர்த்துப் பேசி நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு