கோண்டோலா கொண்டாட்டம்!
நண்பர்களே,
நூற்றி பதினேழு தீவுகள் அவற்றை ஒன்றோடொன்று இணைத்து கரம் சேர்க்க மொத்தம் சுமார் 400 பாலங்கள்.
பாலங்கள் வழியாக நடந்து சென்று எல்ல இடங்களையும் பார்க்க முடியும் என்றாலும் , காசிக்கு சென்று கங்கையில் குளிக்காமல் வருவதுபோல்தான் வெனிசுக்கு சென்று படகில் பயணிக்காமல் இருப்பது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்(??!!) என்று முழங்க கேட்டிருப்போம் அதுபோல வெனிஸில் எங்கும் படகு எதிலும் படகு எதற்கும் படகு தான்.
மருந்துக்குக்கூட வேறு வாகனங்கள் இல்லை என்றும் "மருந்துக்குக்கூட" படகுகள்தான் என்றும் நாம் அறிந்திருக்கின்றோம்.
அப்படி இருக்க அங்கு பலவிதமான படகுகள் தேவைக்கேற்ப வசதிக்கேற்ப பயன்படுத்தப்படுகின்றன.
பல்லவன் போக்குவரத்துபோல பொது மக்கள் பயணிக்க - தண்ணீர் பேருந்து(வாட்டர் போட்) இடிபாடுகள் உரசல்கள் இன்றி பயணிக்க , தண்ணீர் டாக்சிகள் (வாட்டர் டாக்ஸி), பாரம்பரிய படகுகள், பாய் மர படகுகள், சிறுண்டியுடன் கூடிய படகுகள், இரவு உணவுடன் கூடிய படகுகள், படகு வீடுகள்,வெப்பரோட்டா, அஞ்சல் படகுகள் , கடைத்தெரு - வணிக படகுகள் , மீன்பிடி படகுகள் ,ஒரு ஆள் தனி படகுகள்என்று பலவகையான படகுகள் இருக்கின்றன.
இவை அனைத்தும் ஒவ்வொரு விதமான வடிவில் அமைந்திருக்கின்றன, ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருகின்றன.
இத்தனை விதமான படகுகள் இருந்தாலும் கண்டிப்பாக ஒருமுறையேனும் பயணித்தே ஆகவேண்டும் என்று உள்ளத்தில் சொல்லொண்ணா ஆவலை தூண்டும் ஒருவகை படகும் உள்ளன அவைதான் கோண்டோலா படகுகள்.
அதிகபட்சசம் படகோட்டியையும் சேர்த்து 7 பேர்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய நீளமான, கலை நயமிக்க அழகிய படகுகள்தான் இந்த கோண்டோலா படகுகள்.
துடுப்புக்கொண்டு இயக்கப்படும் இந்த படகுகளில் பெரும்பாலும் காதல் ஜோடிகள், அல்லது தம்பதியர் அல்லது நண்பர்கள் மட்டுமே தனியாக பயணிக்க பெரிதும் விரும்புகின்றனர், குடும்பமாக பயணிப்பவர்களுக்கும் கொண்டாட்டம் தர தவறுவதில்லை இந்த படகுகள்.
சுமார் 45 நியமிடங்கள் பயணிக்கும் இந்த படகிற்கு கட்டணம் நம்ம ஊர் கணக்குப்படி 8,000 ரூபாய். (80 ஈரோ)
ஒரு நாள் ஒரு அழகிய மாலை பொழுதில் (அதென்ன ஒரு அழகிய மாலைப்பொழுது, மாலைப்பொழுது என்று சொன்னாலே போதும் எங்கேதான் எல்லா மாலைபொழுதுகளும் அழகாத்தானே இருக்கும்) நீரில் மிதந்தும் தவழ்ந்துகொண்டிருந்த எண்ணற்ற விதவிதமான படகுகளை பார்த்தவண்ணம் கரையில் , இந்த கோண்டோலா படுகுத்துறையில் நின்றிருந்தேன்.
(பார்க்க சுமாராக - அதாங்க டீசண்டாக ) தனியாக(??!!) இருந்த என்னிடம் இரண்டு அழகிய இளம்பெண்கள் வந்து, "நாங்கள் இருவரும் இந்த கோண்டோலா படகில் பயணிக்க விரும்புகின்றோம் அதே சமயத்தில் கட்டணம் அதிகமாக இருக்கின்றது, ஒருவேளை நீங்களும் எங்களுடன் வந்தால் மொத்த கட்டணத்தை நாம் மூன்றுபேரும் பகிர்ந்து செலுத்தலாம், வருகிறீர்களா? என கேட்டனர்.
தனியாக இருந்த என்னிடம் அந்த அந்தி சூழும் மயக்கும் மாலை நேரத்தில் இப்படி இந்த இரண்டு இளம் பெண்கள் வந்து கேட்டதும் மறுக்க முடியாமல், குறைந்த கட்டணத்தில் 45 நிமிடங்கள் அழகிய அந்த நீள பாடகில் இரண்டு அழகிய பெண்கள் அருகருகே அமர்ந்த வண்ணம் அந்த அழகிய நீல வண்ண கடலில் பயணிக்க மனம் விரும்பி நான் அவர்களோடு அந்த இனிய பயணத்தில் இணை சேர்ந்தேன் என்றுதானே நினைக்கின்றீர்கள்?
உங்களின் கணக்கும்,கணிப்பும் எதிர்பார்ப்பும் சரிதான்,ஆனால் நடந்தது அதுவல்ல.
எனக்கு மாட்டு வண்டி என்றல் கூட இரட்டை மாட்டுவண்டியில் பயணிக்க பிடிக்காது நிறைய பேர்களுடன், அப்படி இருக்க அவர்கள் இருவரோடு இணைந்து அதுவும் கோண்டோலா படகில் பயணிக்க நான் விரும்பவில்லை.
எனவே நான் அவர்களிடம் "மன்னிக்கவும்கட்டணம் கூடுதல்தான் என்றாலும் நான் இந்த சிறப்பு படகில் சிங்கிளாகவே பயணிக்க விரும்புகிறேன், நீங்கள் வேண்டுமானால் வேறு யாரிடமாவது விசாரித்து பாருங்கள்" என பக்குவமாக சொல்லிவிட்டேன்.
பாவம் அந்த இரண்டு பெண்கள் "ஆழம் தெரியாமல் காலைவிட்டுவிட்டனரோ" என நினைத்துக்கொண்டு எனக்கான பிரத்தியேகமான கோண்டோலாவை அமர்த்தி 45 நிமிடங்கள் அந்த தண்ணீர் தேசத்தின் பல குறுக்கு நெடுக்கு வளைவு பாதைகளில் பயணித்து மகிழ்ந்தேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குகோ
தனித்த பயணம் மிகவும் சுகமோ? ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா..
நீக்குகோ
ஆஹா! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்..
நீக்குகோ
வெனிஸ் அழகான ஊர். படகுகள் பற்றியும் வாசித்து அறிந்திருந்தாலும் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்....இப்போதைக்குத் தங்கள் பதிவின் மூலம் சுற்றி வந்தாச்சு....மிக்க நன்றி...
பதிலளிநீக்குகீதா
வருகைக்கு மிக்க நன்றிகள், உங்களுக்கு வெனிஸ் கைக்கெட்டும் தூரம்தான், ஒருமுறை நேரில் சென்று வாருங்களேன்.
நீக்குகோ