பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

தண்ணீர் நேசம்.


எல்லோரும் ரஜினிபோல்...

மிதி வண்டிகள் இல்லை, ரிக்கஷாக்கள் இல்லை,   இரு சக்கர மோட்டார் வண்டிகள் இல்லை, கார்கள் இல்லை, பஸ்கள் இல்லை, லாரிகள் இல்லை , ரயில்கள் இல்லை, குதிரை வண்டிகள் இல்லை, மாட்டு வண்டிகள் இல்லை அட ஒரு ஆட்டோ கூட இல்லைங்க.

சொல்லப்போனால் இத்தனையில் ஒன்றுக்குக்கூட போதுமான நீள அகலத்துடன் கூடிய சாலைகள் இல்லை ஆனாலும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

விமானம் மூலம் சென்று தரை இறங்கியபின் அடுத்து கால் வைக்கும் பகுதி கால்வாய்தான்.

எங்கும் தண்ணீர்... தண்ணீர் ...தண்ணீர்.

மொத்த நிலப்பரப்பை  117 சிறிய சிறிய தீவுகளாக பிரிக்கும் பல கால்வாய்களை கொண்ட இந்த பகுதிகளை இணைப்பது அங்கங்கே கட்டப்பட்டிருக்கும் சிறிய சிறிய பாலங்கள்தான்.

உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் அனைத்தும் தடையின்றி கிடைக்கக்கூடிய அந்த பகுதிக்கு , இவை அத்தனையும் கொண்டு சேர்க்கப்படுவது நீர்வழியாகத்தான்.

துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த  எந்த வாகனமும் அங்கே இல்லாதது ஒரு குறையே இல்லை என்றாலும் ஒரு வாதத்திற்காக அவைகள் இல்லாததை ஒரு குறையாக கருதினால், அந்த குறைகளை  குறைவில்லாமல் நிவர்த்தி செய்பவை சிறிய வடிவிலான படகுகள் மட்டுமே.

ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லவேண்டுமாயின் ஒன்று கால்வழியாக செல்லவேண்டும் அல்லது படகுகள்மூலம் கால்வாய்கள் வழியாக செல்லவேண்டும்.

ஆம்புலன்ஸ், தீ அணைப்பு , காவல்துறை போன்ற அனைத்திற்கும் படகுகள்தான்.

உறவினர்கள் நண்பர்கள் வீட்டிற்கோ, கடைகளுக்கோ, சினிமா, நாடகங்கள், கோவில் குளங்களுக்கு(??!!), பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலை கழகம்,அலுவலகம் எங்கு  போவதாயினும் படகுகள் மூலம் செல்வதாயின், படகுகளில் இருந்து கால் எடுத்து வைக்கப்படும் இடம் நாம் செல்ல வேண்டிய கட்டிடத்தின் படிக்கட்டுகள் தான்.

சில இடங்களில் கட்டிடங்களின் படிக்கட்டுகளில் பல நீரில் மூழ்கியேதான் இருக்கும், இந்நிலையில் எப்படியும் நீரில் கால் நனைந்துதான் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும், சில நேரங்களில் கட்டிடங்களுக்கு உள்ளேயும் நீர் புகுந்து விளையாடுவதும் உண்டு.

ஏறக்குறைய எல்லா கட்டிடங்களின் பின் வழி அல்லது முன் வழிகள் ஒரு நீரோடையை தழுவியே அமைந்திருக்கும்.

அங்கே  இருந்த நாட்களில் தங்கி இருந்த ஓட்டலின் முகப்பு அல்லது பின் வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து கால்களை தண்ணீரில் நனைத்தபடியம் அந்த வழியாக வரும் படுகுகளுக்கு வழி விட  தங்கள் கால்களை   மேலே இழுத்தபடி அமர்ந்து இயற்கையின் விநோதங்களை ரசித்துக்கொண்டிருந்த  சக மனிதர்களை சாதாரணமாக பார்க்க முடிந்தது. 

இப்படி கரியமில வாயுக்களை கக்கி மனித சுகாதாரத்தையும் சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்தாமல், உலகை வெப்பமயமாக்கும் எந்த விபரீதமான செயல்களுக்கும் இடம்  கொடுக்காமல், எங்கு பயணித்தாலும் கால் நடையாகவோ  அல்லது படகுகள் மூலமோ மட்டுமே செல்லக்கூடிய அந்த அபூர்வ தண்ணீர் தேசத்தில் வாழும் அத்தனை மனிதர்களும் அந்த தண்ணீரின் மேல் வைத்திருக்கும் அவர்களின் "தண்ணீர்   நேசம்" அளப்பரியது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் வட கிழக்கு மாகாணமான வெனெடோ வின் தலை நகரமாக சுமார் 3 லட்சம் மக்கள் தொகையினை கொண்ட  பட்டணமாக "வெனிஸ்"  விளங்கினாலும், அதன் வினோத தனித்தன்மை கருதி   அதை ஒரு தனி உலகம் என்று சொன்னாலும் மறுப்பதற்கில்லை.

அங்கே எல்லோரும் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் பாணியில் சொல்லாமல் சொல்லும் ஒரு சொற்றொடர் .  " என் வழி த(ண்)ணீ  ....... வழி." 

Image result for good views of venice

இந்த நகரத்திற்கு, மிதக்கும் நகரம், காதல் நகரம் போன்ற பல பெயர்கள் உள்ளன. 

அப்படிப்பட்ட அந்த நகரத்தில் காதலில் மிதக்கும் சில(ர்) செய்திகளோடும் மேலும் பல தகவல்களோடும்   பிறகு சந்திக்கின்றேன்.

 நன்றி.

மீண்டும்  ச(சி)ந்திப்போம்

கோ


10 கருத்துகள்:

 1. இன்னும் நிறையத் தெரிந்து
  கொள்ளும் ஆவலுடன் தொடர்கிறோம்
  பயணம் சிறக்கவும்
  பதிவுகள் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   கோ

   நீக்கு
 2. நன்றி !. நல்ல எழுத்து நடை !
  வெனிஸ் என் கனவு நகரம் . இதுவரை சென்றதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   கனவு நிஜமாகும்! காத்திருங்கள்!! செயல் திட்டத்துடன்..

   கோ

   நீக்கு
 3. அது என்ன சொற்றோடர்? சொற்றொடர்தானே சரி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா,

   திறுத்திவிட்டேன். திருந்திவிட்டேன், சொற்பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு