பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

லில்லிபுட்(டு) !!!

(வி)சித்திர படைப்பு !! 


நண்பர்களே,

அயர்லாந்தை சார்ந்த பாதிரியார் ஜோனத்தன் ஸ்விப்ட்  எனும் நாவல் ஆசிரியரால் 1726 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "கல்லிவரின் பிரயாணம்" (Gulliver's Travels) 
எனும் நாவலின் முதல் பாகத்தில் உருவாக்கப்பட்ட கற்பனை தீவுகளான லில்லி புட் மற்றும் ப்லேபுஸ்கு  (Lilliput and Blefuscu) பகுதிகளில் வாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்ட விசித்திர குள்ளர்களை  "லில்லி புட்டன்கள்"(Lilliputian) எனும் பெயரில் அந்த நாவல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

(இந்த புத்தகம் நர்சரி பள்ளி குழந்தைகள் முதல் பாராளுமன்ற அங்கத்தினர்கள் வரை விரும்பி வாசிக்கப்பட்ட பிரபலமான ஒரு முழு நீள நாவல்)

Gullivers travels.jpg

இவர்கள் உருவத்தில் மிக மிக குள்ளமானவர்களாக காணபடுவதாகவும் விசித்திர குணாதியசங்களை கொண்டவர்களாகவும் சித்தரிக்கபடுகின்றனர்.

நம்ம ஊரில் கூட உயரத்தில் சிறியவர்களை கேலியாக " லில்லி புட்டன்" அல்லது "லில்லி புட்" என்று பள்ளி நாட்களில் அழைத்த வார்த்தைகளை கேட்டிருப்போம்.

அப்படித்தான் பள்ளிக்கூட நாட்களில் லில்லி புட் என்று  அழைக்கப்பட்ட ஒரு சில மாணவர்கள், ஆசிரியர்களிடம் புகார் கொடுக்க , கேலி செய்த மாணவர்களை அழைத்து கண்டித்து அப்படி அழைக்ககூடாது, என்று அறிவுறுத்தியதோடு, அடுத்த நாள் நல்லொழுக்க பாட வகுப்பில் லில்லி புட் என்பதன் பின்னணியை அழகிய சிறு கதைபோல ஆசிரியர் விளக்கினார்.

அப்போதுதான் எங்களுக்கு தெரிந்தது, இவர்கள் "இன்க் பாட்டில்" அளவிலான அதாவது  ஆறு இன்ச்   உயரமே கொண்டவர்கள் என்று.

Image result for lilliputian

அந்த நாள் துவங்கி, இந்த விசித்திர குள்ள மனிதர்களை குறித்து வியந்தும் ஆச்சரியமும் கொண்டவனாக இவர்களை பற்றி அறியும் ஆவல் எனக்குக் அதிகமானது.

அந்த நாட்களில் ஊருக்குள் முகாமிடும் சர்க்கஸ் நிறுவனங்களின் விளம்பரங்களில் சிரிப்பூட்டும் சித்திர குள்ளர்கள் இருப்பதாக அறிந்து அவர்களை காண ஆவலோடு சென்று நான் எதிர்பார்த்த ஆறு இன்ச் உயர மனிதர்களை காணாமல்  ஏமாற்றத்தோடு வீடு திரும்பி இருக்கின்றேன்.

மேலும் என் அப்பாவிடமும் என் பெரிய அக்காவிடமும் இவர்களை பற்றி அடிக்கடி கேட்டிருக்கின்றேன், என் அக்கா பல நாவல்களை படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் அவரும் அவ்வப்போது எனக்கு இது போன்ற கதைகளை சொல்வதுண்டு.

மேலும் எனக்கு சொல்லப்பட்ட கதைகளை என்னுடைய கற்பனையையும் சேர்த்து (அப்போதே!!!) சக மாணவர்களிடம் சொல்லி மகிழ்வதுண்டு.

எனினும் எனக்குள் ஒரு சந்தேகம், அதெப்படி ஒரு மனிதன் இத்தனை சிறியவராக இருக்கமுடியும், அவர்கள் என்ன சாப்பிடுவார்கள், என்ன உடுத்துவார்கள் , எப்படி தூங்குவார்கள்?  இந்த சந்தேகங்களை தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டிருக்கின்றேன் , அவர்களும் ஆளாளுக்கு ஒரு விஷயம் சொல்லுவார்கள்.

நானும்,  அவர்கள் என் கண்ணுக்கும் கையிக்கும் அகப்பட்டால் அவர்களில் ஒருவரையாவது என் பள்ளிகூட பையில் வைத்து அல்லது என் மத்திய உணவு டிபன்  பாக்ஸில் அடைத்து கொண்டுவந்து என் நண்பர்களிடம் காட்டலாமே என்றும் நினைத்ததுண்டு.

சில நாட்கள் போனது, என்னுடைய இந்த லில்லி புட் குறித்த ஆவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த சமயத்தில் , ஒரு நாள் மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்த என்னிடம், "மேசைமீது உள்ள டிபன் பாக்ஸில் லில்லி புட்டை  மூடி வைத்திருக்கின்றேன், போயிட்டு கைகால் முகம்கழுவிவிட்டு......."

அம்மா சொல்லி முடிக்குமுன், என்னது லில்லி புட்டா.... டிபன் பாக்ஸிலா.... என மனதிற்குள் ஏக மகிழ்ச்சியுடனும் ,ஆச்சரியத்துடனும் , கொஞ்சம் பதட்டத்துடனும் , கைக்கால் முகம் கூட கழுவாமல் நேராக மேசை  மீது வைத்திருந்த டிபன்பாக்சை நெருங்கிவிட்டேன்.

கைகளால்  நடுக்கத்துடன் மூடி போடபட்டிருந்த அந்த அரை அடி உயர டிபன் பாக்சை தொட்டு பார்கிறேன், உள்ளே யாரோ நடமாடுவதாக உணர்கிறேன், இப்போது நெஞ்சும் திக் திக் என அடித்து கொள்கிறது.

முதன் முதலில் லில்லி புட்டை பார்க்கபோகிறோம் , நம்மிடம் எப்படி அது நடந்துகொள்ளும், நாம் எப்படி அதனிடம் நடந்து கொள்ள வேண்டும் , நம்மை ஏதேனும் செய்து விடுமோ  என்றல்லாம் மனதில் பல கேள்விகள்.

ஆவல் அதிகரிக்க அதே சமயத்தில் கொஞ்சம் அச்சமும் என்னை ஆட்கொள்ள, நேராக அம்மாவிடம் போய்  "அம்மா நீங்க வந்து அந்த டிபன் பாக்சை திறந்து கொடுங்க எனக்கு பயமாக இருக்கின்றது" என்றேன்,

"டிபன் பாக்சை திறக்க என்ன பயம், அதிலும் டிபன் பாக்சை தட்டு போட்டுதானே மூடி வைத்திருக்கின்றேன் அதை திறக்க என்ன சிரமம், அம்மா  மொட்டை மாடியில இருக்கிற துணிகளை எடுத்து மடிக்கணும் ....நீயே போய் திறந்து......... அதுக்கு முன்னால யூனி பாரத்தை கழற்றி விட்டு கைகால் முகம் கழுவிட்டு ......."

சரி என்னவானாலும் பரவாயில்லை என்று எண்ணி  நேராக மேசைக்கு அருகில் வந்து பதற்றத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக டிபன் பாக்சின் மேலிருந்த மூடியை நகர்த்தி நகர்த்தி இப்போது முழுமையாக திறந்துவிட்டேன்.

உள்ளே எந்த சலனமும் இல்லாமல் வெள்ளை நிறத்தில் .........மாவுபோல எதோ இருந்தது.  ஒரு வேளை அந்த மாவுக்கு அடியில் இருக்குமோ?  அந்த டிபன் பாக்ஸில் இருந்ததை அப்படியே அந்த தட்டில் கவிழ்த்தேன், அப்போதும் என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை கண்ணுக்கு தெரியாத அளவிற்கு அத்தனை சிறியவர்களா அவர்கள்?  இருக்காதே, நமக்கு சொல்லிய விதத்தில் அவர்கள் ஆறு இன்ச் உயரமானவர்களன்றோ?

ஒருவேளை யாரும் பார்க்காத சமயத்தில் தப்பித்து போய் வேறு எங்கேனும் ஒளிந்து கொண்டிருப்பாரோ?  மேசையின் அடியிலும் மற்ற இடங்களிலும் தேடிபார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன், அம்மாவிடம் சொல்லலாம் என மொட்டை மாடி நோக்கி செல்ல , மடித்த துணிகளுடன் , அம்மா கீழே வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் , " அம்மா நீங்கள் சொன்ன லில்லி புட்டை காணவில்லை" என்றேன்.  அவர்களும் , அப்படியா கொஞ்சம் நேரம் முன்புவரை இருந்ததே, ஒருவேளை பூனை ஏதேனும் சாப்பிட்டு இருக்குமோ? சரி வா பார்க்கலாம்" என்று என்னோடு மேசை அருகே வந்தவர்கள், " இதெப்படி தட்டில் கொட்டப்பட்டுள்ளது"

" நான் தான் சரியாக தேடிபார்க்க தட்டில் கொட்டினேன்"

என்னத்த தேடிபார்க்க தட்டில் கொட்டினாய்"

"லில்லி புட்டை"

"அதான் இங்கே இருக்குதே" 

" எங்கே"

"இதோ தட்டில்"

அம்மா சொல்ல சொல்ல என் கண்களை நன்றாக தேய்த்து மீண்டும் உற்று பார்கிறேன், எனினும் என் கண்களுக்கு தெரியவில்லை.

அப்போதுதான் என் கணக்கு ஆசிரியர் கரும்பலகையில் எழுதி இருந்த எண்களை என்னிடம் வாசிக்க  சொன்னபோது அவை சரியாக தெரியாததால் தவறாக வாசித்தபோது , நீ எதற்கும் உன் கண்களை மருத்தவரிடம் சென்று சோதித்து பார்க்கவேண்டும் என்று சொன்னது நினைவிற்கு வந்தது.

வகுப்பில் கரும் பலகை தூரமாக இருந்ததால் எண்கள் தெரியவில்லை, ஆனால் இங்கே நான் மிக அருகில்தானே இருக்கிறேன் இது எப்படி எனக்கு தெரியாமல் போனது என யோசித்துகொண்டிருக்கும்போதே, மீண்டும் அம்மாவின் குரல், "அங்கே என்ன பண்றே, சீக்கிரம் சாப்டுட்டு வீட்டு பாடங்களை செய்ய ஆரம்பி".

சரி சாப்பிட்டு விட்டு மீண்டும் வந்து தீவிரமாக உற்று பார்க்கலாம் என்றெண்ணி, "சரிமா, சாப்பிட என்ன இருக்கு? என்றேன்.

"உனக்கு என்ன ஆச்சி இன்று? மேசை மேல தட்டில இருக்கே அதான் சாப்பாடு"

"மேசைமேல என்ன இருக்கு எதோ மாவு மாதிரி அதுவா?"

"ஆமாம் அதான்"

"என்னதுமா இது?"

"அதாம்பா .. .. புட்டு."

"லில்லி புட்டுன்னு சொன்னீங்களே"

"லில்லி புட்டுதான்"

"என்னம்மா சொல்றீங்க?"

"நம்ம சுசீலா ஆண்டியோட பொண்ணு லில்லி அக்கா வீட்ல இன்னைக்கு ஒரு விசேஷம் அவங்க கொடுத்தனுப்பின புட்டுதான் இது அதான் லில்லி புட்டுன்னு சொன்னேன்"

"என்ன  விசேஷம் ஏன் இந்த புட்டு", 

"அதெல்லாம் உனக்கு புரியாது(!!!???) போயிட்டு கொஞ்சம் சர்க்கரை போட்டு சாப்பிடு"

அப்போ நான் நினைத்த லில்லி புட்டு இல்லையா? ஒண்ணுமே புரியலையே.

நண்பர்களே,  

எனக்குதான் புரியல, உங்களுக்காவது புரியுதா?

ஏதோ ரொம்ப நாள் கழித்து  மனசில தோன்றிய "லில்லி புட்டு " பத்தி உங்ககிட்ட "சொல்லி புட்டு" போகணும்னு நினைத்து இந்த பதிவு.

நன்றி !

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

  1. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

    Gulliver's Travels கொஞ்சம் allegory, கொஞ்சம் satire,சேர்த்து எழுதப்பட்ட கதை. சிறுவர்களுக்கான கதை போல தோன்றினாலும் நிஜத்தில் அது சிறுவர்களுக்கு போதனை செய்யும் fable வகை கதை இல்லை. நீங்கள் அந்தக் கதையை எப்படி ரசித்தீர்கள் என்று எழுதியிருப்பீர்கள் போல என்றெண்ணி வந்தால், லில்லி புட்டுக்கு இப்படி ஒரு விளக்கமா?

    நன்றாகவே இருந்தது லில்லி புட்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரிகனின் வருகைக்கும் விவரங்களுக்கும் நன்றி. எதையோ நினைத்து படிக்க ஆரம்பித்து கதை எங்கோ போனதை குறித்து வருந்தினாலும் பதிவை பாராட்டிய உங்களுக்கு நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. சிறுவயதில் நாலடியார் கோ
    ஆறு இன்ச் லில்லி புட்டன்கள் பார்க்க துடித்த கதை
    அருமை அருமை.

    இதைப் படிக்கும்போது தெலுங்கிள் ஒரு படத்தில் பறக்கும் குதிரை படம் முழுவதும் வரும்.
    அதேப்போன்ற ஒரு குதிரை மீது ஏறி பறக்க நானும் ஆசைப் பட்டு
    சிறுவயதி அழுத அந்த பசுமையான நினைவுகள்
    பதிவை வாசிக்கும்போது வந்து[போச்சு சார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கும் பதிவினோடு உங்கள் சின்ன வயசின் ஆசைகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள்.

      உங்களுக்கு புட்டு செய்து கொடுத்திருக்கிறார்களா?

      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரசே,
    சித்திரக் குள்ளர்கள்,, விசித்திரக் குள்ளர்கள் என்று நம் பழய கதைகளில் நிறைய உண்டு. அவர்கள் பற்றிய கதை நாவல் தாங்கள் படித்ததில்லையா??????
    ஒஒ புட்டுக்குத் தான் இவ்வளவு கதையா? சரி சாப்பிட்டிர்களா? இல்லையா லில்லிபுட்,,,
    நல்ல கதை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      வருகைக்கு மிக்க நன்றிகள். ஆமாம் கதை எப்படி இருந்தது என்பதை உங்கள் பின்னூட்டம் பிரதி பலிக்கின்றது.

      கோ

      நீக்கு
  4. ஹஹஹஹ் உங்கள் லில்லிப்புட்டு தலைப்பைப் பார்த்ததுமே இது லில்லிப் புட்டுக் கதைதான் புட்டுப்புட்டு வைத்திருப்பார் கோ லில்லிப்புட்டு கோலிவரைச் சொல்லி என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்தால் அதே அதே...நன்றாக ஏமாந்தீர்களா ஹஹஹஹ்..உங்கள் லில்லிப்புட்டு..லில்லிப் புட்டு என்று.புட்டுக்கிச்சு!!!

    என்னைக் கூட லில்லிப்புட்டு என்றும் நாலடியார் என்றும் சொல்லுவதுண்டு...அதெல்லாம் ஒரு காலம்..இப்போதும் நான் நாலடியார்தான்..ஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      ஆமாங்க உங்ககிட்ட புட்டுக்கிச்சிதான் நம்ம புட்டு.

      நீங்கள் கூடிய சீக்கிரம் எட்டடியாக உயர வாழ்த்துக்கள்.(எதில்)

      கோ

      நீக்கு