பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2016

உர(ட)ல் மறைந்த மாயம்.

அரிசி குத்தும் அக்கா மகளே!!

நண்பர்களே,

மூச்சுக்கு முப்பத்தெட்டு தடவைகள், நம் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், பாரம்பரியம் என்று சில  விஷயங்களை பேசும் நாம் பல விஷயங்களில் பழமையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதை நினைத்து பார்க்க கூட மறந்து போய்விட்டோம்.

தரையில் பாய் போட்டு படுத்தது, கைகளால் உணவை  பிசைந்து சாப்பிட்டது,கம்பு, கேழ்வரகு, திணை , சோளம் பயறு போன்ற தானியங்களை பயிரிட்டது,   கீரை பச்சை  காய்கறிகளை நம் வீட்டு தோட்டங்களிலே வளர்த்து அவற்றை பயன்படுத்தியது, திண்ணைகள் அமைத்து வீடு கட்டியது, மண் பானையில் சமைத்து  உண்டது, இது போன்ற இன்னும் பல பழமையான நல்ல பழக்கங்களையும் முறைமையையும் இப்போது யாரும் நினைத்து பார்க்ககூட விரும்பாதபோது அவற்றை செயல் வடிவில் பின்பற்ற யார் தான் முன் வருவர்.

வசதி, வாய்ப்பு,நேரமின்மை அல்லது நேரம் மிச்சம்,எளிமை, துரிதம், குறைந்த உடல் உழைப்பு, பணம் மிச்சம், தொழில் புரட்சி போன்ற காரணிகளால் மேற்சொன்ன சில பழைமை விடயங்கள் நம்மை விட்டு வெகுதூரம் போய்விட்டன என்று சொல்வதைவிட நாம் அவற்றை விட்டு வெகுதூரம் போய்விட்டோம் என்றுதான் சொல்லவேண்டு.

இந்த காலத்தில் இருக்கும் சிறுவர் சிறுமியரை உரல் , உலக்கை, அம்மி குழவி தெரியுமா என்றால் தெரியாது என்று சொல்வார்கள் , அது சரிதான்.

ஆனால் முப்பது முப்பத்தாறு வயதுள்ளவர்களிடம் கேட்டால் பார்த்திருக்கிறேன் ஆனால்  பயன்படுத்தியது இல்லை, அது எங்கள் வீட்டில் இல்லை என்று சொல்லும்போது இந்த வகை எளிய  வீட்டு  உபயோக உபகரணங்கள் தொலைந்துபோய் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது புரிந்துகொள்ள முடிகிறது.

நம் பெரியவர்கள் எதற்காக உரலில் இட்டு உலக்கை கொண்டு கைகுத்தலாக கிடைத்த தானியங்களை பயன்படுத்தினர் என்பதில் பல சூட்ச்சுமங்கள் இருந்திருக்கின்றன என்பதை , அம்மியையும் குழவியையும், உரலையும் , உலக்கையையையும்  கைவிட்டு  நவீன தொழில் நுட்பத்தில் உருவான மிக்சி, கிரைண்டர்களுக்கு தாவியதால், பலமுள்ள   உடல் அமைப்பையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க முடியாமல் போவதிலிருந்து நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

இப்போது ஆண்பெண் இருவரும் பெரும்பான்மையான இடங்களில் காலை முதல் மாலைவரை உடல் பயிற்சி கூடங்களில் தங்களை வருத்திக்கொண்டு உடற் பயிற்சி செய்து  தேவை இல்லாமல் தம் உடலில் சேர்ந்துவிட்ட கொழுப்பு, உடல் பருமனை குறைக்க அரும் பாடு படுவதை பார்க்க முடிகிறது.

குனிந்து நிமிர்ந்து வேலைகள் செய்து இயற்கையான முறையில் உடலை பேணும் படியாக அமைந்திருந்த நல்ல பழக்கங்களை பறிகொடுத்துவிட்டு இப்போது பல இன்னல்களுக்கு ஆளாவதை தடுக்கும்பொருட்டு வாரம் ஒருமுறையேனும் மிக்ஸி  கிரைண்டர்களுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு அம்மியையும் ,குழவியையும்,  உரலையும் ஆட்டுக்கல்லையும் பயன்படுத்தி உணவு பொருட்களை அரைத்து சமைப்பது முடியாத  காரியமா என்ன? 

உரலின் வடிவமைப்பே  அதன் நன்மையை மௌனமாக சொல்லுதே, புரியலையா?

பின்னர் சமைத்த உணவை,  தரையில் பாய்போட்டு சம்மானம் இட்டு அமர்ந்து கைகளால் பிசைந்து உண்ணவும் வாரத்திற்கு ஒருமுறையேனும் தரையில் பாயோ அல்லது துணி விரிப்பையோ போட்டு அதில் படுத்துறங்கும்  ஒரு பழக்கத்தை ஏற்படுத்திகொள்வதும் நம்மால் முடியாத  காரியமா என்ன?

இப்படி தொடர்ந்து செய்வதால் நிச்சயம் நம் உடலிலும் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் நிகழும் என்பதில் ஐயமில்லை.

பழையன கழிதலும் புதியன புகதலும் தவிர்க்க முடியாதது தான் என்றாலும் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கும் , மகிழ்வான வாழ்க்கைக்கும் தேவையான பழமையை கழிக்காமல் சேர்த்து வைத்து புழங்குவதும் போற்றுவதும் மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

சரிங்க நேரமாகுது இட்டிலிக்கு ஊறவைச்ச  அரிசியும் உளுந்தும் சீக்கிரம் வந்து அரைக்க சொல்லி கண் சிமிட்டுகின்றன.

கிரைண்டர்லதான்   போய் அரைக்கணும்  (இந்த ஊர்ல), அதுக்கப்புறம் நேராக ஜிம்முக்கு போகணும்.

இருப்பவர்கள் உரலையும் அம்மியையும் கழுவி சுத்தம் பண்ணி வைங்க  பயன்படும் பின்னாளில்.

Image result for pictures of stone grinderImage result for pictures of stone grinder

ஏனுங்க புரியுதாங்க? 

வாறேனுங்க. 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

13 கருத்துகள்:

 1. அருமையான பதிவு நண்பரே. அக்காலத்து வாழும் முறை தான் எவ்வளவு அர்த்தமானது. இப்போது பாருங்கள்.

  25 வரை 60 கிலோவிற்கு அல்லாடிய அடியேன் இப்போது சதம் அடித்து விட்டு தொடர்ந்து ஆடிக்கொண்டு இருக்கின்றேன்.

  என்னத்த சொல்வது..?

  பதிலளிநீக்கு
 2. இயந்திரங்களுக்கு விடை கொடுத்து, கைகளால் வேலை செய்தாலே ஆரோக்கியம் மேலிடும். ஆனால், அதை அவமானமாக பலர் நினைக்கிறார்கள். அதேவேளையில் பணம் கொடுத்து ஜிம்முக்கு போவது பெருமையான விஷயமாக கருதுகிறார்கள். பெருமைக்காக இங்கு இழந்த ஆரோக்கியம் அதிகம்.
  அருமையான பதிவு கோ!
  த ம 1

  பதிலளிநீக்கு
 3. மிக மிக அருமையான பதிவு கோ! அர்த்தங்கள் பல பொதிந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நாம் இன்று எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம்? எதைத் தேடி என்று கேளுங்கள்? பெரும்பான்மையோரிடமிருந்து பதில் இருக்காது இல்லை யோசிக்க ஆரம்பிப்பார்கள் இல்லை என்றால் அட போங்கப்பா என்ன கேள்வி அந்தந்த நேரத்தை வாழ்ந்துவிட்டுப் போறத விட்டுட்டு எதைத் தொலைத்தோம்னு யோசிச்சுக்கிட்டு என்று...

  அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம், வெளிநாட்டு வாழ்க்கை என்றாகிப் போய்விட எங்கு தேடுவது உரலிற்கும் அம்மிக்கும். துளசியின் வீட்டில் அம்மியும் உரலும் உண்டு. இப்போதும் அம்மியில ஒரு சில மசாலாக்கள் அரைப்பதுண்டு. தோட்டம், வீடு என்று பெரியதாக இருப்பதாலும் கேரளத்து மக்கள் இன்னும் விறகடுப்பை உபயோகப்படுத்துகின்றனர் படங்களில் பார்ப்பது போல். துளசியின் வீட்டிலும் விறகு அடுப்பில்தான் சமையல். காஸ் பால் காய்ச்சுதல் டீ போடுவதற்குத்தான். இல்லை குக்கரில் சமைத்தலுக்கு அவ்வளவே..இரு சமையலறைகள் உண்டு கேரளா படங்களில் பார்ப்பது போல்..மற்றும் உணவுகள் கேரளத்து உணவுகள் மட்டுமே. அங்கு பிசா கல்சர் துளசி வீட்டில் இல்லை.

  கீதாவின் வீடு அடுக்குமாடிக் குடியிருப்பு சென்னையில். கிராமத்தில் இருந்தவரை நீங்கள் சொல்லியிருப்பவையேதான். இப்போதும் கூட தரையில்தான் படுக்கும் வழக்கம். கீதாவும் மகனும் மட்டும் பிறர் அல்ல. சிறிய அம்மி, சிறிய உரல் உண்டு. அதில்தான் மசாலாக்கள் பொடித்தல். இடித்தல். பானையில் சமைத்தல்...கீரை கடைவது என்றால் பானையில்தான். வற்றல் குழம்பு என்று..அமெரிக்காவில் இருந்த போது கூட தரையில்/கார்ப்பெட்டில் மெலிதான படுக்கை விரித்துதான் படுக்கை. படி ஏறுவதற்கு லிஃப்ட் உபயோகிப்பதில்லை. படிக்களில்தான் இப்போதும் என்று. கீதாவின் வீட்டில் பிசா கல்சர் இருந்தாலும் வீட்டில்தான் செய்வதுண்டு. பெரும்பாலும் உணவுகளை பேக்கிங்க் லிருந்து..வீட்டில்தான்

  வளர்ச்சிகள் வந்தாலும் நம் கையில்தான் இருக்கின்றது நமது வாழ்க்கை முறை ஒரு சிலவற்றைத் தவிர்க்க முடியாதக் காரணங்களினால் தவிர்க்க வேண்டிய நிலைமையைத் தவிர...என்றாலும் யோசிக்க வேண்டிய விசயமே!

  இந்தியா சர்க்கரை வியாதியில் உலக அளவில் முதன்மை இடத்தில் பிடிக்கும் நிலை வெகுதொலைவில் இல்லை...

  பதிவை ரசித்தோம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் விரிவான கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே.

   நீக்கு
 4. அருமையான பதிவு! யோசிக்க வைத்த பதிவு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அரசே

  படத்தில் உள்ளது தான் உரலா

  நான் வேற மாதிரி இல்ல நினைத்தேன். இதை யாரும் இப்ப பயண் படுத்துவது இல்லை. ஒஒஒஒஒஒ நீங்கள் பயன்படுத்துகிறீர்களா.. வாழ்த்துக்கள்
  நல்ல பதிவு
  நன்றி

  பதிலளிநீக்கு
 6. பேராசிரியர் அவர்களுக்கு,

  ஆமாங்க, படத்தில் ullathuthaan உரலும் அம்மியும்- உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா?

  "சுழல்மிக்சினிது கிரைண்டர் இனிது என்பர் - தம்மக்கள்
  உரல் அம்மி பாராதவர்".

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அரசே,

   அரசர் சொன்னா அப்படியே கேட்டுக்கனுமா? தவறா இருந்தாலும்,,,,,,,

   படத்தில் உள்ளது அம்மி சரி, அது உரல் இல்லிங்க ஆட்டுக்கல்------- மாவை ஆட்டும் ஆட்டுக்கல்,

   உரல் படம் முதல் வகுப்பு பாடப் புத்தகத்தில் பாருங்கள்,,,

   ஆனாலும் தங்கள் குறள் அருமை,, வாழ்த்துக்கள்,

   தவறு எனின் மன்னிக்க,,,
   நன்றி.

   நீக்கு
  2. உரல் - உலக்கை, ஆட்டுக்கல், அம்மிக்கல் இதானே

   நன்றிங்க அரசே

   நீக்கு
  3. பேராசிரியருக்கு,

   முதல் வகுப்பு பாடப்புத்தகம் ஒன்று கிடைக்குமா?

   கோ

   நீக்கு