பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 15 ஜனவரி, 2016

விழி மலரும் விழா காலங்கள்

"புன்னகை வந்தனம்"

நண்பர்களே,

தேம்ஸ் கரை தாண்டா  புரண்டோடும் நதி வெள்ளம் ஜதி பாடும் பின்னணி தாளம் கேட்டு பிண்ணப்பட்ட இந்த பதிவினில் கொஞ்சம் பதியுங்கள் உங்கள் பார்வைகளை, பகிருங்கள் உங்கள் உறவுகளோடு  இந்த கோர்வைகளை.

இமயத்தில் மீன் நீந்தும் நற்கொடி அசைந்தாட
இதயத்தில் தேன் சிந்தும் பூங்கொடி இசைபாட
அனைத்துலக தமிழ் நெஞ்சம் அத்தனையும் மகிழ்ந்தாட
தைத்திருநாள் மகிழ் வெள்ளம் உள்ளமெலாம் வழிந்தோட

புது - நெல்மமணியின் முனைகொண்டு
கரும்புச்சார் மை தோய்த்து 
நல்வாழ்த்து நானுரைக்க 
நலம் வேண்டும் வேளையிலே

வண்ணத்து பூச்சிகள் விழியோரம் படபடக்க
எண்ணமதில் சிந்தனைகள் எழிலோடு மினுமினுக்க
கற்பனைகள் சிறகடித்து காற்று வழி சென்றபோது
தற்செயலாய் தட்டு பட்ட தங்க தமிழ் சொற்கள் தமை

முறைபடுத்தி முனை திருத்தி முடிந்தவரை கவிதையாக்கி

எதுகையோடு மோனை தனை ஏற்ற விகிதத்தில் யாம் கலந்து
பொதிகை மலை சாரலோடு  பூங்கொத்தும் அலங்கரித்து
புது பொங்கல் வாழ்த்துரைக்க
 புனைந்து வந்தோம் இப்பாமாலை
 நனைந்திருப்போம் கொஞ்சமிதில் இந்நாளில் இவ்வேளை . 

பைந்தமிழர் பண்பாடும் பாரம்பரிய கொண்டாட்டம்
கை நிறைய பொன்னை தரும் கழனி புகழ் வான் முட்டும்.

கருக்கலில் கலப்பை ஏந்தி வயல் 
காட்டுக்கு செல்பவன் - உணவு
பெருக்கல் வேலை செய்வதற்காய்
கலப்பை முனையால்;
'சேற்றுக்குள் எழுதுகின்றான் -நம்
சோற்றுக்கான பார்முலாவை'.

ஏரோடும் வயல்களில் எழில் பூத்து கதிர் நிறைந்தால் - மகிழ்ச்சி
தேரோடும் இல்லங்களில் - சிலவேளை தேன் ஓடும் உள்ளங்களில்.

வாசலெங்கும் வண்ண கோலங்கள் 
விழி திறக்கும் விழா காலங்கள்
வாசம் வீசும் மலர் மஞ்சள் சந்தானம் 
 வழிந்தோடும் உறவுகளின் புன்னகை வந்தனம்.

புது பானை பொங்கலிட்டு புத்தாடை தனை உடுத்தி
குதூகல குலவிபாடி கொண்டாடும் ஒருநாள்
உழவனின் மேன்மையினை உலகுக்கு உணர்த்திடும்
அழகான திருநாளாய் அமைந்திட்ட பெருநாள்.

ஆதவனை நன்றியோடு ஆர்பரிக்கும் இந்நாள்
மாதனைய பசு மற்ற கால் நடைகளுக்கும் 
மகுடம் சூட்டி மகிழ்விக்கும்  மகத்தான பொன்னாள்

இதற்கிடையில் ஒரு செய்தி இச்சமயம்  சொல்லவேண்டும்:

நீண்ட காலமாக எந்தன் நெஞ்சதனில் நெருஞ்சியாய்
நெருடுகின்ற ஒரு செய்தி அதை நிச்சயம் நான் சொல்லவேண்டும்:

வருண பகவான் கருணை வேண்டி 
வாஞ்சையுடன் வானை பார்த்து
பொருத்தனைகள் பலவும் செய்து
பெருங்காலம் வீணாய் போனதினால்

பொறுமை தனை  இழந்ததோடு
பெண்டுகளின் நகைகள் விற்று
சிறு வட்ட கிணறு வெட்டி அதில் 
கீழ்நோக்கி எட்டி பார்ப்பான்.

சொட்டு சொட்டாய் சொட்டும் நீரை- கவலை
சொட்டுகின்ற நெஞ்சத்தோடு -வாழ்வில்
எட்டவேண்டும் ஏற்றம் என்று 
ஏற்றம் இறைத்து பயிர் வளர்ப்பான்.

பயிர் வளரும் தாமதமாய் -பட்ட
கடன் வளரும் பூகம்பமாய்.
உயிர் கொடுத்து வளர்த்தபயிர்
உதவிடுமா உற்ற காலத்தில்?

என்று இவன் எண்ண அலைகள்
சுனாமியாய் உருவெடுக்க

நஞ்சையும் புஞ்சையும் 
யாமிருக்க பயமேன் என
புன்னகித்து பலம் சேர்க்கும் -அதில்
தன்னை மறந்து தலை சாய்ப்பான்.

மழை வேண்டி இவன் செய்த  
மன்றாட்டு விண்ணப்பங்கள்
கொஞ்சம் பிழையாக பின்தங்கி
பிதாவிடம் சேர்ந்ததுபோலும்.

அறுவடை நேரம் பார்த்து -நல்ல
அடைமழை பெய்ததனால்
அத்தனையும் போனதோடு 
அவனும்தான் பித்தனானான்.

இத்தனைக்கும் காரணம் யார்?
இறைவனா?  இல்லை இல்லை

அங்கிருக்கும் அரசுகளின்
மங்கிப்போன ஆணைகளால்
பொங்கிவரும் ஆற்று கெல்லாம் 
போட்டனரே அணைகள் எங்கும்.

ஆறுகளை இணைக்க - புது
 ஆணைகள் பிறக்கவேண்டும்
சோறுபோடும் தோழர் என்றும் 
சோராது இருக்கவேண்டும்.

நதிகளை இணைக்க - புது
விதிகள் சமைக்கவேண்டும்
விதிகளில்லா பொது  நதிகளாய் 
அமைக்கவேண்டும்.

கடந்த நாட்களின் கருமேகம்
கடக்கட்டும் அதிவேகம்
நடக்கின்ற நிகழ்வுகள் -நமை
நலம் கொண்டு நிரப்பட்டும்.

இவ்வண்ண பெரு விழாவில்
வனப்புடனே மகிழ்ச்சி வெள்ளம்
எண்ணமெலாம் வழிந்தோடி - வாழ்வில்
ஏற்றங்கள் பெருகிடவே
என் இதய வாழ்த்துக்கள்
என் இனிய தமிழருக்கெல்லாம்.

வாழ்க பாரதம்!
 வெல்க தமிழ்!!
உயர்க வேளாண்மை.!!!


(இது எங்கேயோ பார்த்த முகங்கள்  மாதிரி இருக்குதா? பதிவினை பார்க்க,படிக்க, கவி தேனை குடிக்க தவறியவர்களுக்காக மீண்டும் இங்கே .கடந்த ஆண்டு வெளியிட்ட பதிவின் மீள்பதிவுதான்)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

12 கருத்துகள்:

 1. தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே.

  கோ

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  அழகிய வர்ணணையும் கவிதையும் அற்புதம்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அடே .. டே.. என்ன ஒரு பதிப்பு. அருமை.. அருமை.. அருமை.
  தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சுரேஷ்.

   பொங்கல் எல்லாம் சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

   கோ

   நீக்கு
 6. அருமை நண்பர் கோ!! அருமை! தமிழ் விளையாடுகின்றது! பொங்கல் பொங்கியதா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   நன்றி.

   பொங்கினால்தானே பொங்கல்.

   கோ

   நீக்கு
 7. ஆஹா அருமை அருமை அரசே

  ஒரு மாறுதலுக்காக நான் உங்களுக்கு பொற்கிழி தருகிறேன்
  இப்பாடலுக்காய்...
  சில வரிகள் தங்களின் மீள் பதிவாய்.....

  அழகிய வார்த்தைகள் கண்டு தை மகள் மகிழ்ந்திருப்பாள

  பதிலளிநீக்கு
 8. பேராசிரியருக்கு,

  பதிவினை பாராட்டியதோடு தை மகளும் மகிழ்ந்திருப்பாள் என்று சிலாகித்து கூறிய கூற்றில் உங்களின் மகிழ்வும் புலபடுகிறது.

  நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு