பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கோலங்கள் - மாயா ஜாலங்கள்!!

காலம்  செய்த(அலங்)கோலங்கள்!!

நண்(பர்)பிகளே,

நமது இந்திய  கலாச்சாரம் பண்பாடு நாகரீக தொடர்வுகளாக தொன்றுதொட்டு நாம் கடைபிடிக்கும் பல விஷயங்களில், வீட்டை கழுவி, மெழுகி சுத்தம் செய்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலம் போட்டு வீட்டு முகப்பையும் வீட்டு உட்புறங்களையும் அழகு செய்வதும் ஒன்று.


அப்படி வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் நகர் புறங்களில் பலவிதமான நெருக்கடிகளின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்கொண்டு இருந்தாலும், விழா காலங்களில், விசேஷ தினங்களில் எப்படியேனும் இந்த கோலங்களை, இருக்கும் கொஞ்சம் இடங்களிலேனும் போட்டு அழகு பார்ப்பதும் வீட்டிற்கு அழகு சேர்ப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

பெரும்பான்மையான நகர்புற குடி இருப்புகள் இப்போது அடுக்கு மாடிகளாக இருப்பதால், தரை  தளத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வீட்டு வாசலை பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.  அப்படியே வாசல் இருந்தாலும் அவை பெரும்பாலும்  வாகன நிறுத்தும் இடங்களாகவே போய்விடுவதாலும் அங்கே தண்ணீரோ, சானமோ தெளித்து கோலம் இடும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுகிறது.

முன்பெல்லாம் சாணம் மட்டுமே வாசலுக்கு தெளித்து வந்த   நிலைமாறி, தண்ணீர் தெளிக்கும் வழக்கம் பழக்கமாகி இப்போது தண்ணீரின் தட்டுப்பாட்டில் வெறுமனே பெருக்கி சுத்தம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

அப்படி சாணம் தெளித்து வந்த காலங்களில் கோலம் இட அரிசி துகள்களை பயன்படுத்தி வந்த நம் முன்னோர்கள் போல நம்மால் செய்ய முடியாமல் அதற்கும் இப்போது தட்டுபாடு நிலவுவதால், இப்போது அதற்கென விற்கும் கோல மாவுகளை வாங்கி கோலமிடும் வழக்கம் ஆங்காங்கே காண முடிகிறது.

Image result for indian kolam

எனக்கு சின்ன வயதிலிருந்தே கோலங்கள் மீது ஒரு தனி ஆர்வ(கோளாறு)ம், போடத்தெரியாது என்றாலும் போடப்படும் கோலங்களை ரசிக்க பிடிக்கும்.

எங்கள் ஊரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கென நடக்கும் கோலபோட்டியின்போது, தெருவில் உள்ள எல்லா கோலங்களையும் போய் பார்த்து அவற்றுக்கு எனக்குள்ளேயே மதிப்பெண்கள் போட்டு வைத்த நாட்கள் குறித்த நினைவுகள் மீண்டும் என் கண்முன் விரிந்தன சமீபத்தில்.

இங்கே நாங்கள் குடியிருக்கும் பிராந்தியத்தில் மலையாளம் பேசும் சகோதரர்கள் பெரும்பான்மையானோர் வாழ்கின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளேயே தங்களின் குடியிருப்புகளின் எல்லைகளைபொருத்து பல பிரிவுகளாக பிரிந்து ,விழாக்களை கொண்டாடிகொள்வார்கள்.

அவ்வகையில் கடந்த மாதம் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.  அதில் என் குடியிருப்பிற்கு அருகில் உள்ள குழு நடத்திய விழாவிற்கு என்னையும் அழைத்திருந்தனர்.

அங்கே விழா அரங்கில் பிரத்தியேகமாக என் கண்ணை கவர்ந்த ஒன்று, அங்கே வண்ண மலர்களால் உருவாக்கபட்டிருந்த அழகிய கோலம்.

விசாரித்ததில் அந்த கோலம் மொத்த மலையாளிகளின் குழுக்களிடையே நடைபெறும் கோல போட்டிக்காக உருவாக்கப்பட்ட கோலம் அது என்றும் கடந்த எட்டு மணி நேரத்திற்கும் மேலாக  சுமார் பத்து பதினைந்து பெண்கள் இணைந்து உருவாக்கிய கோலம் என்றும் அறிந்துகொண்டேன்.  

உண்மையில் என்னை பிரமிக்க வைத்த கோலம் அது, அதன் நடுவில் ஒரு உயரமான வெண்கல குத்து விளக்கும் அழகிற்கு அழகு சேர்த்து கொண்டிருந்தது.

விழா நடந்து கொண்டிருக்கும்போது விழா குழுவின் பொறுப்பாளர் , இன்னும் சிறிது நேரத்தில் கோலபோட்டியின் தேர்வு குழுவினர் வர இருப்பதாக  ஒரு அறிவிப்பு செய்தார்.

எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்க , பல்வேறு குழுக்களின் கோலங்களை பார்வை இட்டுவிட்டு தேர்வு குழுவினரின் கார் நாங்கள் இருந்த விழா மண்டப வாசலில் வந்து நிற்க, வெளியில் விளையாடிகொண்டிருந்த சிறுவர்கள் ,தேர்வு குழுவினரின்  வருகையை உள்ளே இருக்கும் விழா குழு தலைவரிடம் சொல்ல வேகமாக உள்ளே ஓடிவர அதில் இரண்டு சிறுவர்கள் முதலில் யார் உள்ளேபோய் சொல்வது என்பதில் போட்டிபோட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு உள்ளே வந்ததில் சற்று தடுமாறி அந்த கோலத்தின் மீது விழுந்து புரண்டு எழுந்திருக்க அந்த எட்டு மணிநேர , பத்து பதினைந்து பெண்கள் உழைத்து உருவாக்கி வைத்திருந்த அந்த அழகிய கோலம் உருமாறி, அலங்கோலமாக காட்சி அளிக்க அந்த நேரம்பார்த்து கோல போட்டியின் தேர்வு குழுவினர் புகைப்பட கருவியுடன் உள்ளே நுழைய .......

இப்போது எல்லோரது முகத்திலும் விழா மகிழ்ச்சிக்கு பதிலாக ஏமாற்றமும் வேதனையும் பிரவாகமெடுத்துகொண்டிருந்தது.

உள்ளே நுழைந்த தேர்வு குழுவிடம் விழா கூட்டுனர்கள் நடந்ததை சொல்லி அவர்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டும்,ஒன்றும் எடுபடவில்லை.

வந்தவர்கள், போட்டியின் விதிகள்படி புகைப்படம் எடுத்துகொண்டு சென்று விட்டனர். கோலத்தின் கோலத்தை கலைத்த சிறுவர்களும்  நடந்து கொண்டிருந்த விபரீதம் அறியாமல், மீண்டும் விளையாட வெளியில் சென்று விட்டனர்.

அதற்கு பிறகு நடந்த எந்த நிகழ்ச்சியிலும் எந்த சுவாரசியமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. 

சரி, ஆனது ஆகி விட்டது, வாங்க எல்லோரும் சாப்பிட போகலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு,எல்லோரும் சாப்பிட அமர்ந்தநேரம், மீண்டும் விழா கூட்டுனரிடமிருந்து ஒலிபெருக்கி மூலம் ஒரு அறிவிப்பு வந்ததும் விழா அரங்கமே அதிரும் வண்ணம் எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அப்படி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய என்ன காரணம்?

கோலபோட்டி தேர்வுகுழுவிடமிருந்து வந்த தகவல்தான் காரணம்.

அதாவது, இவர்களது கோலத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது, அதுவும் முதல் பரிசு.

எப்படி சாத்தியமானது?

கடந்த இரவு நள்ளிரவை தாண்டியும் கோலம் போட்டு முடித்த கையோடு  கோலம் போட்ட அனைத்து பெண்களும் அந்த கோலத்திற்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கின்றனர் ஆளாளுக்கு தனித்தனியாகவும் தங்கள் செல் போனில் புகைப்படமெடுத்து அதை ஊரிலுள்ள தங்கள் உறவினர்களுக்கும் அனுப்பி இருக்கின்றனர்.

இன்று காலையில் தேர்வு குழுவினர் வரும்போது அலங்கோலமாக காட்சி தந்த  கோலத்தின் நிஜ வடிவத்தை நேற்று இரவு புகைப்படமெடுத்த ஒரு பெண் (கோலத்தில் விழுந்து புரண்ட இரண்டு சிறுவருள் ஒருவனின் "அம்மே") யாருக்கும் தெரிய படுத்தாமல் , இன்று தேர்வுக்குழுவினர் சென்றபிறகு, அந்த தேர்வு குழுவிற்கு அனுப்பி இருக்கின்றார்.

தேர்வுக்குழுவினர், அந்த புகைப்படத்தின் நம்பக தன்மை மற்றும்  அதன் பின்னணியில் இருக்கும் பல பொருட்கள், மண்டப மேடை அலங்காரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இன்று அவர்கள் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, ஏனைய குழுக்களின் கோலங்களையும் ஒப்புமை படுத்தி ஏக மனதாக இந்த குழுவினரின் கோலத்திற்கு பரிசளித்திருப்பதாக தகவல் வந்ததுதான், இத்தனை மகிழ்ச்சிக்கு காரணம்.

போட்டு ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் , அதிகபட்சம் ஒரு மணிநேரமே அழகாக காட்சி அளித்து பின்னர் பல காரணங்களால் அழிந்து காணாமல் போகும் இந்த கோலங்களுக்காக நம் வீட்டு பெண்கள்  எத்தனை சிரத்தையும் கவனமும் எடுத்து அதனை  வடிவமைக்கின்றனர் என்பதை எண்னும்போது அந்த கோலங்கள் அவர்களது மனதில் ஏற்படுத்தும் மாயா ஜாலங்களின் மகிமை விளங்குகின்றது

நண்பிகளே  , நீங்களும் உங்கள் வீடுகளில் எப்போதேனும், அல்லது தினமும் போடப்படும் கோலங்களை புகைப்படமெடுத்து அவற்றை மற்ற உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து மகிழுங்கள், அல்லது அவற்றை சேகரித்து ஒரு ஆல்பம் தயாரித்து வீட்டில் வைத்து அழகு பாருங்கள், வீட்டிற்கு வரும் நண்பர்கள்  உறவினர்களிடம் காண்பித்து மகிழுங்கள்.


நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே

    நல்ல பகிர்வு, கோலம் நான் மிகவும் விரும்பி போடுவது,
    தகவல் அருமை. சேகரிக்க முயற்சிக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கு பிடிக்குமா? போட உங்களுக்கு போதுமான இடம் இருக்கின்றதா? அப்படியானால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், இனி கோலங்கள் போகட்டும் ஊர்கோலம் அவை போடட்டும் உள்ளங்களில் மகிழ் கோலம்.

      வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

      கோ

      நீக்கு
  2. ஹப்பாடா.. கொஞ்சத்துல
    கோலம் வரைஞ்ச அம்மணிகள்
    கண்ணில் நீர்க்கோலமும்..
    அதனால் ஏற்படவிருந்த போர்க்கோலமும்..
    அந்த அம்மையின் சமயோசிதத்தால்
    விழாக்கோலமாக மாறியது.. சந்தோஷமே...

    பதிலளிநீக்கு
  3. அன்பே சிவம்,

    கோலங்கள் கட்டும் ஜாலங்களைவிட உங்கள் வார்த்தைகள் காட்டும் ஜாலங்கள் அருமை.

    வருகைக்கு மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  4. அட! கோ நீங்கள் எப்போது இந்தியாவிற்குக் கோ ஆனீர்கள்? எங்கள் கோ மோதிஜி தான் செல்ஃபி எடுத்து மகிழுங்கள் சொன்னார் என்றால் நீங்கள் கோலம் போட்டு எல்லோருக்கும் அனுப்பச் சொல்லுகின்றீர்களே!ஹஹ்ஹ ம்ம்ம் நல்ல சிந்தனைதான்..

    பதிலளிநீக்கு
  5. அன்பிற்கினிய நண்பர்களே,

    ஏதோ சில பழைய நினைவுகளோடு புதிய அனுபவம் இணைந்ததால் உருவானது இந்த (காலத்தின்) கோலம்.

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

    நட்புடன்.

    கோ

    பதிலளிநீக்கு