பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 அக்டோபர், 2015

"வள்ளுவரின் பூர்வீகமும் (எனது) POOR யூகமும்!"

வான்புகழ்!!


நண்பர்களே,

சமீபத்தில் அய்யன் திருவள்ளுவரின் பூர்வீகம் பற்றியதான ஒரு கட்டுரையை நமது வலைதளத்தில் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.

மிக மிக அருமையான , ஆழமான ஆய்வின் அடிப்படையில் திருவள்ளுவர், கன்னியா குமரி மண்ணை சார்ந்தவர் என்று அறுதி இட்டு உறுதியாக அந்த ஆய்வாளர் , ஒரு தேர்ந்த  வழக்குரைஞரை போல பல ஏற்புடைய ஆதாரங்களை திருக்குறளில் இருந்தே எடுத்துக்காட்டி தமது ஆய்வின் முடிவினை நமக்கு அறிய தருகிறார்.  

மேலும் 133 அடி உயரத்தில்,   உலக பொதுமறையாம் திருக்குறளின் பெருமையையும் அதன் சிற்பியான வான் புகழ் வள்ளுவனுக்கு வான் முட்டும் உயரத்தில் பல கைதேர்ந்த சிற்பிகளின் பல ஆண்டு உழைப்பின் வெளிபாடான வள்ளுவனின்  சிலை நிறுவப்பட்டுள்ள பாறை அமைந்திருக்கும் கன்னியாகுமரி, வள்ளுவர் அங்குதான் பிறந்தார் என்பதன் ஆணித்தரமான ஆதாரமாகவே அமைந்திருப்பதையும் அந்த கட்டுரையின் அடுத்த வாதமாக எடுத்தியம்பபடுகிறது.

எந்த ஆராய்ச்சியாளரின்  முயற்சியையும் அவர்களது, கடின - தொய்வில்லா உழைப்பையும் அவர்களது ஆய்வின் முடிவுகளையும் எப்போதும் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல நான், மேலும் அறிவியல், மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளின்பால் பெரும் மதிப்பும் அலட்ச்சியம் இல்லா மரியாதையும் கொண்டவன் என்பதால், நமது ஐயனின் பிறந்த பூமி குறித்ததான ஆராய்ச்சி கட்டுரையை ஆழ்ந்து படித்தேன்.

ஆராய்ச்சியாளருக்கும் அவர்தம் முடிவுகளையும் என்னை போன்று எத்தனையோ வாசகர்களின் பார்வைக்கு கொண்டுவந்த நண்பர் எஸ். பி. செந்தில் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்.

எல்லா ஆராய்ச்சிகளின் முடிவுகளும் எப்போதும், இறுதியானவைககளாகவே அல்லது  உண்மைகளாகவே இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் உலகம் தோன்றி இன்றுவரை செய்யப்பட்டு வரும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் நமக்கு புலபடுத்துகின்றன.

உதாரணத்திற்கு, உலகம் முதன் முதலில் தட்டை என்றுதானே ஆய்வாளர்கள் மூலம் இந்த உலகோர் நம்பிகொண்டிருந்தனர், இப்போது அது உண்மை அல்ல என்று முடிவாகி இருப்பது நாம் அறிந்ததே.

அதே போல குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதை உலகில் எத்தனைபேர் நம்புகின்றனர்??

சூரியன்தான் பூமிபந்தை   சுற்றி வருவதாகவே அறியப்பட்டது   , ஆனால் இன்றைய ஆராய்ச்சி வேறுவிதமான முடிவை தந்திருக்கின்றது.

அதேபோலே, கீழே உள்ள பட்டியலில் உள்ள தமிழ் வார்த்தைகள் ஆங்கில அகராதிகளிலும் காணபடுகின்றன, அவை ஆங்கிலேயர்களால் பயன்படுத்தபடுகின்றன.

English wordTamil wordTransliterationMeaning in Tamil
Cashகாசுkāsucoin money
Catamaranகட்டுமரம்kattumaramtied wood
Cherootசுருட்டுsuruṭṭuroll
CoirகயிறுKayirufibre from the husk of a coconut
Corundumகுருந்தம்/குருவிந்தம்kuruntham/kuruvinthamruby
Curryகறிkarisauce
Mangoமாங்காய்MaangaiMango tree or fruit
Mulligatawnyமிளகுத்தண்ணிMilaguthannipepper water
Patchouliபச்சை இலைpachchai ilaigreen leaf
Pandalபந்தல்pandhaltemporary shelter
ArrozஅரிசிArisirice

ஆயிரமாயிரம் ஆங்கில சொற்களுள் மேலே பட்டியலிடப்பட்ட சொற்ப எண்ணிக்கையிலான வார்த்தைகளை அடிப்படியாக வைத்துக்கொண்டு எப்படி ஆங்கிலேயர்களின்  பூர்வீகம் தமிழ் நாடு என்று தீர்க்கமுடியாதோ, அதேபோலத்தான், அய்யன்  திருவள்ளுவர்  எழுதிய 1330 குறள்களில் உள்ள 9310 வார்த்தைகளில்  50 அல்லது 60 வார்த்தைகளை அடிப்படையாக கொண்டு அவர் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை சார்ந்தவர் என்று கூறுவது என்னை பொருத்தவரை முழுமையாக ஏற்புடையதல்ல.

அப்படியானால், ஏனைய 9250 வார்த்தைகள் (ஒருவேளை பல வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இருந்தாலும்) அவர் தம் வாழ் நாள் முழுவதும் பயன்படுத்திய வார்த்தைகளை கணக்கில் கொள்ளாமல் பார்த்தாலும் கூட, திருக்குறளில் மட்டும் காணப்படுகின்ற அறுதி பெரும்பான்மையான சொற்கள் தமிழகத்தின் ஏனைய  பிற பிராந்தியங்களில் புழக்கத்தில் இருந்திருக்குமே?

அதேபோல, வெள்ளம் என்பதற்கு நீர் என்ற அர்த்தம் எல்லோரும் அறிந்ததே,.

வான் சிறப்பை சொல்லும்போது:

"விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து
உள்நின்று உடற்றும் பசி"

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்"

"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுங்கு"

இன்னும் இதுபோன்ற பல குறள்களில் நீர் என்ற வார்த்தையை பயன் படுத்தி இருப்பதால் அவர் வெள்ளம் என்று சொல்லுகின்ற ஒரு பிராந்தியத்தை சார்ந்தவர் என்று எப்படி ஏற்க முடியும்.

குழந்தை சிரிக்குது, பாட்டி சொல்லுது, அம்மா அடிக்குது /அழுவுது  போன்ற சொற்றொடர்கள் பல ஊர்களிலும் புழக்கத்தில் உள்ளவைதான்

அதேபோல, வள்ளுவரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு மலை அங்கே இருப்பதாலும் அந்த மண்ணில்தான் வள்ளுவர் பிறந்திருப்பார் என தீர்க்கமாக அந்த ஆய்வாளர் நம்புகின்றார்.  அப்படியானால் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ள பாறையின் பக்கத்து பாறைக்கு விவேகானந்தர் பாறை என்று பெயரிடபட்டுள்ளதால் பின்னாளில் வரும் சந்ததியினர் விவேகானந்தர் கன்னியாகுமரியில்தான் பிறந்தார் என்று தங்களது ஆய்வறிக்கையை சமர்பிப்பார்களே ஏற்கமுடியுமா?

இப்படி இருக்க திருவள்ளுவர் கன்னியாகுமரியை சார்ந்தவர்  என்பதை கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் 50 அல்லது 60 வார்த்தைகளை அடிப்படியாக வைத்துக்கொண்டு அவரது பொன் சரிகை தூண்டியில் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.

மேலும் இன்னும் பல சான்றுகள் நம் வள்ளுவரின் பூர்வீகம் பற்றி ஆராய்ந்து தெளிவுபடுத்த நம் அரசுகளும் அதற்கான மானியங்களை அளித்து ஆராய்ச்சியாளர்களை ஊக்கபடுத்தவேண்டும் என்பதும் எனது அவா.

அதுவரை என் வள்ளுவன் மைலாபூரின் மைந்தனாகவே இருந்துகொள்ளட்டும்.

வரபோகின்ற ஆராய்ச்சிகளின் முடிவுகள் எப்படி இருந்தாலும் அய்யன் வள்ளுவன், "வள்ளுவன் தன்னை இவ்வுலகினுக்குதந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டின்" எந்த மண்ணின் மைந்தனாக இருந்தாலும் நம் எல்லோருக்கும் பெருமைதானே.?

அடுத்ததாக, எங்கே வள்ளுவரின் சிலையையோ, உருவ வரை படங்களையும் பார்த்தாலும்  அவருக்கு நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் இருப்பதாகவே காணபடுகின்றது.

Image result for pictures of thiruvalluvar

"மழித்தலும் நீட்டலும் வேண்டா ;உலகம்
பழித்தது ஓழித்து விடின்"

எனும் குறள் கொடுத்த வள்ளுவன் தாடியுடனும் நீண்ட தலைமுடியுடனும் இருந்திருப்பாரா எனும் சந்தேகமும் எழுகின்றது.

அவர் தாடியும் மீசையும் கொண்டிருந்தார் என்பதற்கு திருக்குறளில் அல்லது வேறெங்கேனும் சான்றுகள் இருந்தால் யாரேனும் வாசகர்களுக்கு அறியத்தாருங்கள்.

ஒட்டுமொத்த திருக்குறளில் "தமிழ்" என்ற வார்த்தைகூட இல்லை என்பது சமீபத்தில் கிடைத்த   ஒரு உபரித்தகவல்

நண்பர்களே,  இந்த பதிவு கண்டிப்பாக யார்  மனதையும் புண் படுத்தவோ, அவர்களது, கடுமையான ஆராய்ச்சிகளையும் உழைப்பையும் குறைத்து மதிப்பிடவோ, குறைகூறவோ அல்ல, முழுக்க முழுக்க என்னுடைய (POOR யூகம்) பார்வை மட்டுமே.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


கட்டுரை வெளியான வலைத்தளம்: http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_27.html 

14 கருத்துகள்:


 1. உங்கள் Poor பார்வையின் வாதம் நன்றாக இருக்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள். .

   எந்தன் பார்வை உங்கள் பார்வைக்கு நன்றாக இருப்பதுகுறித்து மிக்க மகிழ்ச்சி.

   கோ

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே.

   வள்ளுவன் குறித்த பதிவு பாரதிக்கு அருமையாய் இருப்பது மகிழ்ச்சி.

   கோ

   நீக்கு
 3. ஆஹா வணக்கம் அரசே.
  அருமையான வாதத்தை முன் வைத்துள்ளீர்களீ. தாங்கள் கொடுத்துள்ள இணைப்பு பதிவையும் படித்து விட்டு வருகிறேன். பின்னூட்டம் நீண்டதாக அமையும் அரசர் அனுமதிக்கனும்.பிறகு வருகிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள். .

   உங்கள் கருத்தினை தெரிவிக்க என் அனுமதி எதற்கு. அனுமதி இலவசம்,எவ்வளவு நேரமானாலும் எடுத்துகொள்ளுங்கள் ;

   கோ

   நீக்கு
 4. வணக்கம் அரசே,
  பின்னூட்டம் நீளமானால் பொறுத்துக்கொள்க,
  அருமையான பகிர்வு,,,
  எப்படியோ நல்லோர் ஒருவர் என்றால் அவரை நமக்கு தெரியும் என்று சொல்வோம். அவரே பொல்லாதர் எனும் போது,,,,

  வள்ளுவரைப் பற்றிய பல செய்திகள் உண்டு. வள்ளுவர் திருக்குறள் என்ற ஒரு நூல் மட்டும் எழுதவில்லை, 15 நூல்களை எழுதியுள்ளார் என்பாரும் உண்டு. அந்நூல்கள் பற்றிய பெயரும் இருக்கு.
  பல வள்ளுவர்கள் உண்டு என்ற கருத்தும் உண்டு.
  டாக்டர் ராதாகிருட்டிணர் பற்றியும் இப்படி தகவல் உண்டு. கடந்த ஆண்டுகளில் வாழ்ந்த மக்களையே நாம் இவர் இங்குள்ளவர் என்று சொல்லும் போது,,,,,,
  பல நூற்றாண்டுகள் கடந்து இலக்கியத்திற்குள் வாழும் மனிதரை தங்களின் நாட்டவர் ஊரவர் என்று,, அவரவர் கருத்துக்களை முன் வைப்பது இயல்பே,,
  வட்டார மொழிக்குறித்து நாம் அறிவோம், இலக்கியத்தில் அவைகள் இடம் பெறுவதைக்கொண்டு நாம் ஏற்பது சரியாக இருக்குமா?
  திருவள்ளுவர் 1330 குறள் அல்ல அதற்கும் மேல் எழுதியுள்ளார் என்றும் படித்துள்ளேன்.
  வெண்பா வகையில் இது குறள்வெண்பா ,,,,, குறள்வெண்பா வில் உள்ள ஒரே நூலும் இது தான்,,,,
  திருக்குறளில் 7 என்ற எண் ஆளுமை அதிகம் என்பர், அதனையும் நாம் கவனத்தில்கொள்வோம்.
  திருவள்ளுவர் கற்பனையான கடவிளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி மதம் இவைகளையும் அவர் எதிர்த்தார்.
  ஆனால் முதல் பாட்டிலே உள்ள வார்த்தைகளைக் கொண்டு என் மதம் என் சாதி என்று பேசுவோர்கள் உண்டு.
  இதையெல்லாம் விட திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை, அதனால் அவர் தமிழர் அல்லர் என்ற கருத்தும் உண்டு.
  என் வருத்தம் இது தான் இவருக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படும் அறிஞர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும் போது,,,,,,
  இவருடைய குறிப்புகள் மட்டும் எங்கே போனது??
  இப்போ நாம் பயன்படுத்தும் திருக்குறள், தஞ்சை ஞானப்பிரகாசம் என்பவர் அச்சில் ஏற்றிய பிரதிகள் தான்.
  நிறைய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. கிடைக்கும் சொல் ஆதாரம் மட்டுமே போதும் என்றால்,,,,,,
  தமிழ் என்ற சொல்லையும் நாம் ஆதாரமாக கொள்ள வேண்டுமே,,,,,
  திருவள்ளுவரின் பிற நூல்கள் இவை
  1.ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
  2. திருக்குறள் - 1330 பாக்கள்
  3. ரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
  4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
  5. கற்பம் - 300 பாக்கள்
  6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
  7. நாதாந்த திறவுகோல - 100 பாக்கள்
  8. வைத்திய சூஸ்திரம் - 100 பாக்கள்
  9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
  10. முப்பு சூஸ்திரம் - 30 பாக்கள்
  11. வாத சூஸ்திரம் - 16 பாக்கள்
  12. முப்புக்குரு - 11 பாக்கள்
  13. கவுன மணி - 100 பாக்கள்
  14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
  15. குருநூல் - 51 பாக்கள்
  அவர் எழுதியது தானா????????????

  எப்படியோ நல்ல பதிவை தந்த தங்களுக்கு நன்றிகள்.
  கருத்துக்களை வெட்டியே போன நான் இன்று ஒட்டி எழுதும் பதிவாகிவிட்டது தங்களின் இந்த பதிவு.
  அருமை அரசே, இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
  வாழ்த்துக்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள். வள்ளுவன் எழுதியதைவிட நீங்கள் எழுதிய பின்னூட்டம் அதிகம் என்று நினைக்கின்றேன். எப்போதும் வெட்டியே பேசினாலும் உங்கள் பேச்சு வெட்டி பேச்சு அல்ல என்பதை எழுத்துலக அன்பர்கள் அறிந்திருப்பர்.

   இந்தமுறை என் கருத்தோடு ஒட்டிபோனதாக சொல்லும் உங்களின் வாழ்த்துக்கும் என் நன்றிகள். உங்களைபோன்றோரின் ஒப்புதல் இந்த பதிவிற்கு கிடைத்ததால் நான் ஒன்றும் பிழையாக பதிவிடவில்லை என்று என் மனம் மகிழ்கிறது.

   மேலும் வள்ளுவர் எழுதியதாக நீங்கள் சொல்லி இருக்கும் ஏனைய படைப்புகள் குறித்த தகவல்களுக்கும் மிக்க நன்றிகள்.

   மீண்டும் உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றிகள் அம்மா.

   கோ

   நீக்கு
 5. இதையும் படித்தேன் அதையும் படித்தேன் . இருவருக்குமே சபாஷ் !

  பதிலளிநீக்கு
 6. இதையும் படித்தேன், உங்களுக்கு என் நன்றிகள்.

  கோ

  பதிலளிநீக்கு
 7. தங்கள் பதிவை படித்தேன். மிக அருமையாக விளக்கம் கூறியிருக்கிறீர்கள். திருவள்ளுவரை ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுவதில் இருந்தே அவர் மீது நாம் எவ்வளவு பற்று வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது.

  என்னுடைய பதிவு முழுக்க முழுக்க ஆய்வாளரின் வாதங்களை வெளிப்படுத்தும் பதிவுதான். அதில் எனது தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அவர் பல உதாரணங்கள் சொன்னாலும், ஒரு உதாரணம் அவர் அந்த ஊர்க்கார்தானோ என்று சந்தேகம் கொள்ளவைக்கிறது. அது பிணம் தழுவுதல். இந்த வழக்கம் வேறுஎங்கும் காணப்படவில்லை.

  மேலும் தாங்கள் கூட மேலோட்டமாகத்தான் மறுத்திருக்கிறீர்களே தவிர வேறு இடத்தில் பிறந்ததற்கான ஆதாரத்தை எதுவும் எடுத்து வைக்கவில்லை. அடுத்த ஆய்வு வரும்வரை சற்று கூடுதலான சாட்சியம் கொண்ட இதை நம்பலாம் என்பது என்னுடைய கருத்து.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே,

   ஒரு சோற்றை பதம் பார்த்து உலையில் உள்ள அனைத்து சோற்றின் பதத்தையும் முடிவு செய்ய இது சோறாய் இருந்தால் பரவாயில்லை. ஆனால் இது வேறு என்பதால் பிணம் தழுதலை மட்டும் எடுத்துகொண்டு பிறப்பிடத்தை தீர்மானிக்க முடியுமா?

   anyway உங்கள் தொடர்பு கிடைத்ததற்கு வள்ளுவனுக்கு நன்றிகள்.

   தொடர்வோம்.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 8. வள்ளுவரின் நாடாக கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பிக்கும் கருத்துகள், சிலர் கேரளத்தின் மலப்புரம் பகுதிகளை (பாலக்காட்டின் ஒரு பகுதியும் மலப்புர மாவட்டத்தின் ஒரு பகுதியும் இப்போது தமிழ் நாட்டை ஒட்டிய பகுதிகளான கேரளத்தின் பகுதிகள். முன்பும் கேரளம் தமிழ் மன்னர்களின் ஆட்சியிங்கீழ் தான் இருந்தது. மலையாளமே தமிழிலிருந்து பிறந்ததுதான். சமஸ்க்ருதம் நிறைய விரவி மலையாளம் ஆனது.) அப்பகுதிகளை வள்ளுவ நாடு என்றும் சொல்லுவதுண்டு. சில ஊர்களின் பெயர்கள் அப்படித்தான் இருக்கும். உம் பாண்டிநாடு, மன்னார்க்காடு, நிலம்பூர் இப்படி....ஏனென்றால் இங்கு - பாலக்காட்டில் வாழ்ந்த எழுத்தச்சன் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்க்க முயற்சித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. அவர் திருவள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்திலோ இல்லை அதன்ற்கு சற்று பின்போ தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது சில சரித்திர நிகழ்வுகள் ஆண்டுகள் சொல்லுகின்றன. ம்ம் எப்படியோ திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழில்தான் குறள் எழுதியுள்ளார். அது உலகப் பொதுமறையாகி தமிழையும், தமிழ்நாட்டையும் உலக அரந்தில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது என்றால் ஐயனைப் பற்றி அதில் எந்தவித ஐயமும் இல்லை.

  உங்களின் ஆராய்ச்சி முயற்சியும் நன்றாகத்தான் இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   எம் ஆராய்ச்சியின் முடிவை பாராட்டியமைக்கும் பல அறிய தகவல்களை தொகுத்து வழங்கியமைக்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு