பின்பற்றுபவர்கள்

சனி, 17 அக்டோபர், 2015

ஆவிகள் உண்மை(யா?)தான்.

அனுபவம் பேசுகிறது.... திகிலுடன் !

நண்பர்களே,

முன் குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.


1.இந்த பதிவினை தயவு செய்து தனியாக இருக்கும்போது படிக்காதீர்கள்.
2.இரவு நேரத்தில் படிக்காதீர்கள்.
3.கர்ப்பிணி பெண்கள்,இதய பலவீனமானவர்கள் தயவாக படிக்காதீர்கள்
4.படிக்க ஆரம்பிக்குமுன் இயற்க்கை அழைப்புகளை முடித்துவிடுங்கள் - இடையில் போக அச்சமாக இருக்கலாம்.
5.கூடுமானவரை வீட்டிலோ அலுவலகத்திலோ படிக்கும்போது கூட யாரேனும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி இப்போது படியுங்கள்.

சின்ன வயதில் நான்  இந்த பேய் பிசாசு, பில்லி சூனியம் , செய்வினை, காத்து ,கறுப்பு ,ஆவி போன்ற விஷயங்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.

பிறகு பள்ளிக்கூட நாட்களில் சக மாணவர்களோடு பேசும்போது அப்பப்போ இவை சம்பந்தப்பட்ட கதைகளையும் நிகழ்ச்சிகளையும் கேட்டபோது கொஞ்சம் அவற்றின் மீது நம்பிக்கை பிறந்தது.

எமது "ஹாஸ்டலில் ஒரு அமானுஷ்யம்" பதிப்பில்கூட பள்ளிகூட நாட்களில் பயந்துபோன விஷயம் சொல்லி இருந்தேன்.

அதை தொடர்ந்து கல்லூரி கால வயதில், என்னோடு படித்த சில முற்போக்கு சிந்தனையும் பகுத்தறிவு கொள்கைகளில் பிடிப்பு கொண்டிருந்த நண்பர்களின் பேச்சும், சிந்தனையும்  இந்த அமானுஷ்யம் சம்பந்தமான எவையும் உண்மை அல்ல அவைஅனைத்தும் கற்பனையே எனும் எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்துவிட காரணமாக இருந்தது.

அன்று முதல் பல வருடங்கள் எனக்கு இது போன்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன்.

ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படித்துகொண்டிருந்த சமயத்தில்(அடடே...பரவாயில்லையே..ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கின்றீரே) எங்கள் ஊரின் ஆற்றங்கரையில் அமைந்திருந்த அடர்த்தியான தோப்பிற்கு நடுவில் அமைக்கபட்டிருந்த ஒரு குடிலில் ஒரு பெண் சாமியார் வாழ்ந்து வந்தார்.

பகல் நேரத்தில் ஊருக்குள் வரமாட்டார், பொழுது சாய்ந்து இரவு முளைக்கும் வேளையில் அதுவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் வந்து ஓரிரு வீடுகளுக்கு சென்று அவர்கள் கொடுக்கும் உணவு, பழங்களை தேவைக்கு மட்டுமே பெற்றுக்கொண்டு, மிக சொற்பமான நபர்களிடம் மட்டுமே ஒரு சில வார்த்தைகளை பேசிவிட்டு மீண்டும் தமது குடிலுக்கு திரும்பி விடுவார்.

அப்படி ஒரு மாலைபொழுது அவர் ஊருக்குள் வந்த சமயம், எங்கள் வீட்டுக்கும் வந்தார், யார்வீட்டுக்கு சென்றாலும் அவர்களின் வாசலை தாண்டி எப்போதும் அவர் உள்ளே செல்ல மாட்டார்.  வீட்டு முற்றத்திலேயே நிற்பார். அப்படித்தான் அன்றும் அவர் வந்து வீட்டு முற்றத்தில் நின்றிருந்த சமயம் ஆசிரியரான என் தந்தையாரை காண அருகிலிருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி விடுதி மாணவர்கள் வந்திருந்தனர்.

சாமியார் வந்திருப்பதை அறிந்து என் தந்தையார் வெளியில் வந்து அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அந்த சாமியார், மந்திர தந்திர மாந்த்ரீக, சித்து விளையாட்டில் கைதேர்ந்தவர் என்பதை அறிந்திருந்த என் தந்தையின் மாணவர்கள், அவரிடம் சில முற்போக்கு வாதங்களை முன் வைத்து பேச ஆரம்பித்தனர்.

மந்திரம் தந்திரம் என்று ஏதுமில்லை எல்லாம் பொய் என சொல்ல ,அமைதியாக கேட்டுகொண்டிருந்த அந்த சாமியார் மாணவர்களிடம் சரி இன்று இரவு,பன்னிரண்டு மணிக்கு பிறகு , ஒரு சீட்டில் நீங்கள் ஏதேனும் எழுதி எடுத்துகொண்டு வாருங்கள், அதை பிரித்து பார்க்காமலேயே அதில் என்ன எழுதி இருக்கின்றது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன், பின்னர் மந்திர தந்திரங்கள் உண்மையா இல்லை பொய்யா என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள் என கூற மாணவர்களும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு,

என் தந்தையாரின் துணையுடன் ஊருக்கும் அந்த ஆற்றுக்கும் இடையில் இருந்த இடுகாட்டை கடந்து இரவு 12 மணியை கடந்த சமயத்தில் அந்த சாமியாரை பார்க்க சென்ற கூட்டத்தில் லாந்தர் விளக்கை சுமந்து சென்றவன் நான் என்றாலும் அந்த சமயத்தில்கூட எனக்கு ஆவி,பிசாசு, பேய் பயமோ நம்பிக்கையோ இல்லாமல்தான் இருந்தேன். (இந்த பெண் சாமியாரை குறித்து வேறொரு சந்தர்பத்தில் தனியாக சொல்கிறேன்)

கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டிற்கு வந்த எனது நண்பர்களோடு பேசிகொண்டிருந்தபோது , இடையில் திடீரென பேச்சு திசை மாறி, காத்து கறுப்பு, ஆவி....போன்ற விஷயங்களில் பயணித்தது.

அதில் ஒரு நண்பர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தினை விளக்கும்போது எனக்கும் , இது ஒருவேளை , உண்மையாக  இருக்குமோ  என்றே தோன்றியது, எனினும் முழுமையான நம்பிக்கை வரவில்லை.

எனினும் அவர் கூறும்போது, தமக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்திற்கு பிறகு தமது தந்தையார் அருகிலிருந்த தர்காவிற்கு அழைத்து சென்று மந்திரிச்சி அழைத்து வந்த பிறகே அவருக்கு நிம்மதியும் தைரியமும் வந்ததாக கூறினார்.

எந்த ஒரு அனுபவமும் நமக்கு ஏற்பட்டால்தான் அவற்றின் மீது நம்பிக்கை வரும், என்பது என்னை பொருத்தவரை உண்மையானது.

இரண்டு நாட்களுக்கு முன், வீட்டில்  தனியாக இருந்தேன், தேவைப்படும்போது எடுத்து சூடு செய்து சாப்பிட்டுக்கொள்ள சாதம் தக்காளி சட்டினி, குழம்பு வகைகள் , இட்டிலி மாவு போன்றவை குளிர் சாதன பெட்டியில் வைக்க பட்டிருந்தன.

யாரும் இல்லாமல் வெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தேன். நேரமாக ஆக இருட்ட ஆரம்பித்தது, கூடவே பசியும் ஆரம்பித்து விட்டது.

சரி பிரிட்ஜில்  இருந்த சாதத்தை சூடு செய்ய நினைத்து எடுக்கும்போது கைதவறி பாத்திரம் கீழே விழுந்து  சாதம் முழுவதும் கீழே கொட்டி விட்டது.

அதிலிருந்துதான் அந்த அழிச்சாட்டியம் ஆரம்பிக்க தொடங்கியது.

அதை பற்றி தொடர்ந்து பேசுவோம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு.

பின் குறிப்பு:

தொடர்பதிவை தொடர்வதற்கு முன் , இப்பதிவின் முன் குறிப்பை கவனத்தில் கொண்டு  தயாராகுங்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

6 கருத்துகள்:

  1. சரி அந்த இடுகாட்டுக் கதையை விட்டு விட்டீர்களே? அங்கு என்னாச்சு அந்தச் சாமியார் துண்டுச் சீட்டில் என்ன எழுதியிருந்தது என்று சொன்னாரா?

    ஆவி எங்கள் நண்பர் அதனால் ஆவி இருக்கு என்பதை நம்புகின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமியார் பற்றி பிறிதொரு நாளில் கண்டிப்பாக சொல்கிறேன். ஆவி உங்களின் நண்பர் என்று தெரிந்திருந்தால் பயந்திருக்க மாட்டேன்.
      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,
    ரொம்ப பயமா இருக்குமோ, அப்ப சரி நான் கண்ண மூடிக்கொண்டு படித்தக்கொள்கிறேன்,,,,,,,
    அருமை, தொடருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணை மூடிக்கொண்டால் உங்கள் அருகில் அந்த ஆவி வந்தமருந்து சேட்டைகள் செய்தாலும் செய்யலாம், பிறகு உங்கள் விருப்பம்.
      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு
  3. முன் குறிப்பு ஓகே , ஆமா அந்த துண்டுச் சீட்டு கதை எங்கே போச்சு?
    நல்ல ஆரம்பம் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ், அந்த துண்டு சீட்டு விஷயத்தை வேறொரு சந்தர்பத்தில் கண்டிப்பாக சொல்கிறேன்.
      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு