பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வந்ததும் - வெந்ததும் - தந்ததும்

ஆனந்தம் பொங்கி பொங்கி.......

நண்பர்களே,

குடும்ப பாரங்களை ஆண்கள் சுமப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு, பெண்கள் மத்தியில்  ஆண்களுக்கு எதிராக எப்போதும் ஒலிப்பதுண்டு. அதேபோல வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்குகொள்வதில்லை என்றொரு அப்பட்டமான
- அபத்தமான பழியையும் ஆண்கள் தலையில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் (இந்த பட்டத்தை யார் கொடுத்தார்களோ- நல்லா இருங்க!! ) என்று தங்களை தாங்களே முடி சூட்டிக்கொண்டு (நான் ஜவுரி முடியை சொல்ல வில்லை), எப்போதும் ஆண்களை குறைகூறும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மற்றவர்கள்  வீடுகளில்  எப்படியோ எனக்குதெரியாது ஆனால்  பல வீடுகளில் கணவன்கள் என்னென்ன வேலைகளை செய்கிறார்கள் எந்த அளவிற்கு குடும்ப பாரங்களையும் சமையல் அறையின் பாராங்களையும் , வாஷிங் மிஷன் பாரங்களையும், டிஷ் வாஷர் பாரங்களையும் , வேக்யூம் கிளினர்கள் பாரங்களையும் தோட்டத்து பாரங்களையும் சுமக்கின்றார்கள் என்பதை கடந்த சிலமாதங்களுக்கு முன் லண்டனில் குடும்பத்துடன் பங்குகொண்ட என் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவின்போது அந்த நண்பரின் வாயாலேயே தழுதழுத்த குரலால் சொல்ல கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். (யார் அந்த நண்பர்  என்பதை மறந்து விட்டேன்,ஞாபகம் வந்தா சொல்றேன் , சொன்னவரா முக்கியம்,, எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்.....)

இப்படியும் நாட்டில் கணவன்மார்களுக்கு கொடுமைகள் நிகழ்கின்றனவா என ஆச்சரியத்துடன் வீடு வந்த அடுத்த நாள் காலையில் வீட்டின் கிச்சனில் ஒரு வெள்ளை பேப்பரில் முத்து முத்தாக அச்சிடப்பட்ட ஒரு பட்டியல் ஒட்டபட்டிருந்தது.

அதில், ஞாயிறு முதல் சனிக்கிழமைவரை வீட்டில் நடக்கும் (வேலைக்கு போய் வருவதை தவிர) எல்லா வேலைகளின் பெயர்களும் அவை ஒவ்வொன்றுக்கும் எதிரில் அவற்றை யார் செய்வது என்ற குறிப்பும் அச்சிடபட்டிருந்தது.

நண்பரின் பிறந்த நாளுக்கு குடும்பத்துடன் சென்றதும் நண்பரின் அனுபவத்தை  குடும்ப மக்களுடன் சேர்ந்து  ரசித்ததும் இந்த அளவிற்கு என்னை பாதிக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. (நன்றி நண்பனே)

சரி எவ்வளவோ பார்த்தாயிற்று இதையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணி ஒப்புதல் வாக்குமூலத்தில் மானசீகமாக கையொப்பம் இட்டேன் ஒரு அசட்டு தைரியத்தில், ஏனென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் விடுமுறைக்கு தாயகம் செல்ல போகிறோம் , திரும்பி வருவதற்குள் இந்த ஏற்பாடுகள் அனைத்தும்   மறந்துபோய்விடும் எனவே இப்போதைக்கு சரி என்று சொல்லி சமாளிக்கலாம் என்று நினைத்தேன்.

(ஊருக்கு போகும்போது எல்லா கதவு சன்னல்கள், ஹீட்டர்,விளக்குகள் தொலைகாட்சி பெட்டி, திரை சீலைகள்  போன்றவற்றை சரி பார்த்து மூடிவிட்டு, மின்சார இணைப்புகளை சரிபார்த்துவிட்டு முன் கதவை சாத்தும் முன் பிரிட்ஜில் ஒட்டபட்டிருந்த  இந்த பட்டியல் காகிதத்தை எடுத்து குப்பையில் போட்டதை யாரும் பார்க்கவில்லை.)

விடுமுறையில் விரல் நகம் கூட நோகாமல்  வேளா வேளைக்கு அறுசுவை உணவு  பந்தியை அலங்கரிக்க அவற்றை எடுத்து என் தொந்தியை அலங்கரிக்க , விடுமுறை நாட்களும் விடுமுறை பெற்றுகொள்ள மீண்டும் இங்கிலாந்து திரும்பினோம்.  

முதல் இரண்டொரு நாட்கள் எங்கள் வீட்டின் புதிய சட்டதிட்டங்களை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை அனுகூலமாக கருதி கொஞ்சம் கூலாக இருந்தேன், ஆனால் அடுத்த நாளே மீண்டும் அந்த பட்டியல் புதிதாக அச்சடிக்கப்பட்டு  குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒட்டபட்டிருந்தது.  

நண்பர்களே, எவை எல்லாம் மிக மிக முக்கியமான குறிப்புகளோ, அவை மாத்திரமே பிரிட்ஜ் கதவில் ஒட்டி வைப்போம், உதாரணத்துக்கு, பாஸ்போர்ட் ரினீவல் தேதி, கார் மற்றும் வீட்டிற்கான காப்பீட்டு கட்டண கடைசி தேதி, சமையல் எரி  வாயு, மின்சாரம், ப்ளம்பிங் போன்ற சேவை நிறுவனங்களின் வருகை நாள், தேசிய விடுமுறை நாட்கள்.. .. இப்படி பட்ட முக்கிய குறிப்புகள், இப்போது அவற்றோடு இந்த பட்டியலும் ஒட்டபட்டதிலிருந்து அது எத்துனை முக்கியமானதாகவும் கவன ஈர்ப்பு விஷயமாகவும் மேலிடம் தீர்மானித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.(நன்றி நண்பா)

சரி விஷயத்திற்கு வருவோம்.

இந்த வரலாற்று ஒப்பந்ததிற்கிணங்க சனி மற்றும் ஞாயிறுகளில் சமையல் செய்யும் வேலை என்னுடையது. 

இத்தனை நாட்களாக கொஞ்சம் கூடமாட ஒத்தாசை வாங்கிக்கொண்டு எப்படியோ சமாளித்த நான் இன்று நிராயுத பாணியாக எல்லா வேலைகளையும் நானே செய்யும்படியாக வீட்டில் யாரும் இல்லாத சூழ் நிலை உருவானது.

சரி முதலில் அரிசியை கழுவி உலையில் வைத்தேன் , இன்னும் கொஞ்சம் நேரத்தில் அது எனக்கே உலை வைக்கும் என்று தெரியாமல்.

அப்படி என்ன நடந்தது,?

இன்று அக்டோபர் 11 ஆம் தேதி.

அதி காலை 6.00 மணிக்கு எழுதுவிட்டேன் அப்போது இந்தியாவில் மணி சுமார் காலை 11.

வலைபதிவர் மாநாட்டு நிகழ்சிகள் யூ டியூபில் நேரடியாக ஒளிபரப்பபடுவதை அசரீரி மூலம் அறிந்து அதை பார்க்க தயாராகும்பொருட்டு சமையலை  சீக்கிரம் முடித்துவிட்டால் இடை நிறுத்தம் இன்றி தொடர்ந்து பார்க்கலாமே என்று ஒரு ப்ளான் பண்ணி,

சாம்பாருக்கு பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,தணியா தூள் புளி ,எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் வைத்து மூடி,குக்கரின் மூடியை போட்டுவிட்டு (நான்கு விசில்கள் வரை விடவேண்டும் என்ற சமையல் தாரக மந்திரத்தின்படி , குக்கரை அரிசி வைத்த பர்னருக்கு பக்கத்து பர்னரில் வைத்துவிட்டு அடுப்பை ஆன் செய்து விட்டு மடி கணினியிடம் நிகழ்ச்சி காண மடி ஏந்தி அமர்ந்தேன்.

பல பதிவர்களை கண்டு மகிழ்ந்தேன், நிகழ்ச்சி தொகுப்பாளரின் அழகு தமிழ் நடையும் வார்த்தை உபயோகங்களையும் ரசித்தேன், இதுவரை பெயர்களால மட்டுமே அறிந்திருந்த பலரை நேரடி ஒளிபரப்பிநூடாய் பார்த்து மகிழ்ந்தேன்.

நீராரும் கடலுடுத்த பாடலை இங்கிருந்தவண்ணம் உடன் பாடி தமிழன்னைக்கு வணக்கம் சொல்லி சிலாகித்தேன்.

பலர் மேடையில் வந்து பேசியதை கேட்டு ரசித்தேன், அதிலொருவர், சொற்பிழை,பொருட்பிழைகளை சுட்டிக்காட்டி நக்கீர அறிவுரை வழங்கியதையும் ஆமோதித்து அங்கிகரித்தேன். 

பின்னணியில் பாடல்கள் இசைத்ததையும் ரசித்து மகிழ்ந்தேன். இத்தனையையும் மேலே உள்ள என் அறையில் காதுகளுக்கு ஹெட்போனை பொருத்தி கேட்டுகொண்டிருந்த எனக்கு உலகமே திரண்டு ஓரிடம் வந்ததுபோல் உலக வலைபதிவர் ஓரிடத்தில் கூடி உரையாடி மகிழ்ந்ததை திடீரென்று கேட்க்க முடியாமல் போனது.

என்ன ஆனது ?

ஆடியோ சரியாக கேட்க்காததால் ஹெட் போனை எடுத்துவிட்டு நேரடியாக கேட்க்க முயற்ச்சித்தேன் அப்போதும் சரியாக கேட்க்காததால், கீழே ஹாலில் இருக்கும் ஐ பேடை எடுக்க கீழே வந்தேன். 

கீழே வந்த  நான் ஒரு வினோத  வாசனை உணர்ந்தேன்.  என்ன வாசனை அது?

திடுக்கிட்டு கதவு சாத்தபட்டிருந்த சமையல் அறையை திறந்துகொண்டு உள்ளே சென்ற எனக்கு பேரதிர்ச்சி.பின்னே இருக்காதா?

சாதம் வெந்து.....வெந்து... நொந்து.... வழிந்து. காய்ந்து தீய்ந்து அடுப்பெங்கும் சாதம்.  

வலைபதிவர் கூடுகையை பொங்கும் ஆனந்தத்துடன் கண்டு ரசித்திருந்த எனது ஆனந்தம் ,இப்போது பொங்கி ,பொங்கி  அமிழ்ந்தது.

அப்போ சாம்பாரு?

தயவு செய்து அதை இப்போ கேட்காதீர்கள். வேறொரு சந்தர்ப்பம் வாய்த்தால் கண்டிப்பாக சொல்கிறேன்.

வெளியில போய் இருக்கும் குடும்பத்தினர் மதிய சாப்பாட்டுக்கு வரதுக்குள்ள வெளியில் இருந்து ஏதேனும் வாங்கி வைக்கணும், அதற்க்கு முன் கிச்சனில் நடந்த எந்த கலேபரங்களின் சுவடுகளும்  தெரியாமல்,சுத்தம் செய்து தீய்ந்த வாசனை போக்க ரூம் ஸ்பிரே அடித்து சன்னல் கதவுகளை திறந்து வைத்து ............ இன்னும் எவ்வளவோ வேலை இருக்கு இப்போ போய் சாம்பார் என்ன ஆச்சுன்னு கேட்கின்றீர்களே? ரொம்ப முக்கியம்.....

பிரிஜ்ல ஓட்ட பட்ட சட்டதிட்டப்படி சனி ஞாயிறுகளில் சமையல் மட்டும் தான் என்னுடையது, கிச்சன் கிளீனிங் எனது இல்லை ஆனால் அந்த அசரீரி வாக்கினால் அந்த வேலையையும் நானே கஷ்டப்பட்டு செய்து முடிக்க வேண்டியுள்ளது.

இத்தனை சுத்தமாக சமையல் அறையை ஒழுங்கு செய்து வைத்தால் ஒருவேளை பிரிட்ஜில் உள்ள லிஸ்டில்  கிளீனிங்கும் என்பக்கம் தாவிவிடுமோ? சரியாக செய்யாவிட்டாலும் குட்டு உடைந்துவிடுமே (நன்றி நண்பா....நல்லா இரு.)

வலைபதிவர் மாநாடு திட்டமிட்டபடி பதமாக வெந்து வந்தோருக்கு சிறப்புடன் இலக்கிய விருந்து படைத்து மகிழ்ந்திருக்கும் என நம்புகிறேன். 

போட்டியில் வென்று பரிசு பெற்றோருக்கும் இந்தமுறை பரிசை மற்றவர்களுக்கு விட்டு கொடுத்து மகிழும் போட்டியில் பங்குபெற்ற ஏனைய  படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ



11 கருத்துகள்:

  1. அது சரி, சாம்பார்க்கு இவ்வளவு போட்ட நீங்க உப்பு போட மறந்துடிங்களே....நல்ல நகைசுவை பதிவு. அடுதவாரமாவது ஜாக்கிரதையாக இருங்க, இங்கே , வாரம் முழுக்க நம்ம சமையல் தான். வார இருதியில் தான் லீவ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா, சைவ(சாப்பாட்டு)சித்தாந்த , ஆகம விதிகளின்படி , சாம்பாருக்கு உப்பு, அதை கடைந்து தாளித்தபிறகே போடவேண்டும் என்பதால் பருப்பு வேகும்போது போடவில்லை. மற்றபடி மறக்க வில்லை.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,
    பதிவர் விழா பார்க்கிறேன் என்று எல்லா வேலையையும் பார்க்க வேண்டியது இருந்து இருக்கும். தப்பித்துள்ளீர்கள்,அருமையான பகிர்வு, தங்கள் நண்பர் நல்லவர், தங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார், தாங்கள் அதனை இங்குள்ள தங்கள் நண்பருக்கு சொல்லிக்கொடுத்தால் நலம், நன்றி தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹஹ பொங்கலோ பொங்கல்னு பொங்கிடுச்சு போல!!! ம்ம்ம் இப்படித்தான் எல்லா வீட்டிலுமா....

    ஆனால் நாங்க ஆண்கள் பாவம்னு சொல்லுற கட்சிப்பா....அவங்களுக்கும் சப்போர்ட் பண்ணுறவங்க...

    கோ பாவம்...இதுக்குத்தான் ஒரு க்ளோனிங்க் வைச்சுக்கணும்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      நல்லது நடக்க வேண்டுமென்றால் குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து படைக்கனும் என்பதுபோல், புது கோட்டையில் பதிவர் கூடுகை நல்லபடியாக நடைபெற இந்த கோயில் வைத்த போங்கலாககூட இருக்கலாம்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. அன்பிற்கினிய நண்பர்களே,

    வணக்கம். வருகைக்கும் உங்கள் கரிசனைக்கும் மிக்க நன்றி.

    முந்தைய பதிவினை படித்தீர்களா?

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  5. ஐயோ இவ்வலவு நடந்திருக்கா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      நீங்கள் பதிவுகள் பக்கம் வராதபோது இன்னும் எவ்வளவோ நடந்திருக்கு.
      வருகைக்கு, மிக்க நன்றி.

      கோ

      நீக்கு