பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

குழி(பறித்த)பணியாரம்!!

இன்றைய ஸ்பெஷல்!!!


தொடர்கிறது......

முதலில் இருந்து வாசிக்க ஆப்பம் -ஆசை- தோசை இங்கே சுடுங்கள்.

பரவாயில்லையே, நல்ல ஓட்டலுக்குகுத்தான் வந்திருக்கிறோம் என நினைத்து கொண்டிருந்தபோது, சர்வர் வந்து என்ன சார் சாப்பிடபோறீங்க , என கேட்டுவிட்டு வரிசையாக  அவர்களின் ஓட்டலில் உள்ள அத்தனை பலகாரங்களையும் சொல்ல ஆரம்பிக்க
இடைமறித்த நான் , உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் விரயமாக்க வேண்டாம் ,ஏற்கனவே ரொம்ப பசியாக இருக்கிறேன், எனக்கு ஒரு செட் குழி பணியாரமும், இரண்டு ஆப்பங்களும் என்றேன், அதே போல வந்திருந்தவர்கள் அனைவரும் அவரவர் ஆர்டரை சொல்ல , சர்வரும் எடுத்துவர உள்ளே சென்றார்.  

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அனைவரின் உணவுகளையும் அவரவர் ஆர்டர் பிரகாரம் கொண்டு வந்து வைத்தார் , ஆவலுடன் எதிர்பார்த்திருந்த என்னுடைய ஆர்டரைதவிர. 

ஹலோ. எங்கே என்னுடைய ஆர்டர்?

இதோ வருது சார், கொஞ்சம் ஸ்பெஷாலான ஐட்டம் அதான் கொஞ்சம் நேரமாகுது,  இதோ இப்போ கொண்டு வருகிறேன் என்று சொன்னவர் அடுத்த ஐந்தாவது நிமிடம் என்னிடம் கொண்டு வந்து ஒரு வாழை இலை வைக்கப்பட்டு அதில்  எனக்கான ஆப்பம் என்று சொல்லி வைத்தார்.

எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏனென்றால் அவை பார்பதற்கு தோசைபோலவே இருந்தன.  தோசைக்கும் ஆப்பத்திற்கும் உள்ள நேரடியான வித்தியாசமே அந்த நடுவில் தடித்து உப்பி இருக்குமே அந்த (centre of attraction ) மைய பகுதி.

அதுவே என்னை மிகவும் அப்செட் ஆக்கி விட்டது, அவரிடம் நான் கேட்டேன் இது ஆப்பம் போல் இல்லையே?  இல்ல சார் இது ஆப்பம் தான், சாப்பிட்டு பாருங்கள் என்றார். நான் சொன்னேன் இது ஆப்பம் போல இல்லை நீங்கள் தோசை மாவையே ஆப்ப சட்டியில் ஊற்றி கொண்டு வந்து இருக்கின்றீர்கள் என்று சாப்பிட மறுத்து விட்டேன்.

உடனிருந்தவர்கள் சாப்பிட்டுத்தான் பாருங்களேன் என கூற , சொன்னவரையே சாப்பிட்டு பார்க்க சொன்னேன் , அவரும் சாப்பிட்டு பார்த்துவிட்டு இது தோசைதான் , ஆப்பம் இல்லை என சான்று வழங்க இப்போது அந்த சர்வர் , சாரி சார் ... நேரமாகி விட்டதால் மாவு உப்பவில்லைபோல் இருக்கின்றது உங்களுக்கு  வேண்டுமானால் வேறு ஏதேனும் கொண்டு வரட்டுமா?

வேறு ஒன்றும் வேண்டாம் அந்த குழி பணியாரம் தயாராக இருந்தால் கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வாருங்கள் என்றேன். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்றவர் சிறிது நேரத்தில் ஒரு ப்ளேட்டில் இட்டிலி போலவும் இல்லாமல், பணியாரம் போலவும் இல்லாமல் ஏதோ ஒரு மார்கமான வடிவில் இருந்த ஆறு சின்ன சின்ன மாவு பலகாரத்தை கொண்டு வந்து வைத்தார் அதற்குண்டான சாம்பார் சட்டினி வகையறாக்களோடு.

நண்பர்களே, முதலில் அந்த வடிவமே எனக்கு பிடிக்க வில்லை எனினும் பசியின் கொடுமையால் அவற்றுள் ஒன்றை பிட்டு வாயில் வைக்க போனேன் அப்போதுதான் உணர்ந்தேன் அது கண்டிப்பாக குழி பணியாரமே இல்லை என்று.

நான் அறிந்த வரையில் குழி பணியாரம் ஒரு சிறிய ஆரஞ்சு பழ வடிவில் இருக்கும், மிக மிக மிருதுவாக, பூப்பந்து போல மென்மையாக கொஞ்சம் இளந்தித்திப்பாக இருக்கும் , சாப்பிட பூ போல சாப்டாக இருக்கும் உள்ளே ஒன்றம் இருக்காது மேலே காற்று பைகள்போல சிறிய சிறிய ஓட்டைகள் இருக்கும்,

ஆனால் எனக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டவை,மீந்துபோன ,வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியுடன் இருந்த ஊத்தாப்பம் மாவை குழி பணியார பாத்திரத்தில் ஊற்றி வார்த்து, அது எடுக்கும்போதே அமுங்கி சப்பையாகி ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தது, அதுவும் வெங்காயம் பச்சை மிளகாய் போன்ற ஊத்தாப்பத்தின் உதிரி பாகங்களோடு.

மிகவும் கடுப்பான நான் உங்கள் மேனேஜரை கூப்பிடுங்கள் அவரிடம் பேச வேண்டும் என சொன்னதும் மேனேஜரை அழைக்க  செல்லும் முன் அந்த சர்வர் செய்த ஒரு செயலே அன்று அவர்கள் செய்த தில்லு முல்லு வேலைகளை அம்பல படுத்தியது.

மேனேஜரை அழைக்க செல்லும் முன் அந்த சர்வர் இன்றைய ஸ்பெஷல் போர்டில் இருந்த ஆப்பத்தையும் குழி பணியாரத்தையும் அழித்து விட்டார்.

வந்த மேனேஜர் நடந்தவற்றை அந்த சர்வர் மூலம் கேட்டறிந்ததினால் என்னிடம் மிகவும் மரியாதையுடனும் பக்குவமாகவும், தன்மையுடனும் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதோடு அவர்களின் தவறுக்கான பரிகாரமாக மற்றவர்கள் சாப்பிட்ட எதற்கும் , நான் எவ்வளவோ சொல்லியும், பணம் வாங்காமல் மிகுந்த தொழில் தர்மத்துடன் எங்களை வழி அனுப்பி வைத்தார்.

ஹூம் ...... நம்ம நேரம் .... 12 மணிக்கு வீட்டுக்கு வந்து அக்கா செய்து கொடுத்த தோசையையும் தக்காளி சட்டினியையும் சாப்பிட்டு விட்டு ராமஜெயம் அக்காவின் ஆப்பத்தையும் , குழி பணியாரத்தையும் நினைத்தவனாக தூங்க போனேன்.

இப்படி என்னுடைய ஆப்பத்தின் ஆசையும் குழி பணியாரத்தின் ஆசையையும் குழி தோண்டி புதைத்த அந்த சர்வர் என் கனவில் வந்து மன்னிப்புகேட்டதோடு, அடுத்த முறை விடுமுறையில் வருபோது கண்டிப்பாக நம்ம ஓட்டலுக்கு வாங்க சார், உங்களுக்கு ஆப்பமும் குழி பணியாரமும் நல்லமுறையில்  சமைத்து தருகிறோம் என்றதும்  , வரவிருந்த தூக்கமும்  போய்விட்டது.

இனி யாரேனும் ஆப்பம், பணியாரம் சாப்பிட வரீங்களா என்று சொன்னால், எனக்கு ராமஜெயம் அக்காவிற்குபதில் அந்த ஓட்டலின் சர்வர்தான் நினைவில் வருவார் போலிருக்கின்றது.

நண்பர்களே,  பதிவை வாசிக்கும் நீங்கள் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை சமைக்க - அருந்த நேர்ந்தால் கொஞ்சம்  அடியேனையும் நினைத்துகொள்ளுங்கள், உங்களுக்கு புண்ணியமா போகும்.


நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,
    ஒரு குழிபனியாரத்திற்கும் ஆப்பத்திற்கும் இத்தனை அக்கபோரா,,
    தாங்கள் அரசர் தான் அதற்காக இப்படியா??
    ஆனாலும் பாருங்கள் தங்கள் பதிவு அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள், தொடருங்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பமும் குழி பணியாரமும் உங்களுக்கு அவ்வளவு எலக்காரமா? நீங்க எப்பவேனாலும் செய்து சாப்பிடுவீர்கள் போல் இருக்கிறது, அதனால் தான் உங்களுக்கு அது சாதாரணம், என்னைப்போல் பல பத்து ஆண்டுகளுக்கு முன் கண்ணில் பார்த்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.

      வருகைக்கும் பணியாரத்துக்கும் மன்னிக்கவும் உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. ஹஹஹஹ்..பாவம் கோ வுக்கே ஆப்பம் ஆப்பு வைத்துவிட்டது!! குழிப்பணியாரம் "குழி"ப்பணியாரமாகி....

    நாங்கள் இங்கு அடிக்கடி செய்வதாச்சே ...ஆப்பம் நடுவில் ஓட்டைகளுடன் மெத்து மெத்து என்று பக்கத்தில் மெலிதான ரோஸ் கலரில் சிறு சிறு ஓட்டைகளுடன் சற்றிக் க்ரிஸ்பாக வளைந்து கிண்ணம் போல் ....

    குழிப்பணியாரம் நல்ல பொன்னிறத்துடன், காற்றடைத்த பை போல் பஞ்சாக....மேலும் கீழும் உப்பிக் கொண்டு நடுவில் பந்திற்கு இருப்பது போல் "கோ"டுடன்....ஸ்பாஅ இப்பத்தான் கிச்சனை விட்டு வெளிய வர்ரேன்.....

    பையா....கோ வுக்குப் பார்சல்!!! ஃப்ளைட்ல அனுப்பிக் கொடு .......-கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்கினிய நண்பர்களே,

    குழிப்பணியாரம் நல்ல பொன்னிறத்துடன், காற்றடைத்த பை போல் பஞ்சாக....மேலும் கீழும் உப்பிக் கொண்டு நடுவில் பந்திற்கு இருப்பது போல் "கோ"டுடன்.... இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு ஆர்டர் செய்தால் என் என்னத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் அந்த சர்வர்.

    "ஸ்பா.....இப்பத்தான் கிச்சனை விட்டு வெளிய வர்ரேன்....." இதுக்கு அந்த சர்வரே மேல்.

    நல்லா சாப்புடுங்க... நல்லா இருப்பீங்க..(சேச்சே... எனக்கு ஒன்னும் வயித்தெரிச்சல் எல்லாம் இல்ல)

    கோ

    பதிலளிநீக்கு