பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஆகஸ்ட், 2017

ஊரு விட்டு ஊரு வந்து...

மனதில் உயர்ந்தோராய்...

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க...துபாயில் பிச்சைக்காரர்கள்.....

துபாயில் பிச்சைக்காரர்கள் இல்லையா என நான் கேட்ட கேள்விக்கு சினிமா பாணியில் அவர் சொன்ன பதிலுரை: "இருக்கு... ஆனால் இல்லை"

என்ன சொல்கிறீர்கள்?

நேரடியாக பார்க்கும்போது , பரவலாக இல்லாததுபோல் தோன்றினாலும் பிச்சை காரர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால் இவர்களுள் ஒருவர்கூட மண்ணின் மைந்தர்கள் அல்ல.

வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா உரிமத்தில் வரும் சிலர் இதுபோன்று இழிவான செயலில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக மசூதி வாசல்களில் வெள்ளிக்கிழமைகளில்  தொழுகை நேரத்தில்  பிச்சை காரர்களை காண முடியும்.

அவர் சொல்ல சொல்ல எனக்கு ஆச்சரியம்  மேலோங்கியது.

மேற்கொண்டு அவரிடம் சம்பாஷிக்க மனமின்றி , அவ்விடம் விட்டு வேறிடம் சென்றேன்.

இருந்தாலும் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் வரிசையில் வீற்றிருக்கும் இந்த நாட்டில் பிச்சை எடுத்து பிழைப்பு செய்யும்படியான வறுமையா?

மனம் அதை ஏற்க மறுத்தாலும் , மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், சுற்றுலா வரும் சிலர், இந்த நாட்டு மக்களின் ஈகை குணமறிந்து அதனை சாதகமாக பயன்படுத்தி பிச்சை எடுக்கின்றனர் என்பதே.

இதில் உயர்தர நட்சத்திர விடுதியில் தங்கிக்கொண்டு , இதுபோன்ற "சில்லறை"  புத்தியோடு செயல் படுபவர்களும் உண்டாம்.   

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்று செயலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விடுமுறை - சுற்றுலாவாக வந்த ஒரு தாய் தன் பிள்ளைகளை  ஐந்து நட்சத்திர  ஓட்டலில் தங்க வைத்துவிட்டு வெளியில் சென்று இதுபோன்று பிச்சை எடுத்து பணம் சேமித்துக்கொண்டு ஊர் திரும்ப முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல  ஒரு ஆடம்பர சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்த ஆப்பிரிக்க தேசத்து மனிதர் ஒருவரும் வெளியில் சென்று பிச்சை  மூலம் பெரும் தொகை சம்பாதித்ததாகவும், ஏற்கனவே அவரிடம் விலை உயர்ந்த ஆடை அணி கலன்கள் மற்றும் பெரும் தொகை இருந்ததாகவும்  கூறப்படுகிறது. 

இதுபோன்ற அவலங்களை வேரோடு அறுத்தெறிய துபாய் காவல்துறை பெரும் முயற்சி எடுத்துவருகிறது, அவ்வகையில்  நூற்றுக்கணக்கான "பிச்சைக்காரர்களை" கைது செய்தும்  இருக்கின்றனராம். 

இவ்வாறான பிச்சை தொழிலில் - செயலில்  குறைந்தது மாதத்திற்கு ஒருவர் சுமார்  27 ,௦௦௦  அரபு தேச பணம்வரை சம்பாதிக்கின்றனராம் அதாவது நம்ம ஊர் கணக்குப்படி ஏறக்குறைய  ஐந்து லட்சம்  ரூபாய்கள். 

குறிப்பாக இவர்களின் எண்ணிக்கை ரமலான்  போன்ற தபசு காலங்களிலும் ரமதான் போன்ற ஈத் விழாக்களின்போதும் அதிகரிக்குமாம்.

இதனை பெருமளவிற்கு தடுக்க சுற்றுலா மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் கடுமையான வழிகளையும் சட்டங்களையும் இயற்றி இந்த இழி செயலை வேரறுக்க முயல்கின்றனராம்.

இதுபோன்று யாரையேனும் பார்ப்பவர்கள் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்க பிரத்தியேக தொலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனராம்.

சிரமம் இல்லாமல், எளிமையான வகையில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டு இப்படி இழிவான வகையில்  பணம் சம்பாதித்து சுகவாழ்வு வாழும் அற்ப மனிதர்களை நினைத்துக்கொண்டு இறைவா இப்படியும் மனிதர்களா? இவர்களுக்கு நல்ல புத்தி கொடு என்று மானசீகமாக இறைவனை வேண்டிக்கொண்டேன்.

இறைவன் இருப்பதாக எல்லோரும் சொல்லும்  வானத்தை அண்ணாந்து பார்க்க   தலை திருப்பிய எனக்கு  சற்று  தூரத்தில்  புதிதாக உருவெடுத்து உயர்ந்து கொண்டிருக்கும் கட்டிடம் கண்ணில் பட்டது.

இத்தகு உயரமான கட்டிடங்களை உருவாக்கம் செய்யும் கடை நிலை கட்டிட தொழிலாளர்களின் கடின உழைப்பு என் மனகண்ணில் தோன்றி சிந்தனை சிறகை அந்த கட்டிட உச்சி நோக்கி பறக்க செய்தது.

கட்டிடத்தின் விளிம்புகளில் தங்களை பாதுகாப்பு கயிற்றால் சுற்றி கட்டிக்கொண்டு தலை கவசம் அணிந்துகொண்டு நட்ட நடு வெயிலில் , கடும் சிரமத்திற்கும் ஆபத்துகளுக்கும்   இடையில்   கட்டிட வேலைகள் செய்து தங்கள் குடும்பங்களை வாழ செய்யும்  பாட்டாளிகளின் நேர்மையும் கடின உழைப்பின் மேன்மையும் அவர்கள் மீதான மரியாதையும், அவர்களால் கட்டப்படும் கட்டிடங்களின் உயரத்தையும் தாண்டி  உயரமான இடத்தில் என் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.

அதே போல கடை நிலை தொழிலாக  கருதப்படும் துப்புரவு தொழிலாளிகளின் வியர்வையும்  பாலை நிலத்தில் ஒட்டக  பராமரிப்பு வேலைகள் செய்யும் ஏழை தொழிலாளர்களின்  நேர்மையான உழைப்பும்,   உலகத்தின் உயரமான கட்டிடம் என சொல்லப்படும் துபாயிலுள்ள பர்ஜ் கலீபா உயரத்தையும் தாண்டி கொடி நாட்டுவதாக உணர்ந்து சிலிர்த்தேன். 

ஊரை ஏமாற்றி பிழைக்கும்  போலி பிச்சைக்காரர்களால் , உலகின் மற்ற நாடுகளில் உண்மையான வறுமை மற்றும் இயலாமையினிமித்தம் பிச்சை எடுக்கும் கடைநிலைக்கு தள்ளப்பட்ட  மனிதர்களுக்கான உதவிகள் மறுக்கப்படுவதுடன் அவர்களை சந்தேக கண்கொண்டு பார்க்கவும் செய்துவிடுகிறது.  

அட கடவுளே, புண்ணியம் தேடி கோயிலுக்கு போய் வெளியவந்து எதையெதையோ நினைத்திருந்த இந்த கோயிலின் மனது   இப்போது இதையெல்லாம் அறிந்து இப்படி புண்ணாகிப்போனதே....

அடுத்தது என்ன? எங்கே??.. கொஞ்சம் மனசு ஆறினபிறகு...

பின் குறிப்பு:

கிடைத்த தகவல்களோடு பின்னர் படித்து அறிந்துகொண்ட தகவல்களோடும் இந்த பதிவு எழுதப்பட்டது.   பதிவை படிச்சிட்டு கருத்தை தெரிவியுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும்.  

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ 

5 கருத்துகள்:

  1. dubaila irukkum pichaikaarkalai patri mika thelivaaka / vilakkamaaka ezuthiyavitham arumai!

    aduthu sendra idathai patri vaasikka aavalaay irukkuren.
    thodarungal sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கு நன்றிகள், எழுதுகிறேன்.

      கோ

      நீக்கு
  2. சரி சரி கருத்து போடுகிறோம்...புண்ணியம் கிடைக்குமல்லவா ஹாஹாஹாஹா..

    அட! பிச்சை எடுப்பவர்கள் இருக்கிறார்களா? வியப்புதான். நாங்கள் அறிந்தது வேறாக இருந்ததே!!!

    உங்கள் நல்ல மனம் கட்டடத் தொழிலாளர்களின் உழைப்பை நினைத்து உயரியதாக நினைக்கும் தங்களின் நல்ல மனம் வாழ்க! எத்தனை ரிஸ்க் இல்லையா அவர்கள் இப்படிக் கயிற்றில் தொங்கியும், ஏணிகளின் விளிம்பில் நின்றுகொண்டு வர்ணம் அடிப்பது கட்டடங்களைப் பூசுவது அதுவும் தொங்கும் ஏணிக்களில் நின்று கொண்டு...ரொம்பவே அபாயம்தான். அவர்களின் மீதான உங்கள் மதிப்பும் மரியாதையும் கண்டு உள்ளம் மகிழ்கிறது. எத்தனை நாடுகளிலிருந்து இபப்டிச் சென்றிருப்பார்களோ? அதுவும் நம் நாட்டிலிருந்து இது போன்ற வேலைகளுக்குத் தங்கள் வறுமையைப் போக்கச் செல்பவர்கள் அதிகம் அவர்கள் அங்கு படும் பாடும் சொல்லி மாளாது. பாவம் அவர்கள். அவர்கள் நல்வாழ்வு வாழ நாம் இறைவனிடம் வேண்டுவோம்....

    தொடர்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hello hello....நான் என்னவோ கருத்து போடுங்கனு சொன்னது பிச்சைபோடுங்கனு கேட்ட மாதிரியும் நீங்க போடுறோம் என்று சொல்வது பிச்சை போடுறோம்னு சொல்றமாதிரியும் இல்ல இருக்கு... கருத்தை தெரிவியுங்கள் என்றுதானே "கெஞ்சி" இருந்தேன், நீங்களும் தெரிவிப்பதாகத்தானே "கொஞ்சி" இருக்கவேண்டும் அதை விடுத்து என்ன இதெல்லாம்.... சின்னபிள்ளைத்தனமா.... ஹாஹாஹாஹா....உங்களுக்கு மட்டும்தான் சிரிக்க தெரியுமா....

      ஐக்கிய அரபு நாட்டின் மொத்த ஜனத்தொகையான சுமார் 9 .4 மில்லினில் நமது இந்திய மக்கள் மட்டுமே சுமார் 2 .2 மில்லியன்கள்.

      மொத்த ஜனத்தொகையில்சுமார் 83% வெளி நாட்டினர்.

      பதிவை பாராட்டிய உங்கள் நல்ல மனம் வாழ்க.

      கோ

      நீக்கு
  3. துபாயின் ஜனத்தொகையில் 83% வெளி நாட்டினர் என்ற தகவல் அதிசயிக்க வைத்தாலும் அதில் 99.999999999% (!!!!!)மலையாள ஊரு விட்டு இந்த ஊரு வந்தவர்கள் என்ற செய்தி எந்த ஆச்சரியத்ததையும் எனக்கு தரவில்லை.

    பதிலளிநீக்கு