தேனோடு உறவாடி...
நண்பர்களே,
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி துபாய் குறுக்குத்தெரு நோக்கி பயணம் தொடங்கியது.
மாலை 5:45 க்கு புறப்பட்ட விமானம் ஜெர்மன், ஹங்கேரி , துருக்கி, ஈராக் போன்ற நாடுகளை கடந்து அடுத்த நாள் காலை 3:45 க்கு துபாய் சர்வதேச விமான நிலையம் அடைந்தது.
சுமார் 7.00 மணி நேர தொடர் இரவு பயணமாதலால் சற்று சோர்வாக இருந்தாலும் விளக்கொளி வெள்ளமென பாய்ந்து வழிந்தோடும் துபாய் விமான நிலையத்தை கண்டவுடன் களைப்பும் சோர்வும் ஒருசேர விடைபெற்று படி இறங்க புத்துணர்வும் குதூகலமும் ஒருசேர உள்ளத்தில் குடியேறியது..
எங்கிருந்து வருகிறோம் என்ற அடிப்படையிலும் , விசா முன் அனுமதி தேவையில்லாததினாலும் வழக்கமான கெடுபிடிகள் ,விமான நிலையத்தின் சம்பிரதாய நடைமுறைகள் என்னை அவ்வளவாக முறைக்கவில்லை.
எனவே எதிர்பார்த்த நேரத்தைவிட முன்னதாகவே விமான நிலையம் விட்டு வெளியில் வந்தேன்.
அங்கிருந்து பெயர் பதித்த பதாகையுடன் காத்திருந்த சாரதியை அடையாளம் கண்டு அவருடன் முன் பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி நோக்கி விரைந்தது நம்ம சாரதியின் சொகுசு வாகனம்.
காலை ஏழு மணிக்கு விடுதி அறைக்கு சென்றுவிடலாம் என்றெண்ணி இருந்த நேரத்தில் விமான நிலைய சுங்க மற்றும் குடியேற்றம் நடைமுறைகளின் தளர்வினால் காலை ஐந்து மணிக்குள்ளாக விடுதி வந்து சேர்ந்துவிட்டேன்.
விமான நிலையம்முதல் விடுதி வரை வரும் வேளையில் வழுக்கி செல்லும் பல வழி நெடுஞ்சாலைகள் , சாலை ஓரங்களில் உயர்ந்தோங்கி எழுந்து நிற்கும் பல மாடி கட்டடங்களும், பசுமை போர்த்திய பேரீச்சை மரங்களும் புன்னைகை போர்த்திய மலர் கூட்டங்களும் கண்களுக்கு விருந்தளித்தன.
திட்டப்படி வந்து சேர்ந்த அன்று 12.00 மணிக்கு பிறகே எனது அறைக்கான திறவுகோல் கிடைக்கும் என்ற பட்சத்தில் , விடுதி மேலாளரிடம் எனது பதிவினை ஊர்தித்தப்படுத்திவிட்டு அங்கேயே சற்று நேரம் ஓய்வறையில் எனது உடமைகளை வைத்துவிட்டு, குளித்து உடை மாற்றிக்கொண்டு வெளியில் வரும்போது மணி காலை 6.00.
லாபியில் அமர்ந்து அன்றைய காலை செய்தித்தாள்களில் சிலவற்றை(ஆங்கிலம்) வாசித்தும் சிலவற்றின்(அரபி) படங்களை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கையில் மேலாளரின் உதவியாளர் என்னிடம் வந்து உங்கள் அறை இன்னும் சற்று நேரத்தில் தயாராகிவிடும் அதற்குள் காலை சிற்றுண்டி அருந்துவதென்றால் மூன்றாவது மாடியில் இருக்கும் உணவு கூடத்திற்கு சென்று உணவு அருந்துங்கள் என கூறினார்.
எனது பதிவுப்படி எனக்கான காலை உணவு நாளை முதல்தானே என அவரிடம் சொன்னதற்கு , பரவாயில்லை உங்களை மேலாளர் சிபாரிசு செய்திருக்கின்றார் அதற்கான கெஸ்ட் அனுமதி அட்டையையும் கொடுத்திருப்பதாக சொல்லி விடுதியின் பிரத்தியேக அட்டை ஒன்றை கொடுத்தார்.
காசு கொடுக்காமல் உணவருந்த மனமில்லாததாலும்(!!??) அதே சமயத்தில் அப்போது எனக்கு அவ்வளவாக பசி இல்லாததாலும் அவரது உபசரிப்பு உதாரத்துவத்தை கவுரவமாக மறுத்துவிட்டேன்.
சற்று நேரம் அதே லாபியில் அமர்ந்துகொண்டு என்னைப்போல் முன்னதாகவே வந்து காத்திருப்போருடன் சிறிது நேரம் அளவளாவிவிட்டு விடுதியின் முகப்பு வாசல் வந்து வெளியில் பார்த்தேன்.
இப்போது சூரியனின் வீரியம் விஸ்வரூபம் எடுக்க துவங்கி இருந்தது.
சரி அப்படியே காலாற வெளியில் நடக்கலாம் என்றெண்ணி எனது உடமைகளை பாதுகாப்பு ஊழியரிடம் ஒப்படைத்துவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
அன்றைய உஷ்ணம் 42 டிகிரி..
வெயிலோடு விளையாடி...
சின்ன வயதில் இத்தனை சூட்டில் வெய்யிலிலும் வீறு நடை போடுவது போன்ற ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் ரஸ்க் சாப்பிடுவதகாக இருந்தாலும், கடந்த ௨௦ ஆண்டுகளாக குளிர் குடை புடை சூழும் வெள்ளை நாட்டில் வாசம் புரிவதால் இந்த பாலைவன சூரியனின் பாதரச பளீச் வெய்யிலில் பாதம் பதித்து நடப்பது கொஞ்சம் புதிதாக இருந்தது.
அப்படியே நடந்து பல குறுக்கு தெருக்களையும் நெடுக்கு தெருக்களையும் கடந்து வந்து நிழல் தேடி ஒதுங்கிய ஒரு கட்டிடத்தின் முகப்பு பெயர் பலகை தமிழில் எழுதி இருந்தது.
கானல் காற்றும் கடும் வெப்ப வீச்சும் உடலை ஊடுருவி வெப்ப பெருமூச்சு விடச்செய்த அந்த வேளையில் தமிழ் எழுத்து பெயர் பலகை கண்டதும் , குற்றால குதூகலம் என் நெஞ்சோடு ஒற்றிக்கொண்டதில் காய்ந்த உதடுகள் புன்னைகை பூப்பூத்தது வழிந்த ஜொள் நனைத்த ஈரத்துடன்.
பாலைவன கதிரவனின் கொடும் வெட்ப தாக்குதலை நொடியில் தவிடுபொடியாக்கி மனதில் குளிர்த்தேனை குழைத்து களிம்பு பூசிய தமிழ் எழுத்திற்கு சொந்தமான அந்த கட்டடம் எது? ஜொள் வழிய காரணமென்ன? ஜொள்கிறேன் ... சாரி சொல்கிறேன் நாளை.
நாளை பாப்போம்.
அதுவரை....
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
பின்குறிப்பு: உபதலைப்பில் தேனோடு ... ... யார் அந்த தேனு என்கிற பானு என்று வீண் கற்பனை செய்யாதீர்கள்.. அந்த தேனு வேற தேனு.
உபசரிப்பு உதாரத்துவம்...சொற்பயன்பாட்டை ரசித்தேன்.
பதிலளிநீக்குஐயாவிற்கு வணக்கங்கள்.
பதிலளிநீக்குஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்து வாசித்து - ரசித்து வாழ்த்தும் தங்களின் மொழி ஆளுமையும் , ஆழ்ந்த விஷய ஞானமும், ரசனையும் போற்றுதற்குரியது.
சமீபத்தில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லாத இந்த "உதாரத்துவம்" என்ற வார்த்தையை நீங்கள் கவனித்தீர்கள் என்பதில் எனக்கு மெத்த மகிழ்ச்சியும் மன நிறைவும்.
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
கோ
நானும் துபாய் விவேகானந்தர் தெருவில் நடந்து போன உணர்வை பெற்றேன் நண்பரே...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே,
நீக்குஅதனருகில் அவ்வை ஷண்முகி சாலையின் வலது கோடியிலிருந்த ஆறாவது கட்டிடத்தின் ஏழாவது மாடியில் உள்ள எட்டாவது அறையில்தான் என் நண்பர் ஒரு ஒன்பது ஆண்டுகள் தங்கி இருந்ததாக பத்தாண்டுகளுக்கு முன் சுடு தேசத்தில் இருந்து கடுதாசி எழுதியிருந்தார்.
அவரை உங்களுக்கு தெரியுமா?
கோ
துபாய் குறுக்குத்தெரு // ஹாஹாஹாஹா.. சென்ற பதிவிலேயே சொல்ல நினைத்து விட்டது...வெற்றிக் கொடிக் கட்டு!!படத்தில் பார்த்திபன் சொல்லும் முகவரிதானே இது!!ஹிஹிஹிஹி...
பதிலளிநீக்குதமிழ்ப்பெயர்....ஜொள்ளு ஏன் ஒழுகியது தெரியாதா என்ன எதற்கு நாவில் நீர் ஊறுகிறது என்போம்....எல்லாம் சாப்பாடுதான் உங்கள் ஜொள்ளின் காரணம் அது உணவகம் சரியா?!!
நண்பர்களே,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
ஏன் நீங்க மட்டும்தான் சாப்பாட்டை தவிர மற்ற விஷயங்களுக்கு ஜொள்ளு விடுவீர்களா? நாங்க கூடாதா?
சரி சரி ... நீங்க சொல்வது எதுதான் சரியில்லாமல் சரிந்துபோய் இருக்கின்றது?.
நன்றி.
கோ
காசு கொடுக்காமல் உணவருந்த மனமில்லாததாலும்(!!??) அதே சமயத்தில் அப்போது எனக்கு அவ்வளவாக பசி இல்லாததாலும் அவரது உபசரிப்பு உதாரத்துவத்தை கவுரவமாக மறுத்துவிட்டேன்.// உதாரத்துவம் புதிய வார்த்தையாக இருக்கிறதே!! அர்த்தம்?!
பதிலளிநீக்குநண்பர்களே,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
உதாரத்துவம் என்றால் Generosity - தாராளத்தன்மை.
இது புதிய வார்த்தை அல்ல.
சாப்பாட்டில் கல் தோன்றி, பிழைப்பில் மண்தோன்றி, உலகில் (வாழ்வில்) பெண் தோன்றுவதற்கும் முன் தோன்றிய மூத்த தமிழ் வார்த்தைதான்.
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
london la irunthu dubai ku ezu mani neram payanama!. enakku puthiya visyam...
பதிலளிநீக்குamaam ungal vittil irunthu heathrow airport ku evvalvu neram payanam sir?
payana katturai nandraaka aarampichirukkuringa.
adutha pathivu vaasichu solkiren.
மகேஷ்,
நீக்குகாரில் என்றால் ஒரு ஐம்பது நிமிடங்கள் , பேருந்தில் என்றால் ஒரு ஒன்றரை மணி நேரம்.
வருகைக்கும் விஷயமறிந்துகொள்ளத்துடிக்கும் தங்கள் ஆர்வத்திற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.
கோ