பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பரோட்டா (பு)சித்தர்.

குருமா பித்தர்!!

நண்பர்களே,

சித்தர்கள் என்பவர்கள் பற்று துறந்து, உலக நன்மைகருதி ஆழ்நிலை தவமிருந்து  இறையருளால் அதீத ஞானமும் மகத்துவ - மருத்துவ அறிவும்

பெற்று அதை இலவசமாக மானிடர் மற்றுமின்றி அனைத்து மிருக  ஜீவன் மரம் செடி கொடிகளின் நன்மைக்காக பயன்படுத்துபவர்கள் என்பதுதான் ஒரு ஞாயமான புரிதலாக இருக்கக்கூடும்.

அத்தகு ஞான சித்தர்கள் காடுகளிலும் மலை குகைகளிலும் வாழ்ந்து வந்ததாக பலர் சொல்லி அறிந்திருக்கின்றோம்.

ஆனால்  இன்றைய சூழலில் இன்னமும் இதுபோன்ற சித்தர்கள் இருப்பார்களா எனும் சந்தகங்கள் வலுப்பெறும் வேளையில், அழுக்கடைந்த தேகமும்  அரை அல்லது முழு நிர்வாணமாகவோ அல்லது அதனை சுற்றி அழுக்கேறிய ஆடைகளையே  அணிந்துகொண்டு காட்சி  அளிக்கும் சிலரை சித்தர் எனும் பார்வையில் சிலர் பார்க்கின்றனர்.

தூய்மைக்கு துளியும் சம்பந்தமில்லாமல், சாக்கடை ஓரங்களில் படுத்துறங்கியும், யார் எதை கொடுத்தாலும் அதை வாங்கி உண்பதுமாக இருக்கும் சிலரை சித்தர்கள் என ஒரு சாரார் போற்றி கும்பிட்டு வழிபடுவதை நினைத்தால் இவர்கள் உண்மையான சித்தர்களா? அல்லது சித்தர்கள் என்பவர்கள் இப்படித்தான் அழுக்கேறி இருப்பார்களா எனும் சந்தேகங்கள் எழாமல் இல்லை. 

சமீபத்தில் ஒரு காணொளியில் சுமார் 60 அல்லது 70 வயதுகொண்ட முதியவர், மூன்றில் ஒரு பங்கு வழுக்கேறிய  தலையில் அங்கங்கே  கொத்து கொத்தாக ஒன்றிணைந்த முடிகளுடனும்  அழுக்கேறிய உடல் , பல அடுக்குகளாக போட்டுக்கொண்டிருக்கும் ஒழுங்கற்ற ஆடை அணிந்து எங்கேயோ வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கின்றார் அந்த  பெரியவர்.

இவரிடத்தில்  எதை கேட்டாலும் தமது வாயில் இருந்து ஏதோ முனகுவதை தவிர வேறு  சத்தம் எதையும் கேட்கமுடியாத நிலையில், இவருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்ட பரோட்டா கறி  குறும்பினை ஒரு பிடி பிடிக்கிறார்.

சாப்பிட்டது போதவில்லை என்பதை வாங்கிக்கொடுத்தவருக்கு  புரியும்படி உணர்த்த மீண்டும் கடையில் இருந்து நான்கைந்து பொட்டலங்களில் வாங்கி வரப்பட்ட பரோட்டா குழம்புடன் நன்றாக சாப்பிட்டு அருகிலிருக்கு சொம்பில் இருந்து தண்ணீரை குடிக்கிறார்.

அருகில் இருந்து இவரை அவ்வப்போது கவனித்துவரும் சிலர், "இவருக்கு பரோட்டா என்றல் மிகவும் பிடிக்கும் எப்போது எத்தனை வாங்கி கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பர், சமயத்தில் லாகிரி வஸ்த்துக்களான சாராயம் போன்றவற்றையும் வாங்கி கொடுத்தாலும்  குடிப்பார் " எனும் வாக்குமூலமும் தருகின்றனர்.

மைதாவில் செய்யப்பட்ட பரோட்டாக்கள் உடலுக்கு நல்லதல்ல எனும் கருத்து பரவலாக இருக்கும் இந்த விஞ்ஞான உலகில் சித்தராக இருக்கக்கூடியவர் எப்படி இத்தனை பரோட்டாக்களை சாப்பிடுகிறார், ஆசை துறந்தவர்களாக கருதப்படுபவர் எப்படி மதுவினை அருந்துகிறார்  என கேட்பதல்ல என் நோக்கம்.

உணவின் மீதுள்ள பற்றை துறக்காதவரும் தன் உடல் தூய்மை , ஆரோக்கியம் பற்றி அக்கறை எடுத்துக்கொள்ளாதவரும் சுகாதாரமற்ற இடத்தில் தங்கி தாபரிப்பதும், யாருக்கும் எந்த கேள்விக்கும் இயல்பாக அல்லது பரிபாஷையால் கூட  பதிலளிக்காத   ஒருவரை எப்படி சித்தர் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்பதே என் சந்தேகம்.

மேலும் யாராவது பணம் கொடுத்தால் அதையும் வேண்டாமென சொல்லாமல் வாங்கி சட்டைப்பையில் திணித்துக்கொள்வதை பார்த்தால் அவருக்கு பணத்தின்மீதான மோகமும் அவரது உள்ளத்தில் ஒட்டி இருப்பதாக தெரிகிறது.

பரோட்டா சித்தர் போன்றே  சுருட்டு சித்தர், பீடி சித்தர் ,கஞ்சா சித்தர், புலால் சித்தர்  என்றுகூட பலர் இருக்க அல்லது முளைக்க வாய்ப்பிருக்கின்றது.

காடுகளிலும் , குகைகளிலும் , மழை வெயில் , போன்ற சூழலிலும்  தங்களை தனிமைப்படுத்தி வாழ்ந்துகொண்டு, உலக நன்மைக்காகவும் தங்களது மோட்ச வாழ்விற்காகவும்  தவமிருப்பதாக சொல்லப்படும் "சித்தர்கள்" உண்மையிலேயே இருக்கின்றனரா?

போலி சாமியார்கள்போல் சித்தர்களில் போலி சித்தர்கள் இருப்பார்களோ?

அல்லது இதுபோன்று மக்கள் வாழும் இடங்களில் சுற்றி திரிபவர்கள்தான் சித்தர்களா எனும் என் சந்தேகத்தை நான் எந்த சித்தரிடம் போய் கேட்டு தெளிவு பெறுவேன்.

மனிதாபிமானம் உள்ள எவரும் அவரை மன நல காப்பகத்திலோ அல்லது மருத்துவ மனையிலோ சேர்த்து பாதுகாப்பது அல்லது அவரை உண்மையிலேயே சித்தராக அல்லது ஒரு மகானாக பாவிப்பவர்கள் அவரை குளிக்க வைத்து, தூய ஆடைகள், நல்ல உணவு அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து மரியாதை செய்யலாம்.

அதை விடுத்து அவரை இந்த இழிநிலையிலேயே வைத்து பார்ப்பது ஏற்புடையதல்ல என்பது என் கருத்து.

மேலும், நவ பாஷாணம் பாம்புக்கடி தேள்கடி, சர்வரோக நிவாரணிகள்  போன்ற அறிய சித்த மருத்துவ மூலிகை அருமருந்துகளை மனித குலத்தின் மேம்பாட்டிற்காக ஓலை சுவடிகள் மூலம் நமக்களித்ததாக சொல்லும் பதஞ்சலி சித்தர், அகத்தியர், கமலமுனி சித்தர் ,குதம்பை சித்தர்,கோரக்கர், போகர் போன்ற பதினெட்டு மாமுனிகள் -  சித்தர்கள்மேல்  மரியாதை கொண்டுள்ளவன் என்பதால் இவர்கள் போன்றோரை சித்தர் பட்டியலில் பதிவேற்றம் செய்ய   மனம் மறுக்கின்றது.

நண்பர்களே,

நான் யாருடைய நம்பிக்கையையும் கேலி செய்யும் நோக்கத்தில் இதனை பதிவிடவில்லை, என் சந்தேகத்தை / கருத்தை மட்டுமே பதிவாக்கி இருக்கின்றேன்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

1 கருத்து:

  1. இதெல்லாம் மக்களின் முட்டாள்தனம்..சுரைக்காய் சித்தர் என்று ஒருவரை வணங்கி வருகிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் இந்த பரோட்டா சித்தரும் இப்படியான கூட்டட்தில் ஒருவர்தான்...

    பித்தா பிறை சூடி பெருமாளே என்று பாடப்படும் சிவனின்/பித்தனின் மீது எல்லையற்ற பக்தி கொண்டு இருந்தவர்கள் தானே சித்தர்கள்

    பித்தன் பிடித்தவன் சித்தர் என்று சொல்லப்படுவதை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனரோ??!!!ஏனென்றால் பித்தனின் மீது பித்தம் பிடித்தவர்கள் கூடப் பேசுவது புரியாதாமே!!! பித்தன் என்பதைப் பித்தம் என்று??!!! புரிந்து கொண்ட முட்டாள்தனமாக இருக்கும்...

    இப்படி எனக்குத் தெரிந்தவர்கள் கூட இது போன்றிருப்பவர்களைச் சித்தர் என்றுதான் சொல்லி வருகின்றனர்...நீங்கள் யாருடைய நம்பிக்கையையும் கேலி செய்ய வில்லை ஏனென்றால் எங்கள் கருத்தும் இதேதான்...

    நல்ல பதிவு கோ!!

    பதிலளிநீக்கு