பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

துபாயில் பிச்சைக்காரர்கள்.....

(அ)தர்மம் தலைபோக்கும்!! .


நண்பர்களே,

முன் பகுதியை வாசிக்க ... மலைப்பூட்டும் சிலை கூட்டம்!! - 2 

மலைக்க வைத்த பல (மத) நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றாறாக ஓரிடத்தில் வைத்து வணங்கப்படும் சிலை வழிபாட்டு தளத்திலிருந்து வெளியில் வரும்போதும்,  பாதை குறுகலாக இருந்தாலும் , மனமென்னவோ விசாலமாகிவிட்டதாக  உணர்ந்தபடியே நடக்க ஆரம்பித்தேன்.

வெளியில் வந்து என்னுடைய காலனியை அடையாளம் கண்டு அணிந்துகொண்டு, நம்ம ஊர் வழக்கப்படி கோவிலுக்கு அருகில் அமர்ந்து யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்களுக்கு முடிந்த அளவிற்கு இனாம் அளித்துவிட்டு வந்தால்தான்  கோவிலுக்கு சென்று வந்ததற்கான  அர்த்தம் முழுமைபெறும் என்று எண்ணி பாக்கட்டில் கைவிட்டு பணம் எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

பிச்சைக்காரன்  என்ற பதத்திற்கு சரியான எதிர்பதம்  பணக்காரன் என்பது.

பணக்காரன் என்பதற்கு நேரடியான அர்த்தம் அரபு நாடுகள் என்பது. 

அத்தகைய பணக்கார நாடான துபாயின் பிரதானமான இந்துக்கோவிலின்முன் பணம் பொதிந்த கைகளுடன் நின்றுகொண்டு இங்குமங்கும் கண்களால் துழாவி பார்த்த எனக்கு ஒரே ஆச்சரியம்.

அங்கே , காலணிகளை ஒழுங்கு செய்து பாதுகாக்கும் நபர்கள், பழம் பூ, தாயத்து, திருஷ்டி கயிறுகள் , மஞ்சள் , குங்குமம் போன்ற பூசை பொருட்கள் விற்பனை செய்யும் ஆட்களை தவிர நான் எதிர்பார்த்த நிலையில் யாரையும் காண முடியவில்லை.

ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்து சற்று கீழிறங்கி  நாட்டு நடப்பு பொருட்களின் விலை, தரம், தன்மைகளை அறியும்பொருட்டு  அங்கிருந்த கடைகளுக்குள் தலை நுழைத்தேன்(உடம்பையும் சேர்த்துதான்.)

அருகிலிருந்த ஒரு பழ ரச கடை என்னை கவர்ந்திழுத்தது.

பழ ரச கடையில் அப்படி என்ன இருக்கப்போகிறது கவர்ந்திழுக்கும் படி ?

கடும் வெப்பம் காற்றோடு கலந்து முகத்தில் சுரீரென அறைந்துகொண்டிருந்த அந்த வேளையில் நா வறண்டு போனதை உணர முடிந்தது.

அந்த நேரத்தில்தான் அந்த பழ ரச கடை கண்ணில் பட்டது. உற்று நோக்குகையில் அந்த கடையில் பழ சாறு பிழியும் உபகரணங்களின்  அருகில் கரும்புச்சாறு பிழியும் சிறிய எந்திரமும் இருந்தது.

வறண்ட பூமியும் பாலைவனபடிமங்களாகவும் இருந்து இன்று சோலை ததும்பும் எழில்பூத்த நாடாக விளங்கினாலும் , கரும்பு விளையும் பூமியாக துபாயை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட இடத்தில் கரும்பு சாறு பிழியும் எந்திரத்தை கண்டதும் , அற்ப ஆசை என்னை சொற்ப நேரத்தில் ஆட்கொண்டது.

விரைந்தன கால்கள் கரும்பை நோக்கி படையெடுக்கும் எறும்பின் கால்களைப்போல. 

 கரும்பு சாறு கிடைக்குமா?

இதோ கொஞ்சம் இருங்கள் என கூறியபடி குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்ட முழு கரும்பு கொண்டு சாறுபிழிந்து நுரை ததும்ப கொடுத்தார் கடைக்காரர்.

வெல்லத்தையே கரைத்து கொடுத்தாற்போல் இனித்த கரும்புச்சாறு பருகிக்கொண்டே , என் சந்தேக கேள்வியினை கடைக்காரரிடம் எடுத்து வைத்தேன்.

எங்கள் ஊரில் கோவில் அருகில் பிச்சை காரர்கள் இருப்பார்கள் ஆனால் இங்கே ஒருவரையும் காண முடியவில்லையே?  துபாயில் பிச்சை காரர்கள் இல்லையா?

அவர் கூறிய பதில் மொழி கேட்ட எனக்கு வாயில் நுரையுடன்  நுழைந்த சுவை மிகுந்த கரும்புச்சாறு தொண்டையில் சிக்கிக்கொள்ள, என் காதுகளில் எட்டியின் கெட்டிச்சாறு கொட்டி தீர்த்தது.

எட்டி அளவிற்கு கசக்கும்படியான அவர் சொன்ன செய்தி என்ன?

நாளை பார்ப்போம்.

அதுவரை......

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ  

7 கருத்துகள்:

  1. அங்கேயும் இருப்பார்கள் என எதிர்பார்த்தீர்களா? :)

    என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்க்கவில்லை.

      வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்.

      தொடருங்கள்.

      கோ

      நீக்கு
  2. juice kadaikaar enna solli iruppaar??? hum kaalaila yosikka neram illa bank kuku kilampanam nalaikku pathivai vaasichu therinjcukkuren:)))).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      முதலில் பிழைப்பை பாருங்க பிறகு பதிவை பார்த்து கருத்து சொல்லுங்க.

      வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      கோ

      நீக்கு
  3. அவர் சொன்ன மறுமொழி இல்லை என்றிருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

      நானும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்; அதாவது நீங்கள் நினைப்பதுபோல் இல்லை என்று.

      வருகைக்கு மிக்கநன்றி ஐயா.

      கோ

      நீக்கு
  4. அங்கு யாசிப்பவர்களோ இல்லை வேலை இல்லாதவர்களோ இருப்பது கடினம் கோ! அதனால் அங்கு யாசிப்பவர்கள் இருக்கமாட்டார்கள். அது குற்றம். போலீஸ் யாரையாவது பார்த்தால் அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிடும். அவர்களுக்கு தங்கள் தாய் நாட்டிற்குச் செல்லும் அள்வு பணம் கிடைத்தால் மட்டுமே தாய்நாட்டைக் கான முடியும். அவர்களது உறவினர் யாராவது அறியவந்து பயணத்திற்கான பணம் கட்டி மீட்டால் உண்டு. இல்லை என்றால் சிறையில் இப்படி இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அந்த நாட்டில் சேவை புரியும் மனித நேயம் உள்ள தொண்டு நிறுவனம் மீட்டு அனுப்பினால் உண்டு...

    அங்கெல்லாம் பிச்சையெடுப்பது சட்டப்படி குற்றம்.. இது அங்கிருக்கும் எங்கள் உறவினர், நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்....சரியா கோ..அவர்களே!!

    பதிலளிநீக்கு