பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 பிப்ரவரி, 2017

நா-கரி-கம்.

"சிரிப்பாய் சிரிக்குது பொழப்பு!!"

நண்பர்களே,

மனிதனை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்தி  காண்பிப்பது புன்னகையும் சிரிப்பும் என்பன ஒருபுறமிருக்க மற்ற காரணிகளும் கை   கோர்த்து இருப்பதை மறுக்க முடியாது.

மனிதனைப்போலவே மிருகங்களும் குழுக்களாக, குடும்பங்களாக, சமூக கூட்டமைப்போடு வாழ்ந்தாலும் , தமக்கென்று ஒரு செய்தி தொடர்பு , செய்தி பரிவர்த்தனைக்கான ஒலி வடிவங்களை கையாண்டாலும், இன்னும் சொல்லப்போனால் , மயிர் நீத்தால் உயிர் நீக்கும் மானமும் ரோஷமும் மனிதர்களைவிட சற்று கூடுதலாகவே (சில) மிருகங்களிடம் இருக்கின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற உயரிய கோட்பாட்டின் எல்லை கோடுகளை தாண்டாமல்  சில மிருகங்கள் இவ்வுலகில் இருந்தாலும் மனிதன் மிருகங்களிடம் இருந்து பல வகைகளில் வேறுபட்டுதான் இருக்கின்றான். .

அவற்றுள் , வேகவைத்த உணவினை உண்பதும், உடலை - மானத்தை மறைக்க ஆடைகளை அணிந்துகொள்வதும்  , தட்ப வெப்ப கால மாற்றங்களின் சவால்களை- கொடிய விஷ  , விலங்குகளின் தாக்குதல்களை  எதிர்கொள்ளும் வகையில்  பாதுகாப்பான உறைவிடம் அமைத்துக்கொள்வதும் அடங்கும். 

அத்தோடு நன்மை தீமைகளை பகுத்தறிவது, எதிர்காலத்தை குறித்து திட்டமிடுவது, பின்விளைவுகளை முன்கூட்டியே கருத்தில்கொண்டு திட்டம் வகுப்பதும் மிருகங்களிடமிருந்து நம்மை வேறு படுத்தி காட்டக்கூடியவை.

மேலும் நாகரீகத்தின் உச்சம் என கருதப்படும் சக மனிதனை சமமாக தன்னைப்போலவே நேசிப்பதும் அவரது எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்கும்   செவி கொடுப்பதும், அவற்றுள் தங்களுக்கு ஏற்புடையவை ஏதேனும் இல்லாமல்  இருந்தால் அவற்றை பக்குவமாக எடுத்துரைப்பதும் அப்படி எடுத்துரைக்கப்பட்டவற்றை பொறுமையாக ஏறுக்கொள்வதும் அல்லது அதற்கான எதிர்ப்பை அமைதியான முறையில் வன்முறை கலவா நன்முறையில் தெரிவிப்பதும் கூட மனிதனை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் காரணிகளாக நான் பார்க்கிறேன்.  

ஆதி மனிதன் வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை தகவல் பரிமாற்றம் என்பது எத்தனை இன்றியமையாதவை என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போதுள்ள சூழலில் செய்தி ஊடகங்களின் தேவையும்  பயன்பாடும் எத்தனை இன்றியமையாதவை என்பதும் உருண்டோடும் கால சக்கரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கவும் எளிதாக உலக நடப்புகளை தெரிந்துகொள்ளவும் நாம் பெரும்பாலும் சார்ந்திருப்பது செய்தி ஊடகங்கள் என்றால் அது மிகை அல்ல.

அதிலும் உலகில் நிகழும் சில அசாதாரணமான நிகழ்வுகளையும் அவற்றின் பின்னணி மற்றும் தொடர் செய்திகளை அறிந்துகொள்வதற்கு பெரும்பான்மையானவர்கள் நாடுவதும் சார்ந்திருப்பதும், நம்பிக்கொண்டிருப்பதும் ஊடகங்கள், இணைய தள , மற்றும் சமூக வலைத்தளங்களை மட்டுமே.

இதுபோன்ற ஊடகங்கள் மூலம் நாம் அறிய தரப்படுகின்ற செய்திகளுக்கு பின்னால் எத்தனையோ செய்தியாளர்களின் கடும் உழைப்பும் தியாகமும் இருப்பதை நாம் அறிவோம்.

இப்படி அவர்கள் சேகரிக்கப்படும் செய்திகளின் ஊடே, சில பல மனிதர்களையும் நேர்காணல் செய்து செய்தி தருகின்றனர்.

அவ்வாறு சில பிரபல, மற்றும் பிரபலமற்ற மனிதர்களை பேட்டி எடுக்கும்போது செய்தியாளர்களும் அவற்றில் பங்குகொள்ளும் மனிதர்களும் கண்ணியத்தையும், பொறுமையையும், முன்னிலை படுத்தும் விதத்தில், அவருக்கு அடுத்து இவர், இவருக்கு அடுத்து அவர், அவர் பேசும்போது மற்றவர்கள்  அனுமதிக்க வேண்டும் -  அமைதி காக்கவேண்டும் , இவர் பேசும்போது குறுக்கீடு செய்ய கூடாது, கேள்விகளும் அதற்கான பதில்களும் மக்களுக்கு தெளிவாக சென்று சேரவேண்டும்  போன்ற வரைமுறைகளை பின்பற்றுவது நாகரீகத்தின் உச்சத்தின் மிச்சங்களாக கருதப்படும்.

இப்படி வெளி அரங்கிலும் உள் அரங்கிலும் பேட்டி அல்லது விவாதம் என்ற பெயரில் நடத்தப்படும் கேலி கூத்தான நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, வளர்ந்துள்ளதாக  கருதப்படும்  மனிதனின் நாகரீகம் இன்னும் போதுமான அளவிற்கு வளரவில்லையோ என சந்தேகிக்க  தோன்றுகின்றது.

இப்படி ஒரு களேபரத்தின் தொகுப்பை ஊடகங்கள் காட்டுவது தனது "நா"வாலே  தனது முகத்தில் "கரி"யை பூசிக்கொள்வதாக அமைவதோடு நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே  நிகழ்ச்சி முடிவதும் , செய்திகளை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்த மக்களின் பொன்னான நேரமும் வீணடிக்கப்படுவதை விட "கம்" என்று  இருப்பதே நாகரீகத்தின் வெளிப்பாடாகவும் மனிதனை மிருகங்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் செயலாகவும் அமையும்.

 அப்படி இல்லை என்றால், மிருகங்களும் மனிதனை பார்த்து சிரித்து, சிரிக்கும் விஷயத்தில் தம்மை மனிதனுக்கு சமனாக்கிக்கொள்ளும்  என்ற என் கருத்துடன் அமைகின்றேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 கருத்துகள்:

 1. அவர்களுக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி தனப்பால்.

   கோ

   நீக்கு
 2. தற்போதுள்ள ஊடகங்களின் நாகரீகம் மிகவும் கீழ்த்தரமாகவே உள்ளது. பரபரப்பான செய்திகளுக்காகவே ஊடக தர்மம் காக்கப்படுவதில்லை என்பதே உண்மை...நாட்டின் நாலாவது தூண் எனப்படும் ஊடகம் ம்ம்ம் என்ன சொல்ல நா கரி கம் அருமை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊடகங்களில் நாகரீகம் ஊடுருவவில்லையோ?

   வருகைக்கும் உங்களின் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

   கோ

   நீக்கு