பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

"குடி"யரசு வேண்டாம்!!




நண்பர்களே,
நம் வழி தனி,வழி!

அன்னை பாரதம் அகிலம் வியக்க
அரசராட்சி ஆணைகள் மகுடம் துறக்க
என்நாடு எனக்கே எனும்  குரல் ஒலிக்க
எழுந்ததே இந்நாள்  நாம் இனி  சிறக்க.

மக்களால் மக்களுக்கு பட்டாபிஷேகம்
மனசெல்லாம் மகிழ் ஊறும்  மா இன்ப  கோஷம் 
திக்கெட்டும்  முழங்கட்டும் நம் தேச கீர்த்தி
திசையெங்கும் படரட்டும் (புது)   நன்மைகள் போர்த்தி.  

முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை துவங்கி
மூவர்ணம் ஜொலிக்கட்டும்  நம் இமயத்தில் ஓங்கி.
எக்குறையும் இல்லாமல் இயங்கட்டும்  நாடு 
இனி நமக்கீடு நாமேதான்  என்றே தினம்  பாடு .

சாதி மத பேதமைகள் சாக்கடைக்குள்   போகட்டும் - நாடு   
சரித்திரங்கள் புகழ்மணக்கும் பூக்கடைகளாகட்டும்.
சாதனைகள் விண் கடந்து வீறு நடை போடட்டும் - இந்தியன்
சாதாரணமில்லை எனும் சங்கொலிகள் கூடட்டும்.

உயிர் தியாகம் பொருட் தியாகம் செய்திட்ட மேலோர் -நம் 
உள்ளத்தில்  என்றென்றும் உறைந்திருக்க  வேண்டும்
அயர்வின்றி கடும் உழைப்பு அனைவருக்கும்  தேவை - தேசம்  
அவனியிலே சிறந்திடவே அதுவே நம்  சேவை.

குடியரசு பெற்றதன் பலன் என்னவென்று 
குவலயத்தில் உள்ளோர் நிதம் புரிந்திடனும் நன்று.
முடிவில்லா பெரும் லஞ்சம்,வறுமை பிணி எனும்
முக்கொடிய பேயாட்டம் முடிக்கவேண்டும் கொன்று.

குடி கெடுக்கும் "குடி" அரசு நமக்கென்றும் வேண்டாம்
குடிமக்கள்  நலன் பேணும் - தாய்- மடி அரசு வேண்டும்
அடி தொழுவோம் அவ்வரசை ஆரத்தியோடு - நல்ல
முடிவெடுப்போம் இனியேனும் தெளி சிந்தைமனதோடு.

பாரதத்தின் மக்கள் நாம் நீதி நேர்மையோடு
பார்   - ரதத்தில் பயணிப்போம் சிந்தை கூர்மையோடு   
யார் தடுப்பார் எம்வெற்றி பயணத்தை இனி
பார் உணரும் என்றென்றும் நம் வழி தனி.

அனைவருக்கும் குடியரசு தின நாள் நல் வாழ்த்துக்கள்.

வாழ்க பாரதம் !

வந்தே மாதரம்!!..

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


4 கருத்துகள்:

  1. அழகு தமிழில் அருமையான வரிகளில் குடியரசை, "குடி"யரசாக வேண்டாம் என்று சொல்லி பார் ரதத்தில் பவனி வர விழையும் கோவிற்கு வாழ்த்துகள்!!! உங்கள்/நம் எல்லோரது விருப்பமும் நிறைவேறிட பிரார்த்திப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அன்பிற்கினிய நண்பர்களே.

      கோ

      நீக்கு