பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

அம்மாவின் உயிரை காப்பாற்ற.......

குடிப்பதா? கொடுப்பதா??

நண்பர்களே,

"அம்மா" என்ற அழகிய  சொல்லால் அழைக்கப்படும் எந்த பெண்ணும் , அந்த சொல்லுக்குரிய பண்புகள் குணங்கள், தகுதிகள் ,தன்னிடம் இல்லாவிட்டாலும்
அப்படி அழைக்கப்படும்போதே தன்னை ஒரு பவித்திர குணமுடைய தாயாக பாவிக்கின்றாள்.

வயது வித்தியாசம் பாராமல் அம்மா  என்று அழைக்கப்படும் ஒரு பெண் அழைப்பவருக்கு தன்னை ஒரு தாயாகவே  கருதி அதற்கான பாங்குடனும் பக்குவத்துடனும் கரிசனையுடனும் தியாக மனப்பான்மையுடனும் நடந்துகொள்ள முயற்சிக்கிறாள்.

இப்படி ரத்த சொந்தமோ, ஒட்டு உறவோ இல்லாதவர்கள் அழைக்கும்போதே, அழைக்கப்பட்டவருக்கு  அந்த வார்த்தை ஒரு உன்னதத்தை கொடுக்கும்போது தன் உயிரில் உருவான குழந்தை தன்னை "அம்மா" என அழைக்கும்போது அந்த அம்மா அந்த குழந்தைமேல்    காட்டும் பரிவையும் அன்பையும் சொல்லவும் வேண்டுமோ?

பத்துமாதம் கருவில் சுமந்து,  பேறுகாலத்தில்   தனது சுகத்தைப்பற்றி சிறிதேனும்   கவலை படாமல், இரவு பகல் விழித்தும் பல பத்தியங்களை, விரதங்களை மேற்கொண்டும்  , உபாதைகளை நெருக்கடிகளை , உடல் மற்றும் உளவியல் மாற்றங்களை சந்தித்து சமாளித்து பெற்று எடுத்த   குழந்தைக்கு அதன் வாழ்விற்கு  வளத்திற்கு, வளர்ச்சிக்கு  ஆரம்ப காலத்தில்  தன் ரத்தத்தை பாலாக்கி கொடுத்து அந்த குழந்தையை காக்கிறாள்.

குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை இன்றியமையாதது என அறிந்து பாலூட்டி சீராட்டி குழந்தையை வளர்கின்றாள்.

தாய் தன் பாலால் தன் குழந்தையை காப்பது என்பது ஒரு இயற்கையின் நியதி என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் பிறந்த சில மாதங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை  அதே பாலால் தன் தாயின் உயிரை காப்பாற்றி இருக்கும் விந்தை செய்தி அறிந்து வியந்துபோனேன்.

பிறந்த குழந்தை தன் தாயின் மார்பில் இருந்து ஊட்டப்பட்ட அமுதத்தை பருகிவந்தது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி, தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவந்த அந்த தாய்க்கு, மற்ற நவீன் யுவதிகளின் நாகரீக(???!!!)செயலான தாய்ப்பாலை கொடுக்காமல் புட்டிப்பாலையும் பார்முலா பாலையும் பவுடர் பாலையும் கொடுத்துவரும் இந்த காலகட்டத்தில், தன் செயல் மிகவும் பெருமிதமாக இருந்தது.

நான்கு மாதம் வரை எந்த சிணுங்கலும் இன்றி அமைதியாக இருந்த குழந்தை ஐந்தாவது மாதத்தில்   சில  மாற்றங்களை தன் செயலில் காட்டத்துவங்கியது. 

ஆனால்   பால் குடிக்கும் நேரத்தில் குழந்தையின் உடல் மொழியும் முகபாவமும் மாறுவதை ஆரம்பத்தில் அந்த தாய் உணரவில்லை.

பிறகு சில நாட்கள் கழித்து  எதேச்சையாக நிதானித்து கவனிக்கையில் குழந்தை தன் இடது  மார்பகத்தில் பால் குடிக்கும்போது சாதாரணமாகவும் தனது வலது  மார்பகத்தில் குடிக்கும்போது முகம் சிணுங்குவதையும், நெற்றி சுருங்குவதையும் வீறிட்டு அழுவதையும் கண்டு ஆரம்பத்தில்  அந்த  தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை. 

மீண்டும்  மீண்டும் பரிசோதனையின் அடிப்படையில் பாலூட்டியபோது அதேபோல குழந்தையின் நடவடிக்கை அமைந்ததை அலட்சியப்படுத்தாமல், குழந்தை தன்னிடம் ஏதோ செய்தி  சொல்ல  முயற்சிப்பதை தன் உள்ளுணர்வு மூலம் அறிந்து நேராக  குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கின்றார் அந்த அம்மா.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர் , குழந்தைக்கு எந்த குறையும் இல்லை, ஒருவேளை உங்களிடம் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என பரிசோதிக்க, அந்த தாய்க்கு வலது மார்பகத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவந்திருக்கிறது.

அதுவரை எந்த உடல் கோளாறும் அயர்வும் சோர்வும் நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாது  இருந்த அந்த தாய்க்கு புற்றுநோய் இருப்பதை உணர்த்திய அந்த குழந்தையின் செயல் இப்போது அந்த அம்மாவை காப்பாற்றி இருக்கின்றது.

தாய்ப்பால் ஒரு குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பாசத்தின் பந்தத்தை உறுதியாக்கும் என்று மட்டுமே அறிந்திருந்த தனக்கு தாய்ப்பால் மூலம்   ஒரு குழந்தை அதன் அம்மாவின் உயிரையும் காப்பாற்ற முடியும் என்ற உண்மையை புரிந்துகொண்டதாக கண்ணீர் மல்க கூறிய அந்த  26 வயதான இளம்தாய்  இப்போது நோய்க்குண்டான  மருத்துவ சிகிச்சை பெற்று நலமுடனும் மகிழ்வுடனும் இருக்கின்றார்.

கருவில் சுமந்து உயிர் கொடுத்த   தன் தாயிற்கு   பிரதி உபகாரமாக     உயிர்கொடுத்து மறுவாழ்வளித்த  அந்த குழந்தையின் பெயர் டெட்டி(Teddy) , இந்த மாதம் 1 வயது.

"தாய்ப்பால் குடிப்பது குழந்தைகளுக்கும் கொடுப்பது தாய்மார்களுக்கும்"  எத்தனை முக்கியம் என்பதை இந்த இளம் தாயின்  வாழ்வு இந்த உலகிற்கு ஓங்கி உரைக்கின்றது.

 தாய்ப்பால் கொடுத்தால் அழகும் வசீகரமும் குறைந்து விடும் என்று எண்ணி   கற்பனையில் வாழும்  இளம் தாய்மார்களுக்கும்,  குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் எல்லா தாய்மார்களுக்கும் அழகைவிட உயிரும் வசீகரத்தைவிட வாழ்வும் மிக மிக முக்கியம் எனும் உண்மையை  அறிவுரையாக -  வேண்டுகோளாக வைத்துள்ளார் தமது உயிர் மீண்ட அனுபவத்தில் இருந்து.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

2 கருத்துகள்: