பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 31 மே, 2015

"பயணம் மகிழ்வானதாகட்டும்"

வாழ்த்துக்கள்!!

நண்பர்களே,

நம்மில் யாரேனும் வெளி ஊர் அல்லது வெளி நாடு பயணம் மேற்கொள்ளும்போது, நமது நண்பர்கள், உறவினர்கள், அல்லது நமது நலம் விரும்புவோர், நம்மை வாழ்த்தி நமது பயணம் நல்லபடியாக அமைய நல் வார்த்தைகளை சொல்லி வழி அனுப்புவது வழக்கம்.


பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் என்று சொல்வது,நாம் பயணபடுவது , இரு சக்கர வாகனமாகவோ,காராகவோ, பேருந்தாகவோ, ரயிலாகவோ, விமானமாகவோ, கப்பலாகவோ, கால் நடை பயனமாகவோகூட இருந்து அதில்  ஒரு இடத்தில் இருந்து நாம் சேர வேண்டிய மற்றொரு இடத்தை அடையும் வரை மேற்கொள்ளும் பயண நேரத்தையே குறிப்பதாகவும் அந்த பயணம் நமக்கு சௌகரியமாகவும், பதட்டமில்லாததாகவும், சந்தோஷமானதாகவும், பாதுகாப்பானதாகவும், இடைஞ்சல் இல்லாததாகவும்,பக்கத்து இருக்கையில் இருப்பவர் தொனதொனனு பேசாமலிருப்பவராகவும்,பயணத்தின்போது நல்ல உணவு கிடைக்கவேண்டும், எல்லாம் நல்லபடியாக அமையவேண்டும் எனவும்  வாழ்த்துவதாக பொருள்படுகிறது.

ஆனால், அவற்றையும் சேர்த்து, நாம் எந்த காரியத்திற்காக பயணபடுகின்றோமோ, அந்த காரியங்கள் நமக்கு கைகூடவும், அந்த காரியங்களில் எந்த சிக்கலோ, பிரச்சனைகளோ, தடைகளோ, நெருக்கடிகளோ, தாமதமோ, ஏமாற்றமோ ஏற்படாமல், நினைத்த காரியங்கள் நினைத்தபடி , சந்தோஷமாக, மகிழ்ச்சியாக கைகூடி, வெற்றிகரமாக முடித்துவிட்டு, வெற்றி களிப்புடன் மீண்டும் திரும்பி வந்து உங்கள் மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து மகிழும் வண்ணம் உங்கள் பயணம் அமைய வாழ்த்துக்கள் என்று சொல்லபடுகின்றது என்பதாகவே எனக்கு தோன்றுகின்றது. 

இதுபோன்று நல்லுள்ளம் கொண்டு மனதார வாழ்த்தும் வாழ்த்துக்கள், பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு நல்ல மன நிலைமையையும்,மகிழ்ச்சியையும், உளவியல் ரீதியான, உறுதியான, திடமான ஒரு நம்பிக்கையையும்  தெளிவையும் அந்த பயணம் முழுவதும் தருவதாக அமையும்.

இப்படித்தான்,பல வருடங்களுக்கு முன் வளைகுடா நாட்டிலிருந்து விடுமுறையில் தாயகம் நோக்கி புறப்பட தயாராகும்போது என் நண்பர்கள் என்னை விமான நிலையம் வரை வந்து வாழ்த்தி பயணம் நல்லபடியாக அமையட்டும் என்று கூறி வழி அனுப்பி வைத்தனர்.

இப்படி விமான நிலையத்தில் உள்ளே நுழையும் சமயத்தில் என் பெயரை சத்தமாக அழைத்தபடி வேகமாக நுழைந்த எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரை சார்ந்த ஒருவர், இதை எங்கள் வீட்டில் கொடுத்துவிடுங்கள், நேற்றே வந்து கொடுக்க நினைத்தேன் ஆனால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது, என்று கூறி சுமார் ஒரு ஐந்து கிலோ எடைகொண்ட பார்சலை என்னிடம் நீட்டி "உங்கள் பயணம் நல்லபடியாக அமையட்டும்" என கூறினார்.

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத ஆளிடமிருந்து எதிர்பாராத ஒரு பார்சல் என்னிடம் கொடுக்கபட்டதும் , என்ன செய்வதென்று புரியாமல் ஒருகணம் திகைத்தேன், ஏனென்றால், எனக்கு எத்தனை கிலோ எடை அனுமதிக்கபட்டிருந்ததோ அத்தனையும் என்னிடம் ஏறக்குறைய துல்லியமாக இருந்தது.  மேற்கொண்டு எதையும் நான் எடுத்துசெல்ல சலுகை இல்லை, அப்படியும் மீறி எடுத்து செல்ல வேண்டுமானால், அதற்க்குண்டான தொகையை கட்ட வேண்டும், பல வேளைகளில், சுண்டைக்காய்களைவிட  சுமைகூலி மூன்றுமடங்காகிவிடும். 

அவரிடம் மறுத்துகூறவும் முடியவில்லை,அதே சமயத்தில் என் பெட்டியிலும் இடமில்லை, என்னுடைய கைப்பை , அதாவது காபின் பேகஜ் அதிலும் இடமில்லை.

ஆனால் அவரோ அதை பற்றி தெரியாதவராய், கொஞ்சம் பத்திரமாக  கொண்டு சென்று கொடுத்துவிடுங்கள் இது என் மனைவிக்கு இரண்டு சாரிகளும் (நமக்கு தான் "சாரி"னாலே புடிக்காதே) பிள்ளைகளுக்கு சட்டைகளும் கொஞ்சம் விளையாட்டு பொம்மைகளும், கொஞ்சம் பேரீச்சை பழங்களும் கொஞ்சம் பிஸ்தா பருப்புகளும்....

அவரின் வாழ்த்துக்கள் எனக்கு அர்த்தமற்றதாக இருந்தாலும் அவரை சந்தோஷபடுத்தும் எண்ணத்தில்,என் கைப்பையிலிருந்த என் அக்கா குழந்தைகளுக்கு வாங்கி வைத்திருந்த கரடிபொம்மைகள் இரண்டையும், என் தம்பிக்கு என மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கிவைத்திருந்த ஒரு ஜோடி கேட்டர் பில்லர் ஷூவையும் எடுத்து என் நண்பர்களிடத்தில் கொடுத்து திருப்பி எடுத்து செல்லும்படி கூறிவிட்டு, எங்க பக்கத்து ஊரார் கொடுத்த பார்சலை பையுக்குள் அடைத்து ஊருக்கு சென்று அவரது வீட்டில் சேர்த்தேன்.

Image result for pictures of luggage

இப்படி  பேருக்காக உதட்டளவில் வாழ்த்து சொல்லி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை நாசூக்காக சாதித்து கொள்ள நினைக்கும் ஒரு சிலரின்  வாழ்த்துக்களுக்கு அர்த்தமோ பலனோ  இல்லை.

அன்று அந்த பயணம் எனக்கு மனநிறைவாக அமைந்ததா? தெரியாது; ஆனால் அந்த  என் பயணம் "அந்த" நபருக்கு மனநிறைவாய் அமைந்திருக்கும் கண்டிப்பாக, ஏனென்றால், நான் விடுமுறை முடிந்து திரும்பும்போது,அவரது மனைவி கொண்டவந்த, மிளகாய்பொடி, தனியாபொடி, மஞ்சள் பொடி, இட்டிலிபொடி, வடகம், ஊறுக்காய், மாம்பழம், அதிரசம், மிளகாய் வற்றல் அடங்கிய சுமார் 7 கிலோ மினி மளிகைக்கடையை, "அவர் உங்ககிட்ட கொடுத்தனுப்பசொன்னார்" என்று கொடுத்துவிட்டு ,  "அவர ஒடம்ப பாத்துக்க சொல்லுங்க; நல்லபடியா போயிட்டு வாங்க" என்று "வாயார-மனதார" வாழ்த்தி அனுப்பினார், நானும் கொண்டு சென்று சேர்த்தேன்.

வாழ்த்துக்கள் உள்ளத்தில் இருந்து வரட்டும், உண்மையிலேயே, பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்தும்போது பயணபடுபவரின் பயணம் சௌகரியமாக அமையும் பொருட்டு  முடிந்த நல்ல காரியங்களை பயணம் சுகமாக அமையும் படி செய்வோம்  மாறாக சுமையாக அமையும்படி செய்யாமலிருக்க (சிலர்) பழகவேண்டும்.

இன்று மாலை தொலை தூர தேசத்தில் வாழும் என் நண்பர் ஒருவர், எனக்கு , தொலைபேசிமூலம் அழைத்து ஊருக்கு செல்ல இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன, போய் வருகின்றேன் என கூறியபோது அவரது பயணம் இனிமையான பயணமாகவும் அவரது பயண நோக்கம் நல்லபடி  நிறைவேற வேண்டும் எனவும், ஊரிலிருக்கும் அவரது நண்பர்களோடும், உறவினர்களோடும், நலம் விரும்பிகளோடும்,தமது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்து மீண்டும் சுகமான பாதுகாப்பான  பயணம்  அமைய வேண்டுமென வாழ்த்துக்கள் கூறி   வழி அனுப்பி இருக்கின்றேன்.

எங்கள் இருவருக்குமுள்ள நெருங்கிய "சகவாசம்" அப்படி,

Image result for pictures of bon voyage

நீங்களும் என்னோடு சேர்ந்து அவரது பயணத்தை வாழ்த்துவீர்கள் என நம்புகின்றேன்,  ஒருவேளை இந்தியாவில் இருக்கும் உங்களில் சிலரை நேரில் பார்க்கத்தான்  வந்துகொண்டிருக்கின்றாரோ என்னவோ? 

யார் அவர்?  யாமறியோம் பராபரமே!.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ 13 கருத்துகள்:

 1. நேரில் வாழ்த்த காத்திருக்கிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனப்பால்,

   ரொம்ப சந்தோசம்.

   என் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 2. சுண்டைக்கைகளைவிட சுமைகூலி மூன்றுமடங்காகிவிடும். புரியவில்லை,
  உங்களுக்கு கஷ்டம் தான் போங்க,
  நாங்களும் வாழ்த்துகிறோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நீங்க சொல்றதுதான் எனக்கு புரியவில்லை.

  மீண்டும் சரியாக வாசித்துவிட்டு வாருங்கள் பிறகு சொல்கிறேன் விளக்கத்தை.
  வருகைக்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் விளக்கிக்கொண்டேன். நன்றி , பசுத்தோல் போர்த்தாத அரசனே.

   நீக்கு
  2. மகேஸ்வரிக்கு ஒரு செய்தி: மடைதிறந்த வெள்ளமென மனம்திறந்து மடல் பதித்த உங்கள் எழுத்துக்களில் எந்த எதிர் வாக்கும் செய்யவில்லை அதன் கருத்துக்களிலும் கடுகளவேனும் களங்கம் இல்லாமல்தான் இருக்கின்றது எனினும் பசுதோல் போர்த்தாத அரசன் என்று நீங்கள் சொல்வதில் ஒரு சிறு பிழை திருத்தம் செய்யவேண்டி இருக்கின்றது.

   வாட்டி வதைக்கும் இந்த நாட்டு குளிரிலிருந்து காத்துக்கொள்ள அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் ஏதேனும் ஒரு மிருகத்தின் தோலால் அல்லது உரோமத்தால் செய்யப்பட்ட மேலாடையை அணிந்தே தான் ஆகவேண்டும் இதில் நான் மட்டும் எப்படி விதி விலக்காக முடியும் என்பதையும் இது எந்தன் விதி என்பதையும் விளக்கவே இந்த பதில்.

   அவ்வகையில் நானும் பசுதோல் போர்த்திய சாதுவான "கோ" தான் , எருமைத்தோல் போர்த்தியா ஏடாகூடமானவன் அல்ல இந்த "கோ" என்பதை புரிந்துகொள்ளுங் "கோ".

   நட்புடன்

   கோ

   நீக்கு
  3. வணக்கம் அரசே,
   நன்றிகள் பல.

   நீக்கு
  4. வணக்கம் அரசே,
   நன்றிகள் பல.

   நீக்கு
  5. பேராசிரியரே.

   உங்களுக்கும் நன்றிகள் பல,

   நீக்கு
 4. சகவாசம் ... நன்றாக சொன்னீர் ஐயா .. அருமையான பதிவு ... வாழ்த்துக்கள் . நானும் வருட கணக்கில் இந்த சர்வதேச பயணம் செய்துள்ளேன். இது ஒரு அன்பு தொல்லை பிரச்சனை தான்.

  பதிலளிநீக்கு
 5. நண்பர் கோ! நீங்கள் சொல்லவே வேண்டாம், தொலை தூரத்திலுள்ள நண்பரை வாழ்த்தினேன் தொலை பேசியில் என்று அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாதா என்ன? அதற்கு க்ளூ கொடுப்பது போல சகவாசம் ஹஹஹஹாஹ்...

  உங்கள், எங்கள் நண்பரை வரவேற்று வாழ்த்திட காத்திருக்கின்றோம். தொடர்பிலும் இருந்துவருகின்றோம்....உங்களைப் பற்றிக் கூட பேசினோம்.....அதெல்லாம் என்ன என்று கேட்கக் கூடாது!

  நல்ல பதிவு நண்பரே! நாங்களும் இது போன்ற பயணங்களில் அன்புத் தொல்லைகள் ஏராளமாக இருக்கும்...மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்.....என்று ....

  உங்கள் நண்பர் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார். அவரது பணிகள் செவ்வனே நடந்து வருகின்றது.....இப்போதைக்கு இது. பின்னர் தொகுக்கின்றோம் நிகழ்வைப் பற்றி....

  பதிலளிநீக்கு
 6. அன்பிற்கினிய நண்பர்களே,

  நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொடர்பில் வந்த தங்களின் மடல் கண்டு, மடல் வாழை இலைஎனவே மலர்ந்த மனம் மகிழ்ந்தது.
  நீங்களும் பயணத்தில் இருந்ததாக அறிந்தேன். என்னை பற்றிபேச என்ன இருந்திருக்கும்? ம்ம்ம்.... வெறும் வாயிக்கு அவல் கிடைத்தமாதிரியா? என்னை பற்றாமல் - பற்றி கொள்ளாமல் இனி உங்களால் பேசாமல் இருக்க கூடுமோ?

  விழாவினை சிறப்புடன் நடத்துவீர்கள் என எனக்கு தெரியும்., அங்கே வருகைதரும் என்னை அறிந்த அனைவருக்கும் என் அன்பின் விசாரிப்புகளையும், வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தயவாக சொல்லவும்.

  எழுத்து குவியலை எழிலோடு சிக்கெடுத்து, பழகூடையாய் பந்தியை அலங்கரிக்கும் உங்களின் அன்பான சேவை - உங்கள் "சகவாசம்" கிடைத்ததை குறித்து உள்ளம் "சுகவாசம்" கொள்கிறது.

  வாழ்க நலமுடன் - வளமுடன்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு