பின்பற்றுபவர்கள்

சனி, 2 மே, 2015

"கொடுத்து வைத்தவர்கள்"


கடன்-வட்டி

நண்பர்களே,

நாம் அன்றாடும் கேட்க்கும் சொற்றொடர்களுள் , உனக்கென்னப்பா, நீ "கொடுத்து வைத்தவன்", அவனுக்கென்னப்பா அவன் "கொடுத்து வைத்தவன்", அவர்கள் "கொடுத்து வைத்தவர்கள்".....இவர்கள் "கொடுத்து வைத்தவர்கள்" .... போன்றவையும் அடங்கும்.

நம்மை விட, நமக்கு கிடைத்ததைவிட, அதிகமாக அல்லது நமக்கு கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைக்கும் தருணங்களில், கிடைத்தவர்களை - மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பவர்களை குறித்து சொல்லும்போது அவர்கள் "கொடுத்து வைத்தவர்கள்" என்று சொல்வதுண்டு.

ஒருவன்  நல்ல வேலையில் அமர்ந்தாலோ,அல்லது நல்லபடி திருமணம் நடந்தாலோ, அல்லது கார் பங்களா பண வசதி கொண்டவனாக இருந்தாலோ அல்லது பெரிய தலைவர்கள்,அல்லது மகான்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்தாலோ , அல்லது சாதாரணமாக ரேஷன் கடைகளில் நமக்கு கிடைக்காத மளிகை மண்ணெண்ணெய் மற்றவர்களுக்கு கிடைத்தால் கூட, கிடைத்தவர்களை "கொடுத்து வைத்தவர்கள்"  என்று சொல்ல கேட்டிருக்கின்றோம்.

(இதில் ரெண்டு பொண்டாட்டி காரனையும், கொடுத்து வைத்தவன் என்று சொல்வது எப்படி என்று எனக்கு தெரியவில்லை, அவன் பாடு அவனுக்குதானே தெரியும்?)

வயதாகியும் திருமணமாகாதவன், சரியான வயதில் திருமணம் நடந்தவனை கொடுத்து வைத்தவன் என்றும் , அப்படி திருமணம் ஆகியும் "மனதுக்கு ஏற்ற மாங்கல்யம்" அமையாதவன் மற்றவனை பார்த்தும், இப்படி "கொடுத்து வைத்தவர்கள்" என சொல்வதை கேட்டிருக்கின்றோம்.

Image result for pictures of happy people

அப்படி "கொடுத்து வைத்தவர்கள் " என்று சொல்வது யார், யாரிடம் என்ன கொடுத்து வைத்தவர்கள் என்ற கேள்வி எழுகின்றது.

நாம் யாரிடமாவது பணத்தையோ, பொருட்களையோ எதையாவது கொடுத்து வைத்திருந்து அதை நமக்கு தேவைப்படும் நேரத்தில் திரும்ப பெற்று அதை பயன்படுத்துவதை வேண்டுமானால் கொடுத்து வைத்தவர்கள் எனலாம்.

யோசிக்கும் போது, "தீதும் நன்றும் பிறர் தர வாரா" எனும் முதுமொழிக்கேற்ப்ப நடக்கும் நல்லது கெட்டதுக்கு நாமே காரணம் என்று சொல்வதையும் முழுமையாக ஏற்க முடியாது. 

அப்படி ஏற்பதானால், " இதெல்லாம் உங்க முன்னோர் செய்த புண்ணியம்", "பெற்றோர் செய்யும் நன்மைகள் பிள்ளைகளை வந்தடையும்" என்று சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் , அர்த்தமற்றதாகிவிடுமே?

சரி அப்படியானால், கொடுத்து  வைத்தவர்கள் என்றால் என்ன என்று யோசிக்கும்போது, பள்ளி பருவத்தில்,நல்லொழுக்க பாட வகுப்பில் ஆசிரியர் கூறிய  ஒரு கூற்றும் அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் என் நினைவுக்கு வந்தது.

அதாவது, நம்மை விட ஏழ்மையில், வறுமையில், பசியில், பிணியில், துன்பத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த  நன்மைகளை , உதவிகளை, ஆறுதலை,ஒத்தாசைகளை செய்வது என்பது கடவுளுக்கு நாம் கொடுக்கும் "கடன்" ஆகுமாம். அப்படி கொடுக்கப்பட்ட கடன்தான் நமக்கு ஏற்ற நேரத்தில்,நன்மைகளாக, ஆசீர்வாதங்களாக   வந்து சேருகின்றதாம்.

"ஏழைக்கு இறங்குகின்றவன்  கடவுளுக்கு கடன் கொடுக்கின்றான்".

இதைதான் கடவுளிடம் (கடன்) "கொடுத்து வைத்தவர்கள்" என்பதன் சுருக்கமாக "கொடுத்து வைத்தவர்கள்" என்று சொல்லுவதாக எனக்கு படுகின்றது.

அப்படி கடவுளிடம் கொடுத்து வைக்கப்பட்ட கடன் நமக்கு  மட்டுமல்லாது நமது தலைமுறைக்கும் காலாகாலமாக ஏற்ற நேரத்தில்  வந்து  உதவும், காக்கும் , நம்மை பார்த்து இந்த உலகம் "கொடுத்து வைத்தவர்கள் என்று கூறும்.

எனவே   நாம் நம்மால் முடிந்த நன்மைகளை நம்மைவிட நலிந்தவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கு மனமுவந்து   பிரதி பலன் எதிர்பாராமல் செய்யும்  "தர்மம் நம்மையும் நம் தலை(முறை)யையும் காக்கும்".

 என்னை பொருத்தவரை, நாம் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் தான், இல்லை என்றால், இந்த மண்ணில், நாம் இந்திய , தமிழ் பெற்றோருக்கு பிள்ளைகளாக பிறந்திருப்போமா, அல்லது நல்ல  உணவு உடை உறைவிடங்களை பெற்றிருப்போமா?   நல்ல கல்வி  கற்றிருப்போமா? அல்லது இந்த வலை தளத்தின் வாயிலாக நமக்கு இப்படி ஒரு நட்ப்பு பந்தம் நிகழ்ந்திருக்குமா? அல்லது தமிழால் ஒன்றுபட்டிருக்கும்  இந்த கிடைத்தற்கரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்குமா? அல்லது இந்த செம்மொழி நமக்கு தாய் மொழியாகத்தான்  கிடைத்திருக்குமா?

பின் குறிப்பு:
ஒரு விதத்தில் நீங்கள் எல்லோரும் என்னைவிட அதிகம் கொடுத்து வைத்தவர்களாக  இருக்க வேண்டும் என நினைக்கின்றேன், இல்லை என்றால் "கோ"வின் பதிவுகளை படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிட்டியிருக்குமா?(!!!!)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தனப்பால்,

   வருகைக்கு மிக்க நன்றி.

   நட்புடன்

   கோ

   நீக்கு
 2. பெயரில்லா2 மே, 2015 அன்று PM 9:49

  மிக சரியான கருத்தாக தோன்றுகிறது. ஆனாலும் நம் நாட்டில் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை ஏன் என்று தாங்கள் விளக்கினால் நன்று. பற்பல அவலங்கள் நிறைந்த நாடு நம்முடையது. எங்கும் ஏமாற்று, சாதி , பார்பனிய கொடுமை., கடவுள் பெயரால் நடக்கும் அவலங்கள் சொல்லி முடியாது. ஒரு தாழ்த்த பட்ட அல்லது முடி திருத்தும்,அல்லது இதை போன்ற குடும்பத்திலோ பிறந்து வாழ்க்கை முழுதும் இவர்கள் உழைப்பை திருடி கொண்டு தொடர்ந்து இழிவு படுத்த பட்டு வாழ்பவர்களுக்கு எப்படி தோன்றும் இங்கு பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று.

  பதிலளிநீக்கு
 3. நண்பரே,

  வணக்கம்.

  தங்களின் ஆதங்கத்தில் பங்கேற்கின்றேன்.

  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவலங்கள் குறித்து வருந்துகின்றேன். எத்தனை சிறுமையிலும், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துபார்த்து நிம்மதி நாடும்" வண்ணம் , எல்லோரும் கொடுத்துவைத்தவர்களே என்று நினைக்கும் அளவிற்கு எல்லாம் வல்ல பரம்பொருள் நம் வாழ்வுக்கு ஒரு பொருள் வைத்திருக்கின்றான் என நம்புகின்றேன்.

  நான் குறிப்பிட்ட வண்ணம் கொடுத்து வைத்தவர்கள் என்பவர்கள் வாழ்வின் எல்லா கூறுகளிலும் தன்னிறைவோடிருப்பவர்கள் அல்லவே, சில விஷயங்களில் மற்றவர்களை விட , உலகத்தின் பார்வையில் கொஞ்சம் கூடுதலாக சிறப்பு பெற்றவர்களே.

  உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்களை ஒப்புமை செய்து பார்க்கயில் இந்தியனாக பிறந்தமைக்கு நான் கொடுத்துவைத்தவன் எனும் என்னுடைய கருத்தையே பதிவாக்கினேனே தவிர என் கருத்தை பொதுவாக்கவில்லை. .

  நீங்கள் சொல்லும் exploitation வன்மையாக கண்டிக்கபடதக்கதே, தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே , பாப்போம் பொறுத்திருந்து.

  வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி தெய்வத்தை பதிவில் இழுத்தீர்களானால் ஒரு கும்பலே என்ன ஏதென்று தெரியாமலேயே போட்டுத் தாக்க தயாராக இருக்கிறது அன்பரே.
   எச்சரிக்கை.

   God bless You

   நீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றி.

   தெய்வமே...தெய்வமே.....

   கடவுளின் அருளாசி வழங்கிய உங்களுக்கும் பாக்கியம் உண்டாகட்டும்.

   கோ

   நீக்கு