நான் தயார் நீ தயாரா?
மழை வரும், வெயில் அடிக்கும் என்று அறிந்து குடையை கூடவே கொண்டு செல்பவர்களை நமக்கு தெரியும்
அதே போல, காலை எழுந்த உடன் பசிக்கும் என்று தெரிந்து அதற்கான உணவு பொருட்களை முன்தினமே தயார்படுத்துவதும் அடுத்த வேளை உணவிற்கு அதை முன்னமே தயாரித்து வைத்து வேளா வேளைக்கு சாப்பிடுவதும் உலகில் சர்வ சாதாரணமாக நடக்கும் தயார் நிலை வேலைகள் தான்.
நோய், அல்லது நோய் கிருமிகள் தாக்க கூடும் என்றறிந்து அதற்கான முன்னெச்சரிக்கை ஆயத்தங்கள் செய்வதையும் நாம் காணும் ஒரு தீர்க்க தரிசன நடவடிக்கை.
சுனாமி வருமா?,புயல் வீசுமா?, பூகம்பம் வருமா? , என்று தெரியமலேகூட ஒரு சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உலகில் ஆங்காங்கே நடப்பது கண்கூடு..
ஆனால் ஒரு விஷயம் எல்லோரின் வாழ்விலும் அதி நிச்சயம் என்று தெரிந்த ஒன்றைக்குறித்து உலகில் எத்தனை பேர்கள் அதற்க்கான தயார் நிலையை உருவாக்கி அதை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றனர் என்ற கேள்விக்கு பதில்அவ்வளவாக கிடைப்பது இல்லை.
இன்னும் சொல்லபோனால், அந்த ஒன்றைக் குறித்து யோசிப்பதையோ, பேசுவதையோ கூட நம்மில் பெரும்பான்மையானோர் விரும்புவதில்லை.
சர்க்கரை என்றால் இனிக்கபோவதுமில்லை, நெருப்பென்றால் சுட்டு விட போவதுமில்லை எனினும் இந்த ஒன்றை குறித்து நம்மில் பெரும்பான்மையானோர் அச்சம் கொள்வதை தவிர்ப்பதாகவும் தெரியவில்லை.
"எது" சம்பந்தமாக சொல்ல வருகிறேன் என்பது புரிந்து இருக்கும்.
ஆம் "அது" சம்பந்தமாகத்தான் என்றாலும் " அதை" பற்றியதான வியாக்கியானங்கள் அல்ல.
என்னதான் ஆன்மீக வாதியாகவோ, அல்லது முற்றும் துறந்த ஞானியாகவோ, அல்லது முற்போக்கு சிந்தனையாளனாகவோ,சரித்திர புருஷனாகவோ இருந்தாலும் கூட தமது மரணத்தை குறித்த ஒரு பயம், திகில் இருக்கத்தான் செய்யும், இது மனித இயல்பு.
எங்கோ ஓரிருவர் தங்களின் இறுதி நாளை முன்னமே தீர்க்கமாக அறிந்து அதற்கான முன்னேற்பாடுகளை ஆயத்தம் செய்யும் பொருட்டு, பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பது, பிள்ளைகளின் திருமண காரியங்களை துரிதபடுத்துவது, சொத்துக்களை பிரித்து அல்லது அதற்கான உயில் போன்றவற்றை தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதை கேள்விபட்டிருப்போம்.
ஆனால், இங்கே நான் குறிப்பிட போகும் அந்த நபர், "மேலே" சொன்ன எல்லா வற்றிற்கும் ஒரு படி "மேலே" சென்று, தான் "மேலே" செல்லபோகும் நாள் என்று, என்று அறியாமலேயே, அந்த நாள் என்று வந்தாலும் அதற்கு தான் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக செய்து வைத்திருந்த சில முன்னேற்பாடு ஒழுங்குகளை அறிந்தபோது என்னைபோல என் ஊரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ,அவரது சுற்றத்தார் மத்தியிலும் ஒரு பெரிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
அவர் பெயர் ராதை மணாளன், குழல் ஊதும் கிருஷ்ணனின் மறுபெயர். வரலாற்று சிறப்புமிக்க ஒரு உயர்நிலை பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், சமூகத்தில் மிகுந்த மரியாதைக்குரியவர்.
பெற்றெடுத்த பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து சிறப்பான வேலைகளில் அமர்த்தி, தகுதி வாய்ந்த துணைகளை இணைத்து , உன்னதமான நிலைகளில் திரைகடல் தாண்டி, பிள்ளைகளின் விருப்பபடி, வெளிநாடுகளில் செழிப்போடு வாழ வைத்தார்.
மனைவியை பல வருடங்களுக்கு முன் இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த அவரை அவரது பிள்ளைகள் எவ்வளவோ கட்டாயபடுத்தி தங்களோடு வெளி நாடுகளில் வந்து தங்கும்படி வற்புறுத்தியும், அவருக்கு வெளி நாட்டு வாழ்க்கை பிடித்தமானதாக இல்லாததால், அவர் மட்டும் அந்த வீட்டில் யாருடைய உதவியுமின்றி வாழ்ந்து வந்தார்.
அடிக்கடி தன் பிள்ளைகளோடு தொலைபேசியிலும், கடிதங்களின் வாயிலாகவும் தொடர்பில் இருந்தாலும் எதற்கும் தன் பிள்ளைகளை தொந்தரவு செய்ய விரும்பாமல், தனது ஓய்வூதியத்தில் தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தார்.
வயது ஆனாலும் ,அவரது, நடை உடை பேச்சிக்களில் ஒரு கம்பீரம் எப்போதும் கம்பீரமாகவே குடி கொண்டிருக்கும்.
காலையில் நான்கு மணிக்கு எழுந்து, தனது மூத்த மகள் அன்போடு வாங்கி கொடுத்திருந்த டேப்பில் தெய்வீக கீர்த்தனைகளை கேட்டவண்ணம் பல் துலக்கி, முகம் கழுவி விட்டு காலை உணவை தயாரித்து முடித்துவிட்டு,
காலை 5 மணிக்கு பால் காரர் கொண்டுவரும் பாலை வங்கி வைத்து விட்டு நடை பயிற்சி, பின்னர் குளித்துவிட்டு, தெய்வ வழிபாடு,காலை உணவு, செய்தி தாள் வாசிப்பு,நண்பர்களை சந்திக்க செல்லுதல், தமது உதவி நாடி வருபவர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்குதல்,பிள்ளைகளுக்கு கடிதம் எழுதுவது, அல்லது பிள்ளைகளின் கடிதங்களை வாசிப்பது, பழைய புகைப்படங்களை புரட்டி பார்ப்பது,
ஏழை மாணவ மாணவியருக்கு பாடம் சொல்லி கொடுப்பது , மதியம் தேவையான எளிய உணவு உட்கொண்ட பிறகு கொஞ்ச நேரம் உறங்குவது, மாலை தேநீர், பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் கால் நடையாக கொஞ்சம் தூரம் சென்று , தேவையான உணவு காய்கறி பொருட்களை வாங்கி வருவது,
பின்னர் தோட்டத்தில் உள்ள மலர் செடிகளையும் , புல் தரையையும் சுத்தம் செய்து பராமரிப்பது, பின்னர் இரவு வானொலியில் செய்தி கேட்பது, உணவு தயாரிப்பது உணவருந்தி விட்டு, இரவு பிரார்த்தனை செய்து விட்டு உறங்கபோவது... மீண்டும் காலை எழுந்து தமது அன்றாட பணிகளை செய்வது என்று இப்படியாக அவரது நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.
அவரது அன்றாட பேச்சு தொடர்பில் இருப்பவர்களுள் ஒருவர் அவருக்கு காலை மாலை இரண்டு வேலைகளும் பால் விநியோகிக்கும் பால்காரர்.
ஒரு நாள் அந்த பால் காரர் காலை ஐந்து மணிக்கு இவரது கதவை பலமாக தட்டும் சத்தம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொஞ்சம் விநோதமாக கேட்டது.
சத்தம் கேட்டு அவர்கள் எட்டி பார்க்க ,பால்காரர் சொல்கிறார்,"நம்ம சாருக்கு எதோ ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன், எப்போதும் என் வருகைக்காக கதவை திறந்து வைத்திருப்பார், இன்று எவ்வளவு தட்டியும் திறக்கவில்ல, அதுவும் எப்போதும் நான் வரும்போது வழக்கமாக கேட்க்கும் கீர்த்தனை பாட்டுக்களும் இன்று கேட்கவில்லை, சில மாதங்களுக்கு முன் அவர் என்னிடம் பேசிகொண்டிருந்தபோது, என்றைக்காவது, நீ வரும்போது, உள்ளே இருந்து பாட்டு சத்தம் கேட்கவில்லை என்றால் நான் இறந்து விட்டேன் என்று அர்த்தம் நீ கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வரலாம் என்று கூறியதை பக்கத்து வீட்டினரிடம் சொல்ல பதறிப்போன அக்கம் பக்கத்தினர், கதவை முட்டி திறந்து உள்ளே சென்றனர்.
உள்ளே சென்றவர்களுக்கு பெரிய அதிர்ச்சி, ஆம்..... அந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தமது படுக்கையில் அண்ணாந்து படுத்து தமது இரண்டு கைகளையும் தமது மார்பின் குறுக்கே வைத்தவண்ணம் இந்த உலக வாழ்விலிருந்து(ம்) ஓய்வு பெற்றிருந்தார்..
தகவல் காட்டுத்தீபோல அந்தபகுதி முழவதும் பரவ அவரை அறிந்தவர்கள்,அவர்பால் அன்பும் மரியாதையும் வைத்திருந்த அனைவரும் அவரது இல்லத்தில் கூடி, நடக்க வேண்டியவைகளை குறித்து ஆலோசித்துகொண்டிருக்கும்போது கவனித்தார்கள், அவர் படுத்திருந்த கட்டிலின் கீழ் "ஏதோ" ஒன்று இருப்பது.
கீழே குனிந்து "அதை" இழுத்து பார்க்க, எல்லோர் முகத்திலும் ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
அது வேறொன்றும் இல்லை "சவப்பெட்டி".
அதன் மூடியை விலக்கி பார்த்தார்கள்.
அதில் ஒரு டைரி.
அந்த டைரியின் நடுவில் ஒரு வெள்ளை நிற காகித உறை.
அந்த உறையில் தாம் ஏற்கனவே பக்கத்தில் இருந்த ஒரு கல்லறை தோட்டத்தில் தமது உடலை அடக்கம் செய்ய ஒரு இடத்தை மூன்றாண்டுகளுக்கு முன் பதிவு செய்து அதற்காக கட்டப்பட்ட கட்டணத்தின் ரசீதும் , அங்கே செங்கல் சிமன்ட் கொண்டு கட்டப்பட்ட தொட்டிபோன்ற ஆறடி பள்ளம் வெட்டிய கொத்தனாருக்கு கொடுத்த பணத்தின் விவரமும் அந்த கொத்தனாரின் பெயரும்,விலாசமும், மேலும் அந்த குழியை மூட பயன்படுத்தப்படும் கற்கள் வாங்கி கல்லறை தோட்டத்து காவலர் பாதுகாப்பில் வைத்திருந்த விவரமும், தமது இறுதி சடங்கிற்கு தேவைப்படும் பணமாக ரூபாய் மூவாயிரமும் அந்த வெள்ளை நிற காகித உறையில் வைத்திருந்தார் அந்த வெள்ளை மனசு காரர்.
மேலும் அந்த டைரியில், வெளி நாடுகளில் இருக்கும் தமது மகள்களின் தொலைபேசி எண்களும், மற்றும் தமது உறவினர், நண்பர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் குறிக்கபட்டிருந்தது.
பால் காரர் அழுது கொண்டே சொன்ன மற்றும் ஒரு தகவல், தமக்கு எப்பவுமே பால் வாங்கிய உடனே பணத்தை கொடுத்துவிடுவாராம் , ஒரு நாள் கூட என்னிடம் கடனுக்கு வாங்கியதே இல்லை இன்றைய தேதியில் எனக்கு எந்த பாக்கியம் இல்லை, அவர், பாலை விட வெண்மையான உள்ளம் கொண்டவர் என்பதே.
மேலும் கல்லறை காவலர் சொன்ன மற்றும் ஒரு தகவல்,தினமும் மாலை வாக்கிங் வரும்போது அவரது கல்லறையை அவரே பார்த்து விட்டு செல்வாராம்.
இப்படியும் ஒரு மனிதரா என்று தகவல் அறிந்த எலோரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் உடலை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையின் "அமரர் துயிலறையில்" வைத்து மூன்று நாட்கள் கழித்து வெளி நாட்டில் இருந்து பிள்ளைகள் வந்த பின்னர் அன்னாரது இறுதி யாத்திரையும் நல்லடக்கமும் அன்னாரது முன்னேற்பாட்டின்படியே இனிதே நடைபெற்றது.
அவரது கல்லறை, தமது வாழ்வின் ஒரு அங்கமாக திகழ்ந்த அவரது மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே அமைந்திருந்ததும் அவரது முன்னேற்பாட்டின் ஒரு அங்கம் தான்.
அவரது கல்லறை, தமது வாழ்வின் ஒரு அங்கமாக திகழ்ந்த அவரது மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே அமைந்திருந்ததும் அவரது முன்னேற்பாட்டின் ஒரு அங்கம் தான்.
வாழ்வையும் சாவையும் அருகறேகே வைத்து வாழ பழகிய அந்த மனிதரின் " நான் தயார் நீ தயாரா? " என மரணத்தை விரல் சொடுக்கி சவால் விட்ட மனோதிடத்தை ஆச்சரியத்துடன் வியந்து பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
இந்த சம்பவம் நடந்து இந்த வருடத்தோடு முப்பது ஆண்டுகள் ஆகின்றன.
அன்னாரது ஆன்மா இறைவனது இன்னடியில் இனிதே இளைப்பாரட்டும்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
இப்படியும் ஒரு மனிதரா...?
பதிலளிநீக்குகண் கலங்கினேன்...
மனத்திடம் அதிசயம் நமக்கும் வேண்டும். பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉண்மையில் ஒரு உதாரண புருஷராக இருந்திருக்கிறார். நண்பர் தங்த லிங்கில் தங்கள் வலைத்தளம் வந்தேன். தங்களது நடை என்னைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குGod bless You
I think the life that has best lived will always be ready and happy to embrace the inevitable without any inhibition. One can get that confidence once he/she knows the purpose of life and also it is achieved, until then he/she is not ready and will try to evade or want to evade at every close encounter with death.
பதிலளிநீக்குSometimes we may not fulfill the purpose of our life to the fullest but if only we treat tomorrow is our last day, I think we may end up a bit more of loving or caring and less of hating or fighting that we're used to.
தமிழில் தான் பகிர்ந்துகொள்ள நினைத்தேன், மன்னிக்கவும்!