பெரியோர்களால் நிச்சயித்த (பல) வண்ணம் !!
நண்பர்களே,
இந்தியாவை விட்டு கடல் கடந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இழந்து தவிக்கும், இந்தியாவில் மட்டுமே அனுபவித்து மகிழ்ந்த பல அருமையான விஷயங்களுள் தலையான ஒன்று என் குடும்பத்தினரின் அன்பும் என் நண்பர்களின் நட்பும் என்று சொன்னால் அது மிகை அல்ல.
இந்த வெள்ளையர் தேசத்தில் எனக்கு உடன் பிறந்தவர்களோ, நெருங்கிய உறவினர்களோ யாரும் இல்லை என்றாலும்,இங்கு வந்தபிறகு ஏற்பட்ட அறிமுகத்தால் பல முகங்களை அறிந்திருந்தாலும்,நம்ம ஊர் போல அடிக்கடி பார்த்து பேசி, நட்பை தொடரும் வண்ணம் அமையும் வாய்ப்புகள் மிக மிக குறைவே.
ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை கூட பலரை சந்திக்கும் வாய்ப்புகள் அமைவது மிக கடினம், ஏனென்றால், இங்கே ஆடி எப்போது அமாவாசை எப்போது என்பதுகூட பல வேளைகளில் மறக்கடிக்கும்படியான வாழ்க்கை முறை.
அப்படியே பண்டிகை நாட்கள் என்று தெரிந்தும் அவற்றை அதனதன் தாற்பரியங்களுடனும்,முறைமைகளுடனும் கொண்டாடி மகிழும் பாக்கியமும் இழந்தே தான் வாழ்ந்தாக வேண்டி இருக்கின்றது.
இதுபோன்று நான்மட்டுமல்ல என்னை போன்ற பலரும் இழந்த - பிடித்த பல விஷயங்களுள் எனக்கு மிகவும் பிடித்த- நான் மிகவும் இழக்கும் ஒரு விஷயம், " திருமண அழைப்பில்" பங்கு கொள்வது.
அதிலும் நெருங்கிய உறவினர்களின் வீட்டு திருமணத்தின் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியும் உற்ச்சாகமும், ஓடி ஆடி வேலை செய்தும், வருகிறவர்களை உபசரிப்பதும், வெளிஊர்களில் இருந்து திருமணத்திற்கு முன் கூட்டியே வந்து நம்மோடு தங்கி இருக்கும் உறவினர்களோடு அளவலாவுவதும், அவர்களுள் நம்ம வயசு பிள்ளைகள் இருந்தால் ஏற்படுகின்ற இரட்டிப்பு மகிழ்ச்சியும், வீட்டு வாசலில் போடபட்டிருக்கும் பந்தல், கட்டபட்டிருக்கும் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள், கார் பவனி, மண்டபம் வரை போய், நடந்து கொண்டிருக்கும் ஏற்பாடுகளை கவனிப்பது, திருமணத்தன்று கொடுக்கபடும் தாம்புலத்திற்க்காக , தேங்காய், வெற்றிலை பாக்கு , இனிப்பு போன்றவற்றை முன் தின இரவு மணமக்களின் பெயர்கள் அச்சடிக்கபட்டிருக்கும் பைகளில் போட்டு நிரப்பி கொண்டிருக்கும்போது, வழங்கப்படும் சூடான தேநீரை சுவைத்தவண்ணம் கலாட்டாவாக பேசிக்கொண்டும், வெளியே ஒலி பெருக்கியில் ஒலித்துகொண்டிருக்கும் பாடல்களை கேட்டுக்கொண்டும், தூக்கம் கண்களை சொக்கினாலும் தூங்காமல் விழித்திருந்து மகிழ்ந்த அந்த தருணங்கள். ஆஹா........
மறு நாள் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களோடு கை குலுக்கி, கும்பிட்டு வரவேற்று, பன்னீர் தெளித்து, சந்தானம் பூசி, கற்கண்டு கொடுத்து, தவனம் என்று சொல்லப்பட்ட அந்த வாசனை சிறு செண்டுகள் கொடுத்து, கெட்டி மேளம் முழங்கும்போது மணமகன் தாலி கட்டுவதை மணமேடையில் கூடி இருக்கும் கூடத்தை முண்டி அடித்து முகத்தை நுழைத்து பார்த்து மகிழ்ந்தது, கல்யாண சமையல் சாதத்தையும் பிரமாதமான காய்கறிகளையும், இனிப்புகளையும், வாழைப்பழத்தையும், பாயாசத்தையும் உண்டு களித்ததையும், வெற்றிலை பாக்கு - பீடா போட்டு வாய் சிவந்து விட்டதா என நாக்கை நீட்டி பார்த்ததையும் புகைப்படங்களில் தலை காட்டி மகிழ்ந்ததையும் இன்னும் எத்தனை எத்தனையோ இதுபோன்ற மகிழ்ச்சிகளையும் அனுபவித்து பல வருடங்கள் ஆகி விட்டன.
உறவினர் வீட்டு திருமணம் இப்படி என்றால், நண்பர்கள் வீட்டு திருமணம் கொடுக்கும் மகிழ்ச்சி இன்னும் ஒரு படி மேலே. அதிலும் வெளி ஊர்களில் நடக்கும் திருமணங்களுக்கு, நண்பர்களாக சேர்ந்து முன்தினம் செய்த பேருந்து மற்றும், ரயில் பயணங்கள், மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது,பாட்டு கச்சேரிகளை கேட்டு ரசித்தது, பின்னர் இரவு ஹோட்டல்களில் தங்கியது, அங்கே நடந்த நண்பர்களின் கூத்துக்கள், கும்மாளங்கள்,இரவு வெகு நேரமாகியும் அந்த புதிய ஊரை சுற்றிபார்த்தது,
இரவு வெகு நேரத்திற்கு பின் அறைக்கு திரும்புவது, பின்னர் இரவெல்லாம் தூங்காமல் வெட்டி கதை பேசிகொண்டிருக்கும்போதே விடிந்துபோனது, அவசர அவசரமாக எல்லா நண்பர்களும் ஒரே நேரத்தில் ஒரே பாத்ரூமில் குளித்து தயாராகி திருமண மண்டபம் சென்றது, மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்துவிட்டு கும்பலாக நின்று புகைப்படம் எடுத்துகொண்டது, பின்னர் வீட்டுக்கு பயணித்தது.......
இது போன்ற நமது பாரம்பரிய கலாச்சார திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று மகிழும் சிலாக்கியத்தை இழந்து பல காலமாகி விட்டது. இதுபோன்ற கலகலப்பான திருமணங்கள் நம்ம ஊரை தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது.
இப்போதுகூட விடுமுறைகளில் ஊருக்கு வரும்போது நமது உறவுக்காரர்கள் அல்லது நண்பர்களின் வீட்டு திருமணம் நடந்தால் நன்றாக இருக்குமே என மனம் ஏங்குவதும் அப்படி ஒன்றும் நடக்காமல் மனம் வாடி போவதும் வாடிக்கையாகி விட்டது.
ஆமாம் ஏன் இந்த ஏக்கம்? இப்போது எதற்கு என்கின்றீர்களா? காரணமில்லாமலா கறைகிறது உள்ளம்?
கடந்த சனிக்கிழமை காலை சுமார் பத்து மணிக்கு வீட்டு கதவை திறந்தேன் கடைக்கு செல்ல, எங்கள் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு வயதான பெண்மணி வெளியில் வந்தார், வந்தவர் என்னை பார்த்து புன்னகையோடு வணக்கம் சொல்லிவிட்டு (ஆங்கிலத்தில் தான்) தன்னுடைய பெயரை சொல்லி தான் (என்) பக்கத்து வீட்டு ஆளின் தாயார் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்,
நானும் பதிலுக்கு புன்னகையுடன் அவர்களுக்கு வணக்கத்தையும் ,அவர்களை பார்த்த மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு , நான் உங்களை இதுவரை பார்த்ததே இல்லை அதனால்தான் உங்களை யார் என்று தெரியாமல் திகைத்தேன் என்றேன்.
அதற்க்கு அந்த பெண்மணி, தாம் இங்கிருந்து சுமார் 600 மைல் தூரத்தில் வசிப்பதாகவும் இன்று என் மகனுக்கு (அதாவது என் பக்கத்து வீட்டு காரர்) திருமணம் நடக்கபோகிறது அதனால் இன்று காலைதான் வந்தேன் என கூறினார்.
என்ன இன்று உங்கள் மகன் அதாவது என் பக்கத்து வீட்டு காரருக்கு திருமணமா? என ஆச்சரியத்துடன் கேட்டேன்.
ஆமாம் இன்று 11.30 மணிக்கு இந்த நகரத்து பதிவு அலுவலகத்தில் திருமணம் நடக்கபோகின்றது எனவே எங்கள் குடும்பத்து சார்பில் நான் கலந்துகொள்ள வந்திருக்கின்றேன் இன்னும் என் மருமகளின் தாய் தந்தையர் வரவில்லை ஒருவேளை நேராக பதிவு அலுவலகம் வந்து விடுவார்கள் என நினைக்கின்றேன் என சொல்லிகொண்டிருக்கும்போதே, என் பக்கத்து வீட்டுக்காரர் புது மாப்பிளை தோரணையில் வெளியில் வந்தார், என்னை பார்த்ததும் புன்னகித்து வணக்கம் கூற நானும் புன்னகைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
அவரும் அவரின் வருங்கால மனைவியும் கடந்த இரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர் , இப்போது தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனராம்.
அவரது மனைவியாக போகும் அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவர்கள் அலங்காரம் செய்யும் கடைக்கு சென்றிருப்பதாகவும் அங்கிருந்து நேராக திருமண பதிவு அலுவலகம் வந்து விடுவார்கள் என்ற கூடுதல் தகவலையும் கொடுத்துவிட்டு தானே காரை ஒட்டிக்கொண்டு தன் தாயாருடன் சென்று விட்டார்.
அவருக்கு திருமணம் நடக்கும் விஷயம் எனக்கு மட்டுமல்ல எங்கள் தெருவில் இருந்த எவருக்கும் தெரியாது, எவருக்கும் அழைப்பு இல்லை.
எனினும் கடையிலிருந்து வரும்போது எங்கள் பக்கத்து வீட்டு புதுமண தம்பதியருக்கு கொடுக்க ஒரு வாழ்த்து அட்டை வாங்க மறக்கவில்லை
இந்த திருமணத்தை நினைக்கும்போது நம்மூர் திருமண கொண்டாட்டங்களை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ற ஏக்கம் ஞாயம் தான் என்று நீங்களும் சொல்லுவீர்கள் என நம்புகின்றேன்.
சரி நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான், ஊர்ல இருக்கின்ற நீங்களாவது அவ்வப்போது நடைபெறும் உங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு திருமண நிகழ்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாயிருங்கள்.
அப்படியே நம்ம சார்பா மாப்பிளைக்கும் பொண்ணுக்கும் ஆளுக்கு ஒரு 1001 மொய் எழுதிடுங்க.
கல்யாணத்திலே முக்கியமா எல்லோருக்கும் பிடிக்கும் விஷயம் கல்யாண சாப்பாடுதான் என்பதில் உங்க யாருக்காவது மாற்று கருத்து உண்டா?
அப்படியே ,மிச்சம் வைக்காம, விருந்து சாப்பிடும்போது கொஞ்சம் என்னையும் நினைத்து கொள்ளுங்கள். (மட்டன் பிரியாணியாக இருந்தால் கொஞ்சம் பார்சல் அனுப்பி வையுங்கள்)
தாம்பூலம் வாங்க மறந்துடபோறீங்க , கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததுக்கு அதானே அடையாளம்?
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
சரிங்க... நீங்கள் சொல்வது போல் செய்து விடுகிறோம்...!
பதிலளிநீக்குதனப்பால்,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
நட்புடன்
கோ
தங்கள் தளம் நான் தொடர்ந்து வந்துள்ளேன். சொந்த நாட்டில் நாம் இழந்தது ஏராளம் தான் என் செய்வது? வருங்தவேண்டாம். பிரியாணி அவசியம் உங்களுக்கு அனுப்புகிறோம். சாப்பாடு சூப்பர். நன்றி சாப்பாட்டுக்கும், பதிவுக்கும்.
பதிலளிநீக்குவருகைக்கும் , பிரியாணிக்கான உத்திரவாதத்துக்கும் மிக்க நன்றி.
நீக்குவெற்றிலை பாக்கு போட்டீர்களா?
நட்புடன்
கோ
தலைமுறை இடைவெளியோ ? - உங்க பக்கத்து வீட்டுக்காரர் உங்களிடம் அவருடைய திருமணத்தை பற்றி சொல்லாதது
பதிலளிநீக்குஒரே தலைமுறையோ ?! - அவரின் அம்மா உங்களிடம் திருமணத்தை பற்றி சொன்னது
Be it whatever, I feel the previous generation is the mostly blessed and the golden one and is rich with moral and ethical standards.
பாலமகிபக்கங்களில் தங்கள் வருகையைக் கானோம். நன்றி.
பதிலளிநீக்கு