பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

முனிமா சாலையில் மினிமா!!

Honey... மா!!

நண்பர்களே,

முன் பதிவை பார்க்க... வெயிலோடு விளையாடி.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தேசிய வார விடுமுறை.

நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதி அறையின் திறவுகோல் கிடைக்க சற்று நேரமாகும் என்பதால் அதுவரை என்ன செய்வதென்று எண்ணி விடுதியை விட்டு வெளியேறி சாலையில் நடக்க ஆரம்பித்தேன்.

கண் போன போக்கிலே கால்போக முடியாதபடி, பெருஞ்சாலைகளில் சீறிப்பாயும் மகிழ்வூர்திகள்.

சாலையின் நடைபாதைகள் முழுவதும் அந்த காலை  நேரத்திலேயே நெரிசலோடுதான் காணப்பட்டன.

பட்டிக்காட்டான் முட்டாய்கடையை........ என்று சொல்லுவார்கள்; அந்த அளவுக்கு இல்லையென்றாலும், எந்த புதிய நாட்டிற்கு சென்றாலும் நம்மையும் அறியாமல் ஒரு பூரிப்பும் , வியப்பும், பிரமிப்பும்  உள்ளத்தில் மேலோங்கும்.

அதே உணர்வுடன் இங்குமங்கும் பார்த்தபடி , எத்தனை படிகள் என்று எண்ணி தீர்க்க முடியாதபடி வானளாவி கட்டப்பட்டிருக்கும் உயர்ந்த கட்டிடங்களையும் வளைந்து நெளிந்து சுற்றி சுழன்று  கட்டப்பட்டிருக்கும் மேம்பாலங்கள் போன்றவற்றை வாய் பிளந்து பார்த்தவண்ணம் நடந்த எனக்கு ஓரிடத்தில் கொஞ்சம் நிற்கவேண்டும் என தோன்ற ஒரு கட்டிடத்தின் நிழல் தாங்கிய அந்த சாலை ஓரத்தில் நின்றேன்.  

அங்கேயே  இருந்தபடி தொலைபேசியில் அந்த கட்டிட வீதியை வீடியோ பதிவு செய்துகொண்டே, பாலு மகேந்திரா அளவிற்கு இல்லை என்றாலும் ஏதோ நம்ம அளவிற்கு மொபைல் போனை இப்படியும் அப்படியும் சாய்த்து பல கோணங்களில் காட்சி பதிவாக்கம் செய்துகொண்டிருந்த என் காமிரா கண்கள் வழியாக என் கண்ணில் பட்டது அந்த தமிழ் எழுத்து பெயர் பலகை தாங்கியிருந்த கட்டிடம்.

அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை சற்று விலக்கி மீண்டும் அந்த கட்டிடத்தை பார்த்ததும் மனதில் தேனூற்று வாயில் ஜொள்ளூற்று.

அப்போது காலை சுமார் எட்டு மணி இருக்கும்.

அந்த சாலைகளின் இரு புறமும் அங்காடிகள்  உணவு விடுதிகளும் பரபரப்பான இயங்க ஆரம்பித்த நேரம் அது.

குறிப்பாக உணவு கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தன. அந்த கடைகளின் முகப்பில் காட்சி படுத்தப்பட்டிருந்த உணவு தயாரிப்புகளை பார்க்கும்போது  பசி வயிற்றை கிள்ளுவதாக உணர்ந்த நேரத்தில் வாயில் எச்சில் ஊறினாலும் அவையெல்லாம் "முனி" ரகத்தை சார்ந்தவை.

எனக்கோ  அவற்றின் மீது அப்போது  அந்த காலை நேரத்தில் நாட்டமில்லை. அதே சமயத்தில் காலை உணவு சாப்பிடவேண்டும் என்ன செய்வது எங்குபோய் தேடுவது என்றெண்ணி  இருந்த வேளையில்தான் அந்த தமிழ் பலகை கட்டிடம் தென்பட்டது.

அந்த தமிழ் எழுத்துக்களின் சீரான தொகுப்பு " சரவண பவன் உயர்தர சைவ உணவகம்" என்பது தெளிவாக தெரிந்தது.

கண்ணாடி கதவுகள் கொண்ட அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் நுழைந்ததும் நம் தமிழ் நாட்டின், கீழடி காலத்திலிருந்து பாரம்பரியமாக பரிமாறப்படும் இட்டிலி, தோசை, பூரி, பொங்கல், கிச்சடி, உப்புமா, வடை, போண்டா, சாம்பார் சட்டினி, பில்டர் காஃபீ  போன்ற  சைவ உணவுகளின்  நறுமணம் என் நாசியில் நுழைந்து இதயத்தை ஆட்கொண்டது. 

உள்ளே சென்றதும்  வாயிலில் இருந்து  "வணக்கம் வாங்க" என்று சொன்ன ஊழியருக்கு பதில்  வணக்கம் கூற  வாயிலிருந்து சொல் வரவில்லை மாறாக "ஜொள்" வந்தது.

சமாளித்து அவர் காட்டிய மேசை - நாற்காலியில் அமர்ந்ததும், என்ன சாப்பிடுகின்றீர்கள் என கேட்டுக்கொண்டே அன்றைய  பட்டியலை மூச்சுவிடாமல் ஒப்பித்து முடிக்க எனக்கு மூச்சு வாங்கியது.

இரண்டு இட்டிலி ஒரு வடை ... இருங்க இருங்க.... இட்டிலி வேண்டாம்... ஒரு தோசை ..ஒரு சாம்பார் வடை.... இருங்க இருங்க..... தோசை வேண்டாம்.... ஒரு செட்டு பூரி... ஒரு ..... சாரி... பூரி வேண்டாம்.... பொங்கல் கொடுத்து விடுங்கள் தேங்காய் சட்டினியுடன்....(எதை சாப்பிடுவது...இதை விடுவது...)

அடுத்து என்ன .......ஒரு தீர்மானத்திற்கு வந்தேனா... என்ன சாப்பிட்டேன்... இல்லை சாப்பிடாமலேயே........

நாளை பார்ப்போமே...

அதுவரை.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்..

கோ




9 கருத்துகள்:

  1. கராமா ஏரியாவில் நிறைய தமிழ் உணவகங்கள் உண்டு நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே,

      கராமாவிலும் உணவகம் சென்று சுவைத்தேன், அத்தோடு நிறைய கடைகளையும் ஏறி இறங்கினேன்.

      கோ

      நீக்கு
  2. நண்பர் கில்லர்ஜீ அவர்களுக்கு,

    துபாய் சொல்லப்போகிறேன் என்ற முடிவெடுத்த நாள்முதல் அவ்வப்போது உங்கள் நினைவு என் நெஞ்சில் நிழலாடி கொண்டே இருந்தது. மேலும் துபாய் சென்று இறங்கிய தினம் முதல் உங்களை போன்ற உருவ சாயல் கொண்ட யாரை பார்த்தாலும் உங்களின் நினைவு வந்து போனது உண்மையன்றி வேறிருக்க வாய்ப்பில்லை..

    சில நாட்கள் கழித்து அபுதாபி செல்லும்போது என் நினைவெல்லாம் முற்றாய் ஆக்கிரமித்தது உங்கள் நினைவு.

    எனக்கு ஊர்ஜிதமாக இல்லை என்றாலும் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது நீங்கள் தாயகம் திரும்பி விட்டதாக.

    நீர் அங்கு இல்லாததினால் உங்களை காணும் சந்தர்ப்பம் கானல் நீராய் மாறிப்போனது.

    பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திக்க வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்.

    நலம் பேண வேண்டுகிறேன்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. ஹைஹைஹைஹை....நாங்க சொன்னது கரீக்டுதான்!! நம்ம ஊர் சாப்பாடு கடை!! என்ன சப்பிட்டுருப்பீர்கள்! எதை விட எதை சாப்பிட...சரி கோம்போ சாப்பிட்டிருப்பீர்கள்! இல்லை மினி டிஃபன் அதில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வருமே!!! அப்படித்தானே!!ஹிஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு எல்லாத்திலேயும்.... அவசரம்தான்... கொஞ்சம் பொறுங்கள்; நானே எதை ஆர்டர் செய்வது என்று அறியாமல் திணறிக்கொண்டு இருக்கிறேன்... பசி நேரத்தில நீங்க வேற நெய் நெய் னு... சாரி நொய் நொய் னு...

      வருகைக்கு மிக்க நன்றிங்க.

      கோ

      நீக்கு
  4. london la dubai alavirkku pirammaanda buildings kidaiyaathaa sir? oru doubt avvalvuthaan.


    உள்ளே சென்றதும் வாயிலில் இருந்து "வணக்கம் வாங்க" என்று சொன்ன ஊழியருக்கு பதில் வணக்கம் கூற வாயிலிருந்து சொல் வரவில்லை மாறாக "ஜொள்" வந்தது.//// hahaha unga lol rasichen:)


    vidunga en kulappam ellaa sappidura item taste paarthida vendiyathuthaanee:)

    thodarungal.

    பதிலளிநீக்கு
  5. லண்டனில் உள்ள கட்டிடங்களையம் அதன் வரலாற்று சிறப்புகளையும் பாதுகாக்கப்படும் பாரம்பரிய மேன்மையினையும் சொல்லில் வரையறுத்து சுறுக்கிவிட முடியாதுதான் என்றாலும் குறுகிய காலத்தில் அதுவும் சமீப காலத்தில் அசுர வளர்ச்சியும் தொழில் நுட்ப பயன்பாட்டையும் நினைத்துப்பார்க்கும்போது துபாய் வியக்க வைக்கிறது.

    கிணற்றில் இருந்து இறைக்கப்பட்ட எண்ணெய் ஈட்டிக்கொடுத்த தங்க காசுகளை இப்படி செங்கல் கருங்கல் பளிங்கு கற்கள் கட்டிடங்கள் மீது வாரி இறைத்து உலகின் கண்களை மட்டுமல்ல நிலவின் கண்ணையும் ஏறிட்டு பாக்க செய்யும் இந்த சூரிய நாட்டின் செல்வ வீரியம் அளப்பரியது.

    வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

    கோ

    பதிலளிநீக்கு